Enable Javscript for better performance
அத்தியாயம் - 11- Dinamani

சுடச்சுட

  
  galileo

   

  தன்னை நம்பியவன் தரணியாள்வான்!

  ‘‘உனது நண்பனைச் சொல்... நீ யாரென்று சொல்கிறேன்’’, ‘‘கூடா நட்பு கேடாய் முடியும்’’ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். உனது வெற்றியும், தோல்வியும், நீ யாரோடு அதிக நேரம் செலவழிக்கிறாயோ, அதைப் பொறுத்துத்தான் அமையும். நல்ல சிந்தனை உள்ளவர்கள் உன்னைச் சுற்றி இருந்தால், உனது லட்சியத்திற்கு சிறகு முளைக்கும், நீ பறப்பாய், பறந்துகொண்டே இருப்பாய். கெட்ட சிந்தனையாளர்கள், எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள், சிறுமதியாளர்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர், உன்னைச் சுற்றி இருந்தால், அது உன்னை வீழ்ச்சியின் பாதைக்கு, சிக்கலின் பாதைக்கு, அழிவின் பாதைக்கு இட்டுச் செல்லும். இதை எப்படிக் கண்டுபிடிப்பது? இதுவே நம் ஒவ்வொருவின் முன்பு உள்ள மிகப்பெரிய சவால்.

  யார் உன்னை உணரச் செய்கிறார்களோ, யார் உன்னில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி, உன்னில் இருக்கும் தனித்திறமைகளைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்த துணை நிற்கிறார்களோ, யார் உனது நலனில் அக்கறையுடன் இருக்கிறார்களோ, அவர்கள் தான் உனது ஆத்மார்த்த நண்பர்கள். உனது வெற்றியைப் பார்த்து உள்ளார்ந்த அன்போடு மகிழவும், உனது தோல்வியில் தோள் கொடுத்து ஆறுதலும், தேறுதலும் சொல்லி ஊக்குவிக்கும் முதல் 3 பேர் உனது தாயும், தந்தையும், ஆசிரியரும்தான். பெற்றோர் போன்ற மாசற்ற அன்பு உண்மையான நண்பனிடம் மட்டும்தான் கிடைக்கும். இதை யாரெல்லாம் இளம் வயதில் முதலில் உணர்ந்துகொள்கிறார்களோ, அவர்கள் தோல்வியின் பாதையில் சென்றாலும், இறுதியில் வெற்றி பெறுவார்கள். ஆனால் இதை இளம் வயதில் யார் உணரவில்லையோ, பாவம், தனக்குத் தானே குழி பறித்து அழிவின் வலையில் விழுவார்கள்.

  ஆனால் விஷத்தை உள்ளத்தில் வைத்து, ஆசை வார்த்தையால் புகழ்ந்து, உன்னை கற்பனை உலகத்தில் ஏற்றிவைத்து, தன்னை மிஞ்சிய தவறான நம்பிக்கையை உனக்குள் விதைத்து, உன்னை தற்பெருமை பேசவைத்து, ஆணவத்தையும், அகங்காரத்தையும் உன்னில் நிலை நிறுத்தி, கடைசியில் ஒட்டுமொத்தமாக உன்னை சமூக விரோதியாக்கியிருக்கும் ஒரு நட்பு வட்டாரம். இதனால் நீ அனைத்தையும் இழந்து தனிமரமாக நிற்கும்போது, ‘‘நான் அப்போதே சொன்னேன்; இவன் கேட்கவில்லை’’ என்று உன்னை எள்ளி நகையாடும் ஒரு கூட்டம். அது உன்னை சுற்றியே இருந்திருக்கும், உன்னால் பிழைத்திருக்கும், உன்னை ஏமாற்றியிருக்கும். ஆனால் அந்த நபர்கள் உனது இன்றைய நிலையை நினைத்து எள்ளி நகையாடுவார்கள். கேலி பேசுவார்கள். புறம் பேசுவார்கள். இது உனக்கு நடந்திருக்கலாம்; நடந்திருந்தால் நீ எண்ணிப்பார். நடக்காமல் இருந்தால் நீ திரும்பிப் பார். ஆனால் நீ யாரை வெறுத்தாயோ, யாரை உதாசீனப்படுத்தினாயோ, அது உனது தாயாக, தந்தையாக, அண்ணன், தம்பியாக, மனைவியாக, சகோதரியாக, நண்பனாக இருக்கலாம். ஆசிரியராக இருக்கலாம். அவர்கள் தான் உனது வீழ்ச்சியில் உனக்குத் துணையாக இருப்பார்கள் என்பதை நீ உணர்ந்து பார்.

  சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை

  நேரா நிரந்தவர் நட்பு (குறள் - 821)

  மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.

  நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் உனது லட்சிய சிகரத்தை அடைவதற்கு ஊன்றுகோலாக இருப்பார்கள். கெட்ட எண்ணம் கொண்டவர்கள், அவர்களோடு சேர்ந்து உன்னை அழிவிற்கு வித்திடுவார்கள்.

  நமது இன்றைய நிலையை எண்ணிப் பாருங்கள். அது சோகமாக, துன்பமாக, துயரமாக இருந்தால் அது உன்னைச் சுற்றி இருப்பவர்களால்தான் உருவாக்கப்பட்டிருக்கும். அதற்குக் காரணம் உனது அறியாமைதான். நீ உயர் நிலையை அடைவது, உனது லட்சியத்தோடு உனது சுற்றமும், நட்பும் நல்லனவாக இருக்கும்படி நீ உருவாக்கிக்கொள்ளும் உனது திறமையில் இருக்கிறது.

  இன்றைக்கு உலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிறுவனங்களை உருவாக்கியவர்களைப் பாருங்கள். அவர்கள் ஒரே லட்சியத்தை அடைய, ஒரே எண்ணங்களோடு இணைந்த இரு துருவங்கள். ஆம், அடுத்த அடுத்த வீட்டில் வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸும், ஸ்டீவ் உஜ்நய்க் இருவரும் இணைந்தார்கள்; ஆப்பிள் நிறுவனம் உருவாகியது. ஒரே பள்ளியில் படித்த பில் கேட்ஸும், பால் ஆலனும் இணைந்தார்கள்; மைக்ரோசாப்ட் விண்டோஸ் உருவாகியது. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த லாரி பேஜும், செர்ஜி பிரினும் இணைந்தார்கள்; கூகுள் உருவாகியது.

  ஒரே பகுதியில் இருக்கும் இரண்டு நல்ல நண்பர்கள் ஒரு லட்சியத்தை முன்னெடுத்து அறிவைப் பயன்படுத்தி உழைக்கும்போது, அதற்கு அவர்கள் வாழும் நாடு தனது குடிமக்களின் கனவை நனவாக்கும் கொள்கைகளைக் பெற்றிருக்கும்போது, தோல்வியடைந்தாலும், வெற்றியடைவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும்போது, எண்ணங்களைச் செயலாக்க அந்த நாடு இளைஞர்களின் எண்ணத்திற்கு முதலீடு செய்கிறது. முன்னேற்ற வளர்ச்சிக்கான கொள்கைகளை உருவாக்கிக் கொடுக்கிறது. அவர்கள் வெற்றியடைகிறார்கள். அதனால் நாடு வெற்றியடைகிறது. இது நம் நாட்டில் நடக்கிறதா என்று எண்ணிப் பாருங்கள்.

  தோல்வியை அவமானமாக எந்த நாடு கருதவில்லையோ, அந்த நாடு அந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துகிறது. அப்படியென்றால், தனி நபர், நட்பு, சமூகம், அரசியல் இந்த நான்கும் இணைந்து ஒரு லட்சியத்தோடு, பொதுநலத்தோடு செயல்படும்போது ஒரு நாடு வளர்கிறது. அதனால் அந்த நாட்டின் மக்களும் வளர்கிறார்கள். இந்த நான்கும் வெவ்வேறு திசையில் பயணிக்கும்போது, சுயநலத்தால் பொதுநலத்தை பலிகடாவாக்கி, நாட்டின் இளைஞர்களின் கனவை பிஞ்சிலேயே கரியாக்கி அழிக்கும் நாட்டால், அந்நாட்டின் மக்கள் வேதனையும், வறுமையும், அழிவையும் நோக்கித் தள்ளப்படுகிறார்கள். அப்படியென்றால், கூடா நட்பு தனிநபருக்கு வந்தால் அது குடும்பத்தைப் பாதிக்கும். அது நிறுவனத்திற்கு வந்தால் அந்த நிறுவனத்தைப் பாதிக்கும். அது சமூகத்தில் வந்தால் அந்தச் சமூகம் சீரழியும். கூடா நட்பு அரசியலில் வந்தால் மக்களின், இளைஞர்களின் எதிர்காலம் அழியும்.

  ஆனால் தனிமனிதன் தன்னைத் திருத்தி, தன்னை உணர்ந்து சரியான நட்பைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றிபெறுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் நாட்டின் அரசியல் நல்வழியில், அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலைத்த வளர்ச்சியைக் கொடுக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள். ஒரு அரசியல் தலைவர் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கிறார். ஆனால் ஓர் அரசியல்வாதி, அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கிறான். ஒரு தலைவன் என்றால் ஒரு கொள்கை வேண்டும். அடிக்கடி கொள்கையை மாற்றுபவன் அரசியல்வியாதி. ஆனால் தொலைநோக்குப் பார்வை கொண்ட, அறிவார்ந்த கொள்கையைக் கொண்டவன், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவன் எவனோ, அவன்தான் தனது நாட்டின் மக்களை உய்விக்க வந்த சிறந்த தலைவன்.

  கலீலியோ காலத்தில் வாழ்ந்த அத்தனை நிபுணர்களும், விஞ்ஞானிகளும், அரசியல்வாதிகளும், ‘‘பூமிதான் மையத்தில் இருக்கிறது; சூரியன் உட்பட அத்தனை கோள்களும் பூமியைத்தான் சுற்றி வருகின்றன’’ என்று உறுதியாக நம்பிக்கொண்டிருந்தார்கள். விண்ணை ஆய்ந்து தெளிந்த அரிஸ்டாட்டிலும், டாலமியும், பல நூறு ஆண்டுகளாக அறிவியலில் உச்சம் கண்ட கிரேக்கர்களும், ரோமானியர்களும் அதைத்தான் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கலீலியோ தன் ஆராய்ச்சியில் விளைந்த தன்னம்பிக்கையால், ‘‘சூரியனை மையமாகக் கொண்டுதான் கோள்களும், பூமியும் சுற்றுகின்றன’’ என்றார். ஆனால் ரோமன் நாடு அவரை முட்டாள் என்று பட்டம் கட்டி, அவரின் கடைசி மூச்சு வரை சிறை வைத்து ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் திரும்பப் பெறுமாறு கட்டளையிட்டது. உயிரே போனாலும் தான் கொண்ட கொள்கையில் நிலைத்து இருந்து உலகிற்கு உண்மையை உணர்த்தினார். அதனால்தான் இன்றைக்கும் கலீலியோ, ‘‘இன்றைய நவீன அறிவியில் உலகின் தந்தை’’ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் போற்றப்படுகிறார். நியூட்டனுக்கும் கலீலியோதான் முன்னுதாரணம். தான் பெற்ற கல்வியால், அறிவால் உருவான உறுதியான நம்பிக்கைகளைப் பெற்றவர்கள், காலம் கடந்தும் உலகம் உள்ளவரை வாழ்வார்கள். தன்னை நம்பியவர்கள் தரணி ஆள்வார்கள்.

  இன்றைய நமது நாட்டின் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம், தன்னம்பிக்கை கொண்ட அறிவார்ந்த தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவர்களின் பற்றாக்குறைதான். அதற்கும் காரணம் நாம் ஒவ்வொருவரும்தான். ஏனென்றால் வீட்டில் எது உருவாகிறதோ, அதுதான் நாட்டில் பரிணமிக்கும். நம்மை உணர்ந்தால், நம்மைச் செப்பனிட்டால், நம்மிலிருந்து நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்பதை நாம் உணர்ந்த அடுத்த விநாடி நம் நாடு அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலைத்த வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும். அப்படியென்றால் அப்படிப்பட்ட தலைவர்கள் இல்லையா? இருக்கிறார்கள்; நாம்தான் தேட வேண்டும், கண்டறிய வேண்டும்.

  ‘‘நீ சூரியனைப்போல் பிரகாசிக்க வேண்டுமா, முதலில் சூரியனைப்போல எரிய கற்றுக்கொள்’’ என்றார் டாக்டர் அப்துல் கலாம். அளவில்லாமல் தொடர்ந்து ஒளியைக் கொடுத்து இந்த உலகத்தை உய்விக்கும் சூரியனைப்போல், தன்னை அர்ப்பணித்து நாட்டைக் காக்கும் தலைவர்களை உன்னில் இருந்து கண்டுபிடி. தோளோடு தோள் கொடுத்து நண்பனாகப் பயணி. நாட்டை அழிவில் இருந்து மீட்டெடுக்க உனக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உன் பக்கத்தில் ஒளிந்திருக்கிறது. சாக்கடையை விலக்கிப் பார் சமூகத்தின் அழுக்கை தனக்குள் உள்வாங்கி உன் வாழ்க்கைக்கான புரத சக்தியை கொடுக்கும் நல் மீன்கள் உனக்குக் கிடைக்கும்.

  உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai