காலையில் காகத்துக்கு உணவு வைப்பவர்களிடம் பேசினீர்களென்றால், அவர்களில் பலருக்குக் காகங்களுடன் தனிப்பட்ட ஒற்றைக்கொற்றை உறவுகள் இருப்பதை கவனிக்கலாம். அவர்கள் ஏதாவது ஒரு காகத்துடன் அன்யோன்யமாக உறவுகொண்டிருப்பார்கள். இறந்த தம் முன்னோர், பெற்றோர் எவராவது ஒருவரின் பெயரை, வழக்கமாக வரும் ஒரு காகத்துக்கு வைத்திருப்பார்கள். அந்தக் குறிப்பிட்ட காகத்தின் ஆளுமை குறித்து சில கதைகள்கூட அவர்களிடம் இருக்கும். காகங்களின் நேரம் தவறாமை, நாம் தாமதித்தால் அவற்றின் குரல்களில் வெளிப்படும் சீற்றம், இத்யாதிகளை அவர்கள் அவதானித்திருப்பதைக் காணலாம். இவை எல்லாம் ஒருவிதத்தில் அறிவியல் அறிதலுக்கான அடிப்படை உள்ளீடுகள்தான். ஆனால், அவை தனிப்பட்ட கதைகள் என்ற அளவிலேயே தங்கி நின்றுவிட்டனவே அன்றி, அதற்கு அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை. அதுதான் ஏன் என்பதை நாம் கண்டறிய வேண்டும்.