56. மதிப்பு

பொருளோ வார்த்தையோ உணர்ச்சியோ.. எந்த இடத்தில் அது சரியாக மதிக்கப்படுமோ அந்த இடத்தில்தான் அதனைப் பயன்படுத்த வேண்டும்
56. மதிப்பு
Published on
Updated on
2 min read

ஆசிரமத்தில் நான்கு புராதன விளக்குகள் இருந்தன. பழங்காலத்து விளக்குகள் அவை.

அவற்றில் மூன்று விளக்குகள் மட்டுமே உபயோகத்தில் இருந்தன. நான்காவது விளக்கு தேவைக்கு அதிகமானதாக இருந்ததால், கவனிப்பார் யாருமின்றி சும்மாவே கிடந்தது.

அதைக் கொண்டுபோய் விற்றுவிடுமாறு சிஷ்யனிடம் கூறினார் குரு. ‘‘யாருக்காவது அது உபயோகப்படட்டும்’’ என்றார்.

விளக்கை எடுத்துக்கொண்டு உள்ளூர்ச் சந்தைக்குச் சென்றான் சிஷ்யன். விதவிதமான விளக்குகளை விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரியிடம் கொடுத்து, விலைக்கு எடுத்துக்கொள்ள இயலுமா எனக் கேட்டான்.

விளக்கை வாங்கி பரிசோதித்த வியாபாரி, ‘‘இது மிகவும் ஆதிகாலத்துப் பொருள். பெரிதாக இருக்கிறது. நிறைய எண்ணெய் ஊற்றிப் பயன்படுத்த வேண்டும். அதனால் யாரும் இதை விரும்பமாட்டார்கள். வேண்டுமானால் எடையை மட்டும் கணக்கிட்டு ஒரு விலை தருகிறேன்’’ என்றான். அவன் கூறிய தொகை மிகவும் குறைவானதாக இருந்தது. அதை சிஷ்யனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

திரும்பவும் ஆசிரமத்துக்கே கொண்டுவந்தான். சந்தையில் நடந்ததை குருவிடம் சொன்னான்.

ஊரில் இருக்கும் பெரிய விளக்குக் கடைக்குச் சென்று விற்க முயற்சி செய் என அறிவுறுத்தினார் குரு. சிஷ்யன் மறுபடியும் கிளம்பிச் சென்றான்.

கடைக்காரர் அவனையும் விளக்கையும் ஏற இறங்கப் பார்த்தார். விளக்கைப் பரிசோதித்தார். ‘‘இவ்வளவு எடை கொண்ட விளக்குகளை இப்போது யாரும் வாங்குவதில்லை. வெறுமனே அழகுப் பொருளாக மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்’’ என்று கூறினார். சந்தை வியாபாரி கொடுப்பதாகச் சொன்னதைக் காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதல் விலை கொடுப்பதாகச் சொன்னார்.

அதையும் ஏற்றுக்கொள்ள மனமில்லை சிஷ்யனுக்கு. திரும்பவும் ஆசிரமத்துக்கு வந்தான். குருவிடம் வருத்தத்துடன் சொன்னான்.. ‘‘விலைமதிப்பற்ற இந்த விளக்குக்கு சொற்ப விலையைத்தான் நிர்ணயிக்கிறார்கள்’’ என்றான்.

‘‘சரி.. சிரமம் பாராமல் பக்கத்தில் இருக்கும் நகரத்துக்குச் செல்’’ என்றார் குரு. ஒரு முகவரியைக் கொடுத்து, அந்த முகவரியில் இருக்கும் கடையில் விளக்கை விற்றுவிட்டு வருமாறு கூறினார்.

அங்கே சென்ற பின்னர்தான் சிஷ்யனுக்குத் தெரிந்தது.. அது ஒரு புராதன கலைப்பொருட்கள் வாங்கி விற்கும் கடை என்பது.

அவன் கையில் இருந்த விளக்கை ஆசை ஆசையாக வாங்கினார் கடைக்காரர். ‘‘ஆஹா.. எவ்வளவு பெரிய விளக்கு இது! இப்படி ஒரு விளக்கை நான் இதுவரை பார்த்ததே இல்லை!’’ என்று மகிழ்ந்தார். தன் பணியாளர்களை அழைத்து விளக்கைக் காட்டி பிரமிப்போடு பேசினார். ‘‘இது என் கடையில் இருப்பதே எனக்குப் பெருமை’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

சந்தை வியாபாரி தருவதாகச் சொன்ன தொகையைவிட பன்மடங்கு தொகையைத் தருவதாகச் சொன்னார்.

சிலைபோல நின்றிருந்தான் சிஷ்யன். அவனது ஆச்சரியத்தை தவறாகப் புரிந்துகொண்டார் கடைக்காரர். ‘‘யோசிக்காதீங்க.. நான் சொன்ன தொகையை இரண்டு மடங்காக உயர்த்திக்கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். இது எனக்கு வேண்டும்’’ என்று, விளக்கை அணைத்துப் பிடித்தபடியே சொன்னார்.

பணத்தைப் பெற்றுக்கொண்டு, வியப்பு கலையாத முகத்துடன் ஆசிரமத்துக்கு திரும்பினான் சிஷ்யன்.

நடந்ததை விவரித்தான். அதை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்போல புன்னகைத்தார் குரு.

‘‘ஆமாம். ஆரம்பத்திலேயே அந்த கலைப்பொருட்கள் வாங்கி விற்கும் கடையின் முகவரியை உன்னிடம் நான் கொடுக்காததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று உன்னால் யூகிக்க முடிகிறதா?’’ என்று சிஷ்யனின் முகத்தை உற்றுப் பார்த்தபடியே கேட்டார் குரு.

உடனடியாக பதில் சொன்னான் சிஷ்யன்.. ‘‘புரிகிறது குருவே. பொருளோ வார்த்தையோ உணர்ச்சியோ.. எந்த இடத்தில் அது சரியாக மதிக்கப்படுமோ அந்த இடத்தில்தான் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் எனக்குப் போதித்ததும் நன்கு புரிகிறது குருவே’’ என்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com