அத்தியாயம் - 8

பெரும்பாலும் இந்த விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இல்லாதவர்கள்தான் இந்த விளையாட்டின் மூலம் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
அத்தியாயம் - 8

இடைவெளி தவிர்... வெற்றி பெறு!

ரஷ்யாவில் ஒரு பகுதியில் அடுத்தடுத்து தற்கொலைகள் நடக்கின்றன. கிட்டத்தட்ட 130 பேருக்கும் மேல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். எல்லாருமே 15 முதல் 17 வரை வயதுள்ள மாணவ, மாணவிகள். எல்லாருமே இளைஞர்கள், மாணவர்கள். ஏன் இவர்கள் தற்கொலை செய்கிறார்கள் என்று ரஷ்ய காவல்து றைக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லாரும் தலையை பிய்த்துக்கொள்கிறார்கள். காவல் துறைக்கு அரசிடம் இருந்து மிக அழுத்தம். ‘இதை ஏன் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை?’ என்று கேள்விக்கு மேல், கேள்வி. என்ன செய்வது? ஒரு தடயமும் கிடைக்கவில்லையே என்று விழி பிதுங்கிக்கொண்டிருந்த வேளையில், ரீனா பலேன் கோவா என்ற 17 வயது மாணவி, நம்ம ஊர்ல உள்ள முகநூல் மாதிரியான சமூக வலைத்தளம் போன்று ரஷ்யாவில் வி.கே. என்ற முகநூலில், ஒரு பெண் ரயில் பாதைக்கு முன்பாக நின்று செல்ஃபி எடுத்து குட் பை என்று சொல்லி அப்லோடு செய்துவிட்டு, ரெயில் முன்பு விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள்.

அந்த பெண்ணின் மரணத்தை பற்றி விசாரிக்க, விசாரிக்க ரஷ்ய காவல் துறைக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இந்தப் பெண் மட்டுமல்ல, இதற்கு முன்பாக இறந்துபோன 130 பேருமே ‘புளு வேல்’ என்ற ஆன்லைன் தற்கொலை கேம் என்று சொல்லப்படுகிற மொபைல் போன் விளையாட்டை விளையாடித்தான் உயிரை விட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு உலகத்தில் ரீனா பலேன் கோவா தற்கொலை ஐக்கானாக மாறிவிட்டாள். இந்த பெண்ணை தங்களது ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு பல இளைஞர்களும், இளம் பெண்களும், மாணவ, மாணவிகளும், தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் நடந்து 2 வருடத்தில், அமெரிக்காவில் 13 வயதுப் பெண் தற்கொலை செய்து இறந்துவிடுகிறாள். அவள் ஏன் தற்கொலை செய்து இறந்துபோனாள் என்று அவர்கள் குடும்பத்தில் அம்மாவுக்கும் தெரியவில்லை, அப்பாவுக்கும் தெரியவில்லை. சில மாதம் கழிந்து அந்தப் பெண்ணுடைய அண்ணன், அந்தப் பெண்ணின் படுக்கை அறையில் ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று தேடித் தேடிப் பார்க்கிறான். அப்போது அவளது ரூமில் ‘புளு வேல்’ படம் வரைந்து வைத்திருக்கிறாள். அந்த ரூம் முழுவதும் ‘குட் பை, குட் பை’ என்று ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ரீனா பலேன் கோவாவின் படத்தையும் வரைந்து வைத்திருக்கிறாள். இப்படித்தான் இந்த கேம், உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்து இந்தியாவுக்கும் வந்துவிட்டது.

இந்த ‘புளு வேல்’ என்ற ஆன்லைன் தற்கொலை விளையாட்டில் மொத்தம் 50 நாள், 50 செயல்களைச் செய்ய வேண்டும். 50-வது செயல்தான் தற்கொலை; இது தற்கொலை என்று தெரிந்தும்தான் இந்த விளையாட்டை விளையாடி தற்கொலை செய்பவர்கள் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள். சாராயம் குடித்தால் சீக்கிரம் சாவோம் என்று தெரிந்தும் குடிக்கிறார்கள் இல்லையா, அதுபோல்தான் இதுவும்.

