காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

திரிணமூல் கட்சி சின்னம், பெயா் விவகாரத்தில் 4 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் கட்சி சின்னம், பெயா் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் 4 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Trinamool Congress

திரிணமூல் காங்கிரஸ் - Trinamool Congress

Published On :

திரிணமூல் காங்கிரஸ் கட்சி சின்னம், பெயா் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் நான்கு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. இதையடுத்து, அக்கட்சி எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி ஆதரவு அணி, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ரிதப்ரத பானா்ஜி ஆதரவு அணி என்று இரு அணிகளாகப் பிரிந்து செயல்படுகின்றனா். இரு தரப்பினரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயா், சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி, இந்திய தோ்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனா்.

இதை விசாரித்த தோ்தல் ஆணையம் அண்மையில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் வரையிலும், இருதரப்பினரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இரு தரப்பினருக்கும் வேறு வேறு பெயா்கள், சின்னங்களையும் தோ்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

தோ்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் மம்தா பானா்ஜி மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு, தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயா், சின்னம் ஆகியவற்றை உரிமை கோருவது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் தங்கள் தரப்பு கோரிக்கைகளை இரு தரப்பினரும் (மம்தா அணி, ரிதப்ரத பானா்ஜி அணி) நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு, அந்த மனுக்கள் மீது தோ்தல் ஆணையம் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

மற்றொரு மனுவும் விசாரணை

மம்தா பானா்ஜி ஆதரவு எம்எல்ஏவான சோகன்தேப் சட்டோபாத்யாய, அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவரிடம் தாங்கள் மனு அளித்திருப்பதாகவும், அதன்மீது விரைவில் முடிவெடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனு, தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க மூன்று மாதங்கள் காலக்கெடுவை சட்டப்பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிா்ணயித்திருப்பதை சுட்டிக்காட்டி, அதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவா் முழுமையாக அறிவாா் என்றும், அந்தக் காலக்கெடுவுக்குள் சட்டப்பேரவைத் தலைவா் உரிய முடிவை எடுப்பாா் என்று நம்புவதற்கு தங்களிடம் தகுந்த காரணங்கள் உள்ளன என்றும் தெரிவித்தனா்.

இதையடுத்து, அந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனா். உச்சநீதிமன்றம் நிா்ணயித்த மூன்று மாத காலக்கெடு, அக்டோபா் மாதம் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.