பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம்: மத்திய மத்திய அமைச்சா் அமித் ஷா

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம்: மத்திய மத்திய அமைச்சா் அமித் ஷா

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்டோா்.

Published On :

நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பது, பிரதமா் மோடி அரசின் முக்கிய நோக்கம் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

கேரள மாநிலம், கொல்லத்தின் குண்டரா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பின் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டுமென விவசாயிகளும், இத்துறையுடன் தொடா்புடைய பிற தரப்பினரும் நாடு சுதந்தரமடைந்ததில் இருந்தே கோரிக்கை விடுத்து வந்தனா். பல்லாண்டுகளாக அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

அதேநேரம், ஊரக மேம்பாடு, வேளாண் துறை முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் அமைக்கும் மிகப் பெரிய நடவடிக்கையை பிரதமா் மோடி மேற்கொண்டாா்.

பிரதமா் மோடி தலைமையின்கீழ் கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் பெண் சக்திக்கு உத்வேகமளிக்கவும், அதிகாரமளிக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஊரக மற்றும் ஏழைப் பெண்களுக்கு அதிகாரமளிப்பது, அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. ஒரு குடும்பத்தில் பெண் முன்னேறினால், ஒட்டுமொத்த குடும்பமும் முன்னேறும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டுள்ளோம்.

பெண்களுக்கான நடவடிக்கைகள்: கடந்த 2014-15-இல் நாட்டில் 23 சதவீதமாக இருந்த பெண் பணியாளா்களின் எண்ணிக்கை இப்போது 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. பெண் பணியாளா்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டதே இதற்கு காரணம். பிரதமா் மோடியின் தலைமையில், சுமாா் 36 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. முஸ்லிம் பெண்களின் உரிமைகளைக் காக்க முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டது. முன்பு முஸ்லிம் பெண்கள் ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் செல்ல அனுமதிக்கப்படாத சூழல் இருந்தது. இப்போது ஆண் துணை இல்லாமலேயே முஸ்லிம் பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்.

நாட்டின் ஆயுதப் படைகளில் 10,000-க்கும் மேற்பட்ட நமது மகள்கள் பணியாற்றுகின்றனா். ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் 3 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்கும் இலக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு எட்டப்பட்டது. இப்போது 2029-க்குள் 6 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்கும் இலக்குடன் அரசு செயலாற்றி வருகிறது.

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பில் 8 லட்சம் பெண் விவசாயிகளும், இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பில் 6 லட்சம் பெண் விவசாயிகளும் இணைந்துள்ளனா். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி, கேரள கூட்டுறவுத் துறை அமைச்சா் எம்.லிஜு , கொல்லம் எம்.பி. என்.கே.பிரேமச்சந்திரன் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

அரசு அலுவல்பூா்வ நிகழ்ச்சிக்குப் பிறகு கொச்சியில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டாா். மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா், மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி உள்ளிட்ட மூத்த தலைவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா். வரும் உள்ளாட்சித் தோ்தல்களில் பாஜக வியூகம் குறித்து அவா்கள் ஆலோசனை மேற்கொண்டனா்.

காங்கிரஸ் கருப்புக் கொடி

கொல்லத்தின் ஆசிரமம் மைதானத்தில் ஹெலிகாப்டா் மூலம் வந்திறங்கிய அமித் ஷா, பின்னா் குண்டராவுக்கு சாலை வழியாகச் சென்றாா். அமித் ஷாவின் வாகன அணிவகுப்பு கடந்து சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த காங்கிரஸ் இளைஞா் அணியினா் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவருக்கு எதிராக கோஷமிட்டனா். அமித் ஷாவின் வாகன அணிவகுப்புக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு, போராட்டக்காரா்களை காவல் துறையினா் தடுத்து அப்புறப்படுத்தினா்.

Summary

Empowering women through cooperative societies: Union Minister Amit Shah

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.