Enable Javscript for better performance
21. பெண்களோ! பெண்கள்!- Dinamani

சுடச்சுட

  

  21. பெண்களோ! பெண்கள்!

  By ஜே.எஸ். ராகவன்.  |   Published on : 10th January 2019 10:00 AM  |   அ+அ அ-   |    |  

  jews_-_sivasami

   

  ‘அடேய் சிவசாமி, பெண்களாலே கெட்டவர்கள் இந்திரன், சந்திரன்னு ரெண்டு பேரை மாத்திரம் சொல்லிட்டு, லிஸ்ட்டை அதோட ஏண்டா நிறுத்திட்டா?’

  ‘தெரியலே அண்ணா, லேடீஸைப் பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது.’

  ‘டேய், அண்டப் புளுகுடா! பெண்களோட மனசை அக்கு வேற ஆணி வேறா ஸ்டார் ஸ்க்ரூ டிரைவராலே கழட்டி, உள்ளே என்ன இருக்குன்னு தெரிஞ்சிண்டு, ரீ-அசம்பிள் பண்ணி ஒரிஜினல் பேக்கிங்கா திருப்பி வெச்சிடுவேயேடா. உனக்கா தெரியாது? இதை ஜெமினி கணேசன் சொல்லியிருந்தாக்கூட நம்பி இருப்பேன்.’

  ‘அண்ணா, இந்த கடும் பிரம்மச்சாரியோட காலை இப்படி வாரிவிடக் கூடாது. நீங்க இப்படிப் பேசினது தெரிஞ்சா, கணபதியும் மாருதியும், ‘ஏண்டா? நெஜமாவா?’ன்னு, கோவிலுக்குப் போகும்போது கேப்பா.’

  ‘தமாஷ் பண்ணினேன்டா. சிவசாமி, இன்னிக்கு ஏதான தபால் வந்திருக்காடா?’

  ‘வந்திருக்கண்ணா. கலாடா ஜுவல்லரியோட மூக்குத்தி மேளா அழைப்பிதழ், குன்னியனூர் அருள்மிகு குமாரவடிவேலு ஸ்வாமி பிரசாத கவர், வாட்டர் டாக்ஸ் நோட்டீஸ், சி. குமார் வெட்ஸ் சௌ. ப்ரியா சுபமுகூர்த்தப் பத்திரிகை, அப்புறம் ‘சிப்பல் தட்டு’ உயர்தர சைவ உணவக திறப்பு விழா இன்விடேஷன் இப்படின்னு வந்திருக்கு.’

  ‘வேற, கவர், இன்லேண்டு லெட்டர் அப்படின்னு ஏதும் இல்லையா?’

  ‘அட! மறந்துட்டேனே. கமகமன்னு பெர்ஃப்யூம் வாசனையோட ஒரு பிங்க் கலர் கவர் உங்களுக்கு வந்திருக்கண்ணா. அட்ரஸ், லேடீஸ் ஹாண்ட்ரைட்டிங்லே இருந்தது.’

  பஞ்சாமி பதறினார். ‘அடேய், அதெங்கேடா? கொண்டா.’

  ‘உங்க மேஜையிலே வெச்சிருந்தேனே? பாக்கலயா?’

  பஞ்சாமி மின்னலாகப் பாய்ந்து லெட்டரை எடுக்க ஓடினார்.

  *

  கொஞ்ச நாளாவே பஞ்சாமியின் நடை உடை பாவனைகளில் மாற்றம் தெரிவதை சிவசாமி உணர்ந்தான். தினமும் மழமழன்னு சவரம் செய்துகொண்டு அழகு பார்த்துக்கொண்டார். குளித்தபின் ஸ்மார்ட்டாக டீ ஷர்ட், பேண்ட் போட்டு, மேலே மானாவரியா புஸ் புஸ்னு ஸ்ப்ரே அடித்துக்கொண்டு கிளப்புக்குப் போய்விட்டு வந்தார். மந்திரி சபை அமைக்கப்படும் நேரத்தில், வெற்றிபெற்ற வேட்பாளர், தலைவர் அழைப்புக்காக வரும் டெலிபோன் மணியை எதிர்பார்த்து படபடக்கும் இதயத்தைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப்போல உட்காராமல், கூண்டுக்குள் உலவும் புலியாக நடை போட்டுக்கொண்டு இருந்தார். அன்று மொபைல் அடித்தவுடன், அதை எடுத்து படுக்கை அறைக்குள் புகுந்துகொண்டு பேசிவிட்டு மலர்ச்சியுடன் வெளியே வந்தார்.

  ‘யாரண்ணா, டெலிபோனிலே?’

  ‘அதுவா? அது.. அது வந்து, பெர்சனல் லோன் வேணுமான்னு வழக்கமா வர கால்டா. கால் சென்டர் பொண்ணுங்களுக்கு இதே வேலையாப் போச்சு.’

  ‘அண்ணா நேத்து நீங்க இல்லாதபோது உங்களுக்கு ஒரு கால் வந்தது. யாரோ ஒரு லேடி, நீங்க இருக்கேளான்னு கேட்டா.’

  ‘என்னது லேடியா? யாருடா அது? பேரைக் கேட்டியா? சொன்னாளா?’

  ‘டவர் ப்ராப்ளம் அண்ணா. பேர் லலிதாவோ, திலகாவோ, வனிதாவோ ஏதோ சொன்னா. சரியா காதிலே விழலே.’

  ‘என்னடா இது? கால்கள் லைனா சபரிமலையிலே மனிதச் சங்கிலி நீளமா நின்ன மாதிரி லைனா வரது? எதுக்குடா? என்ன நடக்கிறது?’

  ‘எனக்கு எப்படித் தெரியும் அண்ணா?’

  ‘சிவசாமி, என்னைக் காப்பாத்துடா.’

  ‘அண்ணா அப்படியே செஞ்சுட்டாப் போறது.’

  ‘என்ன நடக்கிறதுன்னு தெரிஞ்சிண்டாதான்டா உன்னாலே ஏதான செய்ய முடியும். உங்கிட்டே சொல்லிடறேன். என்னோட நிலைமை புரியும். ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு மொத்தம் மூணு பொம்பளைங்க ஒத்தப்படையா என்னை சுத்திச் சுத்தி வராங்கடா.’

  ‘எப்படி சுத்தி வராங்க அண்ணா? ரிங்கா ரிங்கா ரோஸஸ், கும்மியடிப் பெண்ணே கும்மியடி, செந்தமிழ் நாடென்னும் போதினிலேன்னு ஏதான பாடிண்டு கையைத் தட்டி, ஸ்டெப் போட்டுண்டு, சுத்தி சுத்தி வராங்களா? கும்மியா? கோலாட்டமா? கோலாட்டம்னா பின்னல் கோலாட்டமா? தான்டியாவா? ரஷ்யன் பேலே டான்ஸ் மாதிரி குதிக்கறாங்களா? ஆனா, அதை ஆடறது மகா கஷ்டமாச்சே.’

  ‘சிவசாமி, இதுவரை ஒருத்திகூட என் கண்ணிலே படலேடா.’

  ‘என்னண்ணா இது. மூணு பொண்ணுங்கன்னு சொல்றேள். சுத்தி வரான்னு சொல்றேள். ஆனா கண்ணிலே படறதில்லேன்னு சொல்றேள். முன்னுக்குப் பின் முரணா இருக்கே.’

  ‘நிறுத்துடா. என்னைப் பேசவிட்டாத்தான், என்னாலே கோலாட்டமா, ச்சீ, கோர்வையா விவரம் சொல்ல முடியும். மந்திரான்னு ஒருத்தியோட போன் கால்ல ஆரம்பிச்சுது. அவ சொன்னதோட சாராம்சம் என்னன்னா, ‘டங்குவார் சத்திரம்’ங்கிற புது சீரியலிலே ஒரு கேரக்டர் ரோலுக்கு என்னோட உருவம் பொருத்தமா இருக்குமாம். உயரமா, டிக்னிஃபைடா, தீர்க்கமான மூக்கோட இருக்கேன்னு சொன்னா. நெஜமாவாடா? வடபழனி ஃபோரம் மால்ல இருக்கற ஃபுட் கோர்ட்டுக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் வரச் சொன்னா. டயத்துக்குப் போனேன். மந்திராவும் வரலே. தந்திராவும் வரலே. ஆனா போன் வந்தது. ‘சாரி சார். ஒரு போட்டோ ஷூட்டிலே மாட்டிண்டுட்டேன். கட்டாயம் அடுத்த வாரம் பாக்கலாம்’னு, குரல்லே சாக்லேட் குல்பி வழியச் சொன்னா.’

  ‘அப்புறம், மணக்க மணக்க ஒரு லெட்டர் வந்தது. அதிலே நம்ம மாம்பல - தி.நகர் தொகுதியிலே இருக்கிற வாக்காளப் பெருமக்களின் பேர்களை எல்லாம் வோட்டர்ஸ் லிஸ்ட்டிலேருந்து எடுத்து குலுக்கிப் போட்டு, நடிகை நிர்மால்யா நம்பீசனை விட்டு எடுக்கச் சொன்னபோது என் பேர் வந்ததாம். பம்பர் பரிசா, அடுத்த மாசம் சிங்கப்பூரிலோ, பட்டாயாவிலோ நடக்கப்போற மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தாளியா அழைச்சிண்டு போகப்போறாங்களாம். ஸ்டேஜிலே நிர்மால்யா நம்பீசனோட ரெண்டு சரணத்துக்கு நடனம் ஆடவேண்டி இருக்குமாம். பல்லவியோட பிரபு தேவா ஆடுவாராம். டான்ஸ் மாஸ்டர் ‘சல்சா’ ஷாலு பயிற்சி தருவாங்களாம். இதைக் கேட்டதிலேருந்து காலெல்லாம் தரையிலே பாவ மாட்டேங்கிறதுடா.’

  மேட்டர் பக்தி மார்க்கமாக இருந்திருந்தால் சிவசாமி, துண்டை இடுப்பிலே கட்டிக்கொண்டு ஒரு கையால் வாய் பொத்திப் பணிவோட குனிந்து செவி சாய்த்துக்கொண்டிருப்பான். மேட்டர் கிளுகிளுப்பான விஷயமாக இருந்ததால், ஒரு மோகனப் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

  மூணாவதா, ஷாலினின்னு ஒரு பொண்ணு போன் பண்ணினா. குரல் கொஞ்சம் அமானுஷ்யமா இருந்தது. போரூரிலேருந்து பேசினாலும், குரல் போன ஜென்மத்திலேருந்து கேட்ட மாதிரி இருந்தது. அப்போ அவளோட பேரு சங்கமித்திரையோ தூக்க மாத்திரையோ ஏதோ சொன்னா. என்னை எதேச்சையா ஈக்காடுதாங்கலிலே பாத்தபோது திகைச்சுப் போயிட்டாளாம். அவளுடைய போன ஜன்மத்திலே மணாளனா இருந்த வீரபாகுவோ, வெல்லப்பாகுவோ நான்தானாம். நாம் ஏன் மறுபடியும் கைப்பிடிக்கக் கூடாதுன்னு கேட்டா.’

  சிவசாமி, பஞ்சாபியின் கட்டளைப்படி ‘ஊம் கொட்டாம கதையைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

  ‘சிவசாமி என்னடா இது? ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? திடீர்னு எனக்கு ஏன் இந்த மாதிரி அதிர்ஷ்டங்களெல்லாம் அடிக்கிறது? ச்சீ! இந்த வயசிலே இதெல்லாம் தேவையான்னு என்னோட உடம்பிலேருந்து ஒரு பிம்பம் வலது பக்கமா விலகி கேக்கும்போது, போடா பைத்தியக்காரா, எஞ்சாய்! யாருக்கு இந்த அதிர்ஷ்டமெல்லாம் கிடைக்கும்னு இடதுபக்கமா விலகி நிக்கிற பிம்பம் கேக்கிறது. ஒண்ணுமே புரியலேடா. ஆனா, மனசுலேருந்து கொஞ்சநாளா இருந்த சோர்வு, ஆயாசம் எல்லாம் போய், பழயை லீக்கான பேட்டரி எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு புது பேட்டரி போட்ட எமர்ஜென்ஸி லாம்ப் மாதிரி பளிச்சுன்னு விளக்கு எரிய ஆரம்பிக்கிறது. இதெல்லாம் என்னடா?’

  ‘எனக்குத் தெரியலே அண்ணா?’

  ‘அப்படியா சொல்றே’ன்னு பஞ்சாமி கேட்டுவிட்டு, மார்க்கெட்டுக்கு புதுசா வந்த FOGG (சிவப்புக் கலர்) ஸ்ப்ரேயை சாங்கோபாங்கமாக மேல் சட்டையில் அடித்துக்கொண்டு, புதுசா வாங்கின செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினார்.

  *

  பஞ்சாமி வீட்டில் இல்லாதபோது, அமெரிக்காவிலிருந்து காமாட்சி மாமி பேசினாள்.

  ‘என்னடா சிவசாமி, எப்படி இருக்கே? அவர் எப்படி இருக்கார்? எப்படி போயிண்டு இருக்கு?’

  ‘மாமி, எல்லாம் சூப்ப்பரா போயிண்டு இருக்கு. காத்து போன பலூன் மாதிரி இருந்த அண்ணா இப்போ சாவி குடுத்த கரடி பொம்மை மாதிரி துள்ளிக் குதிச்சிண்டு இருக்கார். எல்லாம் உங்க ஐடியாதான். வதனாக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லணும்.’

  ‘அடேய், யாருடா அந்த வதனா?’

  ‘மாமி, வதனா டப்பிங் ஆர்ட்டிஸ்ட். மூணு பொண்களோட குரல்களை விதவிதமா மாத்திக் கொடுத்து, அண்ணாக்கு லெட்டர் எல்லாம் எழுதி அவர் உடம்பிலே ஒரு வைட்டமினை பாய்ச்சிண்டு இருக்கா.’

  ‘நீ ஜாக்கிரதைடா. ஒரு சினிமா பாட்டு ஒண்ணு உண்டில்லே?’

  ‘நிறைய இருக்கு. அதிலே, ‘அறியாப் பருவமடா. மலர் அம்பை வீசாதேடா’ங்கிற மிஸ்ஸியம்மா சினிமா பாட்டை இந்த சிச்சுவேஷனுக்கு யூஸ் பண்ணலாம். ஆனா அந்தப் பயம் வேணாம். ஏன்னா, வதனாவோட குரல்ல குளுகுளுன்னு ரொம்ப இளமை. ஆனா வயசு நாப்பதை தாண்டியாச்சு மாமி.’

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai