Enable Javscript for better performance
அத்தியாயம் - 16- Dinamani

சுடச்சுட

  

  அத்தியாயம் - 16

  By விஞ்ஞானி வெ. பொன்ராஜ்  |   Published on : 09th May 2019 12:35 PM  |   அ+அ அ-   |    |  

  PON_NEW094357

   

  மரங்களை வளர்ப்போம்.. நதிகளை இணைப்போம்!

  20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைக்கு இந்தப் பூமி பசுமையாக மாறியிருக்கிறது என்று நாசா கண்டறிந்திருக்கிறது. இந்தப் பூமியில் பெரும்பாலான பசுமை மாற்றத்திற்கு என்ன காரணம்? இந்தச் சாதனைக்கு ஒட்டுமொத்த பாராட்டும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும்தான் உரித்தாகும் என்கிறது நாசா. செயற்கைக்கோள் மூலம் 2000-2017 வரை எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து நாசா ஆராய்ந்ததில் இந்த உண்மையைக் கண்டறிந்து, அதை Nature Sustainability என்ற ஆராய்ச்சிப் பத்திரிகையில் 2019-இல் வெளியிட்டிருக்கிறார்கள்.

  செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்ட தகவல், பசுமைத் தாவரங்களின் இலைப் பரப்பு எவ்வாறு அதிகரித்திருக்கிறது என்பதை விளக்குகிறது. இதற்கு நேரடி மற்றும் மறைமுகக் காரணிகள் எவை என்று பார்க்கும்போது, நிலத்தை மனிதன் எவ்வாறு திட்டமிட்டு பயன்படுத்தி மேலாண்மை செய்கிறான் என்பது நேரடிக் காரணி. அதன்மூலமாக ஏற்படும் தட்பவெட்ப மாறுபாடு, கரியமில வாயு (CO2) கருவுறுதல் மற்றும் குறைவுறுதல், நைட்ரஜன் படிவு, இயற்கை சீரழிவில் இருந்து மீண்டெழுதல் போன்றவை மறைமுக்க் காரணிகளாகின்றன.

  உலகத்தின் 6.6% பசுமைத் தாவர உற்பத்திப் பரப்பளவில், 25% பசுமைத் தாவரங்களின் இலைப் பரப்பு சீனாவில் இருக்கிறது. சீனாவின் பசுமைத் தாவரப் பரப்பளவில் 42% அடர்த்தியான காடுகளையும், 32% விவசாயப் பரப்பளவையும் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் பசுமைத் தாவர உற்பத்திப் பரப்பளவில் ஒட்டுமொத்த விவசாயப் பரப்பு 82%, அடர்த்தியான காடுகள் 4.4% சதவீதம்தான் இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த உலகத்தில் இந்த 2 நாடுகள்தான் பசுமைத் தாவர இலைப் பரப்பளவை உலகத்தில் கூட்டியிருக்கின்றன.

  மண் அரிப்புத் தடுப்பு, காற்று மாசுக் குறைப்பு, தட்பவெட்ப நிலை மாறுபாட்டினால் ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல் போன்ற குறிக்கோள்களை எய்துவதில் சீனா, காடுகளை, வனங்களைப் பாதுகாப்பதிலும், அடர்த்தியான வனங்களை உருவாக்குவதிலும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மிகப்பெரிய திட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. இந்தியா இதில் கொள்கைரீதியாகவும், செயல்பாட்டுரீதியாகவும் இன்னமும் பின்தங்கித்தான் இருக்கிறது. விளைநிலங்களைப் பண்படுத்துவது, பல்வேறு பயிர்களை ஊடுபயிராக்கி விவசாயத்தை வளர்ப்பதில் இரண்டாயிரமாவது ஆண்டில் இருந்து உணவு உற்பத்தியை சீனாவும், இந்தியாவும் 35% கூட்டியிருக்கின்றன. அதனால் இந்த இரண்டு நாடுகளும், 2.5 பில்லியன் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு எய்திவிட்டது என்ற நிலைக்கு தங்களைத் தகுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

  ஆனால் 2050-இல், உலகில் வாழும் 9 பில்லியன் மக்களுக்கு உணவளிக்கும் தேசம் சீனாவும் இந்தியாவும்தான். அதற்கு சீனா முப்பரிமாண முறையில் தன்னை தகுதிப்படுத்திக்கொண்டு வருகிறது. அதாவது முதலில் விவசாயத்தை முக்கியமான கொள்கையாக்கி, விவசாயத்தைப் பெருக்கி உற்பத்தித் திறனை அறிவியல் முறையில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரண்டாவதாக, விவசாயத்தை மேம்படுத்தத் தேவையான நீர்ப்பாசனத்திற்கும், குடிநீருக்கும், நீர் போக்குவரத்திற்கும் 2000 கி.மீ. தொலைவு நீர்வழிச் சாலை மூலம் யாங்ட்ஸி நதியை வைத்து வடக்கையும், தெற்கையும் இணைத்துவிட்டது. மூன்றாவதாக, மழை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதால் 42% காடுகளை உருவாக்கிவிட்டது. இது அனைத்தும் கடந்த 20 ஆண்டுகளில் சீனா சாதித்து இருப்பதை இன்றைக்கு செயற்கைக்கோள் மூலம் நாசா வெளிப்படுத்தியிருக்கிறது.

  அதே நேரம், இந்தியா இந்த மூன்றிலும் பின்தங்கியிருக்கிறது. செயற்கைக்கோள் படத்தின் மூலம் இந்தியாவின் பசுமைத் தாவர உற்பத்திப் பரப்பளவில் பார்த்தால் வடமேற்கு மாநிலங்கள்தான், ராஜஸ்தானை தவிர்த்து அதிகமாக விவசாயத்தின் பரப்பளவை அதிகப்படுத்தியிருக்கின்றன. கிழக்கு மாநிலங்கள் மற்றும் தென் இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு மிகவும் பின்தங்கி இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

  மழையை காலத்தில் பெய்யவைக்க அடர்த்தியான காடுகளை இந்தியாவில் உருவாக்க வேண்டும். வருடா வருடம் பெய்த மழையில் உருவாகும் வெள்ளத்தில் 90 சதவீதம் கடலில் கலப்பதைத் தடுத்து, அதில் 50 சதவீதத்தையாவது சேமிக்க நதிகளை இணைத்து, அதிதிறன் நீர்வழிச் சாலைகள் மூலம் விவசாயத்தைப் பெருக்க வேண்டும். நதிநீர் இணைப்புப் பாதையின் இருபுறமும் உயர்ந்த காடுகளை உருவாக்குவதன் மூலமும், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேல் அடர்ந்த உயரமான காடுகளை, வனங்களை உருவாக்குவதற்கு சிறப்பு திட்டம் தீட்டி செயல்பட்டால் மட்டுமே, இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற முடியும் என்பது நிதர்சனமான உண்மையாக இந்த நாசாவின் செயற்கைக்கோள் தகவல் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

  டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் முதல் பிரித்வி-1 ஏவுகணையை 1988-இல் வெற்றிகரமாக உருவாக்கி அதை விண்ணில் செலுத்தி எதிரியின் இலக்கை அழித்து சாதனை செய்தபொழுது, அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பந்த், டாக்டர் கலாமிடம் கேட்டார்: இந்த மிகப்பெரிய முதல் சாதனையை செய்த உங்களை இந்திய அரசு பாராட்டிவிட்டது. ஆனால், தனிப்பட்ட முறையில் வீடு, கார் மற்றும் பணம் ஏதாவது வேண்டுமென்றால் சொல்லுங்கள், நான் ஏற்பாடு செய்கிறேன். அதற்கு அப்துல் கலாம், ‘ஆம் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தேவை இருக்கிறது, அதை நீங்கள் செய்து தருவீர்களா?’ என்று கேட்டார். ‘தாராளமாகச் செய்து தருகிறேன். சொல்லுங்கள்’ என்றார். உடனே கலாம் சொன்னார்: ‘ஹைதராபாத்தில் அக்னி மற்றும் ஏவுகணைத் திட்ட ஆராய்ச்சிக்காக நான் மாநில அரசிடம் நிலம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு மலையைக் கொடுத்திருக்கிறார்கள். அதில் கல்லும் மண்ணும்தான் இருக்கிறது. அதை சீர்படுத்தி நான் ஆராய்ச்சி நிலையத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால், அதற்கு முன்பாக அந்த மலையை பசுமையான மலையாக மாற்ற வேண்டும் என்பது எனது கனவு. எனவே நீங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றால், எனக்கு 10 லட்சம் மரக்கன்றுகள் கொடுங்கள். அதன்மூலம் நான் எனது ஆராய்ச்சி நிலையத்தை மரச்சோலையாக மாற்றிக்கொள்வேன். ‘ஏதாவது தனிப்பட்ட முறையில் கேட்பார் என்று பார்த்தால், இவர் மரக்கன்றல்லவா கேட்கிறார்’ என்று அதைக் கொடுத்தார், பாதுகாப்புத் துறை அமைச்சர் பந்த். இன்றைக்கு ஹைதராபாதில் வெறும் கல்லும் மண்ணுமாக இருந்த மலையில் உருவாக்கப்பட்ட ஏவுகணைக்கான ஆராய்ச்சி மையமாக விளங்கும் RCI (Research Centres Imarat), பசும் சோலைக்குள் அமைந்திருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு முறை ஹைதராபாத் போகும்போதும், இரவு அந்தச் சோலைக்குள் அழைத்து நடைப்பயிற்சிக்கு என்னை அழைத்து சென்று டாக்டர் அப்துல் கலாம் ஒவ்வொரு பூங்காவையும், மரங்களையும் காண்பித்து அது உருவான கதைகளைச் சொல்லும்போது, இயற்கையை எப்படி கலாம் அவர்கள் நேசித்தார் என்பதை நான் என் கண்ணார கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

  1980-களில் Climate Change என்ற தட்பவெட்ப நிலை மாறுபாட்டால் உலகம் பிரச்னைகளை வருங்காலத்தில் எதிர்கொள்ளும் என்று தெரியாத நிலையிலும்கூட, டாக்டர் கலாம் அவர்கள் மலைகளில் இயற்கையை உருவாக்க வேண்டும் என்று மரங்களை மலையில் நட்டார். அதைப் பின்பற்றிதான் ‘அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின்' சார்பாக கடந்த ஆண்டு திருப்பூர் மற்றும் சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் உதவியோடு, 300 பள்ளிகளில் 10000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் ‘கிளீன் டுடே இந்தியா டிரஸ்ட்’ உதவியுடன் உடுமலைப்பேட்டையில் ஜம்புக்கல் கரடு என்ற மலையில் 17 லட்சம் விதைப்பந்துகளை விதைத்தோம்.

  அதில் 20 சதவீதம் இன்றைக்கு மரங்களாக அந்த மலைப்பகுதிகளில் வளர்ந்து இருக்கிறது. ஆனால் இதுவே வனத் துறை செய்து அதை பராமரித்து வளர்த்தால் 50 சதவீதம் மரங்களை வளர்த்துப் பாதுகாக்க முடியும். தனியார் முன்னெடுப்பில் மரம் வளர்ப்பது, தனது வீட்டிலோ, அல்லது அலுவகத்திலோ, கம்பெனியிலோ, அல்லது நிறுவனங்களிலோ வளர்க்கும்போது, அதை பராமரித்து வளர்க்க முடியும். அதை விடுத்து, மரம் நடுவது மட்டுமே நமது கடமை; அதை வைத்து முகநூலில் போட்டு நானும் வளர்த்திருக்கிறேன் என்று யாராவது சொல்வோம் என்றால் அது வெறும் சுயபுகழ்ச்சியாக மட்டுமே இருக்கும். மாறாக, மரத்தை நட்டு, வளர்த்து, பாதுகாக்காமல் அதன் பலனை இந்த உலகம் அனுபவிக்க இயலாது.

  டாக்டர் அப்துல் கலாம், 2.5 கோடி மாணவர்களிடம் ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரங்களையாவது நட்டு, பாதுகாத்து அதை வளர்க்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுக்கவைத்தார். அது மட்டுமல்ல 8 கோடி மாணவர்கள் டாக்டர் அப்துல் கலாமை சுற்றுச்சூழல் மேம்பாட்டு தூதுவராக இந்தியாவின் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுத்தார்கள். டாக்டர் அப்துல் கலாமின் முயற்சியால் கடந்த 15 ஆண்டுகளில் குறைந்தது 10 கோடி மரங்கள் இந்தியாவில் மாணவர்களால், இளைஞர்களால் ஊன்றப்பட்டிருக்கும்; அதில் குறைந்தபட்சம் 20 சதவீதம் வளர்ந்திருந்தால் - குறைந்தது 5 கோடி மரங்களையாவது டாக்டர் அப்துல் கலாம் மாணவர்களை, இளைஞர்களை கொண்டு உருவாக்கிவிட்டுத்தான் இந்த மண்ணிலே விதைக்கப்பட்டிருக்கிறார்.

  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

  துப்பாய தூஉம் மழை (குறள் - 12)

  உண்பவர்க்கு (உயிர்களுக்கு) சாப்பிடுவதற்கு உகந்த உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பதும் மழையாகும் என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க நாம் தரையில் மரம் நட்டு, வளர்த்து, அதைப் பாதுகாப்போம்.

  நமது பூமியைப் பசுமையாக்க, நிழல் கொடுக்க, மற்றும் காற்று மாசை குறைக்க; ஆனால் கடல் கொடுக்கும் கொடையான மழையை நம் நாட்டிற்கு வருடம்தோறும் அழைத்துவர மலைகளில் அடர்ந்த காடுகளையும், வனங்களையும் உருவாக்கும் விதத்தில் மரம் நடுவோம்.

  அதை இந்த மத்திய, மாநில அரசுகளைச் செய்யவைப்போம். மழையால் உருவாகும் நதிகளை இணைத்து, அதிதிறன் நீர்வழிச் சாலையை உருவாக்கி விவசாயத்தையும், சுத்தமான குடிநீரை நமக்கு நிலத்தடி நீர் மூலம் உருவாக்கி கொடுக்கவைப்போம். சுற்றுச்சூழல் என்பது சுற்றுச்சூழலை பெருக்குவதே, குறை களைவதே.

  உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai