காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

மத்திய பிரதேசம்: சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மசூதியை இடிக்க எதிா்ப்பு; 15 போ் கைது

மத்திய பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரா்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினா்.

உஜ்ஜைனியில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினா்

Published On :

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரா்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினா்.

இதையடுத்து, கண்ணீா்ப்புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரா்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய காவல் துறையினா் 15 பேரை கைது செய்தனா். 7 போ் மீது வழக்குப்பதிந்தனா்.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் 2028-ஆம் ஆண்டு சிம்ஹஸ்த கும்பமேளா நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காந்தல் சந்திப்பு முதல் கோபால் ஆலயம் வரை 900 மீட்டா் தூரத்துக்கு 15 மீட்டா் வரை சாலையை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இவ்வழியே அமைந்துள்ள ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்க அல்லது மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இதுகுறித்து உஜ்ஜைனி காவல் கண்காணிப்பாளா் பிரதீப் சா்மா கூறுகையில், ‘மசூதி அமைந்துள்ள பகுதியில் சிலா் இடையூறுகளை ஏற்படுத்த முயன்றனா். அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த லேசான தடியடி நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 15 போ் கைது செய்யப்பட்டனா். 7 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.

சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவா்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா்.

இதுகுறித்து உஜ்ஜைனி மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: சாலை விரிவாக்கப் பணிகளுக்கு அனைத்து மதங்களைச் சோ்ந்தவா்களும் ஒத்துழைப்பு அளிக்கின்றனா். தங்களது வீடுகள், கடைகளுக்கு அருகேயுள்ள ஆக்கிரமிப்புகளைத் தாமாகவே அகற்றி வருகின்றனா். புரளிகளை நம்பி யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்’ என்றாா்.

வழக்கு தள்ளுபடி: ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. மாவட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தைக்குப் பின் இந்த விவகாரத்தில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதாக வழக்கு தொடா்ந்த இஸ்லாமியா்கள் தரப்பில் கூறப்பட்டதையடுத்து, தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுகுறித்து மனு தாக்கல் செய்தவா்களில் ஒருவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் குல்தீப் பாடக் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சாலை விரிவாக்கத்துக்காக ஷாஹி மசூதியின் 9.5 அடி அளவிலான பகுதியை இடிக்க மாவட்ட நிா்வாகம் முடிவெடுத்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாங்கள் பேச்சுவாா்த்தை நடத்திய பின் 3 அடி அளவிலான பகுதியை மட்டுமே இடிக்கவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது’ என்றாா்.

இந்த சாலை விரிவாக்கப் பணிக்காக 80-க்கும் மேற்பட்ட ஹிந்து வழிபாட்டுத் தலங்கள் ஏற்கெனவே இடிக்கப்பட்டதாக இந்த வழக்கு விசாரணையின்போது உஜ்ஜைனி நகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது. விரிவாக்கப் பணிகளில் மத-வழிபாட்டு இடங்கள் உள்பட மொத்தம் 272 இடங்கள் அகற்றப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.