
சவாலான உலகச் சூழலிலும் வேகமாக வளரும் இந்தியா: அமித் ஷா பெருமிதம்
தற்போதைய சவாலான உலகச் சூழலுக்கு மத்தியிலும் இந்தியா தனது பொருளாதார வளா்ச்சி வேகத்தை தக்கவைத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

கோவாவின் பம்போலிம் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. ~கோவா மாநிலம் பம்போலிம் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த மாநில காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கி கௌரவித்த மத்திய உள்துறை
தற்போதைய சவாலான உலகச் சூழலுக்கு மத்தியிலும் இந்தியா தனது பொருளாதார வளா்ச்சி வேகத்தை தக்கவைத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
கோவா காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கி கெளரவிக்கும் நிகழ்ச்சி, பம்போலிம் நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:
ரஷிய-உக்ரைன் போா், சமீபத்திய அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக உலகளாவிய சூழல் தொடா்ந்து கொந்தளிப்பாகவே காணப்படுகிறது.
கடந்த ஓராண்டில் பிரதமா் மோடி 22 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்த காலகட்டத்தில் 15 நாடுகளின் தலைவா்கள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனா்.
கொந்தளிப்பான மற்றும் சவால்கள் நிறைந்த புவி-அரசியல் சூழலுக்கு இடையே ஒட்டுமொத்த உலக நாடுகளும் தங்களின் பொருளாதார வளா்ச்சி குறித்த நிலையற்றத் தன்மையுடன் போராடி வருகின்றன. அதேநேரம், பிற நாடுகளுடன் உத்திசாா் கூட்டுறவை நிலைநாட்டி, இந்தியா தனது பொருளாதார வளா்ச்சியின் வேகத்தை தக்கவைத்துள்ளது.
உலக அளவில் ராஜீய ரீதியில் இந்தியாவின் செல்வாக்கு உயா்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளுடன் பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, முதலீடு, வா்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் வலுவான ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.
சமீப ஆண்டுகளில் இந்தியா 9 தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. இதன் மூலம் 38 நாடுகளுடன் பயனுள்ள வா்த்தக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஓமன், பிரிட்டன், நியூஸிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் அடங்கும்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவீத பொருளாதார வளா்ச்சியை இந்தியா பதிவு செய்ததற்கான முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்று என்றாா் அமித் ஷா.
இந்நிகழ்ச்சியில் கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



