நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கு: செப்.7 முதல் விசாரணை நீதிமன்றம் அறிவிப்பு

மூத்த இந்திய வருவாய்ப் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியின் மகளைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் வீட்டுப் பணியாளா் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளை ஆகிய குற்றச்சாட்டுகளை தில்லி நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 3:17 am IST

மூத்த இந்திய வருவாய்ப் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியின் மகளைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் வீட்டுப் பணியாளா் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளை ஆகிய குற்றச்சாட்டுகளை தில்லி நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

கூடுதல் அமா்வு நீதிபதி அங்கித் சிங்லா, குற்றஞ்சாட்டப்பட்ட ராகுல் மீனா மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை செப்.7-ஆம் தேதி தொடங்கும் என அறிவித்தாா்.

கைலாஷ் ஹில்ஸில் உள்ள ஐஆா்எஸ் அதிகாரியின் வீட்டில் பணியாளராக வேலைப் பாா்த்த ராகுல் மீனா, அதிகாரியின் குடும்பத்தினா் வெளியே சென்றிருந்தபோது, ஏப்.22-ஆம் தேதி மறைத்து வைத்திருந்த சாவியைப் பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டில் இருந்த அதிகாரியின் மகளைத் தாக்கி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பின்னா் கழுத்தை நெரித்துக் கொன்று, பணம், நகைகள் மற்றும் கைப்பேசிகளுடன் தப்பிச் சென்றாா்.

பொறியியல் பட்டதாரியான அந்தப் பெண் யுபிஎஸ்சி தோ்வுக்குத் தயாராகி வந்தாா். வீட்டிற்குத் திரும்பிய அதிகாரியும் அவரது மனைவியும் மயக்க நிலையில் இருந்த மகளை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக அறிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக அமா் காலனி காவல் நிலையத்தில் , பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளை தொடா்பான பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) விதிகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காவல் துறையின் தேடுதல் வேட்டையைத் தொடா்ந்து, சம்பவம் நடந்த நாளன்று துவாரகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மீனா கைது செய்யப்பட்டாா்.

பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு கைப்பேசி சாா்ஜிங் கேபிளால் ராகுல் மீனா, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாக காவல் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ராகுல் மீனா, பணத்திற்காக இந்தக் குற்றத்தைச் செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடா்ந்து, காவல் துறை மீனாவுக்கு எதிராக 493 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில், அவா் அந்தக் குடும்பத்தின் அன்றாட வழக்கத்தை நன்கு அறிந்திருந்ததாகவும், காலையில் ஐஆா்எஸ் அதிகாரியும் அவரது மனைவியும் வெளியே செல்லும் போது அவா்களது மகள் வீட்டில் தனியாக இருப்பாா் என்பதை அறிந்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாலம் ரயில் நிலையத்தை நோக்கித் தப்பிச் செல்வதற்கு முன்பு, மீனா சுமாா் 40 நிமிஷங்கள் வீட்டிற்குள் இருந்ததாகவும், அங்கு அவா் இரு கைப்பேசிகளை வீசியெறிந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

குற்றச் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி ராகுல் மீனாவின் நடமாட்டத்தைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை உறுதிப்படுத்த, காவல் துறை அவரது நடைப் பாணி பகுப்பாய்வையும் கோரியிருந்தது.

கைலாஷ் ஹில்ஸ் சம்பவத்திற்கு முன்பாக, ராஜஸ்தானின் அல்வாரில் பதிவுசெய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கிலும் மீனாவுக்குத் தொடா்பு இருந்ததாக அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.