Enable Javscript for better performance
அத்தியாயம் - 21- Dinamani

சுடச்சுட

  
  PONRAJ_2061524

   

  அறிவால் பாலைவனமும் சோலைவனமாகும்!

  ‘‘பசிப்பிணியைப் போக்குவோம்; உணவு பாதுகாப்பை உறுதி செய்வோம்; கூடுதலான சத்துகள் கொண்ட உணவை உருவாக்குவோம்; நீடித்த நிலைத்த விவசாயத்தை உருவாக்குவோம்’’ என்பது ஐக்கிய நாடுகள் சபையால் செப்டம்பர் 2000-ஆவது ஆண்டில் மில்லினியம் (1000 ஆண்டுகளுக்கான) வளர்ச்சிக்கான (Millennium Development Goals) இலக்கில் முதல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

  விவசாயத்தையும், உணவு உற்பத்தியையும் இன்றைய பின்னைடைவு நிலையில் இருந்து, அதாவது எவ்வித தட்பவெப்பச் சூழல், மழை வெள்ளம், வறட்சி, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தினால் ஏற்படும் விளைவுகள், கட்டுப்படியாகாத விவசாயம், விவசாயம் தெரிந்த வேலையாட்கள் இல்லாத நிலைமை போன்ற பலவிதமான சூழல்களையும் தாண்டி நீடித்த, நிலைத்த தன்மையுடையதாக, எதையும் தாங்கி வளரக்கூடிய நெகிழ்திறனுடையதாக, விவசாயத்தில் ஈடுபடும் அனைவரையும், அதாவது விவசாயி முதல் உபயோகிப்பாளர் சங்கிலியில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொடுக்கும் விவசாயத்தை எப்படி உருவாக்குவது என்பது இன்றைக்கு உலகத்திற்கு முன் உள்ள மிகப்பெரிய சவால்.

  இந்தச் சவாலை வென்று நல்ல தரமான உணவை - பூச்சிகொல்லி மருந்தால் பாதிக்கப்படாமல், அதீத ரசாயன உர உபயோகத்தின் விளைவாக ஏற்படும் நஞ்சு கலப்பில்லா ஆரோக்கியமான உணவை - சுற்றுச்சூழலுக்கு மாசுபாடில்லாத வகையில், பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் வகையில், மனிதனுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் கொடுக்கும் தரமான உணவுப் பொருள்களை உருவாக்கி அதன்மூலமாக நீடித்த நிலைத்த விவசாயத்தை உணவு உற்பத்தியில் தன்னிறைவு எய்தும் வகையில் உருவாக்க வேண்டும் என்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த நிலைத்த விவசாய உற்பத்தி திட்டம்.

  இதை பீகாரும், தமிழகமும் ஓரளவு முன்னெடுத்து டாக்டர் கலாம் எடுத்த இரண்டாம் பசுமைப்புரட்சி திட்டம் கண்டிப்பாக செயல்படும் என்று நிரூபித்தது. ஆனால் இன்றைக்கு சரியாக 18 ஆண்டுகளுக்குப் பின்புதான் இந்தியா நமது நாட்டிற்கான நீடித்த நிலைத்த விவசாயக் கொள்கையை அறிவித்திருக்கிறது.

  2018-இல்தான் இந்தியாவின் மத்திய அரசு நீடித்த நிலைத்த விவசாய உற்பத்தியைக் கடைப்பிடித்து, SRI போன்ற உற்பத்தித் திறனை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று பட்ஜெட் போட்டிருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறது. வேளாண்மைக்கான பட்ஜெட் 1951-56-களில் ரூ.380 கோடியாக இருந்த நிலையிலிருந்து 2012-17-இல் 12-வது 5 ஆண்டுத் திட்டத்தில் ரூ.2.56 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. 2018-19-க்கான பட்ஜெட் ரூ.58,080 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் விவசாயச் சந்தை, போக்குவரத்து சாலை வசதிகள், நவீன சேமிப்புக் கிடங்குகள், 42 உணவு பூங்காக்கள் என்று பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

  குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு என்று மத்திய அரசால் உயர்த்தப்பட்டாலும், வெறும் விவசாய இடுபொருள்களை வைத்து மட்டும் இதை அளவிட முடியாது. விவசாயத்தோடு மற்ற செலவினங்களையும் கணக்கில் கொண்டால்தான் அது முழுமையான குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் என்று முதலாம் பசுமைப்புரட்சியின் நாயகன் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் சுட்டிக்காட்டுகிறார். இதை மத்திய அரசு நிறைவேற்றினால்தான் விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும்.

  இந்தத் திட்டங்கள் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பதைப் பொறுத்து நமது விவசாயம் வளர்ச்சிபெறும். ஆனால் அதற்கு அடிப்படை நதி நீர் இணைப்பை அதி திறன் நீர்வழிச்சாலை மூலம் உருவாக்குவது கட்டாயம். இந்த இரண்டு திட்டத்தையும் இணைத்து செயல்படுத்தினால்தான் நாம் உலகத்திற்கு உணவளிக்கும் தேசத்தில் முதல் நாடாக சீனாவை மிஞ்சி வளர முடியும். நெல் உற்பத்தித் திறனில் சீனாவிற்கு எவ்விதத்திலும் சளைத்த நாடு அல்ல என்று தமிழ்நாடும், பீகாரும் நிரூபித்திருக்கிறது. எனவே மத்திய அரசு இந்த இரண்டு திட்டங்களையும் ஒருங்கிணைந்து செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

  2008-இல் டாக்டர் கலாம், ரசாயன உரங்கள் அதிகப்படியான உபயோகம் மூலம் மண் வளம் கெட்டுவிட்டது; அதிக பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகம் மூலம் நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகள் கெட்டுவிடுகின்றன; அதனால் பல்வேறு வியாதிகள் வருகின்றன. உணவை நஞ்சாகிறது. தண்ணீர் மேலாண்மையில் பாசனத்திற்கு நீர் இல்லாததால் விவசாயம் குறைந்துவிட்டது, விலை நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாறிவிட்டன, விவசாயம் செய்ய இளைஞர்கள் யாரும் முன் வருவதில்லை. இத்தனை பிரச்னைகளுக்கும் என்ன தீர்வு என்று டாக்டர் கலாமுடன், டாக்டர் ஒய்.எஸ். ராஜன். டாக்டர் சிவதாணுப்பிள்ளை, டாக்டர் பாலகிருஷ்ணன், மேஜர் ஜெனரல் சுவாமிநாதன் அவர்களோடு நானும் சேர்ந்து விவாதித்தோம்.

  அறிவியல் சார்ந்த நவீன வேளாண்மை திட்டங்களை இந்தியாவில் எந்தப் பல்கலைக் கழகங்கள் முன் எடுத்திருக்கிறது என்று ஆய்வு செய்யச் சொன்னார். நான் பல்வேறு இந்திய பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்களுடன் கலந்து உரையாடி, அவர்களைச் சந்தித்து உயிரி தொழில்நுட்பம், நவீன விவசாயத்தின் ஆராய்ச்சித் திட்டங்களைப் பற்றி உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பிரசித்தி பெற்ற மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை தலைவர் டாக்டர் கே. தர்மலிங்கம், பயோஇன்பர்மேட்டிக்ஸ் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் டாக்டர் முருகேச பூபதி, டாக்டர் ராமசாமி, உயிரி எரிபொருள் ஆராய்ச்சித் துறை தலைவர் டாக்டர் பரமாத்தமா போன்ற பல்வேறு பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் விவாதித்தபோது, திசு வளர்த்தல் மூலமும், மரபணு பொறியியலில் பல்வேறு ஆராய்ச்சிகளை எப்படி முன்னெடுத்து வருகிறார்கள் என்பதையும், அதில் இந்தியாவின் நிலை என்ன என்பதையும் அதை டாக்டர் கலாமிடம் தெரிவித்தேன். இந்தியா இந்தத் துறையில் எடுக்கும் முயற்சிகள் விவசாயத்தின் வளர்ச்சிக்கும், மருத்துவத் துறையில் பல்வேறு மேம்பாடுகளுக்கும் சிறப்பான பணிகளை இவர்கள் செய்து வருகிறார்கள் என்பது புரிந்தது. இவர்களின் ஆராய்ச்சிகளின் பலனை இந்தியா சரியாகப் பயன்படுத்துகிறதா என்பது இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

  மண்ணில்லா விவசாயம் ஹைட்ரோபோனிக்ஸ், அக்வாபோனிக்ஸ், ஏரோபோனிக்ஸ் ஆராய்ச்சிகள் எப்படி இருக்கின்றன என்று பார்க்கும்போது, 2008-இல் இந்தியாவில் அது முழு அளவில் ஆரம்பிக்கப்படவில்லை என்று தெரியவந்தது. உலகத்தில் மற்ற பல்கலைக் கழகங்கள் இந்த ஆராய்ச்சியில் எவ்வாறு ஈடுபடுகின்றன என்பதைப் பற்றி தேடும்போது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் இந்த ஆராய்ச்சி நல்ல வளர்ச்சியடைந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அங்கு செல்ல வாய்ப்பும் கிடைத்தது. 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-இல் 48-வது ஏரோஸ்பேஸ் சயின்ஸ் மாநாட்டுக்கு அப்துல் கலாமிற்கு டெல் அவிவ், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு நானும், ஷெரிடனும் அப்துல் கலாமுடன் சென்றோம். அந்த மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, டெல் அவிவ் பல்கலைக் கழகம் மற்றும் எஸ். நியாமன் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு இந்தியா-இஸ்ரேல் புதுக் கண்டுபிடிப்பு (India - Israel Innovation Programme) தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு இஸ்ரேல் மற்றும் இந்தியாவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். மற்றும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய திட்டங்களைப் பற்றி விவாதித்தோம். அதில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவின் உணவு உற்பத்தியை எப்படி இரண்டு மடங்காக உயர்த்துவது, பாலைவன விவசாயம், எய்ட்ஸ், மலேரியா, இதய நோய், சர்க்கரை போன்ற நோய்களுக்கு கண்டுபிடிக்க வேண்டிய புது மருந்துகள், அந்த ஆராய்ச்சியில் ஏற்படும் சோதனைகள், தண்ணீர் மேலாண்மை, தண்ணீர் சேமிப்பு, தண்ணீர் மறு சுழற்சி, கடல்நீரைக் குடிநீராக்கும் தொழில்நுட்பம் போன்றவை, எரிசக்தி சுதந்திரம் அடைவதில் இருக்கும் தொழில்நுட்பச் சிக்கல்கள், அதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள், ஏரோனாட்டிக்ஸ், ஏரோஸ்பேஸ் தொழில்நுட்பம் பற்றியும் விரிவான விவாதம் நடந்தது. இதில் கலந்துகொண்டு நமது கருத்துகளையும், அவர்களது தொழில்நுட்பம் சார்ந்த கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

  இஸ்ரேலின் சொட்டுநீர்ப் பாசனம், பசுமைக்குடில் (Green House), மண் போர்வை, நிழல் வலை போன்ற தொழில்நுட்பங்களைப் பற்றி விரிவாக ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது. இதில் 2003-இல் இருந்து சொட்டுநீர்ப் பாசனம் இந்தியாவில் விரிவாகப் பரவி இதன்மூலம் தண்ணீர் சேமிப்பு மற்றும் தாவரங்களுக்குத் தேவையான சத்துகளை நேரடியாகப் பயிர்களுக்கு கொடுக்கும் முறை ஏற்பட்டுவிட்டது. இதற்குமேல் இந்த முறையை எப்படி நேரடியாக மண்ணில்லாமல் செடிகளுக்குப் பயன்படுத்துவது என்ற விவாதத்தில் பசுமைக்குடிலில் ஹைட்ரோ போனிக்ஸ் முறையில் எப்படி மண்ணில்லா விவசாயத்தை முன்னெடுத்து வருகிறார்கள் என்று கண்டறிந்தோம். அந்த முறையில் எப்படி அதிக உணவு உற்பத்தி திறன் மேம்படுகிறது, என்பதை பற்றி செயல்முறை விளக்கம் கொடுத்தார்கள். அதோடு பாலைவன விவசாயம் செய்யும் முறை பற்றியும் கேட்டறிந்தோம். நேரில் பார்த்தோம்.

  இஸ்ரேல் பக்கம் உள்ள பாலைவனம் விவசாயம் செய்யப்பட்டதால் பசுமையாகவும், அதே பாலைவனம் பாலஸ்தீனம் பகுதியில் பாலைவனமாகவே இருப்பதைப் பார்த்தோம். காலம் காலமாக இனச் சண்டை நடந்தாலும், அறிவை விதைத்து, தொழில்நுட்பத்தை வளர்த்து உணவை அறுவடை பண்ணுகிறார்கள் இஸ்ரேலில். அதைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இஸ்ரேலில் எங்கள் பயணம் முடிந்ததும். இந்த பயணத்தில் கண்டுகொண்ட அனுபவங்களை பற்றி இந்தியாவிற்கு சென்றவுடன் நமது வேளாண்மை பல்கலைக் கழகங்கள், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், வேளாண்மை அமைச்சகங்களுக்கு இந்தியா - இஸ்ரேல் தொடர்பான ஆய்வக கூட்டு ஆராய்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வடிவமைக்க சொன்னார். அதை வடிவமைத்து, டாக்டர் கலாமிடம் கொடுத்தேன்.

  இந்தியா திரும்பியவுடன், இந்தியா-இஸ்ரேல் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் திட்டங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும், இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பினோம். சில இடங்களுக்கு என்னை அனுப்பி நேரடியாக இந்தத் திட்டங்களைப் பற்றி எடுத்துச்சொல்லி தொடர் ஆராய்ச்சிக்கு வழிவகுத்தார் டாக்டர் அப்துல் கலாம். இதன் தொடர்ச்சியாக மண்ணில்லா விவசாயம், ஏரோபோனிக்ஸ், அக்வாபோனிக்ஸ், பசுமைக்குடில் ஆராய்ச்சிக்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் எடுத்த அடுத்த முயற்சிகள் எவை? தொடர்ந்து பார்ப்போம்.

  உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai