சுடச்சுட

  
  guru-disciple

   

  திடுதிப்பென்று ஒருநாள் வடஇந்தியத் துறவி ஒருவர், குருநாதரின் ஆசிரமத்துக்கு வந்தார். சில வருடங்களுக்கு முன்னர் யாத்திரைக்காக இமயமலை சென்றிந்தபோது அவரைச் சந்தித்திருந்தார் குருநாதர்.

  ‘‘நெடும் பயணம் ஒன்றில் இருக்கிறேன். இந்த ஊரின் வழியே பயணம் செய்ய முடிவெடுத்தபோதே வழியில் உங்களைச் சந்திக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அதனால்தான் நேரில் வந்தேன்’’ என்றார்.

  ‘‘தங்கள் சித்தம் என் பாக்கியம்..’’ என்று கூறி வரவேற்றார் குருநாதர். அவருக்கு கனிகள் கொடுத்து உபசரித்தான் சிஷ்யன்.

  சிறிது நேரம் குருவும் துறவியும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், விடைபெற்றுச் சென்றுவிட்டார் அந்தத் துறவி.

  அவர் சென்றதும், குருவின் அருகே வந்தான் சிஷ்யன்.

  ‘‘சித்தம் என்றால் என்ன குருவே? அது மனம் சம்பந்தப்பட்டதா? செயல் சம்பந்தப்பட்டதா?’’ என்று கேட்டான்.

  அவனை அழைத்து அருகே அமர்த்திக்கொண்டார் குரு.

  ‘‘மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வோம் அல்லவா.. அதற்கு என்ன அர்த்தம் என்று கருதுகிறாய்?’’ என்று கேட்டார்.

  ‘‘எந்த ஒரு செயலை செய்ய வேண்டும் என முடிவெடுத்தாலும், அதனை மனதிடம் ஒப்படைத்துவிட்டால் அதுவே அந்தச் செயலைச் செய்துமுடிப்பதற்கான வழியைக் காட்டும். சரிதானே குருவே?’’ என்றான் சிஷ்யன்.

  ‘‘ஓரளவுக்கு சரிதான். இப்போது இதன் அர்த்தத்தை முழுமையாகத் தெரிந்துகொள்..’’ என்ற குரு தொடர்ந்தார்.

  ‘‘மனம் ஒரு காரியத்தை நினைக்கும். புத்தி என்பது, நினைத்த காரியத்தை ஆராய்ந்து நிச்சயிக்கும். அகங்காரம் என்பது, நிச்சயிக்கப்பட்ட காரியத்தை செய்துமுடிக்க வைக்கும்..’’.

  குரு பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கே புகுந்தான் சிஷ்யன்.. ‘‘அகங்காரம் என்பது தலைக்கனத்தைக் குறிக்கும் சொல்தானே குருவே?’’ என்றான்.

  ‘‘அல்ல.. அகங்காரம் என்பது தவறான குணத்தைக் குறிக்கும் சொல் அல்ல. செயலைச் செய்துமுடிக்கும் வைராக்கியம் என்றே பொருள்படும். தீர்க்கம் என்றும் பொருள் கொள்ளலாம். மனம், நினைக்கும். புத்தி, ஆராய்ந்து நிச்சயிக்கும். அகங்காரம், காரியசித்தி கொடுக்கும். இந்த மூன்றின் தொகுப்பினைத்தான் சித்தம் என்று சொல்கிறோம். மனம், புத்தி, அகங்காரம்.. இந்த மூன்றையும் பதிவுசெய்து வைத்துக்கொண்டு நினைவுகூறும் நம் சிந்திக்கும் ஆற்றலே சித்தம் எனப்படும்..’’ என்றார் குரு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai