Enable Javscript for better performance
20. சுருட்டிய காலண்டர்- Dinamani

சுடச்சுட

  

  20. சுருட்டிய காலண்டர்

  By ஜே.எஸ். ராகவன்.  |   Published on : 03rd January 2019 11:18 AM  |   அ+அ அ-   |    |  

  jews_-_sivasami

   

  ‘சுந்தரபாண்டி ஹார்ட்வேர்ஸ், ஆரோக்யா மெடிகல்ஸ், ஆற்காடு பில்டர்ஸ், ஆதித்யா அடுமனை, பரசுஸ் காபி, கனகா உள்ளாடை உலகம், கண்மணி டெய்லர்ஸ் காலண்டரெல்லாம் வந்தாச்சு. வாழைத்தண்டா சுருட்டி, ரப்பர் பேன்டு போட்டு கெஸ்ட் ரூம் பெஞ்சு மேலே பத்திரமா வெச்சிருக்கேன், அண்ணா.’

  ‘அதை ஏண்டா அப்படி ஒளிச்சு, மறைச்சு வெச்சிருக்கே? ‘லோன் ரேஞ்சர்’ மல்லையாவோட காலண்டர்னா சரி, வயசுப் பொண்கள் பன்னெண்டு மாசமும் காத்தாட இருக்கிற மாதிரி போட்டிருப்பார். பேங்க்லேர்ந்து வாங்கின 3000 கோடி பணத்திலேருந்து அந்தப் பொண்களுக்கு டிரெஸ் வாங்க சல்லிக் காசுகூட குடுக்கமாட்டார் போலிருக்கு. சிவசாமி, நான் வருஷா வருஷம் சொல்றதைத்தான் இந்த வருஷமும் சொல்லப்போறேன். வீட்டிலே காலண்டரை மாட்ட ஒரு ஆணிகூட அடிக்கக் கூடாது, ஆமாம்.’

  ‘அப்படியே செஞ்சுடறது, அண்ணா.’

  ‘செய்யக்கூடாதுங்கறேன். அப்படியே செஞ்சுடறதுங்கறே?’

  ‘இல்லே அண்ணா. நீங்க மாட்டக் கூடாதுன்னு சொன்னதை அப்படியே செஞ்சுடறதுன்னு சொன்னேன்.’

  ‘குழப்பாதேடா. கிளியரா சொல்றேன். ஒரு ஆணிகூட அடிக்கக் கூடாது. நம்ம பெயின்ட்டர் நாராயணசாமி பட்டி பாத்து இஞ்ச் இஞ்ச்சா மெனக்கெட்டு வெள்ளை அடிச்சிருக்கார். அதை தொடறதுக்கே பயமா இருக்கு, அழுக்காயுடுமோன்னு. அப்பா! சில வீடுகளிலே இருக்கிற ஆணிகளைப் புடுங்கினா, வர கும்ப மேளாலே நூத்துக்கணக்கான சாதுக்கள் ஆணிப் படுக்கையிலே படுக்கத் தேவையான ஆணிகள் கிடைக்கும்டா. வருஷா வருஷம் காலண்டரைப் பத்தி இங்கிலீஷ்லே ஒரு சிலேடை சொல்லுவியே. அதைச் சொல்லிடு. இல்லாட்டி எனக்கு ராத்திரி கொட்டாவிகூட வராது’.

  ‘அதுவா அண்ணா. ‘A calendar’s days are numbered!’

  ‘அதாவது, அல்பாயுசுன்னு அர்த்தந்தானே. சிவசாமி, யார் வந்து கேட்டாலும் காலண்டர்களை அள்ளி எடுத்து வீசு. எனக்குத் தெரிஞ்ச ஒரு வள்ளல் பிரான், இப்போதான் 2017-ம் வருஷத்தோட காலண்டர்களை ரிலீஸ் பண்றார். அதையும், ஏதோ குடியரசுத் தலைவர் கேல் ரத்னா பட்டம் வழங்கற மாதிரி கெத்தோட. சிவசாமி, எனக்கு காலண்டர்னா ஏன் பிடிக்காதுன்னு தெரியுமா?’

  ’தெரியாது அண்ணா? சொன்னா தெரிஞ்சிக்கிறேன்’.

  ‘ஆமா, சொன்னாத்தானே தெரியும்? எங்கப்பா ஒரு காலண்டர் பைத்தியமா இருந்தார். அந்தக் காலத்திலே காலண்டர்கள் அவ்வளவா கிடைக்காது. கைலாசத்திலே சிவபெருமான், பக்கத்திலே பார்வதி, மூத்தவர் கணபதி, இளையவர் சுப்ரமண்யர், அப்புறம் நந்திகேஸ்வரர் எல்லாம், குடும்பத்தோட குரூப்பா ஃபோட்டோஷூட்டுக்கு உக்காந்தா மாதிரி, ஒரு பள பள, வழ வழ பேப்பரிலே பெரிய காலண்டர் கண்ணைப் பறிக்கிறா மாதிரி இருக்கும். ரவி வர்மா வரைஞ்சதுன்னு நினைக்கிறேன். லால்சந்த் அண்டு கோவோ ஏதோ ஒரு பாம்பே கம்பெனியோடதுன்னு ஞமஞமன்னு ஞாபகம் இருக்கு. தப்பா இருந்தாலும் இருக்கலாம். அதை எங்கப்பா யார் வீட்டிலேயோ பாத்துட்டார். அது மாதிரி காலண்டர் எப்படியாவது வேணும்னு, பகீரதன் மாதிரி ஒத்தைக் காலிலே நின்னு அடம் பிடிச்சார். என்னோட சித்தப்பா ஒரு விவகாரமான ஆள். அடிக்கடி ரேஸுக்குப் போவார். வீட்டிலே, உப்புமாகூட ரவா, அரிசி உப்புமாவா இருக்காது. கொள்ளு உப்புமாதான். அடிக்கடி அப்பாகிட்டே வந்து, ‘மளிகை வாங்கணும் அண்ணா?’ன்னு புருடா விட்டுட்டு, அஞ்சோ பத்தோ, அதோட ஒரு அறையோ வாங்கிண்டு குதிரை மேலே கட்டி, தோத்துப்போய் திரும்பி அடுத்த அறைக்குத் தயாரா வருவார். காலண்டர் விஷயத்தைக் கேள்விப்பட்டவர், ‘அண்ணா, காலண்டர்தானே? பெஞ்ச் கிளார்க் பரமசிவன் வீட்டிலே இருக்கு. கவலையை விடுங்கோ. ரெண்டு நாளிலே நம்மாத்துக்கு வந்திடும் பாருங்கோ’ என்று சவால் விட்டு, அடுத்த ஐந்து ரூபாயை வாங்கிண்டு போனார். அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?’

  ‘நீங்க சொன்னாத்தானே தெரியும் அண்ணா.’

  ‘ஆமாம் இல்லே. அடுத்த ரெண்டாவது நாள் பரமசிவன் அண்டு ஃபேமிலி படம் வந்துடுத்து. ஆனா, காலண்டரா இல்லே. ஃப்ரேம் போட்ட படமா. எங்கப்பாக்கு தலைகால் புரியலே. ‘நீ எத்தன்டான்னு சித்தப்பாக்கு அப்பா சர்ட்டிஃபிகேட்’ குடுக்க, காலண்டரைத் தேடி அலைஞ்ச வண்டிச் சத்தம், காபி, டிபன், வெத்தலை பாக்கு சிலவு, அப்புறம் ஃப்ரேம் போட்டதுக்குப் பணம் அப்படி இப்படின்னு ஒரு பெரிய லிஸ்ட் போட்டு, அப்பாகிட்டேருந்து சித்தப்பா லம்ப்பா நூறு ரூபாய் வாங்கிண்டு போயிட்டார். அதுக்கு அப்புறம்தான் டுவிஸ்ட் இருக்கு. என்னன்னு தெரியுமா உனக்கு?’

  ‘எனக்கெப்படித் தெரியும் அண்ணா?’

  ‘என்னோட சித்தப்பா, பெஞ்சு கிளார்க் பரமசிவன் வீட்டிலேருந்து பரமசிவன் படத்தை எப்படியோ ஆட்டை போட்டு, பின்னாடி விவகாரம் வராம இருக்க ஃப்ரேம் போட்டுக் கொண்டுவந்து கொடுத்து இருக்கார். பெஞ்ச் கிளார்க் பரமசிவன் இந்த விஷயத்தை மோப்பம் பிடிச்சு எங்க வீட்டுக்கு வந்து குதிக்க, எங்கப்பா குன்னிப் போனார். சித்தப்பாவோ, அது வேற இது வேறன்னு கல்லுனி மங்கனாய் சாதிச்சார். கடைசியா என்ன ஆச்சு தெரியுமா?’

  ‘அண்ணா, நாலாவது தடவையா சொல்றேன். நீங்க சொன்னாத்தானே தெரியும்.’

  ‘இதோ சொல்றேன். எங்க சித்தப்பா மேல போனஸா ரெண்டு மூணு அறைகளை பளார் பளார்னு விட்டுட்டு, பரமசிவன் சாருக்கு படத்துக்கு ஈடா ஒரு வெள்ளி விபூதி சம்படத்தைக் கொடுத்து சாந்தப்படுத்தினார். ஆனா, அந்தப் படத்தை பூஜை ரூமிலே மாட்டலே. பரண் மேலே போட்டுட்டார். ஏன்னா, அந்தப் படம் பெஞ்சு கிளார்க் பரமசிவனுடைய சொத்தா இருந்தாலும், ‘சிவன் சொத்து குல நாசம்’னு சொல்றதுடான்னு சொல்லிட்டார். அதிலேருந்து எனக்கும் காலண்டர்னா ஒரு அலர்ஜி.’

  ‘அண்ணா, காலண்டர்லே தேதிதான் இருக்கும். ஒரு சேதி இருக்குன்னு தெரிஞ்சுண்டது சுவாரஸ்யமா இருக்கு அண்ணா. இவ்வளவு அழகா, கோர்வையா கதையைச் சொன்னேள். பதில் மரியாதையா நான் ஒரு காலண்டர் சம்பவத்தைச் சொல்லலேன்னா, நான் சிவசாமியா இருக்கிறதிலே பிரமமேயமே இல்லே அண்ணா. நீங்க உத்தரவு குடுத்தா, உப நாயனம் மாதிரி வாங்கி வாசிக்கிறேன்.

  ‘ஆகட்டும்டா. ரிப்பன் பக்கோடா கொண்டுவந்தா, கொறிச்சிண்டே கேக்க சுவாரஸ்யமா இருக்கும்.’

  ‘இதோ வந்திண்டே இருக்கு அண்ணா.’

  *

  சிவசாமி, தன் பங்குக்கு தன்னுடைய காலண்டர் விருத்தாந்தத்தை பின்வருமாறு சொல்னான்.

  ‘அண்ணா, உங்க சிவபெருமான் சம்பந்தப்பட்ட கதையிலே, அர்ச்சனை பண்ணி தபால்ல வர்ற பிரசாத கவர் மாதிரி கமகமன்னு விபூதி வாசனை வீசித்து. ஆனா என் சமாசாரம் வேற. ரொம்ப லௌகீகமானது. லௌ-கீதமானதுன்னுகூட சொல்லலாம்.’

  ‘போடு’ என்றார் பஞ்சாமி குஷியுடன். ‘சொந்த சிலேடையா?’

  ‘ஏதோ ஒரு வேகத்திலே வந்துடுத்து. அண்ணா மன்னிக்கணும். நான் எங்க மாமாவோட பராமரிப்பிலே இருந்தேன். அவர் சரியான குஜால் பேர்வழி. அந்தக் கால சினிமா நடிகைகைளைப் பாக்கணும்னா, கோடம்பாக்க ரயில்வே கேட்டிலே போய் நிக்க வேணாம். எல்லோரோட படக் காலண்டர்கள் அவரோட ரூமில் இருக்கும். திவ்யமா தரிசனம் பண்ணலாம். ஒரு நாள், மாமி தாங்கமுடியாம, ‘டேய், சிவசாமி, அதை எல்லாம் கிழிச்சுப் போட்டுடுடா. ச்சே! சகிக்கலே’ன்னு உத்தரவு போட்டாள்.’

  ‘நான் திகைச்சேன். நான் இருக்கிறது மாமா நிழலிலே. அவர் ஆசையா மாட்டின காலண்டர்களைக் கிழிக்கிறது அவர் போட்ட கோட்டைக் கிழிச்சா மாதிரி ஆயிடுமேன்னு..’

  ‘அப்படிப் போடு? அப்புறம்?’

  ‘அண்ணா, மாமியோட சொந்தபந்தங்களெல்லாம் வந்திருந்த நாளன்னிக்கு, கோடம்பாக்கத்திலேருந்து ஒரு கனத்த ஆள் கையிலே இளநி சீவற அருவாளோட வந்து, கன்னாபின்னான்னு கலப்படமில்லாத தூய மெட்ராஸ் பாஷையிலே திட்டிட்டுப் போனான். காரணம்? அவர் சிந்துலேகாவோ, சிந்தாதலேகாவோன்னு ஒரு இளம் நடிகைக்கு காதல் கடிதம் எழுதி, என்னை வர்ற தையிலே கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேட்டு விண்ணப்பித்திருந்தாராம். அப்புறம் என்ன ஒரே களேபரம்தான். அந்த ஆள் சாமி ஆடிட்டுப்போன அப்புறம், வீடு புயல் வீசின நாகப்பட்டினம் மாதிரி கோரமா ஆயிடுச்சு. மாமியோட சித்தப்பா ரொம்ப நல்லவர். எல்லா சித்தப்பாக்களும் எட்டப்பாக்கள் இல்லை. நடிகை காலண்டர் குப்பைகளை எல்லாம் வாரிக் கடாசிட்டு, மறுநாள் புதுசா ஒரு காலண்டரைக் கொண்டுவந்து மாட்டினார். அதைப் பாத்து மாமி புல்லரிச்சுப் போனா? கன்னத்திலே போட்டுண்டா? அது என்ன காலண்டர்னு சொல்லுங்கோ பாக்கலாம்?

  ‘போடா பொக்கே! எவ்வளவு ஓ.ஹென்றி கதை எல்லாம் எங்கிட்டே சொல்லி இருக்கே. அது லால்சந்த் அண்டு கோவோ யாரோ போட்ட சிவபெருமானுடைய குடும்ப குரூப் ஃபோட்டோ படம்தானே?’

  ‘அண்ணா!? நீங்க சித்தே எழுந்து நின்னா, இடுப்பிலே துண்டைக் கட்டிண்டு சாஷ்டாங்கமா உங்களை நமஸ்காரம் பண்ணிட்டு, அப்புறம் என்ன பண்ணப்போறேன் தெரியுமா?’

  ‘நீ சொன்னாத்தானேடா தெரியும்?’

  ‘நான் புதுசா ட்ரை பண்ணியிருக்கிற குல்கந்து சுகியமும், கார்ன் ஃபிளேக்ஸ் வடையும் கொண்டு வரப்போறேன்.’

  ‘அட, நமஸ்காரத்தை விடுடா. மொதல்லே ஸ்வீட் காரத்தைக் கொண்டாடா’.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai