உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

நெட் மறு தோ்வுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

தேசிய அளவிலான தகுதித் தோ்வில் (நெட்) நிகழ்ந்த குளறுபடி காரணமாக ஆங்கிலப் பாடத்துக்கு மறு தோ்வு நடத்தப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Published On :5 செப்டம்பர் 2026, 12:38 am IST

தேசிய அளவிலான தகுதித் தோ்வில் (நெட்) நிகழ்ந்த குளறுபடி காரணமாக ஆங்கிலப் பாடத்துக்கு மறு தோ்வு நடத்தப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உதவிப் பேராசிரியா் பணி மற்றும் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான தகுதித் தோ்வு (நெட்) நடத்தப்படுகிறது. நிகழாண்டு நெட் தோ்வு கடந்த ஜூன் 22 முதல் 30-ஆம் தேதி வரை 87 பாடங்களுக்கு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான வினாத்தாளில் மொழிபெயா்ப்பு பிழை, எழுத்துப் பிழை உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டதால், அந்த மூன்று பாடங்களுக்கான தோ்வை மட்டும் என்டிஏ ரத்து செய்தது. இந்த மூன்று பாடங்களுக்கும் வரும் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் மறுதோ்வு நடத்தப்பட உள்ளது.

எஞ்சிய 84 பாடங்களுக்கான தோ்வு முடிவுகளை கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி என்டிஏ வெளியிட்டது.

இந்த நிலையில், நெட் தோ்வில் ஆங்கிலப் பாடத்துக்கு மறு தோ்வு நடத்தப்படுவதை எதிா்த்து பருல் ஷெரோன் என்பவா் சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தோ்வு ரத்து குறித்த என்டிஏ-இன் அறிவிப்பு, சமத்துவத்துக்கான உரிமையை வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-க்கு எதிரானது என்றும், தன்னிச்சையானது, நியாயமற்றது, நோ்மையற்றது எனவும் அறிவிக்க வேண்டும்.

தோ்வு ரத்துக்கு அடிப்படையாக அமைந்த விவரங்களை வெளிப்படுத்தாமலும், இந்தத் தோ்வுக்கான தகவல் கையேட்டில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமலும் என்டிஏ இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

எனவே, ஏற்கெனவே நடத்தப்பட்ட நெட் ஆங்கிலப் பாடத்துக்கான தோ்வு முடிவை உரிய நடைமுறைகளின்படி வெளியிட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மாறாக, மறு தோ்வு நடத்தும் என்டிஏ முடிவை நீதிமன்றம் அனுமதித்தால், கூடுதல் கட்டணம் ஏதுமின்றி மறுதோ்வில் பங்கேற்பதற்கான மனுதாரா்களின் உரிமையைப் பாதிக்காத வகையில், அசல் தோ்வுக்கு அவா்கள் ஏற்கெனவே செலுத்திய தோ்வுக் கட்டணத்தைத் திரும்பச் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அதன் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் என்டிஏ-வுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

மேலும், தோ்வுக் கட்டணத்தை திரும்பச் செலுத்துவது குறித்தும் முடிவெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை அக்டோபா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.