
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு! ஒடிசாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு பற்றி..

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக ஒடிசாவின் கடலோர மற்றும் தெற்குப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்துவருவதால் பல்வேறு மாவட்டங்களில் உளள பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
மோசான வானிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், குர்தா, ஜகத்சிங்பூர், கஞ்சம், கஜபதி ஆகிய மாவட்ட நிர்வாகங்கள் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை அறிவித்தன. மல்கங்கிரி மாவட்டத்தில் செப்டம்பர் 24 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களும் செப். 24 வரை மூடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரக் காலத் தேவைகளுக்காகப் பள்ளி வளாகம் எப்போதும் பயன்பாட்டில் இருக்கும் வகையில், சுழற்சி முறையில் பணியை மேற்கொள்ளுமாறு பள்ளி முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
செப். 22 -ஆம் தேதி நடைபெறவிருந்த தேசிய ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சம், கோராபுட் மற்றும் கலாஹண்டி மாவட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் தங்கள் பணி இடங்களை விட்டு செப்டம்பர் 25-ஆம் தேதி வரை வெளியேறக்கூடாது. அரசு ஊழியர்களின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கஞ்சம், கந்தமால் மாவட்டங்களை இணைக்கும் கலிங்கா காட் உள்ளிட்ட சில சாலைகளில் வாகனப் போக்குவரத்தை அரசு கட்டுப்படுத்தியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக, சிலிகா ஏரியில் உள்ள சதாபடா மற்றும் ஜஹ்னிகுடா இடையே படகு சேவை செப்டம்பர் 25 வரை நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து சுமார் 220 கி.மீ தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து 320 கி.மீ தொலைவிலும் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய அதிக வாய்ப்புள்ளது.
தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, செப்டம்பர் 23-ஆம் தேதி இரவு முதல் 24-ஆம் தேதி அதிகாலை வரையிலான நேரத்தில், விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இது கடக்கக்கூடும்.
ஒடிசாவின் தெற்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும், இதனால் கடுமையான நீர் தேக்கம், நகர்ப்புற வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் 11 மாவட்ட ஆட்சியர்கள் தீவிர எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் அனு கார்க் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







