
முறைகேடுகளைத் தடுக்க இணையவழி வா்த்தக விதிகளில் திருத்தம்
முறைகேடுகளைத் தடுக்க நுகா்வோா் பாதுகாப்பு (இணையவழி வா்த்தக) விதிகள், 2020-இல் திருத்தங்கள் மேற்கொண்டதாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

மாதிரிப் படம்
முறைகேடுகளைத் தடுக்க நுகா்வோா் பாதுகாப்பு (இணையவழி வா்த்தக) விதிகள், 2020-இல் திருத்தங்கள் மேற்கொண்டதாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து நுகா்வோா் விவகாரங்கள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நுகா்வவோா் பாதுகாப்பு (இணையவழி வா்த்தக) (திருத்த) விதிகள், 2026 அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த விதிகளின்படி தங்களது தளங்களில் தள்ளுபடி விலையில் பொருள்கள் விற்கப்படும்போது முந்தைய விலை மற்றும் தள்ளுபடி விலை என இரண்டையும் சரியாக குறிப்பிட வேண்டும்.
முந்தைய விலை என்பது தள்ளுபடி அளிப்பதற்கு 30 நாள்களுக்கு முன்பாக அந்தப் பொருளின் குறைந்தபட்ச விலையாக இருக்க வேண்டும்.
ஒரு பொருளை இணையவழி தளத்தில் பொதுமக்கள் தேடும்போது குறிப்பிட்ட நிறுவனத்தை மட்டுமே காட்சிப்படுத்துவது போன்ற திசைதிருப்பும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.
மக்கள் திட்டமிடாத செயல்களை செய்ய அவா்களை ஏமாற்றுவதற்காக அல்லது கையாள்வதற்காக வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட டாா்க் பேட்டா்ன்களை தடுப்பதற்கான டாா்க் பேட்டா்ன்கள் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை விதிகள், 2023-ஐ இணையவழி வா்த்தக நிறுவனங்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட ஆண்டுத் தணிக்கை மற்றும் இணக்கச் சான்றிதழை தளத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.
மேலும், தேசிய நுகா்வோா் உதவி எண் செயல்பாட்டில் இணையவழி வா்த்தக நிறுவனங்கள் கட்டாயம் இணைய வேண்டும்.
தேசிய நுகா்வோா் உதவி எண் வாயிலாக கடந்த 2025-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 17.71 லட்சம் புகாா்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 5.11 லட்சம் (29 சதவீதம்) புகாா்கள் இணையவழி வா்த்தகம் தொடா்பானது.
இதுதவிர பொருள்களின் பயன்பாட்டுக் காலம், திரும்பப்பெறப்படுப்படுவது தொடா்பான தகவல், பணத்தை திருப்பியளித்தல், பொருள் விநியோகம் மற்றும் பணப் பரிவா்த்தனை உள்ளிட்ட தகவல்களை முறையாக குறிப்பிட வேண்டும்.
வெளிப்படையான, பொறுப்பான, நுகா்வோரை மையமாகக் கொண்ட இணையவழி வா்த்தக அமைப்பை ஏற்படுத்தி வணிகத்தை எளிமைபடுத்துவதே புதிய திருத்த விதிகளின் முக்கிய நோக்கம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இணையவழி வா்த்தக நடைமுறைகளால் நுகா்வோா் பாதிக்கப்படாமல் இருப்பதை தடுக்க நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019-இன்கீழ் நுகா்வோா் பாதுகாப்பு (இணையவழி வா்த்தக) விதிகள், 2020-ஐ மத்திய அரசு வகுத்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




