Enable Javscript for better performance
ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி!- Dinamani

சுடச்சுட

  
  jews_-_sivasami

   

  ‘சிவசாமி, இன்னிக்கு மொதக் காரியமா தலையை வெட்டிக்கணும்டா?’

  ‘அப்படியே செஞ்சுடலாம் அண்ணா’.

  ‘என்னடா இது? தலையை வெட்டிக்கணும்னா திகைச்சுப்போக மாட்டியா?’

  ‘மாட்டேன், அண்ணா. கிராப் வெட்டிக்கறதுக்கு அப்படித்தான் சொல்றது. ‘எனக்குப் பசிக்கிறது’ன்னா, எனக்குள்ளே இருக்கிற வயிறு பசிக்கிறதுன்னுதானே அர்த்தம். உலகம் சிரிக்கும்னு சொல்றோம், அப்படின்னா..’

  ‘சிவசாமி! போறும்டா. சும்மா வம்புக்கு இழுத்தேன். அது சரி, எந்த சலூனுக்குப் போகலாம்டா?’

  ‘வழக்கமாப் போற சுந்தரி அழகு நிலையத்துக்கே போங்க அண்ணா. அங்கே சூப்பரா வெட்டுவாங்க. இளைஞிகள் ‘தொண-தொண’ன்னு சதாப்தி ரயில் வேகத்திலே பேசற எஃப்.எம். ரேடியோ ஸ்டேஷனெல்லாம் வெச்சு இம்சை பண்ணமாட்டாங்க. தந்தி, தினகரன், தினமணி, தினமலர், வாராந்திர ராணி எல்லாம் இருக்கும்’.

  ‘என்னது? சுந்தரி அழகு நிலையமா? வேண்டாம்டா வேணாம். போக பயமா இருக்கு’.

  ‘பயமா? என்ன பயம்? கத்திக்கு பதில் வீச்சரிவாள், பட்டாக் கத்தி, கோடாலி, அப்புறம் பாத்தி வெட்டற மண்வெட்டி எல்லாம் வெச்சிருக்காங்களா? இருக்காதே?’

  ‘அடேய். அதெல்லாம்விடக் கொடுமை, அங்கே தமிழிலே முடி வெட்டாம இந்தியிலே வெட்டறாங்கடா’.

  ‘இந்தியிலயா? புரியலியே? அதெப்படி இந்தியிலே வெட்ட முடியும்’.

  ‘அடப் போடா. அசாம், பீகார், சட்டீஸ்கர், மிஸோரம், ஹிமாசல் பிரதேஸ், உத்தரகண்ட், ஜார்கண்ட்லேந்து வந்து, ஒரு மாதிரி எண்ணை வாசனை வீசற ஆட்கள் வெட்ட வராங்கடா?’

  ‘அண்ணா இந்திக்காரங்க நம்மூர்லே எங்கேலாம் மூக்கை நுழைக்கலே? துணிக் கடை, பாத்திரக் கடை, சாப்பாட்டுக் கடை, நகைக் கடைன்னு எல்லா இடத்திலேயும் நெடுக நுழைஞ்சாச்சு. கோவிலுக்குள்ளதான் பண்டாக்களா நுழையலே, ‘கோத்ரம் போலியேஜி’ன்னு கேட்டு அர்ச்சன செய்யலே’.

  ‘கோவிலை விடுடா. நான் சொல்றது சலூன். போன விசை நான் போனபோது, ஒரு கடுகு வாசனை ஆள் என்னை உக்காரவெச்சு கத்திரிக்கோல், சீப்போட கிட்டே வந்தான். எனக்கு கொஞ்சம் உதறல் எடுத்தது. இந்த ஆள்கிட்டே எப்படி பேச்சு வார்த்தை நடத்தறதுன்னு திகைப்பு. தமிழ் மக்களை இந்தி பேசக் கூடாதுன்னு துரத்தி துரத்தி அடிச்ச புண்ணியவான்களெல்லாம், மூணு தலைமுறையா இந்தி பேசி திரவியம் சேர்த்துக் கொழிக்கறாங்க. என்ன செய்யறது’.

  ‘பராபர்’ என்றான் சிவசாமி.

  ‘அடேய் பார்பர்டா. பராபர் இல்லே’.

  ‘அண்ணா, பராபர்னுதான் சொன்னேன். பார்பர் இல்லே. பராபர்னா, இந்தியிலே ரொம்பச் சரின்னு அர்த்தம்னு நினைக்கிறேன்’.

  ‘அடே. அதை விடு. சலூன் சீனுக்கு வா! முடி வெட்ட நின்னவனைப் பார்த்து, ‘துமாரா நாம் க்யாஹை’ன்னு பச்சோங்கி கிதாப் படிப்பறிவுடன் கேட்டேன். அவன் யோசிச்சு, ‘பஹதூர், சாப்’ என்றான். பஹதூர்னா கூர்க்கா சமாசாரமாச்சேன்னு எண்ணி, எப்படி வெட்டணும்கிறதைச் சொன்னேன். சிரிக்காதே. ‘ஊபர் மே, தோடா-தோடா, பீச்சே மே, பஹூத் தோடா-தோடா, சைடு மே, கம்தி தோடா-தோடா’ன்னு சொன்னேன்.

  பஹதூர் என் பிடரியின் மேல சூடான பெருமூச்சை விட்டான். என்ன சோகமோ தெரியல? ஒரு வேளை என்னோட இலக்கியத் தர உயர்வான இந்துஸ்தானி பாண்டித்யம் அவனுடைய மூளைக்குப் போய்ச் சேரலைன்னு நினைச்சு, ‘ஊபர் மே, தோடா தோடா..’ன்னு மறுபடியும் ஆரம்பிச்சேன்.

  பஹதூர், என் இடது காதுக்கு அருகில் வந்து, ‘மீடியமா வெட்டச் சொல்றீங்க, இல்லியா? சுத்தமா செஞ்சுடறேன் சார்’ என்றான்.

  சிவசாமி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, ‘புரியறது, அண்ணா. மின்ட்டிலே இருக்கிற சேட்டுகள், நிம்பிள்கி நம்பிள்கி மார்வாடி மழலைகளை எல்லாம் எப்பவோ விட்டாச்சு. ‘துப்பார்க்குத் துப்பாய’ குறளையும், ‘முத்தைத்தரு தத்தித் திருநகை.. திருப்புகழையும் அட்சரம் பிசகாம சொல்லுவாங்க. நேரமாச்சு. சலூனுக்குக் கிளம்புங்கோ’.

  *

  முடி வெட்டிக்கொண்டு வந்த பஞ்சாமி, அதிசயமாக துள்ளலுடன் நடந்து வந்தார்.

  ‘அடேய், சிவசாமி! உனக்கு சர்தார் வல்லபாய் படேல் தெரியுமா?’

  ‘தெரியும் அண்ணா. இரும்பு மனிதர். சுதந்திரப் போராட்ட வீரர். இந்தியாவின் பிஸ்மார்க்னு.. உதவிப் பிரதம மந்திரியா நேருவுக்கு அடுத்த லெவலில் இருந்தவர். நம்ம மோடியோட ஹீரோ’.

  ‘சிவசாமி, பத்துக்கு பத்து மார்க் தருவேன்டா. அவருக்கு குஜராத்திலே உலகத்திலேயே உயரமான சிலையை மோடி திறந்தாரே, அதிலே ஒரு குளறுபடி இருந்தது தெரியுமா?’

  ‘என்ன அண்ணா? பாரதியார் ‘எங்கும் சுதந்திரம், என்பதே பேச்சு’ன்னு பாடின மாதிரி, எங்கேயும் அந்த மொழிபெயர்ப்பு சொதப்பலைப் பத்தி தானே பேச்சு’.

  ‘ஆமாண்டா. அதென்னடா? STATUE OF LIBERTY-க்கு தமிழிலே ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’னு?’ன்னு செதுக்கி இருந்தாங்க. யாரோட வேலை? முன்னே ஜுனூன்னு ஒரு இந்தி சீரியல் தமிழிலே வந்ததே. அதை டப் பண்ணினவங்க எழுதி இருப்பாங்களோ?’

  ‘இல்லேண்ணா. அவங்ககூட இவ்வளவு கண்றாவியா செஞ்சிருக்க மாட்டாங்க’.

  ‘சிவசாமி, ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ன்னு எப்படி வந்திருக்கும்னு ஆராய்ச்சி பண்ணி, சரியான தியரியைக் கொடுத்தா உனக்கு முனைவர் சிவசாமின்னு பட்டம் தருவேன்டா. அதை விடு. அந்தக் காலத்திலே நான் ஸ்கூல் படிக்கும்போது, எங்களோட பொழுதுபோக்கு என்ன தெரியுமா?’

  ‘தெரியாது அண்ணா?’

  ‘தமிழ் வார்த்தைகளை இங்கிலீஷ்லே டிரான்ஸ்லேட் பண்ணி எழுதறது. சரி, இப்போ சொல்லு பாக்கலாம்? GREEN FATHER FIRST WHO-ன்னா யாரு தெரியுமா?’

  ‘அது அரதப் பழசு அண்ணா. ‘பச்சையப்ப முதலியார்’.

  ‘ஆமா! உனக்குத் தெரிஞ்சிருக்கும். சரி, ‘RAMAN, HOW MANY RAMAN A GIRL?’

  ‘அது சினிமா பாட்டு முதலடி அண்ணா, ‘ராமன், எத்தனை ராமனடி!’

  ‘கரெக்ட். BIG GOD, SMALL GOD ARE PURE VEGETARIAN SON CHESTS?’

  ‘பெரியசாமியும் சின்னசாமியும் தூய சைவப் பிள்ளைமார்கள்’.

  ‘பிரமாதம்டா. MEGA DOCTOR TUNE HIGHER?’

  ‘ம்? மகா வைத்தியநாத அய்யர் தானே?’

  ‘ஆமாம்டா, ஆமாம். SUGAR FUSE DOUBT MOTOR?’

  ‘அம்மாடி! சக்கரவர்த்தி ஐயங்கார். சரியா அண்ணா?’

  ‘சிவசாமி, சூப்பர். போறும்டா. நிறுத்திக்கலாம்டா’.

  ‘அப்படியே செஞ்சுடலாம், அண்ணா’.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai