Enable Javscript for better performance
அத்தியாயம் - 10- Dinamani

சுடச்சுட

  

  அத்தியாயம் - 10

  By விஞ்ஞானி வெ. பொன்ராஜ்  |   Published on : 26th March 2019 12:35 PM  |   அ+அ அ-   |    |  

   

  வையகத்தை உனதாக்கு!

  ‘முழுவதும் உப்பாக இருக்கிறேன் என்று கவலைப்பட்டதில்லை நான்; ஏனெனில் என்னில்தான்... எக்கச்சக்கமான உயிரினங்கள் உயிர் வாழ்கின்றன’ - கடல்.

  ‘முழுவதும் எரித்து அழித்துவிடும் தன்மையோடு இருக்கிறேன் என்று கவலைப்பட்டதில்லை நான்; ஏனெனில் என்னில் இருந்துதான் ஒளிவடிவம் உருவாகிறது’ - நெருப்பு.

  ‘முழுவதும் அடைபடாமல் இருக்கிறேன் என்று கவலைப்பட்டதில்லை நான்; ஏனெனில் என்னில் இருந்துதான் மூச்சு காற்று உண்டாகிறது’ - காற்று.

  ‘முழுவதும் மேடும், பள்ளமும், சீரற்று இருக்கிறேன் என்று கவலைப்பட்டதில்லை நான்; ஏனெனில் ஒட்டுமொத்த சூரிய குடும்பத்தில் என்னில்தான் உயிர் வாழ்ந்திடும் சூழல் நிலவுகிறது’ - பூமி.

  ‘முழுவதும் இருளாக இருக்கிறேன் என்று கவலைப்பட்டதில்லை நான்; ஏனெனில் என்னில்தான் எக்கச்சக்கமான விண்மீன்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன’ - ஆகாயம்.

  கவலைப்பட்டால் மட்டும் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. ஆனால், கவலைப்படாமலும் இருக்க முடியாது. கவலை வந்தால், அதிலிருந்து மீண்டெழும் வல்லமை நமக்கு இருந்தால் மட்டுமே, நம்மால் கவலையை வெற்றிகொண்டு எழ முடியும். கவலையில்லா மனிதன் என்று ஒருவனும் இல்லை. ஆனால் அதை வெற்றிகொள்ளும் சூத்திரம் தெரிந்தவர்கள் சில பேர்தான் உண்டு. பிரச்னைகள் இல்லாத மனிதன் இல்லை; ஆனால் அந்த பிரச்னையை வெற்றிகரமாகச் சமாளித்து, அதை மேலாண்மை செய்து, பிரச்னைகளைத் தாண்டும் வல்லமை நமக்கு இருக்கிறதா என்பதைப் பொறுத்துதான் நமது வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுத்து வெற்றிபெறும் சூத்திரம், தோல்வியைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதால் வருவதல்ல; அந்த தோல்விக்கான காரணத்தை உணர்ந்த அடுத்த வினாடி உனது எண்ணம் அடுத்த வெற்றிக்கான விதையைத் தேடி, விதைப்பதில்தான் இருக்கிறது.

  ஐம்பூதங்கள் தன்னில் இருக்கும் நல்லனவற்றை மனித குலத்திற்குத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கிறது. பஞ்ச பூதத்தில் எது கூடினாலும், குறைந்தாலும் உலகம் அழிவைச் சந்திக்கும் என்பதற்கு வெள்ளமும், வறட்சியும் உதாரணங்கள். ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது’ என்பார்கள். உலகமும், உடலும் இந்த பஞ்ச பூதத்தின் சரியான விகிதாச்சார அளவில் இயங்குகிறது. நம் உடல் பஞ்ச பூதத்தால் ஆனது என்பதால், பஞ்ச பூதத்தில் எது கூடினாலும் குறைந்தாலும் நமக்கு வியாதியாக மாறுகிறது.

  நம்பிக்கை தான் நம் எண்ணங்களாக

  மலர்கின்றன.

  எண்ணங்கள் தான் நம்

  வார்த்தைகளாக வெளிப்படுகின்றன.

  நம் வார்த்தைகள் தான் நமது

  செயல்களைத் தீர்மானிக்கின்றன.

  நமது செயல்கள் தான் நமக்கு

  பழக்க வழக்கங்களாக மாறுகின்றன.

  நம் பழக்க வழக்கங்கள் தான் நமக்கு

  மதிப்பைக் கொடுக்கின்றன.

  அந்த மதிப்பு தான் நம் தலைவிதியை

  நிர்ணயிக்கிறது.

  நேர்மறை எண்ணங்களான அன்பு, பண்பு, பாசம், நம்பிக்கை, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல் உடலின் செயல்பாட்டை ஆரோக்கியமானதாக வைக்கிறது. எதிர்மறை எண்ணங்கள் கோபம், ஆத்திரம், அகங்காரம், ஆணவம், திமிர், காம இச்சை போன்ற தீய சிந்தனைகள் நம் உடலில் உள்ள பஞ்ச பூதத்தின் சமநிலையை பாதித்து, அதன் அளவைக் கூட்டி, உடம்பில் வியாதியை உருவாக்குகிறது.

  நம் ஒவ்வொருவரது உடலிலும் 56 லட்சம் கோடி செல்கள் இருக்கின்றன. இவற்றிக்குத் தேவையான பிராண வாயு, மற்றும் ரத்தம் சீராகத் தொடர்ந்து கிடைத்தால் நம் வாழ்நாள் அதிகரிக்கும்.

  ‘இறைவன் தந்த ஆகமப் பொருளை, திருமந்திரம் என்கின்ற ஒப்பற்ற தமிழ் வேதமாம் மூவாயிரம் பாடல்களை ஆண்டுக்கு ஒரு பாடலாகப் பாடினார் யோக நிலையில் ஒரே உடலை 3000 ஆண்டுகள் பற்றி நின்ற திருமூலர்’ என்று சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.

  அறிவியல் சொல்கிறது: “Thoughts are converted into Matter. If the matter is negative, then it is converted into neuropeptides, which releases stress hormones” அதாவது நம் எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்களாக இருந்தால், கெட்ட வார்த்தைகளாக வெளிப்பட்டு, தீய செயல்களாக மாறும். அப்போது, நம் உடம்பில் நியூரோபெப்டைட்ஸ் எனப்படும் வேதிப் பொருள், மன அழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோன்களை தானாகவே சுரக்கிறது. அது நம் உடலில் இருக்கும் பஞ்ச பூத சமநிலையைக் குலைக்கிறது, அதனால் நம் உடல் உறுப்புக்களுக்கு கிடைக்கும் தேவையான பிராண வாயுவையும், ரத்தத்தையும் சம அளவில் கிடைக்க தடையை ஏற்படுத்துகிறது. பஞ்ச பூதத் தடை எங்கெல்லாம் ஏற்படுகிறதோ அங்கு வியாதி உருவாகிறது. நோயாளிகள் என்றால் அவர்களை பார்த்து நாம் பரிதாபம்தான் பட வேண்டுமே ஒழிய, அவர்களைப் பார்த்து கோபப்படக் கூடாது.

  மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

  அற்றது போற்றி உணின். (குறள் 942)

  உணவே மருந்து என்பதை உணர்ந்தவர்கள், பசித்து உண்பார்கள். நொறுங்கத் தின்றால் 100 வயது என்பதை உணர்ந்த அவர்கள், 26 வகையான உமிழ் நீரை கலந்து உணவை மென்று நீராக வாயில் மாற்றி அனுப்புவார்கள். அவர்களுக்கு மட்டுமே உணவு மருந்தாகும்.

  எனவே உணவும், உணர்வும் சரியாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி உறுதி. இது பாதிக்கப்படும்போது, நாம் மருத்துவரை அணுகுகிறோம். வியாதிக்கு மருத்துவமனை சென்று வியாதியைக் குணமாக்கி அல்லது அதிகமாக்கி திரும்புகிறோம். இல்லை பழியாகி மேலே செல்கிறோம். இதை விதி என்று நினைக்கிறோம். ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்று நினைப்பவர்களில் சிலர்தான் சாதனை படைக்கிறார்கள்.

  25 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் முகப்பருவுக்கு மருந்து எடுக்கப் போய் அதனால் உடல் எல்லாம் புண்ணாகி, மலம் கழிப்பதில் ரத்தம் வந்து, 7 ஆண்டுகள், தோல் வியாதியால் அவதிப்பட்டு ஆங்கில மருத்துவம் முதல் அனைத்து மருத்துவமும் செய்து பார்த்து குணமாகாமல், வேதனைப்பட்டு, வாழ்க்கையின் விளிம்புக்கு சென்றார். ஒரு பிரபல அக்குபஞ்சர் மருத்துவரிடம் சென்று குணமடைகிறார். மக்களுக்கு மருந்தில்லா மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற கனவு பிறக்கிறது அப்போது.

  ஒரு குருவிடம் தீட்சை பெற்று தியான நிலையில் இதைச் சிந்திக்கும்போது, இதுவரை உடல் உறுப்புகளுக்கு நாடி பார்த்து, வாதம், பித்தம், கபத்திற்கு மருந்து கொடுத்து குணமாக்கும் சித்தா, ஆயுர் வேதத்தை தாண்டி, பஞ்ச பூதத்திற்கு நாடி பார்க்க முடியுமா? என்று கேள்வி எழுப்புகிறார். ஆராய்ச்சி சிந்தனை சிறகடித்துப் பறக்கிறது. பஞ்ச பூதத்தைத் தாண்டி 6 வது குளிர்ந்த நெருப்பை கண்டறிந்து, ஒவ்வொன்றிலும் மற்ற அனைத்தும் அடக்கம் என்பதை அறிந்து, அதை சேர்ந்து 36 பூத சக்திகள், அதன் சுழற்சி விதிகள், அதன் முப்பரிணாமத்தை கண்டுபிடித்து 108 ஆக்கி, அதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடிகளையும், வியாதி அமைப்புகளையும் கண்டறிந்தார்.

  பஞ்ச பூத சக்திகளையும் பிரபஞ்ச மற்றும் உயிர் சக்திகளையும் சமன் செய்யும்போது உயிர் சக்தியே, நோய்களைத் தடுக்கும், எதிர்க்கும், அழிக்கும் சக்தியாக மாறி வேலை செய்கிறது. அனைத்து மருத்துவ முறைகளிலும் உடல் நமக்கு காட்டும் நோய்களுக்கான அறிகுறிகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கப்படுகிறது: எந்த நோய்க்கும் மூலக் காரணங்களை அறிந்துதான் மருத்துவம் பார்க்க வேண்டுமே தவிர அறிகுறிகளுக்கு அல்ல. ஆனால் இந்த மருத்துவ முறையில் மூல காரணங்களை அறிந்து மட்டுமே மருத்துவம் பார்ப்பதால் உறுப்புகள் செயல் இழப்பையும் சரி செய்ய முடியும். எந்தவிதப் பிரச்னைகளும் பிற்காலத்தில் வராமல் காத்துக்கொள்ள முடியும். மருந்துகளைவிட மிக வேகமாக இந்த பஞ்ச பூத மருத்துவ முறை வேலை செய்யும் என்பதே ஆகும்.

  உடல், மனம், உயிர் சார்ந்த சகல நோய்களுக்கும், மற்ற மருத்துவத்தில் தீர்க்க முடியாத நோய்களுக்கும், மருந்தில்லாமல், தீர்வு காண முடியும் என்பதே இவரது கண்டுபிடிப்பு. இதற்காக உலக நாடுகளின் கூட்டமைப்பான PCT என்னும் 152 நாடுகளின் காப்புரிமை கூட்டுறவு ஒப்பந்த அமைப்பில் பதிவு செய்துள்ளார். இவரது கண்டுபிடிப்பிற்காக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளால் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. தனது பஞ்ச பூத மருத்துவ முறை கண்டுபிடிப்பிற்காக இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளில் எழுத்துரிமம் பெற்றுள்ளார். மேலும் முத்திரை பதிப்பு காப்புரிமை பெற்றுள்ளார்.

  7 ஆண்டுகள் நோய்வாய்ப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்றவர், தன்னை உணர்ந்தார். தரணியை வாழவைக்கும் மருத்துவ சூத்திரத்தை 10 வருடம் கடின உழைப்பால், பல்வேறு கேலிகளையும், ஏச்சுக்களையும் அவமானங்களையும், சோதனைகளையும் தாண்டி இந்த பஞ்ச பூத மருத்துவ முறையைக் கண்டறிந்தார், மருந்தில்லாமல் குணமாக்கும் வல்லமை பெற்றார். இன்றைக்கு தமிழகத்தில், இலங்கையில் அவர் இந்த மருந்தில்லா மருத்துவத்தால் ஆயிரக்கணக்கானோரை குணமாக்குகிறார். அவர்தான் குருபிரான் ஞானபரஞ்சோதியடிகளிடம் தீட்சை பெற்று, இந்த ஞானத்தைப் பெற்ற டாக்டர் ஆதி ஜோதிபாபு என்ற தமிழர். இன்றைக்கு வெளிநாடுகளில் குணப்படுத்தமுடியாத மோட்டார் நியூரோ வியாதியால் பாதிக்கப்பட்டவர்களும், டயாபடீஸ் போன்ற அனைத்து வியாதிகளையும் குணப்படுத்திகிறார் என்றால், தனது பிரச்னையில் இருந்து மனித குலத்திற்கான தீர்வை அவர் கண்டுபிடித்திருக்கிறார்.

  ஆக, நண்பா, நீ அற்பமானவன் என்ற கவலைகளைக் களைந்துவிட்டால், ஆச்சரியமான மனித பிறப்பு நீ என்ற உண்மை புரிந்திடும்... உனக்கு. நீ அடக்கப்படும் மரண பிறப்பு என்ற கவலைகளைக் களைந்துவிட்டால், நீ இந்த அண்டம் உருவாக்கிய இறைவனின் சாயல் என்ற ஆழமான அறிவு புரிந்திடும். நீ சாதாரண மனிதன் என்ற கவலைகளைக் களைந்துவிட்டால்தான் சாதிக்க உன்னாலும் முடியும் என்ற சங்கதி புரிந்திடும். நீ ஒன்றுமில்லா உருவம் என்ற கவலைகளைக் களைந்துவிட்டால்தான் ஓசையின்றி வாழ்ந்திடும் உன்னத இறைவனின் ஒளி விளங்கிடும். கவலைகளைக் கட்டு! காரியந்தனை தீட்டு! கண்ணியத்தைக் கூட்டு! கனவுதனைக் காட்டு! காலம் கடந்துபோனாலும் முயற்சிதனை ஊட்டு! ஊக்கம்தனை போட்டு வென்றிடு! வென்றிடு! விளங்காப் புதிரான உன் வாழ்வை புதிதாக்கு! வையகத்தை உனதாக்கு!

  உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai