சுடச்சுட

  
  talking

   

  அதிகம் பேசுபவர்களெல்லாம் அறிஞர்களல்ல

  பயமும் பகையுமின்றி பொறுமையாக இருப்பவனே அறிஞன்

  முடி நரைத்தவர்களெல்லாம் முதியவர்களல்ல

  உண்மை, நல்லொழுக்கம், அன்பு, வரம்பு மீறாமை, கட்டுப்பாடு                                                                                                                        ஆகியவற்றுடன்

  அசுத்தங்களில் இருந்து விலகி இருப்பவனே முதியவன்

  பிச்சை எடுப்பவனெல்லாம் பிக்ஷு அல்ல

  கற்பு நெறி தவறாமல், நன்மை தீமைக்கு மேலே இருப்பவனே பிக்ஷு

  தம்மபதத்தின் 19-வது அத்தியாயத்தில் இப்படியெல்லாம் புத்தர் கூறுகிறார். இதில் மூன்று அழகான வரையறைகள் உள்ளன. அறிஞர், முதியவர், துறவி ஆகியோரை அறிந்துகொள்வதற்கான வரையறைகள்.

  பலர் பேசிப்பேசியே நம்மைக் கொல்லுவார்கள். சிலர் பேசாமலே கொல்லுவார்கள். முதல் வகையை மட்டும் இப்போது பார்க்கலாம். ஆங்கிலத்தில் பேசும்போது, ஆங்கிலம் தெரியாவிட்டாலும் கேட்டு எழுதி வைத்துக்கொண்டு பேச வேண்டிய அவசியம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உள்ளது. ஆங்கிலம் தெரியாதது தவறல்ல. ஆனால், ஒரு நாட்டின் மந்திரியோ பிரதமரோ இன்னொரு நாட்டுக்கு விஜயம் செய்யும்போது தப்பும் தவறுமாக, சிரிப்பு வருமாறு பேசினால் ஒரு நாடே தலை குனிய வேண்டி வந்துவிடுமல்லவா?

  சமீபத்தில் வெளிநாடு ஒன்றுக்கு வழக்கம்போல விஜயம் செய்த ஒரு துணைக்கண்டத்தின் பிரதமர், அந்நாட்டு மந்திரியின் மனைவியின் பெயரை ஆங்கிலத்தில் ‘மிசஸ் சோ அன் சோ’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘எம்.ஆர்.எஸ். சோ அன் சோ’ என்று சொன்னார்! அவர் வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டு போவது நல்லது என்று சிலர் சொன்னது என் காதில் விழுந்தது! திருவாளருக்கு திருமதி என்றாலே சரிவராது போலிருக்கிறது! இன்னொரு முறை அவரே ஒரு வெளிநாட்டு அதிகாரியை / மந்திரியை வரவேற்கும்போது, we heartily welcome you sir என்று சொல்வதற்குப் பதிலாக we hardly welcome என்று சொன்னாரே பார்க்கலாம்!

  நாலு பேர் கூடியிருக்கும்போது நிறைய பேசினால், அப்படிப் பேசுபவரை பெரிய அறிஞர் என்று நாம் நினைத்துக்கொள்வோம் என்று சிலர் நினைக்கின்றனர். பிறர் ரசிக்கிறார்கள் என்பதற்காக, கிண்டலாகவே எப்போதும் பேசுபவர்கள் உள்ளார்கள். அந்தக் கிண்டலில் அடுத்தவர் மனம் புண்படுமாறு பேசுகிறோம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

  என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். அவர் பேசினால், சுற்றியிருப்பவர்களின் சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருக்கும். அவருக்கு ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தது. சென்னையில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சொந்தக்காரர்கள் சூழ அவர் சென்றார். அவரை ‘செக்’ பண்ண வந்த டாக்டர், ‘இவ்வளவு பேரும் உங்க சொந்தக்காரர்களா’ என்று கேட்டார்.

  அதற்கு அவர், ‘இது கொஞ்சம்தான் டாக்டர், இன்னும் பத்து நிமிஷத்துல ஒரு பஸ்ல வர்றாங்க மத்தவங்க எல்லாம்’ என்றார்! டாக்டர் கடுப்பானார். ‘நோ நோ, இப்படியெல்லாம் பேசுவதானால் வேறு ஹாஸ்பிட்டலுக்குப் போய்விடுங்கள்’ என்று எச்சரிக்கை கொடுத்த பிறகே நண்பர் ‘ஆஃப்’ ஆனார்.

  ஆனாலும் வரம்பு மீறிப்பேசுவதை அவர் விடவே இல்லை. ஒல்லியாக யாராவது இருந்தால், ‘வத்திப்பெட்டி இருக்கா, இவனைப் புடிச்சு ஒரசினா பத்திக்கும்போலருக்கே’ என்பார். குண்டாக யாராவது அவரது இல்லம் வந்து போனால் அவரிடம், ‘அடுத்த முறை வரும்போது சொல்லிவிடுங்கள். ஏன்னா, வாசக்கால இடிச்சிட்டு கொஞ்சம் அகலமா வைக்கணும். அப்பதான் நீங்கள் ஃப்ரீயா உள்ள வரமுடியும்’ என்பார். அந்த மாதிரிப் பேச்சை, கூடியிருப்பவர்கள் அனைவரும் ரசிக்கிறார்கள் என்று அவர் நினைத்தார்.

  ‘ஏங்க, நீங்க முதன்முதல்ல எனக்கு ‘ஐ லவ் யூ’ சொன்னப்ப நான் திக்குமுக்காடிப்போய் ஒரு மணிநேரம் மௌனமாவே இருந்தேன், உங்களுக்கு ஞாபகம் இருக்கா’ என்றாள் மனைவி.

  ‘ம், நல்லா ஞாபகம் இருக்கு. அந்த ஒரு மணி நேரம்தான் என் வாழ்க்கையிலேயே நான் சந்தோஷமா இருந்த நேரம்’ என்றான் கணவன்!

  இந்த மாதிரி ஜோக்குகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனாலும், அவை ஒரு உண்மையைச் சுட்டுகின்றன. நாக்கு என்பது ரொம்ப முக்கியமானது, அது வாயில் போட்டதை மெல்லவும் செய்யும், வாயால் ஒருவரைக் கொல்லவும் செய்யும். ஒரே ஒரு சொல்லில் ஒரு குடும்பமே சிதறிப்போகும், நட்பு முறிந்துபோகும் அபாயம் உள்ளது.

  அதிகமாகப் பேசுவது ஒருவித மனநோயாகும். ஒருவித தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளிவருவதற்காக, ஒருவர் அவருக்கே தெரியாமல் எடுத்துக்கொள்ளும் முயற்சியாகவும் அது இருக்கலாம். ஒருவித உயர்வு மனப்பான்மையையும் அது கொடுக்கலாம். தன் பேச்சை நாலு பேர் கேட்டு ரசிக்கிறார்கள் என்றால், பேசுபவருக்கு உற்சாகம் பிறந்துவிடும். அவரையும் அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார். ‘அந்தக் கட்சித் தலைவனா, அவன் ஒரு முட்டாபய’ என்பார். ‘அவனா, அவன் சும்மா வெத்து வேட்டு’ என்பார். இப்படி ஒவ்வொருவரைப் பற்றியும் தீர்ப்புகளை வழங்கிக்கொண்டே இருப்பார். ஒரு நீதிபதியாக தன்னைத்தானே நியமித்துக்கொள்வதற்கு அவருடைய ரசிகர்கள் உதவுவார்கள்! ஆமாம். அவருடைய பேச்சைக் கேட்டு ரசிக்கும் வேலையில்லாத வெட்டி ஆள்களும் இருக்கத்தானே செய்வார்கள்!

  ஆனால், உலகை மாற்றிய பேச்சுக்கள் எல்லாம் வளவள என்று இருந்ததே இல்லை. ஆபிரஹாம் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு உலகப்புகழ் பெற்றது. ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கு அவர் சொன்னதைவிட சிறப்பான விளக்கம் இதுவரை உலகில் வரவில்லை. அதைத்தமிழில் அப்படியே சொல்வதும் கடினம். 1863-ம் ஆண்டு அவர் கெட்டிஸ்பர்க் நகரில் ஆற்றிய சொற்பொழிவின் முடிவில் இப்படிச் சொன்னார்: ‘government of the people, by the people, for the people, shall not perish from the earth’.

  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார், லிங்கனின் இந்த வரிகளையே கொஞ்சம் மாற்றி, “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதில் ‘அரசு’ என்பதற்குப் பதிலாக ‘நான்’ என்ற சொல் கையாளப்பட்டிருந்தது. அரசாங்கம் என்பதே நான் ஒருத்தி மட்டுமே என்று சொல்வது மாதிரி! முதலில் வரும் of the people என்பதை தமிழாக்க முடியவில்லை! அது மொழிப் பிரச்னை! ஆனாலும், ஒருவருடைய பேச்சு எந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தவல்லது என்பதற்கு அது சான்று.

  1961-ல் கென்னடி பேசியது உலகப் புகழ்பெற்ற பேச்சாகும். ‘இந்த நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. இந்த நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று கேள்’! இதை மறைந்த தலைவர் எம்ஜியார்கூட தனது படத்தின் ஒரு பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

  வின்ஸ்டன் சர்ச்சில் முதன் முறையாக பிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது, பார்லிமெண்டில் சொன்னார்: “உங்களுக்குத் தருவதற்கு என் ரத்தம், உழைப்பு, கண்ணீர், வியர்வை இவை தவிர வேறொன்றுமில்லை”. அது உலகப் புகழ்பெற்ற பேச்சானது. பின்னர், இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து வெல்வதற்கும் அவரது பேச்சு முக்கியக் காரணமாக இருந்தது.

  நட்பையும், உறவையும் கெடுக்கும் சில பேச்சுகளையும் நாடுகளைக் காப்பாற்றிய சில பேச்சுகளையும் பார்த்தோம். பேச்சே நோயாகவும், பேச்சே மருந்தாகவும், பேச்சே பிரச்னையாகவும், பேச்சே தீர்வாகவும் உள்ளது. அதனால்தான், அதிகம் பேசுபவர்களை அறிவாளிகள் என்று சொல்லிவிட முடியாதென்று புத்தர் சொல்கிறார்.

  பொறுமையாக இருப்பவனே அறிஞன் என்று புத்தர் சொன்னதிலும் நமக்கான செய்தி உள்ளது. பொதுவாக, பொறுமையாக இருப்பதென்றால், கஷ்டம் வரும்போது அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது என்றுதான் நாம் அர்த்தப்படுத்துவோம். அது பொறுமையின் ஒரு வெளிப்பாடு மட்டுமே. ஆனால் அது மட்டுமே பொறுமையல்ல.

  நான் பேராசிரியர்ப் பணி செய்துகொண்டிருந்த காலங்களில், மாணவர் ஒருவரிடம் ஏதாவது கேள்வி கேட்பேன். அதற்கு இன்னொரு மாணவன் பதில் சொல்வான். நான் உன்னிடம் கேட்கவில்லை, நீ சும்மா இரு என்று சொல்லி அவனை அடக்கிவிட்டு, கேள்வி கேட்கப்பட்டவனிடமே மீண்டும் கேட்பேன். நான் சொன்ன பதில் சரிதானே சார் என்று, கேட்காமல் பதில் சொன்னவன் கேட்பான்.

  சரிதான், ஆனால் நான் அவனிடம் கேட்கவில்லை. கேட்காதவன் ஏன் பதில் சொல்கிறான்? ஏனெனில், தன் அறிவை மூடி வைக்கும் பொறுமை அவனிடம் இல்லை. என்னிடம் அறிவு இருக்கிறது என்று உடனே காட்ட விரும்புகிறான். என்னிடம் இந்த அறிவு இருக்கிறது என்று காட்டுவதும், வழித்துக்கொண்டு காட்டுவதும் ஒன்றுதான் என்று என் ஞானாசிரியர் கூறுவார்!

  மகிழ்ச்சி, அறிவு போன்ற விஷயங்களை அவசியமின்றி நாமாகக் கொட்டுவது என்பது பொறுமையின்மையின் வெளிப்பாடுதான் என்று புரிந்துகொள்வதற்கு, என் ஞானாசிரியர் சொன்ன உண்மை உரைப்பதற்கு, எனக்குச் சில காலம் ஆனது. ஆனால், புத்தர் ஏற்கெனவே அதை சொல்லிவைத்திருக்கிறார்!

  வயதானால் முடி நரைக்கும். சிலருக்கு இளநரையும் உண்டு. அதனால் நரை முடியை வைத்து ஒருவருடைய வயதைப் பற்றிய முடிவுக்கு வர முடியாது. ஆனால், புத்தர் சொல்ல வருவது இதைப்பற்றியல்ல. குறிப்பிட்ட சில உள்ளப் பண்புகளை வளர்த்துக்கொள்பவனே பெரியவன் / முதியவன் என்ற பெயருக்குப் பொருத்தமானவன். வயது முதிர்ந்துவிட்டால் மட்டும் பெரியவர் என்று ஒருவரைச் சொல்லிவிட முடியாது, சொல்லவும் கூடாது என்பது அவருடைய உபதேசம்.

  சமீபத்தில் ஒரு ஊமைச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பலரில் வயதில் முதியவர்களும் உண்டு என்பதை நாம் பார்த்தோம். அதனால்தான், புத்தர் மிகவும் தெளிவாக ‘உண்மை, நல்லொழுக்கம், அன்பு, வரம்பு மீறாமை, கட்டுப்பாடு’ இவை மட்டுமின்றி, அசுத்தங்களில் இருந்து விலகி இருப்பவனே பெரியவன் என்று கூறுகிறார். முதலில் குறிப்பிடும் ஐந்தும் இருக்குமானால், அசுத்தங்களில் இருந்து விலகுவது இலகுவாக இருக்கும். முன்னது, பின்னதற்கு உதவும்.

  துறவறம் மேற்கொள்பவர்கள் பிச்சை கேட்டு உண்பது வழக்கம். இது நமது இந்திய மரபில் இருந்த பரவலாக அறியப்பட்ட வரலாற்றுக்கூறாகும். ஆனால், அப்படிச் செய்பவர்களெல்லாம் பிக்ஷுகள் என்று சொல்லிவிட முடியாது. அது உடல்ரீதியான ஒரு செயல்பாடு. அகந்தையை அகற்ற அவர்கள் செய்துகொண்ட ஒரு ஏற்பாடு அது. அது போதாது. கூடவே இரண்டு பண்புகள் வேண்டும். கற்பு நெறி தவறாமல் இருக்க வேண்டும், நன்மை தீமைக்கு மேலே இருக்க வேண்டும் என்கிறார் புத்தர்.

  கற்பு நெறி தவறாமல் இருக்க வேண்டும் என்பது புரிகிறது. அதாவது, விஸ்வாமித்திரர் மாதிரி நடந்துகொள்ளக் கூடாது! அப்படி வழுக்கி விழுந்தால், உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணா என்று கிடைத்ததெல்லாம் போய்விடும். அடுத்து நன்மை தீமைக்கு மேலே இருக்க வேண்டும் என்கிறார். நன்மையும் செய்யாமல் தீமையும் செய்யாமல் இருக்க வேண்டுமா? அப்படியல்ல. எது நடந்தாலும், அதனால் பாதிப்படையாத மனநிலை வேண்டும். இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மனநிலை. சந்தோஷமோ துக்கமோ இல்லாத நிலை.

  ஒரு முல்லா கதை நினைவுக்கு வருகிறது. முல்லா, ஒரு மன்னரிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஒருநாள், உணவில் பீன்ஸ் சமைத்து வைக்கப்பட்டிருந்தது. அன்று மன்னர் மிகவும் பசியாக இருந்தார். அதனால், பீன்ஸை மிகவும் சுவைத்துச் சாப்பிட்டார். சாப்பிட்டுவிட்டு, ‘இந்த பீன்ஸைப்போல சுவையான ஒன்றை நான் கண்டதில்லை. தினமும் உணவில் இதைச் சேர்க்கச் சொல்’ என்று உத்தரவிட்டார். அவரது உத்தரவு பின்பற்றப்பட்டது. தொடர்ந்து பல நாள்களாக உணவில் பீன்ஸை உண்டு உண்டு, அது மன்னருக்கு சலிப்பூட்டியது.

  ‘இந்த பீன்ஸ் ரொம்ப மோசமாக உள்ளது. இனி பீன்ஸ் சமைக்க வேண்டாம், என் உணவில் சேர்க்க வேண்டாம் என்று சொல்’ என்று முல்லாவுக்கு உத்தரவிட்டார். முல்லாவும், ‘ஆமாம் மன்னர் அவர்களே, பீன்ஸ் ரொம்ப மோசமானதுதான். இனி நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்’ என்றார்.

  ‘என்ன முல்லா, போன வாரம் பீன்ஸ்தான் மிகவும் சுவையானது என்றாய். இப்போது நான் சொன்ன பிறகு அது மிகவும் மோசமானது என்கிறாயே’ என்று கேட்டார். அதற்கு முல்லா என்ன பதில் சொன்னார் தெரியுமா?

  ‘ஆமாம் மன்னரே, நான் உங்களிடமல்லவா வேலை பார்க்கிறேன். பீன்ஸிடமல்லவே’ என்றார்!

  நகைச்சுவைக் கதையாகத்தான் பலர் இதைப் பார்ப்பார்கள். இது நகைச்சுவைக் கதையும்தான். ஆனால் அதுமட்டுமல்ல. இது ஒரு ஆன்மிகக் கதையும்கூட. இறைவனுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமிருக்கக் கூடாது. இங்கே, மன்னர்தான் கடவுளின் இடத்தில் இருப்பவர். அவர் சுவையானது என்றால், ஆமாம் சுவையானது. அவர் மோசமானது என்றால், ஆமாம் மோசமானது. அவ்வளவுதான். இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தவர்களுக்கு சொந்தக்கருத்து, உணர்ச்சி இத்யாதி கிடையாது. அப்படிப்பட்டவர்கள்தான் சூஃபிகள், ஞானிகள், புத்தர் கூறும் பிட்ஷுகள். நன்மை தீமைக்கு மேலே பிட்ஷுகள் இருக்க வேண்டும் என்று இதைத்தான் புத்தர் குறிப்பிடுகிறார்.

  தம்மபதம் பற்றிக் கொஞ்சம் எழுதியுள்ளேன். முழுமையாக அதற்குள் போக வேண்டும் என்ற எண்ணத்தை இது உண்டாக்கி இருந்தால் சந்தோஷம்.

  மறுசோறு உண்டு...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai