14. நிஜ வயதுக்கு வராதவர்கள்!

வசந்தி மாமியார். சாந்தி மாட்டுப்பெண். இப்போ இருக்கிற சீரியல் ரைட்டர்ஸ் எல்லாம், அவங்க விட்டுட்டுப்போன சம்பிரதாயங்களை எல்லாம்தான் ஈ அடிச்சான் காப்பியா அடிச்சு எழுதறாங்க. 
14. நிஜ வயதுக்கு வராதவர்கள்!

சிவசாமியை எளிதில் அதிர்ச்சி அடையவைக்க முடியாது. நிறைய ஷாக் அப்ஸார்பர்களுடன் பிறந்திருந்தான். ஆனால், அன்று அவனையே ஒரு கேள்வியால் திடுக்கிடவைத்துச் சாதித்தார் பஞ்சாமி. அப்படி என்ன கேட்டார்?

‘அடேய், சிவசாமி, லேடீஸ்கிட்டே உனக்குப் பிடிச்சது எது? பிடிக்காதது எது?’

பஞ்சாமி, பெண்களை பெண்கள் என்றோ, பொம்மனாட்டிகள் என்றோ, பெண்டிர் என்றோ குறிப்பிடமாட்டார். அது அவர்களுக்குத் தக்க மரியாதை செய்யத் தவறியதாகும் என்ற ஒரு கோட்பாடை வைத்துக்கொண்டிருந்தார். லேடிஸ் என்ற சொல் ஆங்கிலம் என்றாலும், அதில் கௌரவம் அதிகமாக இருக்கிறது என்று கருதினார்.

‘அண்ணா, என்ன கேள்வி இது? அனுதினமும் கணபதியையும், ஆஞ்சநேயரையும் நெஞ்சிலே பூட்டிவைத்து பூஜித்து இருக்கேன். எனக்கு லேடீஸ்னாலே பிடிக்காது. அப்படி இருக்கச்சே, லேடிஸ்கிட்டே பிடிச்சது எது? பிடிக்காதது எதுன்னு கேட்டா எப்படி? ரசமே பிடிக்காதவன் கிட்டே, உனக்கு ரசத்திலே பிடிச்ச ரசம் எது? பிடிக்காத ரசம் எதுன்னு கேக்கறது எப்படி நியாயம்?’

‘சிவசாமி, ரசமே பிடிக்காத அபூர்வ ஆசாமி நீயாத்தான் இருக்கும். ரசம் சாப்பிட்டால் உடம்போட கட்டு தளர்ந்துவிடும்னு என்னோட சில்லுண்டி சித்தப்பா சொல்வார். ஆள் துவாரபாலகன் மாதிரி எடுப்பா இருப்பார். ரசத்திலே எவ்வளவு ரசம் இருக்குடா?’

‘பட்டியலே போடலாம் அண்ணா. தக்காளி ரசம், மிளகு ரசம், ஜீரா ரசம், கண்டந்திப்பிலி ரசம், பூண்டு ரசம், ஆனியன் ரசம், கொட்டு ரசம்னு வேணது இருக்கு’.

‘பிபரே ராம ரசம்னும் ஒண்ணு உண்டில்லே’.

‘அண்ணா, அதெல்லாம் பெரிய விஷயம். சதேசிவ பிரம்மேந்திராளோட அருள் வாக்கு. அருள்நிறை சிறுவன் ராகுல் வெல்லால் பாடிக் கேட்கணும். காதும் மனசும் குளிரும்’.

‘தப்பா நம்ம பாமர லிஸ்ட்டிலே அதை இழுத்துட்டேன்டா. கன்னத்திலே போட்டுக்கறேன். லேடீஸ்லே ஆரம்பிச்சு ரசத்துக்குத் தாவிட்டோம். ஏண்டா உனக்கு அவங்களைக் கண்டா பிடிக்காது’.

‘அண்ணா, பிடிக்காதுன்னா பிடிக்காதுன்னு அர்த்தம் இல்லை. அவர்களுக்குத் தக்க மரியாதை குடுப்பேன். அவங்களுக்குள்ளே சண்டை வந்தா..’

‘நில்லுடா சிவசாமி. நீ உன் பால காண்டத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி என்னோட கதைகளைச் சொல்லிடறேன். எல்லாத்திலேயும் சென்ட்ரல் கேரக்டர் லேடீஸ்தான். சொல்றேன் கேக்கறயா?’

‘காத்திண்டு இருக்கேன் அண்ணா’.

‘இந்த நூடுல்ஸ் டிபனை எங்கேந்து தின்ன ஆரம்பிக்கிறதுங்கிற மாதிரி சிக்கலா தோணறது. ஆனாலும் சொல்லிடறேன். ஆரம்பிக்கறது பத்தி பெரிவங்க யாரான சொல்லி இருக்காங்களா?’

‘வேணது அண்ணா. எதையும் தைரியமா ஆரம்பிச்சுடணும். அதிலேதான் சக்தி இருக்கு, தந்திரம் இருக்குன்னு ஜெர்மன் அறிஞர் GOETHE சொல்லி இருக்கார்’.

‘அப்படியா? மகாராஜனா இருக்கட்டும். சரி என்னோட விருத்தாந்தத்துக்கு வரேன். சின்ன வயசிலே பக்கத்து வீட்டு ரெட்டை வாலு ஆண்டாளு, அவங்க வீட்டிலே யாருக்கான அடி பட்டுட்டா, பஞ்சு வாடா வந்து துடைச்சி விடுடான்னு கூப்பிடுவா. ‘என்னை ஏண்டி கூப்பிடறே?’ன்னு கேட்டா, ‘நீ பஞ்சுதானே? அதனாலேதான்! ரத்தத்தை பஞ்சுதானே துடைக்கணும்’னு கேலி பண்ணுவா. ஒருவிசை, காந்தி ஜெயந்தி அன்னிக்கு அவ சுதந்திரத் தியாகி தாத்தா ராட்டையை எடுத்து வெச்சிண்டு எதையோ தேடிண்டு இருக்கிறச்சே நான் போனேன். ‘தாத்தா இதோ பஞ்சு! பஞ்சு கிடைச்சாச்சு நீங்க நூல் நூக்க ஆரம்பிக்கலாம்’னு கத்திட்டு ஓடிட்டா.’

‘நெஜமாவா அண்ணா? ரொம்ப சூட்டிக்கையான பொண்ணுபோல இருக்கே?’

‘ஆனா, என்னுடைய எக்ஸ்பீரியன்ஸெல்லாம் வேற மாதிரி அண்ணா. நாங்க இருந்த தெருவிலே வசந்தி சாந்தின்னு ரெண்டு பெண்கள். ஸாரி, உங்க மொழிலே சொல்லணும்னா ரெண்டு லேடீஸ் இருந்தாங்க. வசந்தி மாமியார். சாந்தி மாட்டுப்பெண். இப்போ இருக்கிற சீரியல் ரைட்டர்ஸ் எல்லாம், அவங்க விட்டுட்டுப்போன சம்பிரதாயங்களை எல்லாம்தான் யாரோ குறிப்பு எழுதி வெச்சுட்டுப் போன மாதிரி, ஈ அடிச்சான் காப்பியா அடிச்சு எழுதறாங்க. அவங்க ஸ்டைல் சண்டை எப்படின்னா, ஒருத்தர் மேலே ஒருத்தர் பித்தளை, எவர்சில்வர் பாத்திரங்களை வீசி எறிஞ்சுப்பாங்க. அதிலே விசேஷம் என்னன்னா, சண்டை முடிஞ்சி சமாதானம் ஆன உடனே, யார் பாத்திரம் யாருதுன்னு அடையாளம் கண்டுபிடிக்கிறதிலே பிற்சேர்க்கையா சண்டை வரும். என்னை ஒருதரம் சமாதானம் பண்ணக் கூப்பிட்டபோது, சுந்தரபாண்டி நாடார் (Firm) பாத்திரக் கடையிலிருந்து உளியோட வரவெச்சிருந்த ஒருத்தர், ஆயன சிற்பியா பாத்திரங்களிலே வசந்தி சாந்தின்னு ‘பச்சை’ குத்திட்டுப் போனார். அப்புறம் சண்டைகள் தொடர்ந்தாலும், அடையாளம் காண்பிப்பதில் சிக்கல் இல்லாம முடிஞ்சது’.

‘சிவசாமி! பேசிண்டிருந்ததிலே நேரம் போனது தெரியலையே. நாம இன்னிக்கு நம்ம வேங்கைவாசல் பஞ்சு பிளாட் மாடிலே நடக்கிற மீட்டிங்குக்குப் போக வேணாமா?’

‘ஆமாண்ணா. அங்கே மொத்தம் இருக்கிற 36 பிளாட்டும் வித்தாச்சு. ரெண்டு பேர் அடுத்த வாரம் கிரகப்பிரவேசம் பண்ணப்போறாங்க. அப்புறம் அவங்க கையிலே ஒப்படைச்சுடலாம். அதுவரை, அசோசியேஷன் இல்லாததனால, புரமோட்டர் கம் பில்டரா நாமதான் அவங்க குறைகளைக் கேக்கணும்னு, A-4 சண்டைக்கோழி சுந்தராம்பா நம்மளை வரச்சொல்லி இருக்காங்க’.

‘ஏதோ ஸ்நாக் கூட அரேஞ்சு பண்ணி இருக்காங்கன்னு நீ சொன்னே இல்லே’.

‘ஆமாண்ணா. மினி பாதுஷா, தில்குஷ் மிக்சர், அப்புறம் டீயாம். அதை விடுங்கண்ணா. ஆனா ஒரே தகராறா இருக்கும். அங்கே ஒரே அல்லி ராஜ்ஜியம். A-4 கூட B-8 கனகவில்லியும், சாரிண்ணா, கனகவல்லியும் சேர்ந்திண்டு நம்மை உலுக்கப்போறாங்க’.

‘சிவசாமி, என்னடா ஏதோ கர-தூஷனாதிகள்னு ராமாயணத்திலே ராமச்சந்திரமூர்த்தியோடு சண்டைக்கு வந்தா மாதிரி, சுந்தராம்பா-கனகவல்லி அட்டாக் பண்ணப்போறாங்களா?’

‘அதெல்லாம் ஜமாய்ச்சுடலாம், அண்ணா. ரெடியாயிடுங்கோ. வண்டியை எடுக்கறேன்’.

‘பஞ்சு பிளாட்’ மொட்டை மாடியிலே ஷாமியானா, நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. குழுமியிருந்தோரில் சுமார் எண்பது விழுக்காடு பெண்கள். நாலஞ்சு சூப்பர் சீனியர் பெருசுகள், ஹை-டீக்காக காத்திருந்தார்கள்.

பிரமோட்டர் கம் பில்டர் என்கிற தோரணையுடன், பஞ்சாமி நட்ட நடுநாயக நாற்காலியில் உட்கார, சிவசாமி அவர் பின்னால் நின்றுகொண்டான். முதல் பந்தை சுந்தராம்பா வீச எழுந்திருப்பதற்கு முன்னால், டி பிளாக் சுபத்ரா சுந்தரவதனம் எழுந்து, ‘மொதல்லே, என்னைப் பேசவிடுங்கள்’ என்று கத்த, கனகவல்லி அதைத் தடுக்க, ஷாம்பு போட்ட தலையா அமளி விரித்து ஆடத் தொடங்கியது. ‘சைலன்ஸ், சைலன்ஸ்’ என்று பஞ்சாமி கத்தியும் சைலன்ஸ் கிட்டவில்லை. நியூசென்ஸ்தான் கிட்டியது. கல்லு மாதிரி உட்கார்ந்திருந்த பஞ்சாமியை லட்சியம் பண்ணாமல், பெண்கள் (லேடீஸ்) ஆளுக்கொருவராக குருக்ஷேத்திர யுத்த ரேஞ்சில் வார்த்தை அஸ்திரங்களை வீசித் தாக்கத் தொடங்கினர்.

‘சிவசாமி! என்னடா இது? ஏதான செய்யடா. நீதான் சண்டைகளை நிறுத்தறதிலே எக்ஸ்பர்ட் ஆச்சே’ என்றார்.

ஆணை கிடைத்தவுடன், ‘பழைய சரிகைப் புடைவைகள், பட்டுப் பாவாடைகள், பட்டு வேட்டிகள், அங்கவஸ்திரங்கள் எல்லாத்தையும் சகாய விலைக்கு வாங்கி ஸ்பாட்டிலேயே பணத்தைக் கொடுக்கிறோம். வாங்கிக்கோங்க!’ என்று தெருவில் கூவி அறிவிக்கும் வியாபாரிகள் உபயோகிக்கும் மெகா போனை பையிலிருந்து எடுத்து, ‘நிறுத்துங்க’ என்று சிம்மக் குரலில் கத்தினான். சத்தம் நின்றது. தொடர்ந்து ‘எல்லாரும் தயவு செய்து உக்காருங்க’ என்று அதட்டலுடன் கேட்டுக்கொண்டான்.

‘இப்படி நீங்க ஆளாளுக்கு கோஷம் போட்டுக் கத்தினா, பஞ்சாமி சார் கிளம்பிப் போயிடுவார். ஆகையினாலே, உங்கள்ல யார் வயசிலே ரொம்பவும் பெரியவங்களோ, மறுபடியும் சொல்றேன், யார் வயசிலே பெரியவங்களோ, அவங்க முதலிலே எழுந்து நின்னு பேசுங்க’.

தெருமுனைப் பொதுக்கூட்டத்திலே பாதியிலே கரென்ட் போய் மைக் ஆஃப் ஆன மாதிரி, சத்தம் பொசுக்கென்று நின்று அமைதி நிலவியது. எல்லாப் பெண்களும் (அதாவது லேடீஸ்) கப்சிப்!

‘வயசிலே பெரியவளா? அது யாரா இருக்கும்?’ என்று ஒருவரை ஒருவர் பக்கவாட்டுப் பார்வையிலே பார்த்து எடை போட்டு முடிவுக்கு வர முடியாமலும், வர விரும்பாமலும் திகைத்து இருந்தபோது, சிவசாமி, ஏற்கெனவே தயாரித்து வந்த அவர்களின் கோரிக்கைகளின் பட்டியலுடன், அவற்றுக்கான தீர்வுகளையும், செய்து கொடுக்கப்படும் தேதிகளையும், உபரியாக இரண்டொரு சலுகைகளையும் தெள்ளத் தெளிய வாசித்து, அந்த அறிக்கையின் நகலை ஆளுக்கொன்றாக விநியோகிக்குமாறு அங்கிருந்த ரெட்டை ஜடை சிறுமியைப் பணித்து, கூட்டம் இனிது முடிந்தது என்று அறிவித்தான். பஞ்சாமி எழுந்துகொண்டார்.

‘அட! பத்து நிமிஷத்துக்குள்ளே மீட்டிங் ஓவரா?’ என்று ஒரு சீனியர் சிடிஸன் வியந்து, மொட்டைமாடி கைச்சுவர் அருகிலிருந்த மினி பாதுஷா, தில்குஷ் மிக்சர், டீ மேஜைகளுக்கு அங்கே வட்டமிட்ட காக்காயை விரட்ட விரைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com