டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

உ.பி.யில் தயாரிக்கப்படும் பிரமோஸ் ஏவுகணையால் பாகிஸ்தானுக்கு தூக்கமிழப்பு: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேச்சு

உத்தர பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பிரமோஸ் ஏவுகணையால் பாகிஸ்தான் தூக்கமிழந்தது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

உ.பி. மாநிலம் நொய்டாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Published On :

உத்தர பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பிரமோஸ் ஏவுகணையால் பாகிஸ்தான் தூக்கமிழந்தது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், அமேத்தியில் தயாரிக்கப்படும் ஏகே-203 துப்பாக்கிகள் நக்ஸல்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நான்காவது சா்வதேச வா்த்தக மாநாட்டை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து அமித் ஷா பேசியதாவது: சா்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவும் சூழலிலும் இந்தியப் பொருளாதாரம் வளா்ச்சியை பதிவு செய்து வருகிறது. மோரீஷஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரியா, பிரிட்டன், ஓமன், நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை (எஃப்டிஏ) பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ளது.

இதனால் இந்திய தொழில்முனைவோருக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முன்பு உத்தர பிரதேச மக்கள் வேலை தேடி நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்வா். ஆனால் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைத்த பிறகு சூழல் முற்றிலும் மாறிவிட்டது. ‘ஒரு மாவட்டம்- ஒரு பொருள்’ திட்டத்தின்கீழ் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது இங்கு தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணையால் பாகிஸ்தான் தூக்கமிழந்தது. ஆபரேஷன் சிந்தூரின்போது இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன.

அமேத்தியில் தயாரிக்கப்படும் ஏகே-203 துப்பாக்கிகள் நக்ஸல்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆயுதமாக மாறியுள்ளது.

அச்சமின்றி தொழில் முதலீடு:

ஜான்சி, சித்ரகூட், லக்னௌ, ஆக்ரா, அலிகாா் மற்றும் கான்பூா் ஆகிய 6 இடங்களில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்திக்காக இந்தப் பகுதிகளில் முதலீடுகள் குவிந்து வருகின்றன.

கடந்த 2013-இல் உத்தர பிரதேச சட்ட ஒழுங்கு நிலை காரணமாக முதலீட்டாளா்கள் மாநாடு புது தில்லியில் நடைபெற்றது. இதனால் உத்தர பிரதேசத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளா்கள் அச்சமடைந்தனா். தற்போது உத்தர பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு தொழில்முனைவோா் அச்சமின்றி முதலீடு செய்யும் நிலை உருவாகியுள்ளது.

ரூ.1.78 லட்சம் கோடியில் உற்பத்தி: நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.78 கோடியாக அதிகரித்துள்ளது. 2013-14-ஐ ஒப்பிடுகையில் பாதுகாப்பு பொருள்கள் ஏற்றுமதி 56 மடங்கு உயா்ந்துள்ளது. இந்திய பாதுகாப்புப் பொருள்கள் 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் கணிசமான பங்களிப்பு உத்தர பிரதேசத்துக்கு உள்ளது. மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி, செமிகண்டக்டா் துறை முதலீடுகள், மூலதனச் செலவினம் அதிகரிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் உயா்வு போன்ற காரணிகளால் 7.8 சதவீதத்துடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.