51. உன் சுதந்திரம்

நமக்குப் பிடித்தமானவற்றையும் தேவையானவற்றையும் அடுத்தவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் செய்துகொள்ளும் அனுபவமே சுதந்திரம்.
51. உன் சுதந்திரம்
Published on
Updated on
2 min read

எது சுதந்திரம் என்ற கேள்வி எழுந்தது சிஷ்யனின் மனதுக்குள்.

‘‘அதோ அந்தப் பறவைபோல தன் விருப்பப்படி பறந்து திரிவதுதானே சுதந்திரம் குருவே? எல்லைகள் ஏதுமின்றி பறந்துசெல்லும் பறவைகளைத்தானே சுதந்திரத்துக்கான எடுத்துக்காட்டாக எல்லோரும் குறிப்பிடுகிறார்கள்.. அது சரிதானே?’’ என்று கேட்டான்.

அவன் கைகாட்டிய திசையில் சிறகு விரித்துப் பறந்துகொண்டிருந்த பறவையை, தலை உயர்த்திப் பார்த்தார் குருநாதர்.

‘‘பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இருப்பது ஐந்தறிவு. மனிதனுக்கு ஆறறிவு. பரிணாம வளர்ச்சியால் அடுத்த நிலைக்கு உயர்ந்துவிட்ட மனிதன் ஏன் ஓரறிவைக் குறைத்துக்கொண்டு பின்னோக்கிச் செல்ல வேண்டும் என விரும்ப வேண்டும்?!’’ என சிஷ்யனிடம் கேட்டார் குரு.

சிஷ்யன் யோசிக்க ஆரம்பித்தான். பேச்சைத் தொடர்ந்தார் குரு.

‘‘அதையும் தாண்டி இன்னொரு கருத்தையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். பறப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எந்தப் பறவையும் பறப்பதில்லை. ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் அல்லவா. அந்தப் பறவை தன் கூட்டை விட்டுக் கிளம்பி, கூட்டில் காத்திருக்கும் குஞ்சுகளுக்கு இரை தேடப் பறந்துசெல்லலாம். அல்லது, இரையை எடுத்துக்கொண்டு கூட்டுக்குத் திரும்பிப்போகலாம். அல்லது, இருக்கும் இடத்தில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு அதனால் வேறு இருப்பிடம் தேடிப் பறந்து சென்றிருக்கலாம். இப்படி எத்தனையோ இலக்குகள் இருக்கலாம் அல்லவா..’’.

‘‘ஆம்’’ என்றான் சிஷ்யன்.

‘‘குறிக்கோள் எதுவுமில்லாத செயலால் எந்தப் பலனும் இல்லை. ஐந்தறிவு இல்லாத பறவைகளுக்கே இது பொருந்தும் எனும்போது, சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனுக்கு இலக்குகளும் லட்சியங்களும் மிகவும் முக்கியமானவை..’’.

‘‘அப்படியானால்.. சுதந்திரம் என்றால் என்ன குருவே?’’ என்று அப்பாவியாகக் கேட்டான் சிஷ்யன். விளக்கிப் பேசினார் குரு.

‘‘விருப்பு வெறுப்புகளையும் நமக்கான தேவைகளையும் முன்வைத்துத்தான் நமக்கான சுதந்திரம் என்ன என்பதை அளவிடுகிறோம். நமக்குப் பிடித்தவற்றையும் தேவையானவற்றையும் செய்வதையே நமக்கான சுதந்திரம் என்று நம்புகிறோம். பறந்து செல்லும் அந்தப் பறவை ஒரு மரக்கிளையில் இளைப்பாறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அது தன் இயற்கை உபாதையைக் கழிக்க நினைத்தால் அந்த விநாடியே அதைச் செய்யும். மரத்தின் கீழே அமர்ந்திருக்கும் மனிதனைப் பற்றி அது எண்ணிப்பார்க்காது. அவன் தலையிலேயே பறவையின் எச்சம் விழும். அதை அவன் விரும்புவானா?’’

கேள்வியைக் கேட்டுவிட்டு சிஷ்யனின் முகத்தை ஏறிட்டார் குரு. தன் தலையில் அந்தப் பறவையின் எச்சம் விழுந்ததுபோல முகம் சுளித்தான் சிஷ்யன்.

‘‘அப்படியானால்.. நிம்மதியாக ஓய்வெடுக்க விரும்பி அந்த மரத்தடியில் வந்தமர்ந்த அந்த மனிதனின் சுதந்திரத்தில் அந்தப் பறவை குறுக்கிடுகிறது என்றுதானே அர்த்தம்? அவனுக்குப் பிடிக்காத ஒரு காரியத்தை அது செய்கிறது என்றுதானே அர்த்தம்?’’.

‘‘ஆமாம் குருவே..’’ என்றான் சிஷ்யன். அனிச்சையாக தன் தலையைத் தடவிக்கொண்டான்.

‘‘நமக்குப் பிடித்தமானவற்றையும் தேவையானவற்றையும் அடுத்தவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் செய்துகொள்ளும் அனுபவமே சுதந்திரம்..’’ என்றார் குரு.

தொடர்ந்து கூறினார்.. ‘‘சுதந்திரத்தின் முழு அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் மற்றவர்களின் விருப்பு வெறுப்புகளில் தலையிடுபவர்கள் ஆறறிவு கொண்ட மனிதர்களாக இருந்தாலும், ஐந்தறிவுள்ள பறவைகளாகவே கருதப்படுவார்கள்..’’.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com