17. குழல் இனிது! விசில் இனிது!

ஒரு ராத்திரி நிஜமாவே பாட்டி சொல்படி திருடன் வந்து பாத்திர பண்டங்கள், மளிகை சாமான்கள், பாட்டியோட ஒரு ரெட்டைவட காப்பிக்கொட்டை செயின், என்னோட கால் பவுன் மோதிரம்..
17. குழல் இனிது! விசில் இனிது!

பஞ்சாமி முன்னால் சில தீபாவளி மலர்களை சிவசாமி கொத்தாகக் கொண்டுவந்து வைத்தான்.

‘அடேய் சிவசாமி, காலம்பர ஃப்ளூட் ரமணி வந்திருந்தாரான்ன?’

‘இல்லேண்ணா.’

‘மாலி?’

‘இல்லேண்ணா.’

‘பல்லடம்? சரபு சாஸ்திரி?’

‘அவங்களெல்லாம் காத்தோட கரைஞ்சு குழல் ஊதற கண்ணன்கிட்டே நாதச் சுருள்களா எப்பவோ போய்ச் சேர்ந்தாச்சே, அண்ணா! புல்லாங்குழல்கள் பொதுவா மூங்கிலிலே செய்யறது. ஆனா, இவங்க குழல்கள் கரும்பிலேதான் செஞ்சிருக்கணும். அவ்வளவு இனிமை. அது சரி. ஏன் கேக்கறேள்?’

‘அப்படி ஒரு கானம்டா. சூப்பரா இருந்தது. என்ன பாட்டுன்னு சொல்லட்டுமா. தீட்சிதரோட வல்லப நாயகஸ்ய. பேகட ராகம். அப்படியே ரோஸ் ஜாங்கிரியும், ஜிலேபியும் நெளிஞ்சு வளைஞ்சு சுருண்டு காதுக்குள்ளே ஜீராவா பாஞ்ச மாதிரி சொகமா இருந்தது.’

‘சந்தோஷம் அண்ணா. அந்த வித்துவான்கள் எல்லாம் வரலே, நான்தான் விசிலடிச்சுப் பாடினேன்.’

‘எ-ன்-ன-து? விசிலிலா? நீயா? நெஜமாவா?’

பஞ்சாமி பிரமிப்புடன் நின்றார்.

‘என்னடா இது? உனக்கு விசில் அடிக்கத் தெரியுமான?’

‘ஆமாண்ணா.’

‘ஆனா, நீ விசிலடிச்சுக் கேட்டதே இல்லையே? அவுத்துவிட்ட மூட்டைலேருந்து நெல்லிக்காய் மாதிரி சங்கதிகள் ‘குடுகுடு’ன்னு குதிச்சு குஷியோட ஓடிண்டு வந்ததே?’

‘பெரிய வார்த்தைகள். அண்ணா! நான் ஏன் விசிலை மறைச்சு வெச்சிருந்தேன்னு சொல்லணும்னா, அதுக்கு கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் போடணும்.’

சிவசாமி தொடர்ந்தான். ‘காவேரிக் கரையிலே சாயரட்சையிலே என்னோட விசில் சாதகத்தைச் செஞ்சு, வித்தையை வளர்த்துண்டு வந்திருந்தேன். அந்த இளம் வயசிலே என்னோட தாயாரும், தோப்பனாரும் அவங்களோட பதிமூணு நாள் காரியத்துக்கு இடைவெளி விட்ட மாதிரி ஒருத்தர் ஒருத்தரா மேலே போயிட்டா. கணபதி அக்ரகாரத்திலே இருந்த மீனாட்சி பாட்டி, என்னோட கும்மோணத்திலே வந்து இருக்கறதா ஏற்பாடு ஆச்சு. பாட்டி ரொம்ப பயந்த சுபாவம். என்னோட விசில் கச்சேரி பிடிச்சாலும், சாயரட்சை அஞ்சு மணிக்கு மேலே வீட்டிலே விசில் அடிக்கக் கூடாதுன்னு உத்தரவு போட்டுட்டா?’

‘ஏன்? அந்த ஸ்லாட்லே மீனாட்சி பாட்டி விசில் கச்சேரி பண்ணுவாளா?’

‘கேலி பண்ணாதீங்க அண்ணா. பாட்டிக்கு அப்போ 80 வயசு. ராத்திரியிலே விசில் அடிச்சா திருடன் வருவான்னு அவளுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. இருந்தாலும், ஒரு நாள் வேண்டாம்டா, வேண்டாம்டான்னு தடுத்தும், கர்மசித்தையா, எந்தரோ மகானுபாவலுவை ஒரு சரணம் விடாம வெறியோட ஊதித் தள்ளிட்டேன். என்ன ஆச்சு தெரியுமா?’

‘தியாகய்யர் நேரிலே வந்து கண்ணாலே ஜலம் விட்டுக் கதறிட்டுப் போனாரா?’

‘அண்ணா, இந்தக் கும்மோணக் கிண்டல்தானே வேணாங்கிறது! ஒரு ராத்திரி நிஜமாவே பாட்டி சொல்படி திருடன் வந்து பாத்திர பண்டங்கள், மளிகை சாமான்கள், பாட்டியோட ஒரு ரெட்டைவட காப்பிக்கொட்டை செயின், என்னோட கால் பவுன் மோதிரம், செலவுக்கு வெச்சிருந்த பணம் எல்லாத்தையும் லாவிண்டு போயிட்டான். மூணு நாளைக்கு சமைக்கவும் முடியாம, வாங்கவும் முடியாம ஒரு வறட்சி. ஒரு மிரட்சி. பாட்டி பாத்த பார்வையிலே, ‘அடேய் சிவு, நான் சொன்னேன் பாத்தியா? அந்தத் திருடனுக்கு இந்த தஞ்சாவூர் ஜில்லாவிலேயே நம்மோட மாளிகைதான் கெடச்சுதா? நீதான் அவனை விசிலடிச்சு வரவழிச்சே’ன்னா.’

‘சிவசாமி! கேக்க கஷ்டமா இருக்குடா.’

‘பாட்டி என்கிட்டே ஒரு சத்தியம் வாங்கிண்டா. நான் இனிமே மத்தவங்க காதிலே விழற மாதிரி விசில் அடிக்கக் கூடாதுன்னு. ஏகாந்தமா இருக்கும்போது விசிலடிச்சு, கொடுத்த வாக்கை மதிச்சு வந்தேன். ஆனா, பாட்டி மகா யாத்திரை கிளம்பற அன்னிக்கு, அந்த உத்தரவைக் கொஞ்சம் தளர்த்தினா. ‘நான் உன்னோட கனாலே ஒரு நாள் வந்து அந்தக் கட்டளையை திரும்பி வாங்கிப்பேன். அதுக்கப்பறம் ராத்திரி கச்சேரியை வெச்சுக்கோன்னு சொல்லிட்டு, அதோ பரமேஸ்வரன் ரிஷபத்து மேலே வந்து என்னைக் கூப்பிடறார்னு சொல்லிட்டுக் கண்ணை மூடினா.’

‘சிவசாமி, என்னடா இப்போ சில பேர் சிவபெருமான் என் கனவிலே வந்தார்னு சொல்றா மாதிரின்னா இருக்கு. அப்போ, உன் பாட்டி எப்போ கனவிலே வரப்போறான்னு எதிர்பார்த்திண்டு இருக்கியா?’

‘அண்ணா! வந்தாச்சு! வந்தாச்சு! போன வார ராத்திரி வந்து, இனிமே நீ எல்லார் காதிலேயும் விழறா மாதிரி விசிலடிக்கலாம்னு சொன்னா. ஒரு வாரம் சாதகம் பண்ணி, இன்னிக்கு உங்க ஜன்ம நட்சத்திர நாளாச்சே, அதான் உங்குளக்குப் பிடிச்ச பேகடையை வாசிச்சு ஆரம்பிச்சேன். அண்ணா! இன்னிக்கு மெனு, பரங்கிக்காய் பால் கூட்டு, கல்யாண வாழைக்காய் கறி, கேரளா சேனை எரிசேரி, கத்திரிக்காய் பிட்ளை, மைசூர் ரசம், புளி இஞ்சி, பப்படாம் மீல்ஸ் ரெடி. அதை விடுங்கோ. ‘ஜங்கார ஸ்ருதி செய்குவாய் பாட்டு’ உங்களுக்குப் பிடிக்குமே. பூர்விகல்யாணியை ஒரு புடி பிடிச்சுக் காட்டட்டுமா?’

‘அடேய், அடேய்.. மேல எந்த கீர்த்தனையும் வாசிக்காம, மங்களத்த பாவனையா வாசிச்சு, இலையைப் போடுடா.’

*

‘சிவசாமி, உன்னை ஒண்ணு கேக்கணும். ஏண்டா கொஞ்ச நாளா உன் விசில் சத்தத்தைக் காணும்? காதல் மன்னன் ஜெமினியா இருந்தா, அவரோட தேனிலே குழைச்ச பசும் நெய்க் குரலிலே, சாந்த்தா, ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்னு கேட்டிருப்பேன். ஆனா நீ சாந்தா இல்லே. நீ நிறுத்தினது பாட்டையும் இல்லே. விசிலை.’

‘அண்ணா, ப்ளீஸ், அதைப்பத்தி கேக்காதீங்க.’

‘சரி கட்டாயம் கேக்கமாட்டேன். சொல்லு ஏன் நிறுத்திட்டே?’

‘அது ஒரு கதை அண்ணா? அன்னிக்கு மாடியிலே என்னோட ரூமிலேருந்து நான் விசில் கச்சேரியை சுமார் ராத்திரி பத்து மணிக்கு ஆரம்பிச்சேன். அப்போ என்ன ஆச்சுன்னா..?’

‘நிறுத்துன்னு அசரீரி கேட்டதா?’

‘அப்படிக் கேட்டிருந்தா பரவாயில்லையே. ஆனா பதில் விசில் கேட்டுது. நான் ரீதிகௌளையில் ஆலாபனை பண்ணி நிறுத்தினச்சே, கச்சேரியிலே வயலின் வித்துவான் வாங்கி வாசிக்கிறா மாதிரி, ஜன்னலிலேருந்து விசிலா பொழிஞ்சிது. அதிலே விசேஷம் என்னன்னா, அப்படி செஞ்சுது ஒரு பொண்ணுன்னு தெரிஞ்சுது.’

‘என்னது? பொண்ணா?’

‘ஆமாண்ணா, ஆமாம். விசில் அடிச்சது போன மாசம் குடிவந்த ஆருணியாம். அப்பா கோயம்புத்தூர்லேருந்து சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்காராம்.

‘ஆருணின்னு ஒரு பெயரா? ஊருணின்னா தெரியும்.’

‘ஆருணிகிட்டே, முக்கால் மணி நேரத்துக்கு விசில் கச்சேரி பண்ணக்கூடிய அளவுக்குத் திறமை இருக்காம். காலேஜ் ஃபங்ஷனிலேகூட கச்சேரி பண்ணி, ‘விசில் வாணி’யோ ‘விசில் ராணி’யோன்னு பசங்ககிட்டேர்ந்து பட்டம் வாங்கியிருக்காளாம்.’

‘சரிடா? மேட்டருக்கு வா. ரஷ்ய நாவல் மாதிரி 386 பக்கம் வரை ஒரு சம்பவமும் இல்லாம இழுக்கிறே. ஃபாஸ்ட் ஃபார்வேடு பண்ணு.’

‘அன்னிக்கு ஆருணி அவ அம்மாவோட வந்தா. அவள் சொன்னதைக் கேட்டு திகைச்சுப் போயிட்டேன். என்கிட்டே டியூஷன் எடுத்துக்கணுமாம். அபத்தம்.’

‘அடேய் சிவசாமி! விசில், உதடு சம்பந்தப்பட்டது. சின்னப் பொண்ணு, சிஷ்யை ஆகணும்னு பிரியப்படறது. ஜாக்கிரதை. பிற்காலத்திலே ‘மீடூ’ பூதம் கிளம்பாம பாத்துக்கோ.’

‘என்னண்ணா இது? எங்கிட்டே வித்யார்த்தியாவா? அதுவும் பதினெட்டு வயசுப் பொண்ணு? சிவ! சிவா! வம்பே வேணாம். இன்னும் நாலஞ்சு வருஷம் கழிச்சு, நீங்க சொல்றா மாதிரி மீடூன்னு எதையான ஆருணி இல்லே, தொடர்ந்து வேற தாரிணியோ ஆரம்பிச்சுட்டா, நீங்க என்னை வீட்டை விட்டுத் துரத்திடமாட்டேளா? பெரிய, பெரிய தலைகளே அகாடமி காத்திலே பறக்கும்போது, இந்தப் பாமர விசில் சிவசாமி எந்த மூலைக்கு. அதான்.’

‘சிவசாமி அப்போ கதை முடிஞ்சுதா?’

‘திருடன் ஆங்கிள் பாக்கி இருக்கே? ஆருணியோட அம்மா பேசிண்டு இருந்தப்போ, சொந்த ஊர் கணபதி அக்ரஹாரம்னு சொன்னா. ஆருணியோட பெரிய அண்ணா சாமு, விசில் கச்சேரியிலே சூரனாம். பௌர்ணமி நிலா வெளிச்சத்திலே வாசத் திண்ணையிலே சகாக்களோட உக்காந்துண்டு விசில் கச்சேரி பண்ணுவானாம். ‘ராத்திரியிலே விசிலடிக்காதேடா. அடிச்சா, திருடன் வருவான்’னு அவனோட காமாட்சி பாட்டி சொல்லியும் கேக்காமா விசிலடிச்சிண்டு இருந்தானாம்.’

‘என்னது? உங்க பாட்டியும் அப்படிச் சொல்லுவாளா? அப்போ, ஒரு நாள் ராத்திரி திருடன் வந்து எல்லாத்தையும் கொண்டு போயிருப்பானேன்னு நான் கேட்டேன்.’

வியப்புடன் மாமி கையைத் தட்டி, ‘அட!’ எப்படி சார் கரெக்ட்டா சொல்றேள்?’னு கேட்டா.

‘அதுவா? மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சிங்கிற பாட்டிகளுடைய எச்சரிக்கை உணர்வுகளைப் பத்தி எனக்குத் தெரியும்னு சொல்லி, என்னுடைய கதையைச் சொன்னேன்.’

ஆருணி சிரித்தாள். ‘சிவசாமி சார், ஒரு தடவை விழுந்த இடத்திலே இடி மறுபடியும் விழாதாமே’ன்னு என் சாமண்ணா பாட்டியை மடக்கி, தொடர்ந்து ராத்திரி கச்சேரிகளை ஜமாய்ச்சிண்டு இருந்தாராம். அதான், ராத்திரி விசிலடிக்கறதிலே குத்தமில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.’

‘அண்ணுலும் ஊதினான். அவளும் ஊதினாள்னு, டூயட் கச்சேரியா ஆகிடப்போறதேன்னு பயந்துதான், வம்பே வேண்டாம்னு விசிலை மூட்டை கட்டிட்டேன், அண்ணா.’

‘சிவசாமி, அதெல்லாம் சரி! ‘வடை போச்சே!’ன்னு சொல்றா மாதிரி, உன் ‘விசில் போச்சே!’ன்னு சொல்லணுமே. ராத்திரி வேளையிலே கேக்கறதுக்கு மயிலிறகாலே நீவற மாதிரி சொகமா இருந்ததுடா’ என்றார் பஞ்சாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com