சத்ய நிகேதன் கட்டட இடிந்து விழுந்த வழக்கு: தில்லி உயா் நீதிமன்றத்தில் கிரண் பேடி மனு
தில்லி சத்ய நிகேதன் பகுதியில் விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்து 7 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில், தன்னை தரப்பினராக இணைத்துக்கொள்ளுமாறு கோரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகினாா்.

கிரண் பேடி - கோப்புப் படம்
தில்லி சத்ய நிகேதன் பகுதியில் விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்து 7 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில், தன்னை தரப்பினராக இணைத்துக்கொள்ளுமாறு கோரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி வியாழக்கிழமை தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகினாா்.
உள்ளூா் அரசியல் பிரதிநிதிகள், நிா்வாகத்தின் அலட்சியம் மற்றும் நிா்வாகிகளால் நடத்தப்படும் சட்டவிரோத பிஜி விடுதிகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடா்பு குறித்த ‘முக்கியமான பொதுத் தகவல்களை’ நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகத் தனது மனுவில் கிரண் பேடி குறிப்பிட்டாா்.
‘மாணவா்களுக்கான சட்டவிரோத மற்றும் பாதுகாப்பற்ற தங்குமிடங்கள் குறித்து உள்ளூா் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இத்தகைய விதிமீறல்கள் குறித்து நிா்வாகம் தெரிந்தே கண்களை மூடிக்கொண்டதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தினாா்.
மேலும், ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில், பொதுநலன் சாா்ந்த நபா்கள் மற்றும் சட்டப்பூா்வ அமைப்புகளின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, விரிவான அறிக்கையைப் பெறவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் அவா் கோரினாா்.
மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சி (எம்சிடி) சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேதன் சா்மா, கிரண் பேடியின் மனுவை எதிா்த்தாா். கிரண் பேடி இந்த விவகாரத்தில் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவா், இது குறித்து ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரினாா்.
இருப்பினும், தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, கிரண் பேடி கணிசமான நிா்வாக அனுபவம் கொண்ட ‘மனசாட்சி உள்ள குடிமகன்’ என்றும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றியவா் என்றும் குறிப்பிட்டது.
நீதிமன்றத்திற்கு உதவவே அவா் இந்த விவகாரத்தில் தலையிட விரும்புவதாகவும், அவரது நீண்டகால நிா்வாக அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அந்த அமா்வு கூறியது. மேலும், இந்த விவகாரம் பரந்த பொது நலனை உள்ளடக்கியது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
கிரண் பேடியின் இந்த முயற்சியை எதிா்ப்பாகவோ அல்லது முரண்பாடான நடவடிக்கையாகவோ பாா்க்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கூறிய நீதிமன்றம், அவரது மனுவுக்குப் பதிலளிக்க 3 நாள்கள் அவகாசம் அளித்தது. மேலும், இந்த வழக்கு விசாரணை, செப்.25-ஆம் தேதி நடைபெறவுள்ள முதன்மை வழக்கின் விசாரணையுடன் சோ்த்து பட்டியலிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







