சுடச்சுட

  
  guru-disciple

   

  கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த காவிரி ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தனர் குருவும் சிஷ்யனும். இயற்கையின் வனப்பில் லயித்திருந்தார்கள்.

  துள்ளிக் குதித்து புள்ளிமான் போல ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீரைக் காட்டி, ‘‘நீ என்ன உணர்கிறாய்?’’ என்றார் குருநாதர் சிஷ்யனிடம்.

  ‘‘குழந்தையின் குதூகலத்தையும், இளைஞனின் உற்சாகத்தையும், நடுத்தர வயது மனிதனின் சந்தோஷத்தையும், முதியவரின் பெருமிதத்தையும் ஒருசேர உணர்கிறேன்’’ என்றான் சிஷ்யன். அவனைத் தட்டிக்கொடுத்துப் புன்னகைத்தார் குரு.

  அப்போது அங்கே வந்த இளைஞன் ஒருவன், குருவையும் சிஷ்யனையும் கவனிக்காமல் தன் வேலையில் மும்முரமானானான்.

  ஆற்றில் குதிக்க ஆழமான பகுதியை கண்களால் துளாவிக்கொண்டிருந்தான். அழுது அழுது அவன் முகம் வீங்கிப்போய் இருந்தது.

  அவன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயல்கிறான் என பார்த்தமாத்திரத்தில் குரு உணர்ந்துகொண்டார்.

  அவனருகே சென்று அழைத்து வருமாறு பதட்டத்துடன் சிஷ்யனிடம் தெரிவித்தார். சூழ்நிலையை சட்டென உணர்ந்துகொண்ட சிஷ்யன், ஓட்டமாய் ஓடினான்.

  அவனுடன் வர மறுத்து அடம்பிடித்த அந்த இளைஞனை நைச்சியமாகப் பேசி குருவிடம் அழைத்துவந்தான் சிஷ்யன்.

  குருவைக் கண்டதும், அவர் கண்களில் படர்ந்திருந்த தாய்மையை தரிசித்ததும் வெடித்து அழத் தொடங்கினான் இளைஞன்.

  அவனை கைப்பிடித்து தன் அருகே அமர்த்திக்கொண்டார் குரு. ஆசுவாசப்படுத்தினார். அவன் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார்.

  தான் உயிருக்குயிராக நேசித்த தன் மனைவி இறந்துபோனதையும், அவள் அஸ்தியை இதே காவிரி ஆற்றில் கரைத்ததையும் சொன்னான் அவன். ‘‘இதே ஆற்றில் குதித்து என் உயிரையும் நான் மாய்த்துக்கொள்ளப் போகிறேன். என்னால் அவளில்லாமல் வாழ இயலவில்லை’’ என்று அழுதவாறே கூறினான்.

  கரையில் நடந்துகொண்டிருந்த அந்தச் சம்பவத்தைக் கண்டபடியே, ஒரு கணம்கூட நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது காவிரி.

  ‘‘இதோ.. ஓடிக்கொண்டிருக்கும் அகண்ட காவிரியின் நீரைப் பார்’’ என்றார் குரு. திரும்பிப் பார்த்தான் இளைஞன். சிஷ்யனும்.

  ‘‘ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீருக்கு எத்தனை எத்தனை இடைஞ்சல்கள்.. குறுக்கீடுகள்.. கட்டுப்படுத்தும் கரைகள்.. மட்டுப்படுத்தும் குண்டு குழிகள்! எதையும் சட்டை செய்கிறதா பார் இந்த நீரோட்டம்! ஒரு கணம் உன் கண்களுக்குத் தெரியும் நீர்த் திவலைகள், மறுகணம் அந்த இடத்தில் இருப்பதில்லை. அது நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது! கரைகளும், கட்டுப்பாடுகளும், குறுக்கீடுகளும், குண்டு குழிகளும் நிரந்தரமல்ல என்பது இந்த நீருக்குத் தெரிந்திருக்கிறது. ஓரிடத்தில் சந்திக்கும் சவால், அந்த இடத்தைக் கடந்துவிட்டால் காணாமல் போய்விடுகிறது. வேறு இடம்.. வேறு சவால்.. என தன் சாகசப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது நீரோட்டம். அப்படி கடந்து போய்க்கொண்டே இருந்தால்தான் அது தன் இலக்கான கடலை அடையமுடியும். அதுவே பிறவிப் பேரின்பம். இலக்கை அடைவதற்கு முன்பே, மனிதர்களுக்குப் பயன்படும் பாக்கியம் கிடைத்தால் அதையும் மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறது. பிறருக்குப் பயன் தருவது பிறவிப்பயனை அடைய குறுக்கு வழி என்பதும் இந்த நீருக்குத் தெரிந்திருக்கிறது. அள்ளிப்பருகும் நோக்கத்துடன் உன் கைகளை ஓடிவரும் நீரின் குறுக்கே கொண்டுசெல். ஆசையோடு உன் கைகளில் வந்து அடைக்கலமாகும் அது..’’

  குருவின் பேச்சை, தன் அழுகையை மறந்து ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டே இருந்தான் அந்த இளைஞன். ஓடும் நீர் சொல்லிச் செல்லும் சேதியை குருவின் வார்த்தைகளால் கேட்கக் கேட்க சிஷ்யனுக்கும் பரவசமாக இருந்தது.

  ‘‘நாம் சந்திக்கும் எந்தத் துன்பமும் நிரந்தரமல்ல. எதுவும் கடந்துபோகும்.. கடந்தால் போகும். அதுவே இந்த நீரோட்டம் நமக்குப் போதிக்கும் மகா தத்துவம். பிறருக்குப் பயன் தரும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கே இறைவன் நம்மைப் படைத்திருக்கிறான். முடிவில் அவனை அடைய அவனே நாள் குறிப்பான். நாமாக நம் உயிரை மாய்த்துக்கொள்வது மகா பாவம். அதற்கும் இந்த நீரே உதாரணமாக இருக்கிறது..’’ என்றார் குரு.

  ஓடிக்கொண்டிருந்த நீரையே பார்த்துக்கொண்டிருந்தான் இளைஞன். தெய்வத்தைக் கண்ட பக்தனின் முகம் அவனிடம் தெரிந்தது.

  ‘‘எனக்காக இன்னும் சில உறுப்பினர்கள் என் குடும்பத்தில் இருக்கிறார்கள். என்னை நேசிக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். என்னை நம்பி என் அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். யாருக்கும் பயன்படாமல் நான் என் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பது புரிகிறது ஸ்வாமி..’’ என்று கூறி குருவின் காலில் விழுந்தான் அவன்.

  அந்தக் காட்சியையும் பார்த்தபடியே ஓடிக்கடந்தன அந்தக் கணத்து நீர்த்திவலைகள்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai