Enable Javscript for better performance
22. பால் மாறாட்டம் - 2- Dinamani

சுடச்சுட

  

  22. பால் மாறாட்டம் - 2

  By நாகூர் ரூமி.  |   Published on : 04th February 2019 10:00 AM  |   அ+அ அ-   |    |  

  7.cow-mastitis

   

  பாலின் உள்ளே

  நாம் அன்றாடம் வாங்கும் பால் பாக்கெட்டுகளில் உள்ள பாலில் என்னென்ன இருக்கின்றன தெரியுமா? தெரிந்துகொள்ள, பாலுக்கு உள்ளே கொஞ்சம் பயணம் செய்யலாமா?

  பால் பண்ணைகளில் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உடைத்து இயந்திரத்தின் மூலம் கலக்குகிறார்கள். அதன் கெட்டித்தன்மையை அதிகரிக்கவும், புரதம் மற்றும் கொழுப்பின் அளவைக் கூட்டவும் அப்படிச் செய்கிறார்கள். பின், தேவையான அளவுக்குக் கொழுப்பு அல்லது கொழுப்புப் பவுடரை கலக்கிறார்கள். இது வழக்கமான முறை.

  ‘சில நிறுவனங்கள் பாலில் ஸ்டார்ச், மைதா மாவு, குளுக்கோஸ், மரவள்ளிக்கிழங்கு மாவு, ஜவ்வரிசி போன்ற பொருள்களை, கெட்டியாக மாற்றுவதற்காகக் கலக்கின்றனர். பால் கெடாமல் இருக்க, அமோனியா, சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன்-ட்ரை-ஆக்ஸைடு, பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு போன்றவற்றில் எதாவது ஒன்றைச் சேர்க்கிறார்கள். யூரியாவில் அமோனியா இருப்பதாலும், மிக எளிதாகக் கிடைப்பதாலும் சிறு வியாபாரிகள் பலரும் இதனைச் சேர்க்கிறார்கள்’ என்கிறது உமரின் நூல் (பக்கம் 11)!

  இந்த லட்சணத்தில், ‘சிந்தடிக் மில்க்’ என்று சொல்லப்படும் செயற்கைப் பால் வேறு இந்தியாவின் பல மாநிலங்களிலும் விற்பனையில் உள்ளது! அதில் வெந்நீர், காஸ்டிக் சோடா, யூரியா, டிடர்ஜண்ட் பவுடர், ஷாம்பூ, மட்டரகமான எண்ணெய், வெண்மை நிறத்துக்காக கிழங்கு மாவு, இனிப்பதற்காக சாக்ரீம் எல்லாம் கலந்து, முப்பது நிமிடங்களில் தயாராகிறது நச்சுப்பால். ‘இந்தச் செயற்கைப் பால் தயாரிப்பதற்கு மாடு அல்லது மாட்டில் இருந்து பெறப்பட்ட பால் - இரண்டுமே தேவையில்லை’ என்கிறது இந்நூல் (பக்கம் 12)!. அதாவது, பாக்கெட் பாலிலும், சிந்தடிக் பாலிலும் பாலைத் தவிர மற்ற எல்லாம் இருக்கின்றன!

  பண்ணைப் பசும்பால்

  பாக்கெட் பாலும் வேண்டாம், பவுடர் பாலும் வேண்டாம், நேரடியாக பண்ணைகளில் இருந்து பெறப்படும் பாலைப் பயன்படுத்தலாமா என்றால், அங்கேயும் பல பிரச்னைகள் உள்ளன! அதிலென்ன பிரச்னை என்கிறீர்களா? சொல்கிறேன்.

  ‘ஒரு நாட்டு மாடு.. தன்னுடைய கன்றுக்குட்டியின் எடையில் பத்தில் ஒரு பங்கு பாலை மட்டுமே சுரக்கிறது. கன்றுக்குட்டியின் எடை 15 கிலோ என்றால், பசு தரும் பால் 1.5 லிட்டர் மட்டுமே’ (பக்கம் 16).

  இதற்கு என்ன அர்த்தமெனில், ஒவ்வொரு நாளும் ஒரே அளவில் பண்ணைகளில் பால் கிடைக்காது. ஏனெனில், மாடுகளின் மடிகள் தங்கள் கன்றுகளுக்காக மட்டுமே பால் சுரக்கின்றன, பண்ணை முதலாளிகளுக்காக அல்ல! அவற்றின் எடைகளைப் பொறுத்தே அவற்றின் பால் சுரப்பும் இருக்கும். அப்படியானால், இந்தப் பிரச்னையை எப்படிச் சரி செய்வார்கள்?

  ‘தினமும் அதிக அளவில் பால் சுரக்க வைப்பதற்காக, எல்லா பசுக்களுக்கும் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் ஊசியைப் போட்டுவிடுவார்கள். ஆக்சிடோசின் என்பது பசுக்களுக்கு இயல்பாக சுரக்க வேண்டிய இயற்கை ஹார்மோன். அதே ஹார்மோனை செயற்கை ரசாயனமாக ஆய்வுக்கூடங்களில் தயார் செய்து பசுக்களுக்கு ஊசி மூலம் செலுத்திவிடுவார்கள்’ (பக்கம் 16). பசுவின் உடலில் அதிக தூண்டுதலைச் செய்து அதிகப்பால் சுரக்க உதவிய ஆக்சிடோசின் ரசாயனம், அந்தப் பாலைக் குடிக்கும் நம் உடலிலும் கலக்கிறது!

  ஆக்சிடோசின் (Oxytocin) என்பது பசுக்களுக்கு மட்டுமல்ல, மனித உடம்புக்குள்ளிருந்து, குறிப்பாக மூளையின் ஹைபோதலாமஸ் என்ற பகுதியிலிருந்து உருவாகும் இயற்கையான ஒரு ஹார்மோனாகும். இனப்பெருக்கம், குழந்தை பிறப்பு, குழந்தை மீதான பாசப்பிணைப்பு ஆகியவற்றுக்கெல்லாம் அது உதவியாக இருக்கும். ஆனால், அதையே செயற்கையாக உருவாக்கி பசுக்களுக்கு போடப்படுவதைப் பற்றித்தான் இந்த நூல் பேசுகிறது. சென்னையில் பசுப்பண்ணை வைத்திருக்கும் பலர், இந்த ஊசி போட்டு அதிகமாகப் பால் சுரக்க வைத்ததனால் கைது செய்யப்பட்ட செய்தி பல பத்திரிகைகளில் வந்தது தெரிந்திருக்கலாம்.

  துரித வளர்ச்சி ஹார்மோன் ஊசி

  கன்று வளர்ந்து பசுவாகி பால் தர பல ஆண்டுகள் ஆகிறதே என வருந்தி, யோசித்து, பண்ணை முதலாளிகளுக்கு உதவுவதற்காக மருத்துவத் துறை ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்தது. அதுதான், துரித வளர்ச்சிக்கான ஹார்மோன் ஊசி! மூன்று மாதத்திலிருந்து தொடர்ந்து அந்த ஊசியைக் கன்றுக்குப் போட்டு வந்தால், பதினைந்தாவது மாதத்திலிருந்து வழக்கமாக பசுக்கள் கறக்கும் பாலைவிட நான்கு மடந்து அதிகமான பாலை அது சுரக்கும்!

  இந்த ஹார்மோன் பாலைக் குடிக்கும் குழந்தைகளின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் உருவாகும். ஹார்மோன் பால் அதிகமாக புழக்கத்தில் உள்ள அமெரிக்காவில், ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி ஏற்படுவதாகவும், அதிக அளவில் ஆண்களுக்கான மார்பக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன! ஆஹா, பாலைக் கொண்டு பாலையே மாற்றலாம் போலிருக்கிறதே! என்ன அற்புத வளர்ச்சி!

  இந்த பால் மாறாட்டம் கண்டு பயந்துபோன ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள், ஹார்மோன்கள் மூலம் பசு வளர்ப்பதையும், பால் கறப்பதையும் தடை செய்துள்ளன.

  வீட்டுப் பசும் பால்?

  சரி போங்கப்பா, பாக்கெட் பாலும் வேண்டாம், பண்ணைப் பாலும் வேண்டாம், வீட்டில் வளர்க்கப்படும் பசும் பாலையாவது குடிக்கலாம் அல்லவா என்றால் ம்ஹும், அதுவும் செய்யக் கூடாது என்கிறார் நூலின் ஆசிரியர். ஏன்? பசுவின் பால் அதன் கன்றுக்கான பால். அது நம் வீட்டுக் குழந்தைகளுக்காகப் பால் சுரக்கவில்லை. தன் கன்றுக்கு ஏற்ற மாதிரி மட்டுமே அது சுரக்கிறது என்கிறார். கன்றுக்கு ஏற்ற மாதிரி என்றால்?

  கன்றுக்குட்டிக்கு பிறந்த உடனேயே பற்கள் இருக்கும்! ஆனால் மனிதக் குழந்தைகளுக்கு பல் முளைக்க கால அவகாசம் உண்டு. ஒன்பது மாசமோ ஒரு வருஷமோ ஆகலாம். அதோடு, கன்றுக்குட்டி ஒரே ஆண்டில் பூப்படைந்து பசுவாக மாறிவிடும்! ஆனால், நம் பெண் குழந்தைகள் பதினோறு வயது அல்லது அதற்குப் பிறகுதான் பூப்படைவார்கள், அல்லவா?

  வேகமான வளர்ச்சியை ஏற்படுத்தும் பசும் பாலில் அதிகமான செறிவூட்டப்பட்ட சத்துகள் காணப்படுகின்றன. அவ்வளவு ஆற்றல் வாய்ந்த பசும்பாலை நாம் பயன்படுத்தும்போது சிக்கல்கள் உருவாகின்றன. செறிவூட்டப்பட்ட அந்த சத்துப்பொருளை நாம் அதிகமாகப் பயன்படுத்தும்போது, நம் உடல் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது. அதனால் பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. அதுவும் ஒரு டம்ளர் பாலில் நான்கு முழுச் சாப்பாட்டின் சத்துகள் அடங்கியுள்ளனவாம் (பக்கம் 23). நாம் சாப்பாட்டையும் ஒரு முழுக்கட்டு கட்டிவிட்டு, அதன் பிறகு ஒரு டம்ளர் பாலையும் குடிக்கிறோம்!

  ‘பால் - நம் உடலில் கழிவுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. பால் சாப்பிடுவதை அறவே தவிர்த்தால், பல தொந்தரவுகளில் இருந்து உடனடியாக உடல் சரியாவதை நம்மால் உணரமுடியும். பசியை சரியாக உணர முடியாதவர்கள், உடல் பெருத்தவர்கள், அடிக்கடி சளி பிடிக்கும் இயல்புள்ளவர்கள், அடிக்கடி ஏப்பம், அஜீரணம்.. என செரிமானக் கோளாறுகள் உடையவர்கள், மலச்சிக்கல், வாயுக் கோளாறுகள் கொண்டவர்கள், ஆஸ்துமா - மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்கள்... இப்படி அனைத்துவிதமான தொந்தரவு உள்ளவர்களும் பாலைத் தவிர்த்தால், தங்கள் சிரமங்களில் இருந்து உடனடியாக மாற்றம் ஏற்படுவதை உணரமுடியும்’ என்கிறார் ஆசிரியர் (பக்கம் 23).

  இறுதிச் செய்தி

  ‘பாலை நாம் குடிக்கும்போது நம் உடல் அதனை செரிக்க முயல்கிறது. செரிமானத்தின் இறுதியில் பாலில் இருந்து கேஸினோஜன் என்ற பொருள் எஞ்சிவிடுகிறது. இந்த சவ்வுப்பொருளை மனிதக்குடலால் முழுமையாக அழிக்க முடிவதில்லை. எனவே, அவை குடலிலும், வாய்ப்புள்ள இடங்களிலும் படியத் துவங்குகிறது. இது உடலையும், குடலையும் மந்தப்படுத்துகிறது. வயிற்றுப் பகுதியில் பலமான இயற்கையான தசைகளோடு, மந்தத்தை ஏற்படுத்தும் தொங்கு சதைகள் உருவாகின்றன. என்றும் கரைக்கமுடியாத தொந்தியோடு நம் உடல் பெருக்கிறது.

  ‘நம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்வரை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். பசும்பால் கொடுக்கத் துவங்கிய பின்னால், கொழுகொழு குழந்தையாகவும், மந்தத்தன்மை மிக்கவர்களாகவும் மாறுவதை கண்கூடாகக் காணமுடியும். இவ்வளவு பிரச்னைகளோடு பால் சாப்பிடத்தான் வேண்டுமா?’ (பக்கம் 24) என்று கேட்கிறார் பால் ஏன் சாப்பிடக் கூடாது? என்ற நூலின் ஆசிரியர் ஹீலர் உமர் ஃபாரூக்.

  சில கேள்விகள்

  மேலே சொல்லப்பட்டது தொடர்பாக மாற்றமான கருத்துகளும் நமக்கு உண்டு. உமர் சொல்லும் காஸினோஜன், ‘கெசீன்’ என்றும் சொல்லப்படுகிறது. அது ஒருவிதமான புரொட்டீன். அதைச் செரிப்பதற்கான உடல்வாகு ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு மட்டுமே இருந்தது என்றும், சில நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வளர்ந்த மனிதர்களுக்கும் அந்தத் தகுதி வந்துவிட்டது என்றும் சில விஞ்ஞானக் கட்டுரைகள் கூறுகின்றன.

  உமர் குறிப்பிடும் செரிக்க முடியாத அந்த புரொட்டீன் சவ்வை A1 என்றும், செரிக்கக்கூடியதை A2 என்றும் பெயரிட்டு, A2 மட்டும் உள்ள பாலை நியூஸிலாந்தில் உள்ள ஒரு கம்பெனி கி.பி. 2000-ல் தயாரித்து விற்க ஆரம்பித்தது. ஆனால், A1 புரோட்டீன் அப்படியெல்லாம் செரிக்க முடியாததாக இல்லை என்று ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (European Food Safety Authority) தன் ஆராய்ச்சியின் முடிவில் கூறியது.

  மனித குல ஆரோக்கியத்தின் மீதான அக்கறையில்தான் ஆசிரியர் இப்படி ஒரு நூலை எழுதியிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லையென்றாலும், மனிதக்குடலால் செரிக்கவோ அழிக்கவோ முடியாது என்ற ஆசிரியரின் கூற்று, இனி மாற்றவே முடியாத, முடிவான முழு உண்மையா என்ற கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்பவே செய்கிறது. பசும்பாலை ஒதுக்கிவிட்டு நம்மால் வாழமுடியாது என்ற கருத்தை நம் ஆழ்மனம் ஏற்றுக்கொண்டிருப்பதனால்கூட நமக்கு இப்படித் தோன்றலாம்.

  ஆனாலும் சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன. கன்றுக்குட்டிக்கு மட்டும்தான் பால் என்றால், பாலாடைக்கட்டி, தயிர், வெண்ணெய், நெய் போன்றவையெல்லாம் நமக்கு எப்படிக் கிடைக்கும்? பாலே வேண்டாமென்று சொல்லும் ஆசிரியர், இவற்றையும் வேண்டாம் என்று சொல்வாரோ!

  மிருகப்பால் குடிக்கும் பழக்கம் மனிதனுக்கு கி.மு. 9000 - 7000 முதலே தொடங்கியிருப்பதாக இணைய பகவான் கூறுகிறார். குழந்தைகளுக்கு பசும்பால் கொடுத்து வளர்க்கும் உலகளாவிய பண்பாடு தவிர்க்கமுடியாத, தவிர்க்க விரும்பாத அம்சமாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கும்போது, அதை நேற்று வந்த ஒரு புத்தகம் மாற்றிவிடுமா, நிறுத்திவிடுமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

  ஆனால், இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில், உமர் மட்டும் இப்படி ஒரு புத்தகம் எழுதிவிடவில்லை. உலகெங்கிலும் உள்ள மனசாட்சியுள்ள பல மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் பாலின் கெடுதி பற்றி புத்தகம் எழுதித்தான் இருக்கிறார்கள்.

  உதாரணமாக, சாமுவேல் எப்ஸ்டீன் (Samuel Epstein) என்ற சிகாகோ மருத்துவர் What’s In Your Milk என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். ரொனால்டு ஸ்மித் என்ற அமெரிக்க இயற்கை மருத்துவர் The Untold Story of Milk என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். புத்தகங்களின் தலைப்புகளே அவை என்ன சொல்ல வருகின்றன என்ற குறிப்பைத் தருவதாக அமைந்துள்ளன. இன்னும் பலரும் பாலின் தீமைகளை விளக்கி எழுதியுள்ளனர். அந்த சேவைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் உமரின் நூலையும் நாம் பார்க்க வேண்டும்.

  பாலை நிறுத்தத்தான் வேண்டுமெனில், முதலிரவு அறைக்குள் சொம்பு நிறைய பால் கொண்டுபோவதை முதலில் நிறுத்துங்கள் என்ற வேண்டுகோளை நான் முன்வைக்கிறேன்!

  மறுசோறு உண்டு..

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai