3. மூடி வைத்த பாத்திரம்

அறிவுப்பாத்திரம் நிரம்ப வேண்டுமானால், அலைபாயச் செய்யும் கவனச் சிதறல்கள் என்ற மூடியை அகற்ற வேண்டும்
3. மூடி வைத்த பாத்திரம்

குருவிடம் பாடம் கற்க சம்மணமிட்டு உட்கார்ந்தான் சிஷ்யன்.

மதிய உணவுக்கு முந்தைய நேரம் அது. செவிக்கு உணவு எடுத்துக்கொண்ட பின்னரே வயிற்றுக்கு உணவு. வழக்கமாக அதுதான் குருவின் எதிரே அமர்ந்து பாடம் பயிலும் நேரம்.

பாடத்தை ஆரம்பிக்கும் முன்னர், சிஷ்யனின் முகத்தில் தெரிந்த கவனச் சிதறலைக் கண்டுகொண்டார் குரு.

சற்று முன்னர் குருவைச் சந்திக்க வந்திருந்தார் ஒருவர். அவர் அந்த ஊரில் பிரபலமாக இருக்கும் சமையல் கலைஞர். ஒவ்வொரு முறை குருவைச் சந்தித்து ஆசிபெற வரும்போதும், புதுப்புது உணவு வகையினைச் செய்து, எடுத்துக்கொண்டு வருவார். ஆசையுடன் கொடுத்துவிட்டுச் செல்வார். அப்படி அவர் அன்று கொடுத்திருந்த உணவு அடுக்களையில் தயாராக இருந்தது. இம்முறை என்ன சுவையோ என்று அறியும் ஆவலில் அந்த உணவின் மீதே சிஷ்யனின் கவனம் படிந்திருந்தது. பாடம் எப்போது முடியும், உணவை எப்போது ருசிப்பது என்பதிலேயே அவன் அலைபாய்ந்துகொண்டிருந்தான்.

சிஷ்யனின் நிலைகொள்ளா மனத்தைப் படித்துவிட்டார் குரு. ‘‘போ.. உனக்கும் எனக்கும் உணவை எடுத்து வா. உணவருந்திய பிறகு பாடம் படிக்கலாம்’’ என்றார்.

‘‘உணவுக்கு முன்னர் பாடம் என்பது நாம் கடைப்பிடிக்கும் பழக்கம். தவிர, உணவருந்திய பின்னர் சிறிது நேரம் தாங்கள் ஓய்வெடுப்பீர்களே. இன்று எதற்காக நம் பலநாள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் குருவே?’’ என்றான் சிஷ்யன்.

‘‘முதலில் உணவு. பிறகு அதைச் சொல்கிறேன்’’ என்றார் குரு. சிஷ்யனுக்கு குஷி. பாய்ந்து ஓடிப்போய், முகம் - கை - கால் கழுவிச் சுத்தம் செய்துகொண்டான். உணவை எடுத்துக்கொண்டு திரும்ப ஓடிவந்தான். இருவரும் சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு முடித்ததும், இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, பாடம் கற்க உட்கார்ந்தான் சிஷ்யன்.

குடிநீர் இருக்கும் பாத்திரத்தை அப்படியே எடுத்து வரும்படி அவனிடம் சொன்னார் குரு. மூடியுடன் இருந்த அப்பாத்திரத்தை எடுத்து வந்தான் அவன்.

மூடியை விலக்கி, உள்ளே எவ்வளவு நீர் இருக்கிறதென்று பார்த்தார் குரு. மிகவும் குறைவாகவே இருந்தது.

‘‘பாத்திரத்தில் போதிய நீர் இல்லை. நிரப்ப வேண்டும். பெரிய பாத்திரத்தில் சேகரித்துவைத்திருக்கும் குடிநீரை கோப்பையில் அள்ளிக்கொண்டு வா’’ என்றார். ஓடிச்சென்று கோப்பை நிறைய நீருடன் திரும்பி வந்தான் சிஷ்யன்.

‘‘ம்.. இந்தப் பாத்திரத்துக்குள் ஊற்று..’’ என்றார் குரு.

அதற்காக பாத்திரத்தின் மூடியை அகற்ற முயன்றான் சிஷ்யன்.

‘‘வேண்டாம். மூடியை அகற்றாதே. அது அப்படியே இருக்கட்டும். பாத்திரத்துக்குள் நீரை ஊற்று’’ என்றார் குரு.

கேலியாக அவரைப் பார்த்தான் சிஷ்யன். ‘‘அதெப்படி குருவே. மூடி போட்டு அடைத்துவைத்திருக்கும் பாத்திரத்துக்குள் நீரை ஊற்ற முடியும்?! ஒரு துளி நீர்கூட உள்ளே புகாதே?’’ என்றான்.

குருவின் முகத்தில் புன்னகை. ‘‘ஆம். அதுதான் உனக்கான இன்றைய பாடம். சற்று நேரத்துக்கு முன்னர் நீ கேட்ட கேள்விக்கான பதிலும்’’ என்றார்.

தலை கவிழ்ந்தான் சிஷ்யன். அறிவுப்பாத்திரம் நிரம்ப வேண்டுமானால், அலைபாயச் செய்யும் கவனச் சிதறல்கள் என்ற மூடியை அகற்ற வேண்டும் என்ற உண்மை அவனுக்கு உரைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com