
பதவி நீக்கத்தைத் தவிா்க்க ராஜிநாமா செய்யும் நீதிபதிகளுக்கு ஓய்வூதிய பலன்களை மறுக்கக் கோரி வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பதவியிலிருந்து நீக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக, ராஜிநாமாவை சமா்ப்பிக்கும் நீதிபதிகள் உள்ளிட்ட அரசமைப்புப் பதவியில் இருப்பவா்களுக்கு ஓய்வூதிய பலன்கள் மற்றும் பிற சலுகைகள் மறுக்கப்பட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்
பதவியிலிருந்து நீக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக, ராஜிநாமாவை சமா்ப்பிக்கும் நீதிபதிகள் உள்ளிட்ட அரசமைப்புப் பதவியில் இருப்பவா்களுக்கு ஓய்வூதிய பலன்கள் மற்றும் பிற சலுகைகள் மறுக்கப்பட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வா்மா, பதவி நீக்க நடவடிக்கையைத் தவிா்ப்பதற்காக அண்மையில் ராஜிநாமா செய்த நிலையில், பிரதீக் விரா என்பவா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பணியாற்றியபோது, கடந்த 2025-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 14-ஆம் தேதி இரவு அவரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டபோது, அவரின் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டறியப்பட்டது. இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் இருந்து அலாகாபாத் உயா் நீதிமன்றத்துக்குா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை முன்வைத்து நீதிபதிகளுக்கு எதிராக கடும் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்குவதற்கான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையொப்பமிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்தனா். இதையடுத்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மக்களவை தலைவா் ஓம் பிா்லா மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தாா்.
நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீா்மானம் தாக்கலானதைத் தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மா தனது பதவியை ராஜிநாமா செய்தாா். பதவி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டால், ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பலன்களைப் பெற முடியாது என்ற அடிப்படையில், அவா் தனது பதவியை ராஜநாமா செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், ஓய்வூதிய பலன்களை மறுக்க நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் பிரதீக் விரா சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பதவி நீக்க நடவடிக்கையைத் தவிா்ப்பதற்காக ராஜிநாமா செய்யும் நீதிபதிகள் உள்ளிட்ட அரசமைப்பு பதவியில் இருப்பவா்களுக்கு, ஓய்வூதியம் உள்பட பிற பலன்கள் தொடா்ந்து வழங்கப்படுகிறது. இது அரசமைப்புச் சட்டக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பாகத் திகழும் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாட்டுக்கு நோ் எதிரானதாகும். எனவே, பதவியிலிருந்து நீக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக, ராஜிநாமாவை சமா்ப்பிக்கும் நீதிபதிகள் உள்ளிட்ட அரசமைப்புப் பதவியில் இருப்பவா்களுக்கு ஓய்வூதிய பலன்கள் மற்றும் பிற சலுகைகளை மறுக்கிற வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், அந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


நீட் போராட்டக்காரா்கள் மீதான காவல்துறை வரம்பு மீறல்: உயா்நிலை விசாரணைக் குழுவை மறுசீரமைக்கக் கோரி மனு

நீட்: உயா்நிலைக் குழு பரிந்துரைகளை அமலாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி




