பெரும் இந்திய நிலப்பரப்பு என்பது இந்தியா, நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்டது. இவை ஒவ்வொன்றிலும் ஜமாயத் - இ - இஸ்லாமி செயல்படுகிறது. அவை ஒன்றொடொன்று தொடர்பற்றவை என வெளியே சொன்னாலும்கூட, அவை ஒரே உலகப்பார்வையையே முன்வைக்கின்றன. முக்கியமான காலகட்டங்களில், இந்நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள், வாக்குவங்கி அரசியலுக்காக ஜமாயத் - இ - இஸ்லாமி அமைப்புகளை ஆதரித்துள்ளனர். எப்போதுமே ஜமாயத் - இ - இஸ்லாமி அமைப்புகள் இயங்கிய இடங்களில் பயங்கரவாதம் எழுந்துள்ளது. உதாரணமாக, காஷ்மீரில் மத கல்விச் சாலைகளில், காஷ்மீரிய ரிஷி - ஸூஃபி மரபுகள் கொண்ட இஸ்லாமிய அறிஞர்களை அகற்றி ஜமாயத் - இ - இஸ்லாமி அவற்றில் செயல்பட, ஒருகாலத்தில் புதுடெல்லி மைய அரசு ஆதரவு அளித்தது. காரணம், அன்றைய ஜம்மு காஷ்மீர் அரசுக்குத் தலைவலி வர வேண்டுமென்கிற குறுகிய அரசியல் பார்வை. இந்தத் தவறான போக்குதான், பின்னர் பாகிஸ்தானிய ஆதரவுடனான பயங்கரவாதம் காஷ்மீரில் வேரூன்ற வளமான வாய்ப்பை அளித்தது.