53. தூரப்போ!

பொதுவான மனநிலையுடன் விலகி நின்று பிரச்னைகளைக் கவனித்தால்தான், அவை நம்மைப் புடம் போடக் கிடைத்த அருமையான வாய்ப்புகள் என்ற உண்மை புரியும். அருகே இருக்கையில் பூதாகரமாகத் தெரியும்.
53. தூரப்போ!

உள்ளூரில் இருந்த ஆலயத்துக்குச் சென்றிருந்தனர் குருவும் சிஷ்யனும்.

இறைவனை வணங்கிய பின்னர், கோயில் குளக்கரைக்குச் சென்றனர். அதிகாலைச் சூரியன் தகதகவென ஜொலித்தது. அந்த ஒளியில் குளத்தில் இருந்த நீர் மினுமினுத்தது.

சற்றுத் தொலைவில்.. கோயில் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த ஒருவர் பதற்றமான முகத்துடன் காணப்பட்டார். காலை நேர அமைதியையோ, வணக்கம் வைக்கும் கதிரவனையோ, தங்கம்போல மினுமினுத்த குளத்து நீரையோ அவர் ரசித்ததாகத் தெரியவில்லை.

அந்த நபரை நோக்கி நடந்தார் குரு. சிஷ்யனும் பின்தொடர்ந்தான்.

குருவும் சிஷ்யனும் தன் அருகே வரவும், எழுந்து செல்ல முற்பட்டார் அந்த நபர்.

‘‘உன்னோடு பேசுவதற்காகத்தான் அருகே வந்திருக்கிறோம்..’’ என்றார் குரு. ஏற்கெனவே கவலையில் இருந்த அந்த நபர், மேலும் குழப்பமானார்.

‘‘சாமி.. என்னிடம் பேசுவதற்காகவா?’’ எனக் கேட்டான்.

‘‘ஆமாம்’’ என்றார் குரு. படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டார். அவனையும் அமரச் சொன்னார். சிஷ்யன் ஒரு படிக்கட்டு தள்ளி நின்றுகொண்டான்.

‘‘இந்த ரம்மியமான சூழலையும் மீறி உன் முகத்திலும் உடல் மொழியிலும் பதட்டம் தெரிகிறது. அதுதான் என்னை உன்னிடம் பேச அழைத்து வந்திருக்கிறது’’ என்றார் குரு.

தன்னிடம் யாராவது ஆறுதலாகப் பேசமாட்டார்களா என்று அந்த நொடிக்காக காத்திருந்தவர் போல, பொலபொலவென கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்தார் அந்த நபர்.

அவரை ஆசுவாசப்படுத்தி, அமைதியுறச் செய்தார் குரு. அதன் பின்னர் அவரது பதற்றத்துக்கும் கண்ணீருக்கும் காரணம் கேட்டார்.

‘‘ஒவ்வொரு நாளும் ஏன் விடிகிறது என்று பயமாக இருக்கிறது சாமி. ஏகப்பட்ட பிரச்னைகள் என் வாழ்க்கையில். எதையும் சமாளிக்க இயலவில்லை. வாழவும் வழியில்லை. சாகவும் தைரியமில்லை’’ என்று வழியும் கண்ணீருடன் கூறினார் அந்த நபர்.

அவர் முகத்தைப் பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருந்தது சிஷ்யனுக்கு.

‘‘உன் பிரச்னைகளையோ உன்னையோ குறைவாக மதிப்பிடுகிறேன் என என்னை நீ தவறாக எடுத்துக்கொள்ளாதே. யாருக்குத்தான் இந்த உலகில் பிரச்னைகளே இல்லை?’’ என்றார் குரு.

என்ன பதில் சொல்வதென தெரியாமல் அமைதியாக இருந்தார் அவர்.

‘‘அதோ அங்கே மிகவும் அழகாக உதித்துக்கொண்டிருக்கிறதே சூரியன்.. உண்மையில் அதன் குணம் என்ன என்று தெரியுமா?’’.

பதில் சொல்லும் நிலையில் அந்த நபர் இல்லை. சிஷ்யனின் பக்கம் திரும்பினார் குரு.

‘‘சூரியன் ஒரு நெருப்புக் கோளம். கோள வடிவில் இருக்கும் விண்மீன். பூமியில் இருந்து பதினான்கு கோடியே தொண்ணூற்றி ஆறு லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது’’ என்று மடமடவெனச் சொன்னான் சிஷ்யன்.

சிஷ்யனையும் சூரியனையும் மாறிமாறிப் பார்த்தார் அந்த நபர்.

‘‘சூரியனுக்கு அருகே நாம் சென்றால் அதன் வெப்பத்தைத் தாங்கமுடியாது. பஸ்பமாகிவிடுவோம் நொடி நேரத்தில்’’ என்றார் குரு. தொடர்ந்தார்.

‘‘ஆனால், இவ்வளவு தொலைவில் இருந்து அதைப் பார்ப்பதால் நமக்கு எத்தனை பலன்கள் கிடைக்கின்றன தெரியுமா?’’ என்று கேட்டுவிட்டு, சிஷ்யன் முகத்தைப் பார்த்தார் குரு.

அந்தக் கேள்விக்கான பதிலை தான் சொல்ல வேண்டும் என குரு எதிர்பார்ப்பதைப் புரிந்துகொண்டான் சிஷ்யன். சொல்ல ஆரம்பித்தான்.

‘‘முதல் பலன்.. வெளிச்சம். இந்தப் பூமியின் கால நிலையையும் வானிலையையும் சூரியனே இயக்குகிறது. உயிர்வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் சூரிய ஒளி அவசியம். தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளியே ஆதாரம். இரவையும் பகலையும் மாற்றி மாற்றி அளித்து, மனிதனை ஒவ்வொரு இரவிலும் தூங்கச்செய்து புதுப்பிக்கவும் செய்கிறது பகலவனின் ஒளி’’ என்று செய்தி வாசித்தான் சிஷ்யன்.

இப்போது அந்த பதற்ற முக மனிதரை கரிசனத்துடன் பார்த்தார் குரு.. ‘‘அருகே நெருங்கினால் பொசுக்கிவிடும் கதிரவனை விட்டு விலகி இருப்பதால் எத்தனை பலன்கள் பார்த்தாயா! நமக்கு ஏற்படும் பிரச்னைகளும் இப்படித்தான்! இது நமக்கான பிரச்னை என்று ஒட்டி நின்று கவனித்தால், அது நம்மை எரித்துவிடும். பொதுவான மனநிலையுடன் விலகி நின்று பிரச்னைகளைக் கவனித்தால்தான், அவை நம்மைப் புடம் போடக் கிடைத்த அருமையான வாய்ப்புகள் என்ற உண்மை புரியும். அருகே இருக்கையில் பூதாகரமாகத் தெரியும். விலகி நின்றால் சின்னதாகிவிடும். சரிசெய்துகொள்ளும் வழிமுறைகளும் தானாகவே புலப்பட ஆரம்பிக்கும். எளிதில் எந்தப் பிரச்னையையும் சமாளித்துக் கடந்துவிடும் தைரியம் கிடைக்கும். அதன் பின்னர் நிறுத்தி நிதானமாக யோசித்தால்.. பிரச்னைகளால் நாம் அடைந்த பலன்களை உணரமுடியும். சமாளித்ததால் கிடைத்த மனோ திடமும், மீண்டதால் கூர் தீட்டிக்கொண்ட புத்தி சாதுர்யமும் புலப்படும்’’ என்றார் குரு.

சுள் என்று புன்னகைத்தான் சூரியன். தன்னை அறியாமல் சூரியனையும், தண்ணீரில் பிரதிபலித்த அதன் தகதகப்பையும் ரசிக்க ஆரம்பித்தார் அந்த நபர். அந்தக் கணம் மகிழ்வானதாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com