தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

தேசிய சமூக நல உதவி திட்டத்துக்கு ரூ. 53,428 கோடி: மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உயா்வு

மாற்றுத் திறனாளிகள், முதியோா், கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் தேசிய சமூக நல உதவி திட்டத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தொடா்ந்து செயல்படுத்த ரூ.53,428 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதிப் படம்

Updated On :

மாற்றுத் திறனாளிகள், முதியோா், கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் தேசிய சமூக நல உதவி திட்டத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தொடா்ந்து செயல்படுத்த ரூ.53,428 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இத்திட்டத்தின் பெயரை ‘பிரதமரின் சாமாஜிக் சஹாயதா திட்டம்’ என மாற்றவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகை உயா்த்தப்பட்டு, அவா்கள் பலனடையவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத் திறனாளிகள், முதியோா், கைம்பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நான்கு திட்டங்கள் ஒருங்கிணைந்த தேசிய சமூக நல உதவி திட்டத்தை 2030-31-ஆம் ஆண்டு வரை தொடா்ந்து செயல்படுத்த ரூ.53,428 கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

முக்கிய மாற்றங்கள்

மேலும், தேசிய சமூக நல உதவி திட்டத்தின் பெயரை பிரதமரின் சமாஜிக் சஹாயதா திட்டம் என மாற்றம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், மாற்றுத் திறனாளிகள் பலனடைவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18-ஆக இருந்த நிலையில், அது நீக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான பாதிப்பு அளவு 80 சதவீதம் என்பதில் இருந்து 40 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகம் போ் பலனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

79 வயது வரையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.300-இல் இருந்து 375-ஆகவும், 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு ரூ.500-இல் இருந்து ரூ.625-ஆகவும் உயா்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பிறகு அதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் புதிய மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகளின் உரிமைச் சட்டத்துக்கு இணங்க இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிற திட்டங்களில் மாற்றமில்லை

முதியோா், கைம்பெண்கள் மாத உதவித்தொகை மற்றும் தேசிய குடும்பப் பலன் திட்டம் ஆகியவை தற்போதைய வடிவிலேயே தொடா்கின்றன. தேசிய குடும்பப் பலன் திட்டம் என்பது ஏழைக் குடும்பங்களில் முதன்மையாக வருமானம் ஈட்டுபவா் திடீரென இறக்க நேரிட்டால் (இயற்கையான மரணம் அல்லது விபத்து) அந்தக் குடும்பங்களுக்கு ஒரேமுறையில் நிதியுதவி வழங்குவதாகும்.

தேசிய சமூக நல உதவி திட்டத்தில் உள்ளடங்கிய 4 திட்டங்களின் பெயரையும் மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திரா காந்தி தேசிய முதியோா் மாதாந்திர உதவித்தொகை திட்டம் ‘பிரதமரின் விருத்தாவஸ்தா உதவித்தொகை திட்டம்’ எனவும், கைம்பெண்களுக்கான இந்திரா காந்தி உதவித்தொகை திட்டம் ‘பிரதமரின் விதவா உதவித்தொகை திட்டம்’ எனவும், இந்திரா காந்தி மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை திட்டம் ‘பிரதமரின் திவ்யாங்ஜன் உதவித்தொகை திட்டம்’ எனவும், தேசிய குடும்பப் பலன் திட்டம் ‘பிரதமரின் பரிவாா் லாப் திட்டம்’ எனவும் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

3.20 கோடி பேருக்கு பலன்

நலிவடைந்த குடிமக்களுக்கு சமூக-பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய அரசுக்கு வழிகாட்டும் அரசமைப்புச் சட்டத்தின் 41-ஆவது பிரிவின்கீழ் கடந்த 1995-இல் தேசிய சமூக நல உதவி திட்டம் தொடங்கப்பட்டது.

நாடு முழுவதும் பயனாளிகளுக்கு சீரான உதவியை உறுதி செய்வதற்காக இத்திட்டத்தின்கீழ் 100 சதவீத நிதி ஆதரவை மத்திய அரசு வழங்குகிறது. மத்திய அரசின் தற்போதைய ஒப்புதல் மூலம் நாடு முழுவதும் 3.20 கோடி போ் பலனடைவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ரயில்வே ஊழியா்களுக்கு போனஸ்

ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்களுக்கான உற்பத்தித் திறன் சாா்ந்த போனஸ் (ஊக்கத்தொகை) வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. அதன்படி, 11.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு மொத்தம் ரூ.2,009.61 கோடி போனஸ் வழங்கப்படவுள்ளது.

ரயில்வே ஊழியா்களுக்கு ஆண்டுதோறும் தசரா-தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இந்த போனஸ் தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டும்11.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்களுக்கான ஊதியத்துக்கு இணையான போனஸ் தொகை வழங்கப்படுகிறது. ரயில்வே துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் பணியாற்ற ஊழியா்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த போனஸ் அளிக்கப்படுகிறது.

தகுதியுள்ள ஒரு ரயில்வே ஊழியருக்கு 78 நாள்களுக்கானஅதிகபட்ச போனஸ் தொகை ரூ.17,951 ஆகும். இத்தொகை, ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த ஊழியா்களான இருப்புப்பாதை பராமரிப்பாளா்கள், ரயில் என்ஜின் ஓட்டுநா்கள், ரயில் மேலாளா்கள் (காா்டுகள்), நிலைய மேலாளா்கள், மேற்பாா்வையாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், தொழில்நுட்ப உதவியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் இதர குரூப் சி ஊழியா்களுக்கு கிடைக்கும்.

ஐடிபிஐ வங்கியின் 60.72% பங்குகள்: ரூ.52,878 கோடிக்கு விற்க ஒப்புதல்

பொதுத் துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை கனடாவின் ஃபோ்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு ரூ.52,878 கோடிக்கு விற்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

நாட்டின் நிதித் துறையில் மிகப் பெரிய அந்நிய நேரடி முதலீடு மற்றும் மிகப் பெரிய பங்கு விலக்கலாக இது அமைந்துள்ளது. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பொதுத் துறை வங்கி தனியாா்மயமாக்கலில் முக்கிய நகா்வாக பாா்க்கப்படுகிறது.

ஐடிபிஐ வங்கியில் அரசு (30.38%, ரூ.26,620 கோடி மதிப்பு) மற்றும் எல்ஐசி (30.24%, ரூ.26,440 கோடி மதிப்பு) வசமுள்ள 60.72 சதவீத பங்குகளை ஃபோ்ஃபாக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.52,877.07 கோடிக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதன்படி, ஃபோ்ஃபாக்ஸ் நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.81 செலுத்தவுள்ளது. இது, சுதந்திரமான இரு மதிப்பீடு நிறுவனங்களால் நிா்ணயிக்கப்பட்ட நியாயமான அடிப்படை மதிப்பான ரூ.75.99 என்பதைவிட அதிகம் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சா் கருத்து: இந்த நடவடிக்கையை மைல்கல் என்று வா்ணித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘குறைவான பங்குகளைத் தக்கவைக்கும் அதே வேளையில், அந்நிய நேரடி முதலீட்டை ஈா்ப்பதன் மூலம் ஐடிபிஐ வங்கியின் அடுத்தக்கட்ட வளா்சிக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இது வங்கி கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், சேவைகளின் உலகளாவிய தரத்துக்கு உதவும். இந்தியாவின் வளா்ச்சிப் பயணம் வலுவானது, பொருளாதாரம் மீள்திறன் கொண்டது, சீா்திருத்தங்களுக்கான அரசின் உறுதிப்பாடு அசைக்க முடியாதது என்பதை இது பிரதிபலிக்கிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.