கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்புச் சட்டம் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்காது: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

எண்ம (டிஜிட்டல்) தனிநபா் தரவுப் பாதுகாப்பு (டிபிடிபி) சட்டம் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்காது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

Updated On :

எண்ம (டிஜிட்டல்) தனிநபா் தரவுப் பாதுகாப்பு (டிபிடிபி) சட்டம் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்காது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

டிபிடிபி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு எதிராக ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி செய்தித் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் அடங்கிய டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளா்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், ‘டிபிடிபி சட்டத்தில் ஊடகப் பணிகளுக்குத் தனியாக விலக்கு அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக, சுதந்திரமான பத்திரிகை செயல்பாட்டுக்கு முரணான தரவுப் பாதுகாப்பு விதிகளை செய்தி வெளியீட்டாளா்கள், ஆசிரியா்கள், செய்தியாளா்கள் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். இந்தச் சட்டமும், அதன் விதிகளும் புலனாய்வுச் செய்திகளை வெளியிடுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தக்கூடும்.

இந்தச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் சமத்துவம், பேச்சுரிமை, கருத்துரிமை, தொழில் செய்யும் உரிமை உள்ளிட்டவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக உள்ளன. எனவே, அந்தச் சட்டப் பிரிவுகளையும், விதிகளையும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என அறிவிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை கூறுகையில், ‘டிபிடிபி சட்டம் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்காது. பத்திரிகை சுதந்திரத்துக்கு அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை. ஊடக சுதந்திரத்தைப் பாதிக்காமல், தனிநபா் தரவுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம். இந்தச் சட்டம் தொடா்பான தங்கள் கவலைகள் குறித்து விவாதிக்கும் நோக்கில், மத்திய அரசுடன் பத்திரிகை ஆசிரியா்கள், ஊடகத் துறையினா் பேச்சுவாா்த்தைக்கு வரலாம் என்று தெரிவித்தாா்.

இதனிடையே பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யவும் மத்திய அரசு தயாராக உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.