ஒருமுறை இந்த லிங்கை கிளிக் பண்ணி இந்த விளையாட்டில் நுழைந்துவிட்டால், அவர்கள் நம் தொலைபேசியை முழுவதும் கட்டுக்குள் எடுத்து, அதில் உள்ள அத்துனை படங்களையும், வீடியோ போன்ற நமது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் தன் வசம் எடுத்துக்கொள்வார்கள். அந்த அந்தரங்க தகவல்களை வைத்து மிரட்டியே இதற்கு அடிமையானவர்களை அனைத்து செயல்களையும் செய்ய வைத்துவிடுகிறார்கள். இதில் அதிகாலை 4.20 மணிக்கு எழுந்திருக்கச் செய்து, மொட்டை மாடிக்குப் போய் தனியாக உட்காரச் சொல்கிறார்கள். பேய் சினிமாக்கள், அதிபயங்கரக் கொலைகள் உள்ள சினிமாக்களை, தனியாக பார்க்க செய்கிறார்கள். தூங்கும் நேரத்தை மாற்றுகிறார்கள். காலையில் சோர்வடையச் செய்கிறார்கள். நமது ஆளுமையை அழித்து நம்பிக்கையின்மையை ஊட்டி வளர்க்கிறார்கள். போதையில் மதிமயங்கி போகக்கூடிய வகையில் இந்த விளையாட்டுக்கு அடிமையானவர்களை ஆளாக்குகிறார்கள். உணவு உண்ணும் நேரத்தை மாற்றுகிறார்கள். பெரும்பாலும் தனிமையில் இருக்கவைக்கிறார்கள். கையில் பிளேடால் ஆழமாக இல்லாமல் சிறிதாக கிழித்து, ரத்தத்தால் ‘புளு வேல்’ படத்தை வரையவைக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தனிமைப்படுத்தப்பட்டு, வாழ்க்கையில் இருக்கும் நம்பிக்கை என்னும் பிடிப்பை ஒட்டுமொத்தமாக அழித்து, இனிமேல் நமக்கு எதற்கு இந்த உலக வாழ்க்கை என்ற மனநிலைக்கு அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி, 50-வது செயலில் அவர்களை தற்கொலை செய்ய வைத்துவிடுகிறார்கள்.

இதைக் கண்டுபிடித்த ரஷ்யன் பெயர் பிலிப் புதைக்கின் மற்றும் அவனோடு மனநல மருத்துவம் படித்த 2 மாணவர்கள். ரஷ்ய முகநூல் வி.கே.யில் இருந்த புளு வேல் லிங்கை வைத்து தொடர்ந்து தேடிய பிறகே, ரஷ்யன் காவல் துறை இவர்களைக் கைது செய்தது. இவர்களிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்கும்போது, அவர்கள் கொடுத்த வாக்குமூலம்தான் அதிர்ச்சியடைய வைத்தது.

அவன் சொன்னான்: ‘நான் இந்த உலகத்தைச் சுத்தப்படுத்தப்போகிறேன். இறந்தவர்கள் எல்லோரும் இந்த உலகத்துக்கு ஒரு பாரம். அவர்களால் இந்த உலகம் ஒரு நன்மையையும் அடையப்போவதில்லை. இவர்கள் தன்னம்பிக்கை அற்றவர்கள். தோல்வியைத் தாங்கும் வல்லமை அற்றவர்கள். தனிமையை விரும்புவர்கள். அப்பா, அம்மாவின் செல்ல வளர்ப்பில் வளர்ந்து, எல்லாம் தனக்கு இருக்கிறது என்ற மமதையில் உழைக்க வேண்டும், முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். வெளியே வீரமாகப் பேசுவார்கள். சேட்டை செய்வார்கள். ரவுடித்தனம் செய்வார்கள். ஆனால் மனத்துக்குள் கோழைகள். அடுத்தவர்களின் தோல்வியைக் கண்டு மகிழ்ந்து, அவர்களைவிட தான் பரவாயில்லை என்று தன்னையும் தாழ்த்திக்கொண்டு பெருமை பீற்றிக்கொண்டு அலைபவர்கள். கேளிக்கை, கூத்தாட்டம், காதல் தோல்வி, மது, போதைக்கு அடிமையானவர்கள். இவர்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் தனிமைப்படுத்தப்படுபவர்கள்.

குடும்பத்திலோ, பள்ளியிலோ, நண்பர்கள் மத்தியிலோ, காதல் தோல்வியிலோ மூழ்கி, தாய், தந்தையரின் பாசம் கிடைக்காமல், அவர்கள் மீது வெறுப்பை வளர்த்து, கடைசியில் தன் மீதே வெறுப்பை வளர்த்தவர்கள். என்னைப் பொருத்தவரை அவர்கள் பயாலாஜிக்கல் வேஸ்ட். அதாவது, இவர்கள் மனிதக் கழிவுகள். எனவேதான், இவர்களைக் கண்டறிந்து, இவர்களை மீனைப் பிடிப்பதுபோல் தேடிப்பிடித்து, இவர்களை தற்கொலை மனநிலைக்கு தயார் செய்து, கடைசியில் 50-ஆவது நாளில் இவர்களின் முழு விருப்பத்தோடு இவர்களை தற்கொலை செய்யவைத்து, இந்தப் பூமியின் பாரத்தில் இருந்து இவர்களுக்கு விடுதலை கொடுக்கிறேன். என்னைப் போய் குற்றவாளி என்கிறீர்களே?’.

*

அதாவது, நமது எதிர்கால நம்பிக்கையை, நமது குழந்தைகளை, நம் நாட்டை வளமான நாடாக ஆக்கும் வல்லமை பெற்ற இளைஞர்களை மனிதக் கழிவுகள் என்கிறான் அவன். அதற்கென்று நம் சந்ததி எதில் மூழ்கி பொன்னான நேரத்தை தொலைத்துக்கொண்டிருக்கிறதோ அந்த செல்பேசி விளையாட்டை வைத்தே அவர்களை அழிக்கிறான். அதற்கு காரணம் பெற்றோரும், பள்ளியும் என்கிறான். இந்த அழிவுக்குப் பெற்றோரும் பொறுப்பு, அந்தப் பள்ளியை நடத்தும் அரசும், அதன் வழி ஆசிரியர்களும் பொறுப்புதான்.

இந்தத் தற்கொலை விளையாட்டை உருவாக்கியவனை ரஷ்ய காவல் துறை கைது செய்தாலும், இந்த ‘புளு வேல்’ விளையாட்டை முழுமையாக அழிக்க முடியவில்லை. இந்த கேமில் இருந்து ஒரு வேளை சுதாரித்துக்கொண்டு தப்பினால், அவர்களையும் இவன் சும்மா விடுவதில்லை. மற்றவர்களை இந்த விளையாட்டின் மூலம் தற்கொலை செய்வதற்கு அவர்களை வழிகாட்டியாக செயல்பட வைத்துவிடுகிறான். உலகத்தின் பல மூலைகளில் இருந்து இந்த விளையாட்டை இவர்கள் நடத்தி, எங்கெல்லாம் தன்னம்பிக்கையற்ற இளைஞர்கள், சோகத்தை, தனிமையை சுமந்துகொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் தூண்டில் மீன் மாதிரி இவன் தேடித் தேடிப் பிடிக்கிறான். அவர்களை தற்கொலை செய்யவைக்கிறான்.

இந்தியாவில் மும்பையில் ஆரம்பித்தவன், கேரளாவுக்குள் புகுந்து, தமிழ்நாட்டிலும் இறங்கி பல்வேறு மாணவ, மாணவிகளை தற்கொலை செய்யவைத்திருக்கிறான். இதில் பெரும்பாலும் தற்கொலை செய்தவர்கள் எழுதிவைப்பது இது ஒரு வழிப்பாதை, போனால் திரும்ப முடியாது என்பதே. இதில் பெரும்பாலும் இந்த விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இல்லாதவர்கள்தான் இந்த விளையாட்டின் மூலம் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இதில் ஒரே ஒரு மாணவி மட்டும் பாண்டிச்சேரியில், அவளது நண்பர்கள் இந்த ‘புளு வேல்’ விளையாட்டை பற்றித்தெரிந்து கொண்ட விழிப்புணர்ச்சியினால், அந்தப் பெண் தன்னுடைய தொலைபேசியில் தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ எவ்வித அந்தரங்க புகைப்படங்களையோ, வீடியோவையோ, அவள் தொலைபேசியில் டிக்டாக் மூலமாகவோ, முகநூல் மூலமாகவோ, இன்ஸ்டாகிராம் மூலமாகவோ, யூடியூப் மூலமாகவோ எடுத்துவைக்கவில்லை என்பதால், இந்தப் புளு வேல் தற்கொலை விளையாட்டில் இருந்து, தனது நண்பர்கள் உதவியுடன் தப்பித்து வந்துவிட்டாள்.

இது எதனால் நடக்கிறது. பெரும்பாலும் இன்றைய பரபரப்பான சூழலில் குடும்பத்தில் அனைவரிடமும் அலைபேசி இருக்கிறது. அதில் ஆண்ட்ராய்டு செயலி இருக்கிறது. இன்டெர்நெட் இருக்கிறது. அதுவும் குறைந்த செலவில் கிடைக்கிறது. ஒரு தொலைக்காட்சி பார்ப்பதற்கு அடிதடி நடந்த காலம் போய், அப்பா, அம்மா, குழந்தைகள் கைகளில் இருக்கும் மொபைல் போன் மூலம் எல்லாவற்றையும் தனித்தனியே தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பார்க்கும் காலம் வந்துவிட்டது. குடும்பமாக உட்கார்ந்து பேசி, சிரித்து மகிழ்ந்து சாப்பிட்ட காலம் போய்விட்டது. தனித்தனியாக சாப்பிட்டும், சில நேரங்களில் சாப்பாட்டையே தவிர்க்கும் காலம் வந்துவிட்டது. இரவு தனித்தனி படுக்கையறை, அதிக நேரம் கண்விழிக்க வைக்கும் காலம் வந்துவிட்டது. அதிக நேரம் கண் விழித்தால் வாழ்க்கை சுருங்கும் என்பதை உணரக்கூட நேரமில்லை நமக்கும், நம் சந்ததிக்கும்.

அதிக நேரம் கண்விழித்து கேளிக்கையில் நேரத்தைக் கழிக்கும் மாணவர்களால் பள்ளியில் படிக்க முடியவில்லை. கவனச்சிதறல் ஏற்படுகிறது. தேர்வு தோல்வியில் முடிகிறது. அரியர்ஸ் வைக்கும் நிலை ஏற்படுகிறது. தனக்குத் தானே தாழ்வு மனப்பான்மை வருகிறது. இந்த படிப்பு நமக்கு ஒத்துவராது என்று பிடித்த படிப்புக்கு மாறிவிடும் மாணவர்கள் எவ்வளவோ தேவலை. ஆனால் அதை காரணம் காட்டி, பெற்றோர் விருப்பத்துக்கு மாறாகச் செய்கிறான்; இவன் எதற்கும் லாயக்கு இல்லை என்று திட்டும் பெற்றோர்கள், மாணவர்களுக்கு மன அழுத்தத்தைதான் கொடுக்கிறார்கள்.

பள்ளியில் படிக்கும் மாணவன் அம்மாவிடம் பள்ளியில் நடந்ததைச் சொல்ல வரும்போது பால் காய்ச்சிக்கொண்டிருந்தாலும், அதை சிம்மில் வைத்துவிட்டு பேசும் தாய்மார்கள் இப்போது இருக்கிறார்களா? அதில் நீங்கள் உண்டு என்றால் உங்கள் குழந்தையை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்று அர்த்தம். ‘போடா, எனக்கு நேரமாகிவிட்டது’ என்று ஓடும் தாய்மார்கள் என்றால், ‘புளு வேல்’ போல பல்வேறு தேவையில்லாத அற்பங்கள், உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் ஏற்படுத்திய இடைவெளியில் போய் உட்கார்ந்துகொள்ளும். அப்பாவும் மகனும் எதிரிகளைப்போல் எத்தனை வீட்டில் வாழ்கிறீர்கள்? காரணத்தை அறிந்து நண்பர்களாக மாறவில்லை என்றால், உங்களுக்குள் இடைவெளி உருவாக நீங்களே காரணமாகிவிடுகிறீர்கள். அதுதான் புளு வேல் கேமுக்கும், பப்ஜி கேமுக்கும் தேவை. பப்ஜி உங்கள் குழந்தைகளிடம் வக்கிர எண்ணங்களையும், எதிர்ப்பவரைக் கொன்று தீர்க்க வேண்டும் என்ற கொடிய எண்ணத்தையும் வளர்த்துவிடும். இத்தகைய கொடூர விளையாட்டுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஒரு நல்ல அரசு இயங்குகிறது என்றால் இதைக் கண்டுணர்ந்து தடை செய்ய வேண்டும்.

பெண்களுக்கும், பையன்களுக்கும் காதல் என்பது போய், இது ஓர் அனுபவம், அனுபவிப்பது வரை அனுபவிப்போம் என்று நிலை இன்றைக்கு வந்துவிட்டது. அதற்கு நுகர்வோர் கலாசாரம் நம்மை இட்டுச் சென்று இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வெளியே வர தெரியவில்லை என்றால் - தாழ்வு மனப்பான்மை தாக்குகிறது, புளுவேல் கேமுக்கு இரை அதுதான். காதலியைக் கொலை செய்யும் நிலை உருவாகிறது, 2 குடும்பத்தின் வாழ்க்கையும், பலரது கனவுகளும் அழிக்கப்படுகின்றன. உங்கள் குழந்தை தனிமையை விரும்புகிறது; ஒதுங்கிக் காணப்படுகிறது என்றால் உடனடியாக அதைக் கண்டு உணருங்கள். அது உபயோகிக்கும் சமூக வலைத்தளத்தில் வைக்கும் ஸ்டேட்டஸ் என்னவென்று பாருங்கள். அது சோகமாக இருந்தால், வெறுப்பாக இருந்தால், இவர்கள்தான் ‘புளு வேல்’ போன்ற தற்கொலை விளையாட்டுக்குத் தள்ளப்படுபவர்கள். கண்டு உணர்ந்து இடைவெளி குறைத்து உடனடியாகக் காப்பாற்றுங்கள்.

‘64 கோடி இந்திய இளைஞர்கள்தான் இந்திய நாட்டின் சொத்து’ என்றார் டாக்டர் அப்துல் கலாம். இன்றைக்கு அவர்கள்தான் இதற்கு பலியாகும் நிலையில் இருக்கிறார்கள் என்றால் மிகவும் வருத்தமளிக்கிறது.

தொழில் செய்து நட்டம் அடைந்தால், வாழ்க்கையை வெறுக்கத்தக்க அனுபவத்தை கொடுக்கிறது வட்டிக்கடன் தொல்லை, சாராயக் கடை. ஒரு ‘புளு வேல்68 கேம் போல் இளம் வயதில் தானே தனக்கு தெரிந்தே தற்கொலை செய்யும் அனுபவத்தை கொடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 35-45 வயதுக்குள் இன்றைக்கு உயிரை இழந்திருக்கிறார்கள் தமிழகத்தில்.

அன்புக்கு இடைவெளி கொடுத்தால், வம்பு வந்து உங்கள் வாழ்க்கையில் வழக்காடும். அறிவுக்கு இடைவெளி கொடுத்தால் அரசியல் கழிவுகள் ஆட்சி பீடத்தில் ஏறும், அது உங்கள் எதிர்காலத்தை அழிக்கும்.

உங்கள் கனவுகளை, இலட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com