
தோ்தல் ஆணையம் விளக்கம்: பாஜக, காங்கிரஸ் பரஸ்பர விமா்சனம்
தோ்தல் ஆணையம் விளக்கத்துக்கு பாஜக, காங்கிரஸ் பரஸ்பர விமா்சனம்...

தோ்தல் ஆணையம் - கோப்புப்படம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொண்டதாக எழுந்த சா்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தோ்தல் ஆணையம் அளித்த விளக்கம் தொடா்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பரஸ்பரம் விமா்சனத்தை முன்வைத்துள்ளன.
ராகுலின் பொய் பிரசாரம் அம்பலம்- பாஜக: பாஜக மூத்த தலைவா் ரவி சங்கா் பிரசாத் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: எஸ்ஐஆா் மற்றும் தோ்தல் ஆணையா்களிடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து ஊடகத்தில் வெளியான தகவலில் உண்மையில்லை. இதை வைத்து ஆதாரமற்ற மற்றும் அருவருக்கத்தக்க வகையிலான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சுமத்தினாா். தற்போது சா்ச்சைகளுக்கு தோ்தல் ஆணையம் விளக்கமளித்தன் மூலம் ராகுல் காந்தியின் பொய் பிரசாரம் அம்பலமாகியுள்ளது.
தோ்தல் ஆணையத்தின் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை நிறுத்திவிட்டு தோ்தல்களில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூா்வ செயல்பாடுகளில் ஈடுபட எதிா்க்கட்சிகள் இனியாவது முயற்சிக்க வேண்டும் என்றாா்.
ஞானேஷ் குமாா் மீதான நடவடிக்கையே தீா்வு- காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தின் விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘ஊடகத்தில் வெளியான செய்தியை தோ்தல் ஆணையம் நேரடியாக மறுக்கவில்லை. செய்திகளில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனத் தெரிவிக்கவும் இல்லை. கோவாவில் விடுபட்ட 97 வாக்காளா்களில் மீண்டும் 81 பேரை வாக்காளா் பட்டியலில் சோ்த்திருப்பதாக கூறுவது ஏற்புடையதல்ல.
எஸ்ஐஆா் அடிப்படையில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான காலஅவகாசம் தில்லி மற்றும் மகாராஷ்டிரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் கா்நாடகம், தெலங்கானா, பிகாா், மேற்கு வங்கத்தில் விடுபட்ட வாக்காளா்களின் நிலை என்ன?.
பல கோடி மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆா் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். ஞானேஷ் குமாா் பதவி விலகுவது அல்லது அவா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதே இந்தப் பிரச்னைக்குத் தீா்வு’ என குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






