Enable Javscript for better performance
15. தம்மபதம் - 2- Dinamani

சுடச்சுட

  
  senior-citizen

   

  உண்மையை அறிந்துகொண்டதால் விடுதலை அடைந்தவருடைய சொல்லிலும், செயலிலும், சிந்தனையிலும் அமைதி தவழும். அவர் மௌனியாகிவிடுகிறார். - தம்மபதம்

  எல்லாப் பிரச்னைகளுக்கும் ரிஷிமூலமாக ஒன்று உள்ளது என்றால், அது பேச்சுதான் என்று சொல்லிவிடலாம். இந்த உலகில் ஏற்பட்ட, ஏற்பட்டுக்கொண்டிருக்கும் எல்லா நல்ல மற்றும் கெட்ட விளவுகளுக்கும் பேச்சு முக்கியக் காரணமாக இருந்துள்ளதுதான் வரலாறு.

  பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயின்ஸஸுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், தங்கள் ‘கன்னித்தன்மையை’ நிரூபிக்க(!) வேண்டும் என்று அந்த இன்ஸ்டிடியூட் சொன்னபோது, அதில் தவறில்லை என்றும், கன்னி என்ற சொல் ‘திருமணமாகாத, சுத்தமான பெண்க’ளையே குறிக்கும் என்று அகராதி கூறுவதாக, பொதுவாழ்க்கையில் இருக்கும் ‘அகராதி பிடித்த’ ஒரு மனிதர் சொன்னது, நாடு முழுக்க உலாவந்தது தெரிந்திருக்கலாம். Micro Water Scheme என்பதை ‘சிறுநீர்ப்பாசன திட்டம்’ என்று ஒரு ராஜமேதாவி தமிழ்ப்படுத்திய நகைச்சுவைக் காட்சியையும் நாம் சில நாள்களுக்கு முன் கண்டுகளித்தோம்.

  இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு 1955 என்று, பொறுப்பில் இருக்கும் ஒரு பொதுமனிதர் பொதுமேடையில் கூறினால், அதைப் பொதுவாகப் புரிந்துகொண்டு பொதுமன்னிப்பு அளிக்க முடியாது அல்லவா!

  இந்தியாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் ஒரே வழி, கிராமங்களுக்கெல்லாம் மின்சார வசதி கொடுப்பதுதான். மின்சாரம் இல்லாவிட்டால், குழந்தைகளை உருவாக்கும் காரியத்தில் ஈடுபட்டுவிடுவார்கள் என்றார் ஒரு மத்திய அமைச்சர்!

  கம்ப்யூட்டர்களையும் ஆங்கிலத்தையும் இந்தியாவில் பயன்படுத்தக் கூடாது என்றார், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஒருவர். அதில் விசேஷம் என்னவெனில், அவர் அந்தக் கருத்தை ஆங்கிலத்தில் சொன்னார்!

  அதேமாதிரியான ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. நான் பணிபுரிந்த கல்லூரியில், பேராசிரியர்களெல்லாம் ஒருமுறை கலந்தாலோசனை நடத்தினோம். அதில் உறுப்பினர்கள் பலர் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். ஒரு தமிழ்ப் பேராசிரியர் மட்டும், ‘ஐயா, என்னைத் தமிழில் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். நாங்களும் சரி என்றோம். அவர் தன் பேச்சைத் தொடங்கினார். எப்படித் தெரியுமா? What I intend to say is…!

  ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், கற்பழித்தவனுக்கு மட்டும் தண்டனை கொடுத்தால் எப்படி நியாயமாகும்? அந்தப் பெண்ணுக்கும்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஒரு அறிவாளி, 2014-ல் கூறினார்!

  பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டுமா? அப்படியானால், அவர்கள் ஏன் சாலைகளில் நிர்வாணமாகத் திரியக் கூடாது என்றார், ஒரு மாநில முதலமைச்சர்!

  ஆண்மைக்குறைவும், காதல் உறவுகளும்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்குக் காரணம் என்று, தன் அற்புதமான கண்டுபிடிப்பைக் கூறினார், நம் நாட்டு விவசாய அமைச்சர் ஒருவர்!

  விளாடிமீர் புடின் (ரஷ்யாவின் ஜனாதிபதி) ஒரு ஹிந்துதான். அவருடைய உண்மையான பெயர் வராஹமிகிரர் புத்ர சிங் என்றார், பாராளுமன்றப் பெண் உறுப்பினர் ஒருவர்!

  அடடா, நம் நாக்கு இருக்கிறதே அது எவ்வளவு அற்புதமான விஷயம் தெரியுமா? அதனால் கொல்லவும் முடியும், வெல்லவும் முடியும். அதனால்தான் வள்ளுவரும்,

  யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

  சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

  என்று சொன்னார். ஒருமுறை, நபிகள் நாயகம் அவர்கள், தன் நாக்கை வெளியே நீட்டிக்காட்டி, அதைத் தன் விரல்களால் பிடித்துக்கொண்டு, இதை மட்டும் ஒருவர் கட்டுப்படுத்திவிட்டால், காப்பாற்றிக்கொண்டால் அவருக்கு எல்லா நன்மையும் கிடைக்கும் என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல. இறைவணக்கத்துக்குப் பத்து பகுதிகள் உண்டு. அதில் ஒன்பது பகுதிகள் மௌனமாக இருப்பதாகும் என்றும் கூறியுள்ளார்கள்!

  எல்லாப் பிரச்னைகளும் சொல்லால் வருவதுதான். அதைத்தான் தம்மபதம் கூறுகிறது. ஞானிகளுக்கிடையில் வித்தியாசம் இருக்க முடியுமா என்ன?

  ‘ஒரு முதியவருக்கு ஒருவன் மரியாதை கொடுப்பானாகில், ஆயுள், அழகு, ஆற்றல், சந்தோஷம் ஆகிய நான்கு விஷயங்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கும்’ என்கிறது ஒரு பொன்மொழி. எவ்வளவு அற்புதமான விஷயம்! ஆனால் ஒரு முதியவரை அவர் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று பொய் சொல்லி, தன் மாட்டை மேய்ச்சலில் இருந்து வீட்டுக்கு ஓட்டிக்கொண்டுபோன அவரை, சில வெறியர்கள் சுற்றி நின்று அடித்துக்கொன்ற காணொளி உலாவந்தது.

  முதியவர்களான தாய், தந்தையரை முதியோர் இல்லத்தில் (கை)விடும் பிள்ளைகள் இல்லையா? ஆனால், இது ரொம்ப காலமாக நடந்துள்ளது என்று தெரிகிறது. இல்லையெனில், புத்த பெருமானே இதைப்பற்றிப் பேசியிருப்பாரா?!

  புகழ்பெற்ற புதுக்கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது -

  வீட்டுக்குப் பெயரோ அன்னை இல்லம்

  அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்!

  இது உண்மையில் புதுக்கவிதை அல்ல. ஒரு சமூக அவலத்தைச் சொல்லும் பழைய கவிதை. முதியோருக்கான சிறப்புத் திட்டங்கள் ஏன் கொண்டுவரப்பட்டன? அக்டோபர் முதல் தேதி உலக முதியோர் தினமாக ஏன் கொண்டாடப்பட்டு வருகிறது? பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டம் 2007-ம் ஆண்டு ஏன் கொண்டு வரப்பட்டது?

  “கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு சட்டப்படியாக பாதுகாப்பு வழங்குதல்”, “உறவினர்களால் ஒதுக்கப்பட்ட மூத்த குடிமக்களின் சொத்துகளை மீண்டும் ஒப்படைத்தல்”, “மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் நிறுவுதல்” என பல சட்டங்கள் நடைமுறைக்கு ஏன் கொண்டுவரப்பட்டன? பிள்ளைகளாலும் சுற்றத்தாலும் முதியோர்கள் ஒதுக்கப்படுவதால்தானே? வருங்காலத்தை அறிந்த புத்தபெருமான், நிச்சயம் இப்படி ஒரு காலம் வரும் என்று உணர்ந்துதான் அப்படிக் கூறியிருக்கிறார்.

  நான் பணிபுரிந்த கல்லூரியின் செயல்தாளாளரை ஒருநாள் பார்க்கச் சென்றோம். அவருக்கு 90 வயதுக்கு மேல் இருக்கும். எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் எங்களை வரவேற்று, உள்ளே இருந்த சோஃபாவில் அமரச் சொன்னார். நாங்களும் அமர்ந்தோம்.

  தாளாளரும் வந்தார். அமர்ந்தார். எங்களை அமரச்சொன்ன பெரியவர் நின்றுகொண்டே இருந்தார். நான் அவரை உட்காருமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர் புன்னகைத்தவாறே மறுத்துவிட்டார். நான் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டும் அவர் உட்காரவே இல்லை.

  நாங்கள் பேசிவிட்டு வெளியே வந்த பிறகு, எங்களோடு வந்த ஒரு பேராசிரியர் என்னிடம் சொன்னார். நீங்கள் உட்காரச் சொன்னீர்கள் அல்லவா? அந்தப் பெரியவர் உட்காரவே மாட்டார் என்றார். ஏன் என்று கேட்டேன். ஏனென்றால், அவர் தாளாளரின் மகன் என்று சொன்னார்!

  ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஆச்சரியம் ஏனெனில், அந்த வயதிலும் தந்தை முன் தான் உட்காருவது மரியாதைக்குறைவு என்று அந்தப் பெரியவர் எண்ணி உட்காராமல் இருந்ததே. வேதனை என்னவெனில், நான் உட்கார்ந்திருந்தால், என் தந்தை வரும்போது எழுந்ததில்லை. உட்கார்ந்துகொண்டேதான் அவரோடு பேசியிருக்கிறேன். அவரும் அதைப் பொருள்படுத்தியதில்லை. ஆனால் இன்று அவர் இல்லை. மரியாதைக் குறைவான என் நடத்தையை நினைத்துப் பார்க்கிறேன். எங்கள் தாளாளரின் மகனார் எவ்வளவு உயர்ந்தவர்? நான் எவ்வளவு கேவலமானவன்?! நானே இப்படியெனில், பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுபவர்கள்?! நிச்சயம் புத்தர் மன்னிக்கவே மாட்டார்!

  முதியவர்களை மதிக்காதவர்களும், குழந்தைகளிடம் அன்பு காட்டாதவர்களும் நம்மைச் சேர்ந்தவர்களல்ல என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

  பெற்றோரை மதிக்க வேண்டும். அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அவர்கள் முதுமை அடைந்துவிட்டால், அவர்களிடம் ‘சீ’ என்றுகூடச் சொல்லிவிட வேண்டாம். அவர்களை உங்களிடம் இருந்து விரட்டிவிடாதீர்கள். அவர்களிடம் பேசும்போது, கனிவான கண்ணியமான பேச்சையே பேசுங்கள் என்று திருக்குர்’ஆன் கூறுகிறது. (அத்தியாயம் 17 பனீ இஸ்ராயீல்).

  புத்தரின் இன்னொரு பொன்மொழியும் எனக்கு மிகுந்த ஆச்சரியம் கொடுத்தது. அது கொஞ்சம் நீளமானது. ஆனாலும் இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமானது. அது இதோ -

  எந்தக் குற்றமும் இழைக்காத நல்லவர்களுக்கும் மென்மையானவர்களுக்கும் துன்பம் இழைப்பவனுக்குப் பத்துவிதமான நிலைகள் வந்து சேரும் -

  1. கொடுமையான வேதனை வரும்

  2. கடுமையான இழப்பு வரும்

  3. உடல் காயம் படும்

  4. கடுமையான பாதிப்பு ஏற்படும்

  5. மன நலம் பாதிக்கப்படும்

  6. ஏதாவதொன்று, அரசனிடமிருந்து / ஆட்சியாளரிடமிருந்து வரும்

  7. அச்சப்படும்படியான குற்றம் சாட்டப்படும்

  8. உறவுகள் கெடும்

  9. செல்வம் அழியும்

  10. அவனது வீடு தீப்பிடித்து அழியும்

  இறுதியில், அந்த முட்டாள் நரகத்துக்குச் செல்வான்.

  இதைப்படித்தபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவு தெளிவாக, விவரமாக புத்தர் போதித்திருக்கிறார்! ஆனால், இந்த உலகம் முழுவதும் இன்று நரகத்துக்குச் செல்வதற்கான வேலைகளைத்தானே செய்துகொண்டிருக்கிறது!

  பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

  பிறபகல் தாமே வரும்.

  என்று வள்ளுவர் ஏற்கெனவே சொல்லிவிட்டார். அவர் சுருக்கமாகச் சொன்னதை புத்தர் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். கடுமையான சாபம் போலவே இது உள்ளது. இப்படியெல்லாம்கூட தம்மபதம் பேசுவதைப் படிக்க, ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.

  அநியாயம் செய்யப்பட்டவர்களின் பிரார்த்தனையை அஞ்சிக்கொள்ளுங்கள். ஏனெனில், அவர்களது பிரார்த்தனைக்கும் இறைவனுக்கு இடையில் எந்தத் திரையும் இல்லை என்று பெருமானார் சொன்ன ஒரு நபிமொழி நினைவுக்கு வருகிறது. ஒருவருக்கு அநியாயம் செய்யப்படும்போது அவர் மனம் சங்கப்படுமில்லையா. அந்தச் சங்கடமே, அநியாயம் செய்தவனை அழித்துவிடும் என்று பொருள். அவனை அழித்துவிடு இறைவா என்று கையேந்தி பிரார்த்தனைதான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ‘தமக்கின்னா தாமே வரும்’ என்று சொல்லும் குறளின் உள்குறிப்பும் அதுதான்.

  கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி குழந்தையைத் தீயில் ஒருவன் எறிந்தானே, அவனுக்கு என்ன கதி ஏற்படும் என்று தம்மபதம் கூறுகிறது. சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தீயிலிட்டு அவர்களைக் கொளுத்தியும் விட்டார்களே, அவர்கள் கதி என்னவாகும் என்று தம்மபதம் கூறுகிறது. ஒரு தலித் விவசாயியின் மாடு தன் பண்ணையில் மேய்ந்தது என்பதற்காக, துப்பாக்கி முனையில் அவரை மனித மலம் தின்ன வைத்தானே ஒருவன், அவன் கதி என்னவாகும் என்று தம்மபதம் கூறுகிறது. இப்படி நம் நாட்டிலும் உலகெங்கிலும் நடக்கும் அநியாயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

  ஆனால், எல்லா ஞானிகளும் சொல்வது ஒன்றுதான். நன்மை செய்தால் நன்மையும், தீமை செய்தால் தீமையும்தான் ‘பரிசாக’க் கிடைக்கும். அவ்விளைவுகள் வருவதற்குக் காலஅவகாசம் உள்ளது. அவ்வளவுதான்! ஆனால், நிச்சயம் வரும். இதைத்தான் விலாவாரியாகக் கூறுகிறது தம்மபதம்.

  நம்ம திரைப்படங்களில் ‘பஞ்ச் டயலாக்’ வருமல்லவா? அந்த மாதிரி தம்மபதத்திலும் வந்துள்ளது! அதுதான் இறுதியில் சொல்லப்பட்டுள்ள நரக வேதனை.

  ‘‘சொல்லால் செத்த புறாக்கள்’’ என்று நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது -

  சொல்லால் வந்ததுதான்

  எல்லாம்

  சிறகுகள் பிடுங்கப்பட்டதும்

  சிறகுகள் காயம்பட்டதும்

  பறக்க முடியாமல் போனதும்

  மறக்க முடியாமல் போனதும்

  எல்லாம்...

   

  துரோணாச்சாரி என்ற துரோகாச்சாரிக்கு

  தட்சிணையாய் கொடுத்த

  கட்டைவிரலால் கட்டப்பட்டது

  ஒரு சொல்

   

  குரங்கொன்றைக் கொல்வதற்கு

  மறைந்து நின்று மாமனித

  அவதாரம் விட்ட அம்பிலிருந்து

  அவதரித்ததொரு சொல்

   

  பெண்ணைச் சோறாக்கி

  பகிர்ந்துண்ணுங்கள் ஐவரும் என

  பகர்ந்ததொரு பெண்ணிடமிருந்து

  பிறந்ததொரு சொல்

   

  மிராசு நிலத்தில் மாடு மேய

  மாடுவைத்துப் பிழைத்தவனை

  மனித மலம் தின்ன வைத்து

  மயங்கி அவன் விழுந்தபோது

  மயக்கம் தெளிந்து எழுந்தது

  ஒரு சொல்

   

  செத்துப்போகாமல் இருப்பதற்காக

  செத்துப்போன மாட்டின் தோலை

  உரிக்கப்போன உரிமையாளர்களை

  விரட்டிச்சென்று காவல் நிலையத்தில்

  அடித்தடித்துக் கொன்றபோது

  அலறிச்செத்த வேதனையிலிருந்து

  அரும்பி நின்றதொரு சொல்

   

  கதறக்கதற ஏழைக்

  கன்னிப்பெண்களை கத்தி முனையில்

  கற்பழித்துவிட்டு கெரசின் ஊற்றிக்

  கொளுத்திவிட்ட குறிகளிலிருந்து

  வடிந்து வந்தது

  ஒரு சொல்

   

  கர்ப்பிணிப் பெண்ணின் நிறைவயிறை

  கத்தியால் பிளந்து உயிர் மொட்டை

  கொடுந்தீயில் வீசி கருகவிட்டதை

  மறைந்திருந்து பார்த்த அச்ச விழிகளில்

  நிறைந்திருந்தது ஒரு சொல்

   

  சொல்லை மென்று

  சொல்லைத் தின்று

  செரிக்க முடியாமல்

  செத்துப்போயின நம்

  செல்லப் புறாக்கள்

   

  எனினும் இன்றும்

  ஞாயிற்றுக் கிழமைகளில்

  அலைமோதுகிறது கூட்டம்

  அமைதிப் புறாக்களின் சமாதிகளில்

  அஞ்சலி செலுத்த.

   

  மறுசோறு உண்டு…

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai