Enable Javscript for better performance
7. செல்லக் கிறுக்குத்தனங்கள்- Dinamani

சுடச்சுட

  

   

  எல்லா பெரிய மனிதர்களுக்குள்ளும் ஒரு சின்னக் குழந்தை இருக்கும். அந்த பெரிய மனிதர்கள் ஒரு விஞ்ஞானியாக, மேதையாக, பாடகனாக, ஓவியனாக, நடிகனாக, இசைக்கலைஞனாக, ஏன் ஒரு ஞானியாகக்கூட இருக்கலாம். அந்தக் கிறுக்குத்தனங்கள், அல்லது குழந்தைத்தனங்கள் படு சுவாரஸ்யமாக இருக்கும். அவைகளுக்குக் காரணம் காட்ட முடியாது. காட்ட முடிந்தால் அது கிறுக்குத்தனமாக இருக்காதே! சரி, அந்தக் கிறுக்குத்தனங்களைப் பற்றி நாம் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்? நல்ல கேள்விதான். எந்தக் கிறுக்குத்தனமும் செய்யாமல் நான் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்!

  சோற்றில் உப்பே இல்லையென்றால் எப்படி இருக்கும்? உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று முதுமொழியே உள்ளது. அதேபோல அளவுக்கு அதிகமாக உப்பைக் கொட்டிவிட்டாலும் சுவைக்க முடியாது. ஒரு திரைப்படத்தில் சீனிக்குப் பதிலாக ஒரு பெண் உப்பைக் கொட்டி அல்வா செய்துகொண்டுவருவாள். அவள் தந்தையாக நடித்த மறைந்த மணிவண்ணன் அதை வாயில் போட்டுவிட்டு துப்ப முடியாமல் தவிப்பார். அதைப்பார்க்கும் ஹீரோவின் நண்பராக வரும் நடிகர் சந்தானம், ‘அங்கிள், உப்புல அல்வா கொஞ்சம் கம்மியா இருக்குல்ல?’ என்று கேட்பார்! அதுபோல நம் வாழ்க்கை என்ற உணவுக்கு உப்பு சேர்ப்பதே அந்த கிறுக்குத்தனங்கள்தான். நமக்குத் தெரிந்த பல பிரபலங்களின் வாழ்வு சப்பென்று போகாமல் உயிரூட்டிய அந்த உப்பைப் பற்றித்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்!

  இந்த கிறுக்குத்தனங்கள் மேதைகளிடம் மட்டும்தான் இருக்கும் என்பதல்ல. நம்மிடம்கூட இருக்கும். அந்த வகையில் நாம்கூட மேதைகள்தானே!

  உலகப்புகழ் பெற்ற ஓவியர் பிகாஸோ தெரியுமில்லையா? அவருக்கு இரண்டுமுறை திருமணங்கள் நடந்தன. இது ஒரு கிறுக்குத்தனமா? இது நல்ல விஷயமாயிற்றே என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. நான் அவர் திருமணங்கள் செய்து கொண்டதைப் பற்றிப் பேசவரவில்லை. அதையொட்டி வேறு சில விஷயங்களைச் சொல்ல வருகிறேன். அவர் திருமணம்தான் இரண்டு முறை செய்துகொண்டார். ஆனால் பல பெண்களோடு தொடர்பு வைத்திருந்தார். இதுவும் கிறுக்குத்தனமா, அதீத ஆண்மையாக்கும் என்று நீங்கள் பொறாமையுடன் முனகுவதும் கேட்கிறது! இருந்துவிட்டுப் போகட்டும். கொடுத்துவைத்த மகராசன்! அவருக்கு ஐந்து குழந்தைகள். அதில் மூன்று பிள்ளைகள் திருமண உறவுக்கு வெளியே பிறந்தவர்கள்! இதெல்லாம் கிறுக்குத்தனமல்ல, அயோக்கியத்தனம் என்று நீங்கள் சொல்வதும் கேட்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி அவருக்கு உண்மையிலேயே சில கிறுக்குத்தங்கள் இருந்தன. அதில் ஒன்று புறா வளர்ப்பது.

  ஆமாம். அவர் வீடு எப்போதும் ஓவியங்களால் மட்டுமல்ல, புறாக்களாலும் நிரம்பியிருக்கும். அவருக்கு புறா என்றால் அவ்வளவு பிடிக்குமா என்றால் அதுதான் கிடையாது! புறாக்கள் கடுகடுப்பான இயல்பு கொண்ட பறவைகள் என்பதே அவருடைய கருத்தாக இருந்தது. அமைதிக்கான குறியீடாக ஏன் புறாக்கள் அழைக்கப்படுகின்றன என்று அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை! ஆனாலும் அவர் நிறைய புறாக்களை வைத்துக்கொண்டிருந்தார்! ஒருத்தனைப் பிடிக்கவே பிடிக்காது, ஆனால் எப்போதும் அவன் கூடவே சுற்றிக்கொண்டிருப்போம் என்றால் அது கிறுக்குத்தனம்தானே! ஆனால் இதைவிட மோசமான ஒரு கிறுக்குத்தனம் அவரிடம் இருந்தது. அது ஒரு கைத்துப்பாக்கி! ஆம். அவர் எப்போதும் ஒரு கைத்துப்பாக்கி வைத்திருந்தார். கைத்துப்பாக்கி வைத்துக்கொள்வது கிறுக்குத்தனமல்ல. அது இந்தியர்களாகிய நமக்கு அச்சமூட்டும் விஷயமாகும். ஆனால் வெளிநாடுகளில் அப்படியல்ல.

  பிகாஸோ தன் ஓவியங்களை மிகவும் குறைந்த விலைக்குக் கேட்பவர்களுக்கு அருகில் வைத்து தன் கைத்துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டிருப்பார்! ரொம்ப கம்மியாகக் கேட்டால் உன் உயிர் இருக்காது என்று மிரட்டுவது மாதிரி. ஆமாம். அது கிறுக்குத்தனத்தின் உச்சம் என்று சொல்ல வேண்டும்! கொலைகாரக் கிறுக்குத்தனம்கூட. அதுசரி, புறாக்களை நேசிக்க கழுகுகளால் முடியுமா என்ன?!

  சந்தோஷமானதொரு கிறுக்குத்தனம் பற்றிச் சொல்லவா? விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் ஷூ அணிவார். ஆனால் சாக்ஸ் அணியமாட்டார்! ஏன் சந்தோஷமான கிறுக்குத்தனம் என்று இதைச் சொன்னேன் என்று யோசிக்கிறீர்களா? காரணம் உள்ளது. நானும் ஷூ மட்டும்தான் போடுவேன். சாக்ஸ் போடமாட்டேன்! என்னுடைய ‘ரேஞ்ச்’ என்னவென்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் அல்லவா! அதுக்காகத்தான் சொன்னேன்! சாக்ஸ் போடாததற்கு ஐன்ஸ்ட்டீன் ஒரு காரணம் வேறு வைத்திருந்தார். அவரது கால் பெருவிரலில் மாட்டி அது ஓட்டையாகிவிடும் என்று அவர் நம்பினார்! ரொம்ப முக்கியமான தருணங்களில்கூட சாக்ஸ் போடாதது தெரியாமல் மறைத்து ஷூ அணிந்துகொண்டதாக தன் மனைவிக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார்!

  அச்சமூட்டும் பயங்கரத் திரைப்படங்கள் எடுத்த மேதை ஆல்ஃப்ரட் ஹிச்காக்-குக்கு சில கிறுக்குத்தனங்கள் இருந்தன. அவருக்கு ovophobia என்று சொல்லப்பட்ட ஒரு மனோவியாதி இருந்தது. அது என்ன ஓவோஃபோபியா? ஒன்றுமில்லை. முட்டை வடிவத்தில் உள்ள எதைப் பார்த்தாலும் அவருக்கு பயமாக இருக்கும்! ஆசிட் முட்டையல்ல, சாதாரண முட்டைதான்! ஹோட்டலில் சர்வர் முட்டைகள் கொண்டுவந்து வைத்தால்கூட அவருக்கு வியர்த்துவிடும்! மனநிலையே மாறிவிடும்!

  இன்னொரு விநோதமான கிறுக்குத்தனம் அவரிடம் இருந்தது. டீ குடித்து முடித்த பிறகு அந்த டீ கோப்பையை தன் தோளுக்குப் பின்னே தூக்கி எறிந்துவிடுவார்! அப்பத்தான் அவர் ‘ரிலாக்ஸ்’ ஆவாராம்! இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்ற இன்னொரு சூப்பர் கிறுக்குத்தனமும் அவரிடமிருந்தது. அது என்னவெனில், அவரது திரைப்படங்களைப் பார்க்க அவருக்கே பயமாக இருந்ததாம்! ‘நான் என் திரைப்படங்களைப் பார்ப்பதே இல்லை. மக்கள் எப்படித்தான் பார்க்கிறார்களோ தெரியவில்லை’ என்று வேறு அவர் சொன்னார்! இது எப்படி இருக்கு?!

  உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஜேம்ஸ் ஜாய்ஸ் குப்புறப்படுத்துக்கொண்டு ஒரு பெரிய கார்ட் போர்டில் பெரிய பெரிய க்ரேயான் பென்சில்களை வைத்துக்கொண்டுதான் நாவல்கள் எழுதுவார். ஏன்? அவருக்கு பார்வைக்கோளாறு இருந்தது. இருபத்தைந்து முறைகள் கண் அறுவை சிகிச்சை செய்தும் பார்வைக்கோளாறு சரியாகவில்லை. அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டருக்கும் பார்வைக்கோளாறு இருந்திருக்கும் என்று தெரிகிறது. எனவே பெரிய க்ரேயான்களைக் கொண்டு, தான் என்ன எழுதுகிறோம் என்று ஜேம்ஸ் ஜாய்ஸ் பார்த்துக்கொள்வார்! அதோடு வெள்ளைக்கோட்டு ஒன்றும் போட்டுக்கொள்வார். இரவுகளில் வெளிச்சம் கூடுதலாகத் தெரிய அது உதவியது. ஆனால் அவரது ஒரு பாவப்பட்ட கிறுக்குத்தனம். வேறுவழியில்லாத கிறுக்குத்தனம்.

  அலெக்சாண்டர் ட்யுமாஸ் கொஞ்சம் வித்தியாசமானவர். தனது நாவல்களை அவர் நீலநிறத் தாளில் எழுதினார். கவிதைகளை மஞ்சள் நிறத்தாளிலும், கட்டுரைகளை இளஞ்சிவப்புத்தாளிலும் எழுதினார்! கலர் கலராக கிறுக்குத்தனங்கள்!

  எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க நாவலாசிரியரான மார்க் ட்வைனுக்கு பூனைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவரைச் சுற்றி எப்போதும் பல பூனைகள் இருக்கும். நாகூரில் எங்கள் வீட்டில்கூட நிறைய பூனைகள் இருக்கும். சாப்பிடும்போது சுற்றிலும் ஐந்தாறு பூனைகள் இருக்கும். காரணம், பின்னால் மீன் மார்க்கெட் இருந்தது. ஆனால் மார்க் ட்வைன் வீட்டில் பத்தொன்பது பூனைகள் இருந்தன. பக்கத்தில் மீன் மார்க்கெட்டும் இருந்ததாகத் தகவல் இல்லை! அப்பூனைகளுக்கு மார்க் ட்வைன் செல்லப்பெயர்கள் வைத்திருந்தார். என்ன தெரியுமா? வறட்சி, கொள்ளை நோய், சாத்தான், பாபம் – இப்படி!

  அவரைப் போலவே அவரது ரசிகர்களும் கிறுக்கர்களாக இருந்துள்ளார்கள். எப்படி என்கிறீர்களா? ஒருமுறை அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் பெறுநர் முகவரி எழுதும் இடத்தில், “மார்க் ட்வைன், எங்கிருக்கிறார் என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும்” என்று எழுதியிருந்தது! “சாப்பிடுவதும், ஓய்வெடுப்பதும்தான் என் உடற்பயிற்சி” என்று அவர் கூறினார்! ஆஹா, எவ்வளவு அருமையான உடற்பயிற்சி!

  ஆங்கிலத்தில் முதன் முதலாக அகராதி எழுதிய டாக்டர் ஜான்சனுக்கு பல கிறுக்குத்தனங்கள் இருந்தன. அதில் ஒன்று, ஒரே நேரத்தில் 25 கோப்பைகள் தேநீர் அருந்துவது! நான்கூட அதிகமாக தேநீர் அருந்துபவனாக இருந்தேன். ஆனால் அதிகபட்சமாக ஏழெட்டு கோப்பைகள். அதுவும் ஒரே நேரத்தில் அல்ல. ஒரு நாளைக்கு. ஆனால் குண்டு டாக்டர் ஜான்சன் எங்கேயோ இருக்கிறார்!

  ஜான்சனுக்கு இன்னொரு பழக்கம் இருந்தது. ஆரஞ்சுப் பழங்களை உரித்து உரித்து தோல்களையெல்லாம் சேர்த்து வைப்பார். பழங்களைச் சாப்பிடவும் மாட்டார். சும்மா தோல் உரிக்கும் பழக்கம் மட்டும் இருந்தது. அந்த தோல்கள் காய்ந்துபோய் கிடக்கும். ஜான்சன் பழத்தோல்களை மட்டுமல்ல, பல இலக்கிய ஆளுமைகளின் தோலையும் உரித்துள்ளார்! ஆனால் அது கிறுக்குத்தனத்தில் வராது!

  ஜான்சன் தான் உருவாக்கிய ஆங்கில அகராதியிலும் தன் செல்லக் கிறுக்குத்தனத்தைக் காட்டத் தவறவில்லை. எப்படி என்கிறீர்களா? இதோ சொல்கிறேன். ஓட்ஸ் (Oats) என்பதற்கு ஒரு விளக்கம் கொடுக்கிறார். என்ன தெரியுமா? ‘ஓட்ஸ், இது இங்கிலாந்தில் குதிரைகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு தானியம். ஸ்காட்லாந்தில் இது மனிதர்களுக்குக் கொடுக்கப்படுகிறது’! பேச்சிலோ எழுத்திலோ கிண்டல் செய்பவர்களை ’அகராதி பிடித்தவன்’ என்று நாம் சொல்லுவோம். ஜான்சன் தன் ஆங்கில அகராதியிலேயே தான் ஒரு ‘அகராதி பிடித்தவன்’ என்பதைக் காட்டுகிறார்! ஆங்கிலச் சொல்லான dull என்ற சொல்லின் பொருளை உதாரணத்துடன் விளக்கும்போது இப்படிக் கூறுகிறார்: ‘அகராதி உருவாக்குவது dull–ஆன காரியம்’! இதுமட்டுமல்ல, X என்ற எழுத்தில் எந்த சொல்லுமே அவர் அகராதியில் இல்லை!

  அட்டகாசமான நாவல்கள் பலவற்றை எழுதிக்குவித்த ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ் தன்னுடைய பிரமாதமான படைப்பாற்றலுக்குக் காரணம் எது என்று சொன்னார் தெரியுமா? தான் தூங்கும்போது போர்த்திக்கொண்டு படுக்கும் அந்தப் போர்வைதான் காரணம் என்று சொன்னார்! இது முன்னமேயே தெரிந்திருந்தால், நானும் ஒரு நல்ல போர்வையைப் பயன்படுத்தியிருப்பேன். ராப்பகலாக விழித்து மடிக்கணினியை வைத்துக்கொண்டு யோசித்து யோசித்து எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது!

  சரி, கடைசியாக ஒரு மேதையைப் பற்றி சொல்லிவிட்டு முடித்துக்கொள்கிறேன். அவர் பெயர் இப்போதைக்கு எக்ஸ் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு எழுத்தாளர். கதை, கவிதை, நாவல், கட்டுரை என எல்லா இலக்கிய வடிவங்களிலும் எழுதியுள்ளார். அவைகளெல்லாம் நிச்சயமாக அந்தந்த வடிவங்களுக்குள் வருமா என்று கேட்டால் அப்படிச் சொல்ல முடியாது. அவரைக் கேட்டால் அவர் அதற்கு ஒரு விளக்கம் கொடுப்பார். ‘குழந்தை பிறந்துவிட்டது, என்ன பெயர் வைத்தால் என்ன? நல்ல, அழகான பெயராக இருந்தால் சரி’ என்பார்! எழுதுவது மட்டுமின்றி தியான வகுப்புகளும் எடுக்கிறார்.

  சாலையில் நடந்து போகும்போதெல்லாம் அவர் ஒரு காரியம் செய்வார். சாலையில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கமாட்டார். நடந்து போகும்போதே காற்றில் எழுத ஆரம்பித்துவிடுவார். உதாரணமாக வானத்தைப் பார்த்தால் அதில் தன் விரலால் ‘வானம்’ என்று எழுதி மகிழ்வார்! அவரைப் பற்றி ஊரில் யாரோ விசாரித்திருக்கிறார்கள். அதற்கு ஒருவர், ‘அந்த காத்துல எழுதிக்கிட்டே போகுமே அந்த பைத்தியம்தானே?’ என்று கேட்டிருக்கிறார்! அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அப்போது அருகில் இருந்திருக்கிறார். அதைக்கேட்ட நண்பர், ‘ஆமாம், அதே பைத்தியம்தான்’ என்று சொல்லி சிரித்திருக்கிறார்.

  பின்னாளில் அந்த எழுத்தாளரிடமும் அதைச் சொல்லி இருவரும் சேர்ந்து சிரித்துள்ளனர். ஆனால் அதற்காக அந்த அற்புதமான பழக்கத்தை அந்த எழுத்தாளர் இன்றுவரை மாற்றிக்கொள்ளவே இல்லை! அந்த எக்ஸ் வேறுயாருமல்ல, நான்தான்! ஒரு செல்லக் கிறுக்குத்தனம் ஒருவரை மேதையாக்குமென்றால், அதை நான் ஏன் விட வேண்டும்?! சரிதானே?

  இன்னும் சோறு உண்டு…

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai