Enable Javscript for better performance
16. தம்மபதம் - 3- Dinamani

சுடச்சுட

  

  16. தம்மபதம் - 3

  By நாகூர் ரூமி.  |   Published on : 03rd December 2018 10:00 AM  |   அ+அ அ-   |    |  

  forgiveness

   

  மகிழ்ச்சியாக வாழ்வோம் வாருங்கள்.

  நம்மை வெறுப்பவர்களை வெறுக்காமல்,

  வெறுப்பவர்கள் மத்தியில், வெறுப்பில்லாமல்.

  - தம்மபதம்

  தம்மபதத்தின் பதினைந்தாவது அத்தியாயத்தின் துவக்கம் இது. படிப்பதற்கே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் பின்பற்றுவதற்கு?! இந்தக் கேள்விதான் முக்கியம். முதலில் இந்த பொன்மொழியில் சந்தோஷமாக வாழ்வதற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. அதன் பிறகு, சந்தோஷமான வாழ்க்கைக்கான சூத்திரம் சொல்லப்படுகிறது! ஆமாம். மகிழ்ச்சியாக இருக்கத்தான் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் விரும்பும் அனைவராலும் அதற்கான விலையைக் கொடுக்க முடியாது! ஏனெனில், அந்த விலை வித்தியாசமானது. அசாதாரணமானது. எல்லோருக்கும் அது சாத்தியமா என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் தீவிரமாக விரும்பினால் சாத்தியமாகக் கூடியதுதான்.

  நம்மை வெறுப்பவர்கள் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஜாதி, மதம், கொள்கை, கோட்பாடு, கட்சி, நிறம், இனம் இன்னபிற என்று பலவிதமான வெறுப்புச் சுவர்களால் சூழப்பட்டவர்களாகவே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இந்தச் சுவர்களை உடைக்கும்வரை உண்மையான சந்தோஷம் கிடைக்கவே கிடைக்காது என்பதுதான் தம்மபதத்தின் குறிப்பு.

  வெறுப்பை வெல்ல வேண்டுமானால் நமக்கு மன்னிக்கின்ற மனம் வேண்டும், அல்லவா? ஆனால் மனதாற மன்னிப்பதென்பது லேசான காரியமல்ல. “உங்கள் எதிரிகளை மன்னித்துவிடுங்கள். ஏனெனில் மன்னிப்பைத் தவிர அவர்களைக் கடுப்பேற்றும் விஷயம் வேறெதுவுமே கிடையாது” என்றார் ஆங்கில நாடகாசிரியர் ஆஸ்கார் வொயில்டு! அவர் எப்போதுமே அப்படித்தான் பேசுவார், எழுதுவார்! ரொம்ப ஜாலியான ஆள். நான் சொல்லவரும் மன்னிப்பு, அவர் சொன்னமாதிரியானதல்ல.

  ஒருத்தி ஒரு கிளி வாங்கினாளாம். பேசும் கிளி. ஆனால் அது அவள் கையைக் கொத்திக்கொண்டே இருந்தது. ரொம்ப கடுப்பாகிப்போன அவள், வீட்டுக்கு வந்தவுடன் சட்டென்று அதை ’ஃப்ரிஜ்’ஜைத் திறந்து ’ஃப்ரீசர்’ உள்ளே அதை வைத்துவிட்டாள். ஆனால் ஒரு பத்து விநாடிகள்தான். பிறகு கதைவைத் திறந்து அதை மீண்டும் கையில் ஏற்றினாள். கிளி பேச ஆரம்பித்தது. ’ஸாரி, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இனிமேல் உங்கள் கையைக் கொத்தமாட்டேன். ஆனால் எனக்கொரு சந்தேகம்’ என்றது.

  ‘என்ன’ என்றாள் அவள்.

  ‘ஃப்ரீசருக்குள் உள்ள சிக்கனெல்லாம் என்ன பாவம் செய்தது’ என்று கேட்டது கிளி! நான் சொல்லவரும் மன்னிப்பு, அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு உங்களைத் தள்ளுவதல்ல.

  மகாத்மா காந்தி பற்றி நாம் அறிவோம். அவரை மனமாறப் பின்பற்றிய ஒரு விடுதலை வீரரும், மன்னிப்பு என்ற கருத்தையே தன் வாழ்நெறியாகக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல. நெல்சன் மண்டேலாதான். இருபது ஆண்டுகள் தென்னாப்பிரிக்கச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா வெளியே வந்த பிறகு, ஒரு பேரணியின்போது இப்படிக் கூறினார்: ”நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்கும்போதே, வேதனையின் ஒரு பகுதி நீங்கிவிடுகிறது. நீங்கள் மன்னிக்கும்போது, அது முற்றிலுமாக நீங்கிவிடுகிறது”. அந்தப் பேச்சு, தம்மபதத்தின் வெளிப்பாடன்றி வேறென்ன?

  வெறுப்பதென்பது விஷத்தை நாம் குடித்துவிட்டு, அது எதிரிகளைக் கொன்றுவிடும் என்று நினைப்பதைப் போன்றது என்று சொன்னவரும் அவரே! ஒருவரது சிந்தனை எவ்வளவு தெளிவாக இருந்தால் அவரால் இப்படிப் பேசமுடியும்?

  பென்சில்வேனியாவில் 2006-ல் ஒரு பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில், அமிஷ் என்ற சமூகத்தைச் சேர்ந்த எட்டு சின்னப் பெண்கள் உயிரிழந்தனர். அப்பெண் குழந்தைகளின் உறவினர்கள், அக்குழந்தைகளைச் சுட்டுக்கொன்ற பைத்தியக்காரனின் மனைவியை சந்தித்து அவளுக்கு ஆறுதல் கூறினர்! கேட்பதற்கு முட்டாள்தனமாகத் தோன்றுகின்ற இந்த நிகழ்ச்சி உண்மையில் நடந்தது. ஆறுதல் சொன்ன அமிஷ் சமூகத்தினரும் பைத்தியக்காரர்கள் அல்ல. சின்னப் பெண்கள் இறந்த துக்கம் அவர்களுக்கு இல்லாமல் இல்லை. ஆனாலும் அவர்கள் மன்னித்தனர். அது அவர்களுக்குள் இருந்து வெளிப்பட்ட தம்மம்.

  இரண்டு நண்பர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது இருவருக்கும் ஏதோ ஒரு விவாதம் ஏற்பட்டது. அதில் ஒரு நண்பன் இன்னொருவனை கன்னத்தில் அறைந்தான். உடனே அறை வாங்கிய நண்பன் குனிந்து மண்ணில், ‘என் உயிர் நண்பன் இன்று என்னை என் கன்னத்தில் அறைந்துவிட்டான்’ என்று எழுதினான்.

  பின்னர் மீண்டும் அவர்கள் தொடர்ந்து சென்றனர். குளிப்பதற்காக ஒரு ஆற்றில் இறங்கியபோது, அறை வாங்கியவன் ஒரு சுழியில் மாட்டிக்கொண்டு மூழ்க ஆரம்பித்தான். அறைந்த நண்பன் அவனைக் காப்பாற்றிக் கரையில் சேர்த்தான். அறை வாங்கிய நண்பன் ஒரு பாறையில், ‘இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்’ என்று எழுதினான்.

  ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய் என்று கேட்டபோது, அவன் சொன்னான்: ‘நம்மை யாராவது காயப்படுத்தும்போது, அதை நாம் மண்ணில்தான் எழுத வேண்டும். ஏனெனில், மன்னிப்பு எனும் காற்று அதைக் காணாமல் ஆக்கிவிடும். ஆனால், நமக்கு ஒருவர் நன்மை செய்யும்போது அதைக் கல்லில் பொறிக்க வேண்டும். அப்போதுதான், காற்றாலும் காலத்தாலும் அதை அழிக்க முடியாது’ என்றான். இணையத்தில் கிடைக்கும் அர்த்தம் பொதிந்த கதைகளில் இதுவும் ஒன்று. தன்னைக் கொல்ல நினைத்து, பாழும் கிணற்றில் தன் சகோதரர்களே தள்ளிவிட்டபோதும் அவர்களை மன்னித்த யூசுஃப் / ஜோசஃபின் கதையை, புனித பைபிளும் குர்’ஆனும் கூறுகின்றன.

  வெற்றியானது வெறுப்பை உண்டாக்குகிறது!

  வெற்றிகொள்ளப்பட்டவன் வெற்றிகொண்டவனை வெறுக்கிறான்!

  வெற்றியையும் தோல்வியையும் விட்டுவிட்டவனே சந்தோஷமடைகிறான்!

  என்கிறது இன்னொரு பொன்மொழி. மெல்ல மெல்ல வெற்றி தோல்வியைத் தாண்டி, இன்ப துன்பத்தைத் தாண்டி ஞானத்தை நோக்கி மெல்ல மெல்ல நம்மை அழைத்துச் செல்கிறது தம்மபதம். ஆழமான உளவியலைக் கூறுகிறது இந்தப் பொன்மொழி. வெற்றியானது எப்படி வெறுப்பை உண்டாக்கும் என்ற கேள்வியை எழுப்பும் மனதுக்குத் தகுந்த, உகந்த பதிலையும் கூறுகிறது. தோற்றவன், என்றாவது வென்றவனை விரும்புவானா? ஒரு மனிதனுக்குள் வெறுப்பு வந்துவிட்டால் நாம் தோற்றுவிட்டோம் என்பதாக அவன் உணர்ந்துகொள்கிறான் என்பது ஆழமான உளவியல் உண்மையல்லவா?

  ஞானி டயொஜீனஸை மாவீரன் அலெக்சாண்டர் சந்தித்த கதைதான் நினைவுக்கு வருகிறது. டயொஜீனஸ், மாலை வெயிலில் சுகமாக படுத்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்து நின்ற அலெக்சாண்டர், ‘நான் மாவீரன் அலெக்சாண்டர். உங்களுக்கு என்னால் ஆக வேண்டியது ஏதாவது உள்ளதா?’ என்று கேட்டார்.

  ‘ஆமாம், உள்ளது’ என்றார் ஞானி டயொஜீனஸ்.

  ‘என்ன செய்ய வேண்டும்?’ என்றார் அலெக்சாண்டர்.

  ‘கொஞ்ச தள்ளி நில்லுங்கள். சூரியனை மறைத்துக்கொண்டிருக்கிறீர்கள்’ என்றார் ஞானி!

  கடுப்பான அலெக்சாண்டர், ‘என்னையா தள்ளி நிற்கச் சொன்னீர்? உம் தலையை ஒரே வெட்டில் தரையில் வீழ்த்திவிடுவேன்’ என்றார் அலெக்சாண்டர்.

  ‘ஒரே வெட்டில் தலை கீழே விழுந்துவிடுமா? என் தலை கீழே விழுந்து நான் பார்த்ததே இல்லை. எங்கே வெட்டு பார்க்கலாம்’ என்றார் டயொஜீனஸ்!

  அந்தப் பதிலால் கதிகலங்கிப் போனார் அலெக்சாண்டர். வாழ்க்கையில் முதன் முறையாக மரணத்துக்கு அஞ்சாத ஒரு மனிதனை அன்று அவர் கண்டார். அச்சம், ஆசை, வெற்றி, தோல்வி எல்லாவற்றையும் விட்டு அவர் மேலே சென்றிருந்தார். அதனால்தான், மாவீரன் அலெக்சாண்டரிடமும் அவரால் அப்படிப் பேச முடிந்தது. ஆனால், அந்தச் சத்தியம், அலெக்சாண்டருக்கு உயிர் பிரிவதற்குக் கொஞ்சம் முன்னால்தான் தெரிந்தது போலும். அதனால்தான் அவர், சவப்பெட்டிக்கு வெளியே தன் கைகளை நீட்டிவைத்து, அதில் பிடி மண்ணையும் வைக்கச் சொன்னதாக வரலாறு கூறுகிறது. உலகையே வெற்றிகொண்டாலும், கடைசியில் கிடக்கப்போவது மண்ணில்தான் என்ற உண்மையை அவர் ரொம்ப காலதாமதமாக உணர்ந்திருந்தார். அதைத்தான் தம்மபதம் அழகாகச் சுட்டுகிறது.

  நோய்களின் மோசமானது பசிதான்!

  வேதனைகளில் மோசமானது இந்த உடல்தான்!

  இதை அனுபவத்தில் புரிந்துகொண்டுவிடுவதுதான் ஞானப்பேரின்பமாகும்!

  என்கிறது இன்னொரு பொன்மொழி. ஒரு வேனில் உணவுப்பொட்டலங்கள் வந்துள்ளன என்று தெரிந்தவுடன், மஞ்சவாடி என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவன் ஆற்றில் நீந்திவந்து உணவை வாங்கிச் சாப்பிடுகின்ற காணொளி ஒன்று சமீபத்தில் வாட்ஸப்பில் வந்தது. அவனைப்போல, கஜா புயலால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களும் புத்தரின் இந்த பொன்மொழியை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.

  இந்த உடல்தான் வேதனை என்றால், உடலை விட்டு வெளியேறுவது வேதனையில் இருந்து வெளியேறுவதாகும் என்ற குறிப்பு இந்தப் பொன்மொழியில் உள்ளது. அப்படியானால், செத்துப்போக வேண்டுமா என்று கேட்கக் கூடாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஒரு நாள் இந்த உடலை விட்டு வெளியேறித்தான் ஆக வேண்டும். இது நம் எல்லாருக்கும் தெரியும்.

  ஆனால், புத்தர் அதுபற்றிப் பேசவில்லை. வேதனை இல்லாத, வேதனையை விட்டு விடுதலையான ஒரு நிலையைப் பற்றிப் பேசுகிறார். இதே கருத்தை வேறுவிதமாக நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள். மேலே உள்ள தம்மபத பொன்மொழியைப் புரிந்துகொள்ள, அந்த நபிமொழி நமக்கு நிச்சயம் உதவும். அது என்ன நபிமொழி?

  மரணம் வருமுன் மரணித்துவிடுங்கள்.

  இதுதான் அந்த நபிமொழி. ஒருவர் இறந்த பிறகு இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிடுகிறார். வேறு வழியில்லாமல்தான். அந்த வேலையை வாழும் காலத்திலேயே நாம் செய்துவிட முடியுமானால், இறக்குமுன் இறந்தவர்களாகிவிடுவோம் நாம்!

  இந்த நபிமொழியில் உள்ள முதல் ‘மரணம்’ நம் உடலுக்கான மரணம். இரண்டாவது மரணம் நம் மனதுக்கானது. நாம் என்பது நம் உடல்தான், நம் மனம்தான், நம் மூளைதான், நம் அறிவுதான், இதுதான், அதுதான் என்று அடையாளப்படுத்திக்கொள்வதில் இருந்து நம்மால் விடுதலை அடைய முடியுமானால், நாம் மரணம் வருமுன் மரணித்தவர்களாகிவிடுவோம். இதுதான் அந்த நபி மொழியின் குறிப்பு. அப்போது நம் உடல் தொடர்பான, மனம் தொடர்பான வேதனைகளில் இருந்து நாம் விடுபட்டவர்களாகிவிடுவோம். இல்லையெனில், வேதனையில் இருந்து நாம் விடுபடவே முடியாது. அதைத்தான் புத்தர் அவரது பாணியில், ‘வேதனைகளில் மோசமானது இந்த உடல்தான்’ என்று கூறுகிறார்.

  கோபத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி புத்தர் நான்கு பொன்மொழிகள் கூறியுள்ளார். கோபத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்திருக்கிறார். அதைப்படிக்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

  உடலில் ஏற்படும் கோபத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். உங்கள் உடலைக் கட்டுப்படுத்துங்கள். உடலால் பாவங்கள் செய்வதை விட்டுவிடுங்கள். உடலால் நற்குணங்களை வெளிப்படுத்துங்கள்.

  நாவால் உண்டாகும் கோபத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். உங்கள் நாவைக் கட்டுப்படுத்துங்கள். நாவால் நல்ல விஷயங்களைப் பேசுங்கள்.

  மனத்தில் ஏற்படும் கோபத்தைப் பற்றிய விழிப்புணர்வோடு இருங்கள். உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள். மனத்தால் நல்லொழுக்கத்தை வெளிப்படுத்துங்கள்.

  உடலையும், நாவையும், மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பவர்களே ஞானவான்கள்.

  நாக்கு என்பது நம் உடலின் ஒரு பகுதிதான் என்றாலும், அதற்காகத் தனியாக ஒரு பொன்மொழியும் சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில், நாவடக்கம் ஒட்டுமொத்த உடலின் அடக்கத்துக்கும் வழி வகுக்கும். யாகாவார் ஆயினும் நாகாக்க என்று வள்ளுவர் சொல்வதன் காரணமும் அதுதான். இங்கே, புத்தரும் வள்ளுவரும் ஒரே கோட்டில் சந்திக்கின்றனர். ஏனெனில், நாக்கு அப்படிப்பட்டது.

  ‘டாக்டர், என் மனைவி குடிப்பழக்கத்தால ரொம்ப அவதிப்படுறா’ என்றார் கணவர்.

  அதிர்ந்துபோன டாக்டர், ‘உங்க மனைவிக்கு குடிப்பழக்கம் இருக்கா?’ என்றார்.

  ‘இல்ல டாக்டர், குடிப்பழக்கம் எனக்குத்தான். அதனால அவதான் ரொம்ப அவதிப்படுறா’ என்றாராம்!

  இந்த நாக்கு இருக்கே, அது எப்படியெல்லாம் பேசும் என்று சொல்லிவிடவே முடியாது!

  மறுசோறு உண்டு…

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp