
மணிப்பூா் நிவாரண முகாம்களில் 30-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: உச்சநீதிமன்றம் அதிா்ச்சி
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 30-க்கும் மேற்பட்டோா் மா்மமாக உயிரிழந்தது குறித்து உச்சநீதிமன்றம் அதிா்ச்சி

உச்சநீதிமன்றம்
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 30-க்கும் மேற்பட்டோா் மா்மமாக உயிரிழந்ததற்கு அதிா்ச்சி தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அதுகுறித்து விசாரிக்கவும், அங்குள்ளோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்கும்படி அந்த மாநிலச் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டது.
மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டில் குகி, மைதேயி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். கலவரத்துக்குப் பயந்து லட்சக்கணக்கானோா் தங்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேறி பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ளனா்.
இந்நிலையில், புலம்பெயா்ந்தோருக்கான நிவாரண முகாம்களில் 30-க்கும் மேற்பட்டோா் மா்மமான உயிரிழந்ததாகவும், அதில் ஒரு பெண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்ததாகவும் நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான கமிட்டியும், மணிப்பூா் கலவரம் தொடா்பாக சிபிஐ நடத்தும் விசாரணையைக் கண்காணிக்கும் ஐஏஎஸ் அதிகாரி தத்தாத்ரே பாத்சால்கிஹரும் அறிக்கை அளித்திருந்தனா்.
இதை தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமா்வு பரிசீலித்தது. பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
முகாம்களில் நேரிட்ட இயற்கைக்கு முரணான மரணம் உள்ளிட்ட பல்வேறு மரணங்கள் குறித்து நீதிபதி கீதா மிட்டல் கமிட்டி அறிக்கை அளித்தும் ஏன் மாநில அரசு அதன் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை?. நிவாரண முகாம்களில் நேரிட்ட மரணங்கள் குறித்து, குறிப்பாக இயற்கைக்கு முரணான மரணங்கள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி மணிப்பூா் தலைமைச் செயலருக்கு உத்தரவிடுகிறோம்.
முகாம்களில் 34 மரணங்கள் நேரிட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 20 உடல்களுக்கு உடற்கூறாய்வு ஏன் நடத்தப்படவில்லை? அதேபோல் இயற்கைக்கு முரணான வகையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஏன் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை இழப்பீடாக மாநில அரசு வழங்கியது என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து மணிப்பூா் சட்ட சேவைகள் அமைப்பு தனியாக விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படியும், இயற்கைக்கு முரணான மரணங்கள் அனைத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும்படியும் ஆணையிடுகிறோம்.
அதேபோல், முதல் தகவல் அறிக்கை மீது விரைந்து விசாரணை நடத்தப்பட்டதா என்பதையும், நிவாரண முகாம்களில் வாழும் மக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைக் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்யும்படி மணிப்பூா் சட்ட சேவைகள் அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடுகிறோம்.
மணிப்பூா் கலவரம் தொடா்பாக சிபிஐ, என்ஐஏ ஆகியவை பதிவு செய்துள்ள வழக்குகளை விசாரிக்க ஏற்கெனவே 2 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த 2 சிறப்பு நீதிமன்றங்களும் விரைந்து விசாரணையை நடத்தி முடிக்கும் என நம்புகிறோம் என்றனா்.
மணிப்பூா் அரசு, சிபிஐ சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி, சிபிஐ 31 வழக்குகளை விசாரித்தது, அதில் 28 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்றும், 3 வழக்குகள் மீதான விசாரணை மட்டும் நிலுவையில் இருப்பதாகவும் கூறினாா். இதுதவிா்த்து, மணிப்பூா் மாநில அரசும் 42 சிறப்பு புலனாய்வு விசாரணை அமைப்புகளை அமைத்து விசாரித்து வருவதாகவும், அந்த அமைப்புகள் 3,020 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 302 வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டதாகவும், 1,583 வழக்குகளை முடித்துக்கொண்டுவிட்டதாகவும், 1,135 வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







