Enable Javscript for better performance
13. விட்டு விடுதலை!- Dinamani

சுடச்சுட

  
  guru-disciple

   

  தொலைதூரப் பயணம் முடித்து வரும்போது, வழியில் ஒரு கிராமத்தில் இளைப்பாற ஒதுங்கினார்கள் குருவும் சிஷ்யனும்.

  சிறுவர்கள் சிலர் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்துக்கு அருகே பெரிய மரம் ஒன்று இருந்தது. அதன் நிழல் விசாலமானதாக இருந்தது. கீழே அமர்ந்தார்கள் இருவரும்.

  சற்றுத்தொலைவில் ஒரு மலை இருப்பதை அப்போதுதான் பார்த்தார்கள். அடர்ந்த மரங்களையும் புதர்களையும் கொண்டிருந்தது அது. பச்சைப் பசேலென பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது.

  அதன் உச்சியில் ஒரு சிறிய கற்கோயில் இருப்பதாகக் கூறினார்கள் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள். கோயிலைக் காணவும், அதிலிருக்கும் இறைவனை தரிசிக்கவும் ஆசைப்பட்டான் சிஷ்யன். குருவிடமும் தன் விருப்பத்தைச் சொன்னான்.

  ஆனால், மலையேறுவதற்கான மண் பாதை பல ஆண்டுகளுக்கு முன்பே சிதிலமடைந்துவிட்டதாகவும், அதன் பின்னர் யாரும் அங்கே போவதில்லை என்றும் சொன்னார்கள் சிறுவர்கள்.

  என்ன செய்வதென யோசித்துக்கொண்டிருந்தான் சிஷ்யன். குரு அமைதியாகக் கவனித்தார்.

  அப்போது அங்கே வந்த கிராமத்துப் பெண்கள் சிலர் குருவைக் கண்டதும் வணங்கினார்கள். அவர்களிடம், ‘‘நாங்கள் அந்த மலையின் உச்சியில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல விரும்புகிறோம். ஆனால், அதனை அடைவதற்குப் பாதையேதும் இல்லை என்று இந்தச் சிறுவர்கள் கூறுகிறார்கள். உண்மைதானா?’’ என்று கேட்டான் சிஷ்யன்.

  ‘‘ஆமாம்’’ என்றார்கள் அவர்கள். போதாக்குறைக்கு, பயம் வேறு காட்டினார்கள். ‘‘முட்களும் புதர்களும் மண்டிக்கிடக்கும் மலை அது. கொடிய நாகங்களும் விஷப்பூச்சிகளும் நிறைய இருக்கும். நீங்கள் அங்கே போக நினைப்பது ஆபத்தானது சுவாமிகளே’’ என்றார்கள்.

  சிஷ்யனின் முகம் வாடியது. அவன் என்ன செய்யப்போகிறான் என்பதைத் தொடர்ந்து கவனிக்கும் நிலையில் இருந்தார் குரு.

  சில நிமிடங்கள் கடந்தன. அந்த ஊரின் தலைவர் தன் சகாக்களோடு வந்தார். எங்கிருந்தோ ஒரு சாமியார் தங்கள் ஊருக்கு வந்திருக்கிறார் என்ற செய்தி கேள்விப்பட்டு ஓடி வந்திருந்தார். குருவை வணங்கினார்.

  அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டான் சிஷ்யன்.

  ‘‘மாமிச உணவு சாப்பிடும் எங்களுக்கே அந்த மலையின் உச்சிக்குப் போகும் சக்தி இல்லை. நாங்கள் யாரும் அந்த விஷப்பரீட்சையை மேற்கொண்டதில்லை. நீங்களும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார் ஊர்த்தலைவர்.

  அனைவரும் அங்கிருந்து சென்றதும் குருவும் சிஷ்யனும் மட்டும் மிச்சமிருந்தனர்.

  ‘‘என்ன செய்யலாம்?’’ என்று அவனிடம் கேட்டார் குரு.

  ‘‘மலை உச்சிக்குச் செல்ல ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால், இத்தனை பேர் எச்சரிக்கும்போது செல்ல வேண்டாம் என்றும் தோன்றுகிறது குருவே’’ என்றான் சிஷ்யன்.

  ‘‘அவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த மலையைப் பற்றி சகலத்தையும் அறிந்தவர்களாகத்தானே இருப்பார்கள்’’ என்றும் சொன்னான்.

  மரத்தின் வேர் மீது சாய்ந்து படுத்திருந்த குரு, நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘உன்னால் இங்கே நெருப்பை உருவாக்க முடியுமா?’’ என்று கேட்டார்.

  தன் துணிப்பையில் பத்திரமாக வைத்திருந்த மெழுகுவர்த்தியையும் தீப்பெட்டியையும் எடுத்தான் சிஷ்யன். குச்சியை உரசி, மெழுகுவர்த்தியைப் பற்றவைத்தான்.

  ‘‘முதன் முதலில் மனிதன் நெருப்பை உருவாக்கக் கற்றுக்கொண்டது எப்படி என்று உனக்குத் தெரியும்தானே?’’ என்றார் குரு.

  தலையை ஆட்டினான் சிஷ்யன். ‘‘கற்களை ஒன்றன் மீது ஒன்று வைத்து உரசி, முதன் முதலாக நெருப்பை உருவாக்கக் கற்றுக்கொண்டான் மனிதன் என நீங்கள் கூறியிருக்கிறீர்கள்’’ என்றான்.

  ‘‘கற்கால மனிதன் அப்படித்தான் அறிந்து வைத்திருந்தான். அதற்குப் பின் வந்தவர்களும் அப்படியே தாங்கள் அறிந்திருந்தபடியே கற்களை உரசி உரசித்தான் நெருப்பை மூட்டினார்கள். அடுத்து வந்தவர்கள் சிந்தித்தார்கள். தாங்கள் அறிந்து வைத்திருந்ததில் இருந்து விலகி, வேறு எப்படி நெருப்பை உருவாக்க முடியும் என சிந்தித்தார்கள்’’.

  குரு சொல்லிக்கொண்டே போக, ஆர்வத்துடன் நெருப்பின் கதையை கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன். உண்மையில் அது நெருப்பின் கதையல்ல, அறிந்தவற்றில் இருந்து விலகி நின்று ஒரு விஷயத்தை அணுகுவதற்கான கதை!

  ‘‘நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள், அவர்கள் அறிந்து சொல்லி இருக்கிறார்கள், அவர்கள் மூலம் நாம் அறிந்து வைத்திருப்பதுதான் தொடர்ந்து நடக்கும்.. என்றெல்லாம் மனிதன் நம்பிக்கொண்டு இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? மாற்று வழியில் நெருப்பை உருவாக்கி இருக்கவே முடியாது அவனால்! இப்போதும் சிக்கிமுக்கிக் கல்லுடன்தானே நாம் போராடிக்கொண்டிருக்க வேண்டும்! அறிந்தவற்றில் இருந்து விட்டு விடுதலையாகி சிந்திப்பதால்தான் மாற்று வழிகள் கிடைக்கும். புதுப்புது அறிவியல் முன்னேற்றங்களும் கிடைக்கும்’’ என்று கூறி முடித்தார் குரு.

  ‘‘வாருங்கள் குருவே.. நாம் மலையுச்சிக்குப் போகலாம்’’ என்று கூறியபடியே எழுந்து நின்றான் சிஷ்யன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai