52. வாங்குவதும் விற்பதும்

பொருளின் தரத்தை உறுதிசெய்வதற்காக அதை வாங்கும்போது எந்த அளவுக்கு கவனமாக இருந்தாயோ, அதே கவனத்தை விற்கும்போதும் கடைப்பிடி.
52. வாங்குவதும் விற்பதும்

அடுத்த வார தேவைகளுக்கான உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கிவருவதற்காக உள்ளூர் சந்தைக்குச் சென்றிருந்தான் சிஷ்யன்.

திரும்ப வரும்போது அவனுடன் இன்னொரு இளைஞனையும் அழைத்துவந்தான் ஆசிரமத்துக்கு.

‘‘இவர் நான் எப்போதும் பொருட்கள் வாங்கும் வியாபாரியிடம் பல வருடங்களாக பணியாற்றியவர். இப்போது தனியாக வியாபாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்’’ என அவரை குருவுக்கு அறிமுகம் செய்துவைத்தான் சிஷ்யன்.

குருவை வணங்கினான் அந்த இளைஞன். ‘‘சிறுவயதில் இருந்து பல வேலைகள் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துவைத்த பணத்தில் இப்போது தனியாக வியாபாரம் செய்யும் நிலையை அடைந்திருக்கிறேன்’’ என்றான்.

அவனை வாழ்த்தினார் குருநாதர்.

‘‘வாழ்த்து மட்டும் போதாது குருவே. இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் நல்ல மனிதர். இவர் தன் வியாபாரத்தில் என்றும் சிறப்புற்று இருக்க உங்கள் ஆசியும் ஆலோசனையும் கிடைத்தால் நானும் மகிழ்ச்சியடைவேன்’’ என்று கூறி, குருவை வணங்கினான் சிஷ்யன்.

சிஷ்யனின் பிறருக்கு உதவ நினைக்கும் மனப்பான்மையை வெகுவாக ரசித்தார் குரு. புன்னகை முகத்துடன் அவனை அணைத்து ஆசிர்வதித்தார். வந்திருந்த இளைஞன் பக்கம் திரும்பினார்.

‘‘நீ என்ன வியாபாரம் செய்கிறாய்?’’ என்று கேட்டார் குரு.

‘‘காய்கறிகள் விற்பனை செய்கிறேன்’’ என்றான் அவன்.

‘‘காய்கறிகள் மொத்தமாக வாங்கும்போது அதில் என்னவெல்லாம் கவனம் செலுத்துவாய்?’’ என்றார் குரு.

தொண்டையைச் செருமிக்கொண்டு அவன் பேசலானான்.

‘‘உருளைக்கிழக்கு வாங்கும்போது அதன் தோலினை கவனமாகப் பார்ப்பேன். தழும்புகளோ, ஓட்டைகளோ இருக்கக் கூடாது. சுருக்கங்கள் இருக்கக் கூடாது. விரல் நகத்தால் லேசாக கீறினால் தோல் விலக வேண்டும்.

கத்திரிக்காயில் ஓட்டைகள் இருந்தால் உள்ளே புழு இருக்கும். காம்பு நீண்டிருந்தால் இளம் காய். காயின் மேல்புறத்தில் பச்சை நிறமாகவும் இடையிடையே வெள்ளை நிறத்தில் வரிவரியாகவும் இருந்தால் அது கசக்கும்.

முட்டைக்கோஸின் இதழை உரித்துப் பார்த்து, உள்ளே கெட்டியாக இருந்தால்தான் வாங்க வேண்டும். ஒட்டிக்கொண்டிருக்கும் இலைகள் வெள்ளை நிறத்தில் இருக்கக் கூடாது. அளவில் சிறிதாகவும் கனமானதாகவும் இருக்க வேண்டும். காம்பினை முகர்ந்து பார்த்தால் துர்நாற்றம் வீசக் கூடாது.

முள்ளங்கியின் தோலை லேசாக நகங்களால் கீறினால் மென்மையாக அது விலக வேண்டும். காய் நீளமாகவும் தலைப்பகுதியின் அகலமானதாகவும் இருக்க வேண்டும். ஒட்டிக்கொண்டிருக்கும் காம்பு வாடிவிடாமல் பசுமையான நிறத்திலேயே இருக்க வேண்டும்.

பீன்ஸ் வாங்கும்போது அது நல்ல பச்சை நிறத்தில் இருப்பது முக்கியம். இரண்டாக உடைத்தால் மளுக் என சத்தம் வர வேண்டும். வெளிர் பச்சை நிறத்தில் இருந்தால் நாள்பட்டதாகும்.

வாழைக்காயின் காம்பினை ஒடிக்கப்பட்ட இடம் வெண்மை நிறத்தில் இருக்க வேண்டும்.

முருங்கைக்காய் கரும்பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். சற்று உருண்டையாக இருக்க வேண்டும். பட்டை வடிவத்தில் இருந்தால் முற்றியதாக இருக்கும். இரண்டு முனைகளையும் பிடித்து லேசாக முறுக்கினால் வளைந்து கொடுக்க வேண்டும். அதுதான் பிஞ்சு காய்.. சுவையானதாக இருக்கும்.

வெண்டைக்காயின் நுனியை ஒடித்தால் படக் என சத்தத்துடன் ஒடிய வேண்டும். மாறாக, வளைந்தாலோ இரண்டாகப் பிளந்தாலோ முற்றிய காயாகும். காம்புகள் சுருங்கி இருந்தாலும் அது முற்றிய காய்தான்.

பீர்க்கங்காய் பச்சைப்பசேல் என்றிருக்க வேண்டும். அடிப்பகுதி மட்டும் குண்டாக இல்லாமல் ஒரே தடிமனில் இருக்க வேண்டும். காம்புகள் வறட்சியடைந்து இருக்கக் கூடாது.

அவரையின் விதைகள் பெரிதாக இருக்கக் கூடாது. முனைகளில் இருக்கும் நாரை உரித்தால் எளிதாக அது பிரிய வேண்டும்.

தக்காளியை அழுத்திப் பார்த்தால் கல் போல கெட்டியாக இருக்க வேண்டும்.

பூசணிக்காயின் மீது நகத்தை வைத்து லேசாக அழுத்தினால் இலகுவாக நகம் இறங்க வேண்டும்.

கேரட்டின் அடிப்பகுதி தடிமனாகவும் நுனிப்பகுதி கூம்பு போலவும் இருந்தால் ருசியானதாக இருக்கும். அடிப்பகுதியில் இருக்கும் காம்பிலிருந்து பறித்த அடையாளம் எவ்வளவுக்கெவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நன்றாக இருக்கும் காய்.

பீட்ரூட் வாங்கும்போது அதன் அடிப்பகுதியை ஒட்டியிருக்கும் காம்புகள் சிகப்பாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் அது பழைய காயாகும்.

இப்படி மிகவும் கவனமாகப் பார்த்துத்தான் காய்கறிகளை வாங்குவேன். இல்லாவிட்டால் பழைய காய்கறிகளையோ கெட்டுப்போனவற்றையோ தலையில் கட்டிவிடுவார்கள். நஷ்டமாகிவிடும்’’ என்று சொல்லிமுடித்தான் அவன்.

அவனை பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

‘‘நல்லது.. இத்தனை விவரங்கள் தெரிந்துவைத்திருக்கிறாய்! வாங்கிய காய்கறிகளை விற்கும்போது என்னவெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்வாய்?’’ என்று மேலும் ஒரு கேள்வி கேட்டார் குரு.

‘‘பேராசைப்படாமல், வாங்கிய விலையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை மட்டும் லாபமாகக் கூட்டிக்கொள்வேன். இதைத்தவிர வேறென்ன செய்ய வேண்டும் என கூறுங்கள் குருவே’’ என்றான் அந்த இளைஞன்.

‘‘பொருளின் தரத்தை உறுதிசெய்வதற்காக அதை வாங்கும்போது எந்த அளவுக்கு கவனமாக இருந்தாயோ, அதே கவனத்தை விற்கும்போதும் கடைப்பிடி. உன்னிடம் வந்த பொருள் உன்னை விட்டுப் போகும்போதும் தரமானதாகவே இருக்கிறதா என்று உறுதி செய்துகொள். இது ஒன்றே போதும்.. உன் வியாபாரம் உயர்ந்துகொண்டே போகும்!’’ என்றார் குரு.

ஆகச்சிறந்த அந்த ஒற்றை மந்திரத்தைக் கற்றுக்கொண்டு, மகிழ்ச்சியோடு விடைபெற்றான் அந்த இளைஞன்.

மனதில் பதிந்துவிட்ட குருவின் வார்த்தைகளை மறுபடி ஒருமுறை தன் நினைவிலிருந்து கேட்டுக்கொண்டான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com