Enable Javscript for better performance
19. சொல்லாததும் உண்மை- Dinamani

சுடச்சுட

  
  prakashraj

   

  நான் சமீபத்தில் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் சுண்டி இழுத்த, கவர்ந்த, பாதித்த, ‘அடடே மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறாரே’, ‘அட இந்த இடம் கவிதை மாதிரி இருக்கிறதே’ என்றெல்லாம் வியக்கவைத்த ஒரு புத்தகம் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ் எழுதிய ‘சொல்லாததும் உண்மை’. சினிமாத் துறைக்கு வந்திருக்காவிட்டால் சிறந்த எழுத்தாளராகியிருப்பார் என்றே தோன்றுகிறது. அவருடைய இன்னொரு அல்லது பல பரிணாமங்கள் ஒளிவு மறைவின்றி காணக் கிடைக்கின்றன.

  இந்திய இலக்கியம், குறிப்பாக கன்னட மற்றும் தமிழ் இலக்கியம், உலக இலக்கியம், குறிப்பாக ரஷ்ய, ஆங்கில இலக்கியம் ஆகியவற்றிலிருந்து ஆங்காங்கே அவர் உதாரணம் சொல்லிச் செல்கிறார். அது சும்மா தொட்டுக்கொள்ள, சப்புக்கொட்ட வைக்கப்பட்ட ஊறுகாய் மாதிரி இல்லாமல், பிரதான உணவாகவே அமைகிறது. கவிதை, நாடகம், சிறுகதை என பல இலக்கிய வடிவங்களிலும் அவர் திளைத்திருப்பது தெரிகிறது.

  அவரது எழுத்து நடை ரொம்ப எளிமையானதாக, களைப்பூட்டாததாக, சுவாரஸ்யமானதாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம், அவரது வெளிப்படைத்தன்மைதான். அதில் விமரிசனத்தோடு கூடிய உண்மை தெறிக்கிறது. உதாரணமாக, அவர் நம்முடைய விமான நிலையங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எழுதுவதைச் சொல்லலாம்:

  பாக்கெட்டில் சிகரெட் இருக்கு. ஆனா, லைட்டர் கொண்டு போக முடியாது. டெரரிஸ்ட் மாதிரியே டீல் பண்ணுவாங்க. ஃப்ரெண்டுக்குப் பிறந்த நாள். அவனுக்குப் பிடிச்ச புத்தகத்தைத் தேடித்தேடி வாங்கி, சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு அழகா பேக் பண்ணினேன். போஸ்ட் மார்ட்டம் பண்ற மாதிரி பேக்கிங்கைக் கிழிச்சு எறிஞ்சுட்டாங்க. ஏர்போர்ட்டுக்குள் போகிற ஒவ்வொருத்தர் மேலேயும் ஒரு தீவிரவாதி உட்கார்ந்திருக்கிற மாதிரி. இந்தியாவோட தேசிய விலங்கு புலி. தேசிய மொழி இந்தி. தேசிய நோய் ஒன்னு இருக்கு, பயம்!

  எவ்வளவு உண்மை! புதுக்கவிதை மாதிரி உள்ளது! ‘தேசிய நோய்’!

  எப்போதுமே நான் சரி, நான் மட்டுமே சரி என்ற கருத்தின் விளைவாக தீவிரவாதம் இருப்பதை இப்படிக் குறிப்பிடுகிறார்:

  துப்பாக்கி எடுக்கிற ஒவ்வொருத்தனும் ஒரு கண்ணை மூடிட்டுதான் சுடுறான். அப்பவே பாதி உலகம் அவன் கண்ணில் இருந்து மறைஞ்சுடுது. தெரிகிற பாதி உலகமும், அவன் பார்வையில் கொடூரமானதாகவே தெரியும்.

  பல நேரங்களில் அவரது எழுத்து கவிதை மாதிரி உள்ளது. சில நேரங்களில் அந்த வெளிப்படைத்தன்மை சங்கடமூட்டுகிறது. அவரது அப்பாவைப் பற்றி எழுதும்போதெல்லாம் பெரும்பாலும் ‘அவன்’ ‘இவன்’ என்றுதான் எழுதுகிறார். ‘‘வாழ்நாள் முழுக்கத் தப்புப் பண்ணிட்டு, கடைசி அஞ்சு நிமிஷம் நல்லவனா இருந்து செத்துப்போனவன் என் அப்பன்’’ என்று கூறுகிறார்.

  அம்மாவை ஏமாற்றி அனுபவித்து குழந்தையைக் கொடுத்துவிட்டு ஓடிப்போன அப்பா மீது மரியாதை இருக்க நியாயமில்லைதான். அதிலும், தன் உயிரையும் வாழ்வையும் குழந்தைகளுக்காகவே அர்ப்பணித்த தாய் பட்ட கஷ்டங்களைப் பார்க்கும்போது அப்பா மீது கோபம் வரத்தான் செய்யும். அந்தக் கோபத்தில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

  ஒரு சில இடங்களில் கவிதைபோலவும் தத்துவார்த்தமாகவும் கருத்துகள் வெளிப்படுகின்றன:

  நண்பன் சிரிச்சான்னா, நமக்கு சந்தோஷமா இருக்கு. எதிரி சிரிச்சான்னா, கஷ்டமா இருக்கே! ரெண்டுமே சிரிப்புதான். ரெண்டுமே சந்தோஷம்தான். ஒருத்தனோட சிரிப்பு, நமக்கு சந்தோஷம். இன்னொருத்தனோட சிரிப்பு, நமக்குக் கஷ்டம்.

  உண்மைதானே! மொரீஷியஸில் ஷூட்டிங் போயிருந்தபோது தனியாக மலைகளைப் பார்த்து ரசித்துக்கொண்டே அவர் போனபோது, கண்ணில் பட்ட ஒரு அழகான மலையை அவர் விவரிப்பது ஒரு கவிதைத்தன்மையோடு வெளிப்படுகிறது:

  அந்த மலை தன் கையில் ஒரு பூங்கொத்தைப் பிடிச்சிருப்பது போல, தூரத்தில், உச்சியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு டஜன் மரங்கள்.

  ஒரு குழந்தையின் குழந்தைத்தன்மையை எழுத்தில் விவரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெனில், சிந்தனை உள்ளே வரும்போதெல்லாம் குழந்தைத்தனம் வெளியே போய்விடும்! ஒரு குழந்தையின் குழந்தைத்தனத்தை குழந்தையைக் கொண்டுதான் காட்ட முடியும்.

  ஒருமுறை என் ஐந்து வயது மூத்த மகள், ‘ஸ்மால்’ மற்றும் ‘கேபிடல் லெட்டர்ஸ்’ பற்றி கற்றுக்கொண்டிருந்தாள். அதைப் புரிந்துகொண்ட அவள், அதைப்பற்றி எனக்கு ஒரு உதாரணம் சொன்னாள். என்ன தெரியுமா?

  டாடி, சின்ன வண்ணத்திப்பூச்சி ‘ஸ்மால்’ வண்ணத்திப்பூச்சி.

  பெரிய வண்ணத்திப்பூச்சி ‘கேபிடல்’ வண்ணத்திப்பூச்சி, சரியா?!

  எப்படி?! இதேபோல, மிகச்சிறிய வயதில் இறந்துபோன பிரகாஷ் ராஜின் மகனைப் பற்றிய ஒரு அழகிய தகவலை ஒரு இடத்தில் கொடுக்கிறார்:

  அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஒருமுறை ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தோம். அங்கே ரிசப்ஷனில் மீன் தொட்டியில் நீந்திட்டிருந்த மீன்களைப் பார்த்ததும் என் ரெண்டு வயசு சித்து கேட்டான், ‘ஏம்ப்பா, இந்த ஃபிஷ்லாம் ஹாஸ்பிடல் வந்திருக்கு. இதுக்கெல்லாம் உடம்பு சரியில்லையா?’ அப்படிக் கேட்ட குழந்தையை, இன்னொரு நாள் அதேபோல ஒரு ஹாஸ்பிடலில் தொலைக்கப்போறேன்னு எனக்கு அப்போ தெரியாது.

  இப்படிப் பேசிய அந்த மகனின் மீது நமக்கும் பாசம் வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட மகனை இழந்த தந்தையின் மீது இரக்கம் வந்துவிடுகிறது. இன்னும் குறிப்பாக, மகன் இறந்துவிட்ட செய்தியை மனைவியிடம் எப்படிச் சொல்லப்போகிறோம் என்ற அவருடைய தவிப்பு:

  கீழே போறேன். என் மனைவி முழிச்சுக்கிட்டா. ‘பையன் கண்ணைத் திறந்துட்டானா’ன்னு கேட்கிறா. ‘கண்ணை மூடிட்டான்’னு சொல்ற தைரியம் என்கிட்டே இல்லை. என் மகனைத் தொட்டுப் பார்க்கிறேன். அவன் உடம்பு சில்லுன்னு ஐஸ் மாதிரி இருக்கு. வழக்கமா அவன் உடம்பு சூடா இருந்தா, பதறுவேன். முதலும் கடைசியுமா அவன் உடம்பு சில்லுன்னு ஆனதுக்காகப் பதறினேன்.

  மகன் இறந்த அடுத்த ஆண்டு அதே தேதியில் மகள் பிறக்கப்போகிறாள் என்று டாக்டர் கூறுகிறார். ஆனால், ‘என் அண்ணன் இறந்த அதே நாளில் என் பிறந்த நாளைக் கொண்டாடமாட்டேன்’ என மகள் முடிவு பண்ணிடக் கூடாது என்பதற்காக, டாக்டர்களிடம் பேசி மேலும் மூன்று நாள் மனைவியின் பிரசவ தேதியைத் தள்ளிவைத்ததாகச் சொல்கிறார். ஆனால், அது பாசத்தின் வெளிப்பாடாகத் தெரியவில்லை. உறுத்தலின் வெளிப்பாடாகவே படுகிறது. ‘சோகத்தை காமம் ஜெயிச்சிடுச்சு’ என்று அவர் சொல்வதில் உண்மையிருந்தாலும்!

  பணத்தை மட்டும் மதிக்கத் தொடங்கிவிட்டால், அது பிணத்தின் நெற்றியில் காசு வைப்பது மாதிரி. நாம் ‘வாழும்போதே நாமே நம்ம நெத்தியில் ஒரு ரூபாயை வெச்சுக்கிட்ட மாதிரிதான்’ என்று அவர் சொல்வது, நச்சென்று ஒட்டிக்கொள்ளும் உண்மையாகும்.

  இதை விளக்க, டால்ஸ்டாயின் ‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை’ என்ற கதையைக் கூறுகிறார். டால்ஸ்டாயின் இறவா இலக்கியப் படைப்புகளில் அக்கதையும் ஒன்று. வாழ்க்கை பற்றிய ஆழமான பார்வை உள்ளவர்களால் மட்டுமே அதுபோன்ற கதைகளைப் படிக்கவோ, குறிப்பிடவோ முடியும். அதிலும் இலக்கியம் படிக்காத பிரகாஷ் ராஜ், அதைச் சொல்வது தனிச்சிறப்பு. இலக்கியம் படிக்காதவர்கள்தானே உண்மையில் இலக்கியம் படிப்பவர்கள்!

  தன் குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது, பொதுவாக பலரும் பட்ட கஷ்டங்களை, அவமானகரமான விஷயங்களை கவனமாகத் தவிர்த்துவிடுவார்கள். ஆனால் பிரகாஷ் ராஜ் இதில் விதிவிலக்காக உள்ளார்.

  சின்ன வயசிலேயே அநாதையான அவர் அம்மா ஒரு கிறிஸ்தவ இல்லத்தில் வளர்ந்தது, கிறிஸ்தவத்தில் தீவிரமாகி, பெங்களூரில் நர்ஸாக சேவை செய்தது, டைஃபாய்டு ஜுரம்னு வந்து அட்மிட் ஆன அவருடைய வருங்கால அப்பாவின் பேச்சை நம்பி மனசைப் பறிகொடுத்தது, திருமணமான கொஞ்ச நாளிலேயே அவன் காணாமல் போனது என எல்லாவற்றையும் சொல்கிறார். தன் கணவனைத் ‘தேடித் திரிஞ்சவளுக்கு அவன் தந்துட்டுப்போன பரிசு, நான்’ என்று கூறுகிறார். இவரது நாத்திகத்தின் பின்னால், அவரது கிறிஸ்தவத் தாய் பட்ட கஷ்டங்களும் அவரது இந்து தந்தை செய்த துரோகமும் உள்ளன.

  ஒவ்வொரு மனிதனும் காமத்தோடு போடுற சண்டை இருக்கே, அது ரொம்ப ரகசியமானது. யாருக்கும் தெரியாம, ஒவ்வொருத்தரும் அதை ஒளிச்சு வெச்சுக்கிறோம் என்று அவர் சொன்னாலும், தனது எண்ணற்ற காதல் அனுபவங்களைப் பற்றி அவர் ஒளிக்காமலே சொல்லிவிடுகிறார்!

  அவ்வப்போது, புதுக்கவிதை மாதிரி சில உண்மைகளைச் சொல்கிறார்:

  குழந்தைகளுக்கு நீச்சல் கத்துத் தர்றோம்; பாட்டு கத்துத் தர்றோம்; பரதம் கத்துத் தர்றோம்... பெரியவங்களை மதிக்கக் கத்துத் தர்றோமா?

  அப்பார்ட்மென்ட் வாழ்க்கை இருக்கே, அது மனிதர்களைப் பார்க்காம, சுவர்களைப் பார்க்கிற வாழ்க்கை.

  வீட்டுக்கு வெளியே காணாமல் போகிற குழந்தைகள் பற்றிய இந்தப் பகீர் தகவல் ஒரு பக்கம் இருக்கட்டும்; வீட்டுக்குள்ளேயே காணாமல் போகிற குழந்தைகள் பற்றியும் நாம யோசிக்கிறது இல்லையே!

  தான் தயாரித்த திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாததற்கான காரணங்களைச் சொல்லும்போது, தன்னுடைய நிலைப்பாட்டை மிகவும் தெளிவாகச் சொல்கிறார்:

  நஷ்டம் தந்தாலும் நல்ல படங்களை எடுத்தவன் என்பதுதான் என் அடையாளம். ‘டூயட் மூவீஸ்’ தயாரிக்கிற படங்களுக்கு என் குழந்தைகளைக் கூட்டிட்டுப் போவேன்னு சொல்றார் ஒரு அப்பா. அந்த நம்பிக்கை மட்டும்தான் தலைமுறை தாண்டி நிலைக்கிற அற்புதம். அதை, கேவலம் காசுக்கு விக்கிறதுக்கு எனக்கு மனசு இல்லை.

  வணிக ரீதியாக அவர் படங்கள் வெற்றி பெறாததற்கான சப்பைக்கட்டாக இது படவில்லை. உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்து வரும் கருத்துகளாகவே படுகின்றன.

  ரசிகர் மன்றம் வேண்டாம் என்று சொல்கின்ற பொறுப்புள்ள ஒரு சில நடிகர்களின் பட்டியலில் பிரகாஷ் ராஜும் வருகிறார். ஒருமுறை, நாசரை நான் பணிபுரிந்த கல்லூரிக்கு அழைந்து வந்தபோது இதே கேள்வி கேட்கப்பட்டது. அவர் ரொம்ப தெளிவாக, உங்கள் முன்னேற்றத்துக்காக செலவு செய்ய வேண்டிய இளமையை, ஒரு நடிகனுக்காக வீணே விரயம் செய்யக் கூடாது என்று அழுத்தமாகக் கூறினார். ‘‘எனக்கு ரசிகர் மன்றம் திறக்கிறேன்னு யார் வந்தாலும், வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத மாதிரி திட்டு வாங்கிட்டுதான் போவாங்க’’ன்னு கோபமாகக் கூறுகிறார் பிரகாஷ்ராஜ்.

  நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்யும் ‘அறிவார்ந்த செயலை’ப் பற்றி அவர் சொல்வதில் சமூக அக்கறை தெரிகிறது:

  குழந்தைக்குப் பால் வாங்கித் தர முடியாத அப்பா, அம்மாக்கள் இருக்கிற ஒரு நாட்டில், ஒரு படம் ரிலீஸ் ஆகிற நாளில் கட்-அவுட்டுக்குப் பாலபிஷேகம் செய்கிற காரியம், அறியாமை அல்ல; முட்டாள்தனம் என்கிறார். ‘‘அறியாமை, மனித இனத்தின் அழகு. ஆனா, முட்டாள்தனம்.. அசிங்கம்’’ என்கிறார்!

  தன் திருமண உறவுகள் பற்றிச் சொல்லும்போது, தனது 14 ஆண்டுகால திருமண வாழ்வில் சொத்துத் தகராறோ, துரோகமோ நடக்கவில்லை, ஆனால் ‘சோர்வு’ தெரிவதாகவும், அதனால் இருவரும் புரிந்துகொண்டு, கணவன் மனைவி என்ற உறவின்றி, நண்பர்களாக, கீழ் வீட்டிலும் மேல் வீட்டிலுமாகத் தனித்தனியாக அவரவர் இஷ்டத்துக்கு வாழப்போவதாகச் சொல்கிறார். புத்தகத்தின் இறுதி இதுதான்.

  1994-ல் திருமணம் புரிந்த அவர், 2009-ல் மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்ததாகவும், 2010-ல் போனி வர்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டதாகவும், அவர்களுக்கு வேதாந்த் என்று ஒரு மகன் இருப்பதாகவும் விக்கி கூறுகிறது.

  14 ஆண்டுகால தாம்பத்திய வாழ்வுக்குப் பிறகு ஒரு சோர்வு வந்துள்ளது. இனி அடுத்த சோர்வு 2024 அல்லது 25-ல் வரலாம்! சரியா செல்லம்?! அடிக்கடி கண்ணதாசன் பாடல்களை மேற்கோள் காட்டும் உங்களுக்கு, நான் அவரது இன்னொரு பாடலைச் சொல்ல விரும்புகிறேன். ‘எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றாகும்’! சரிதானே செல்லம்?!

  மறுசோறு உண்டு..

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai