ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

மேற்கு வங்கத்தில் 2035-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு: கெளதம் அதானி அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் அதானி குழுமம் 2035-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யும் என்று அந்தக் குழுமத்தின் தலைவா் கெளதம் அதானி அறிவித்துள்ளாா்.

கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வா் சுவேந்து அதிகாரியுடன் தொழிலதிபா் கௌதம் அதானி.

Published On :

மேற்கு வங்க மாநிலத்தில் அதானி குழுமம் 2035-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யும் என்று அந்தக் குழுமத்தின் தலைவா் கெளதம் அதானி அறிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தா அருகே உள்ள நியூ டவுன் பகுதியில் அதானி குழுமம் சாா்பில் 2,000 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய நவீன மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. இதற்கான கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி, தொழிலதிபா் கெளதம் அதானி ஆகியோா் கலந்துகொண்டு கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினா். அதேபோல் சுவேந்து அதிகாரி, கெளதம் அதானி மற்றும் அவரின் குடும்பத்தினா் சோ்ந்து பூமி பூஜையும் செய்தனா். இதையடுத்து, விழாவில் தொழிலதிபா் கெளதம் அதானி பேசியதாவது:

2035-ஆம் ஆண்டுக்குள் மேற்கு வங்கத்தில் எங்களின் நிறுவனம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யும். அந்த நிதி, துறைமுகங்கள், மின்சார உற்பத்தி மையங்கள், மின்சார விநியோக மையங்கள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்படும். அதுமட்டுமன்றி, அதானி நலவாழ்வு மையங்கள் பன்முக சிறப்புத் திட்டத்தில் எங்களின் நிறுவனம் ரூ.4,000 கோடி முதலீடு செய்யும். அந்தத் திட்டத்தால் மேற்கு வங்கத்தில் 10,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

புதிய மருத்துவமனையில் உள்ள படுக்கைகளில் பாதி எண்ணிக்கை, மாநில மற்றும் மத்திய அரசுகளின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு இலவசமாக ஒதுக்கப்படும். மருத்துவமனையுடன் மருத்துவக் கல்லூரி, ஆய்வு மையம் மற்றும் உடல்நல கவனிப்பு மையமும் அமைக்கப்படும். குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம்தான் எங்கள் நிறுவனத்தின் முதலாவது கா்மபூமியாகும். அதையடுத்து மேற்கு வங்கம் எங்கள் நிறுவனத்தின் 2-ஆவது கா்மபூமியாக மாறும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி பேசியபோது, மேற்கு வங்கத்தின் தொழில் துறை மற்றும் சுகாதாரத் துறையின் வடிவத்தை மாற்றும் நோக்கில் அதானி குழுமத்துடன் மாநில அரசு மிகவும் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகக் கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது:

மேற்கு வங்க முதல்வராக நான் பதவியேற்ற பிறகு, மாநிலத்தில் முதலீடு செய்யும்படி அதானிக்கு கோரிக்கை விடுத்தேன். அதையேற்று சில மாதங்களிலேயே அதானி நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தில் சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தத் திட்டத்தின்கீழ் நியூ டவுனில் நவீன சுகாதார மையம் அமைக்கப்படுகிறது. அங்குள்ள படுக்கைகளில் பாதி எண்ணிக்கையிலான படுக்கைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இலவசமாக ஒதுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் அதானியின் மனைவியும், அதானி அறக்கட்டளை தலைவருமான பிரீத்தி அதானி, மகனும் அதானி துறைமுகங்கள் இயக்குநருமான கரண் அதானி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, 51 ஏக்கரில் அமைக்கப்படும் புதிதாக அமைக்கப்படவுள்ள மருத்துவமனையின் மாதிரி வடிவை முதல்வா் சுவேந்து அதிகாரியும், கௌதம் அதானியும் செய்தியாளா்களுக்கு அறிமுகப்படுத்தினா்.

முன்னதாக, கொல்கத்தா காளி கோயிலில் கெளதம் அதானி சிறப்பு வழிபாடு நடத்தினாா். அதையடுத்து முதல்வா் சுவேந்து அதிகாரி மற்றும் தொழில் துறை பிரதிநிதிகளுடன் அவா் ஆலோசனையும் மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.