அத்தியாயம் - 43

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு. விவசாய உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அத்தியாயம் - 43

கிராம சுயராஜ்ஜியம் - காந்தியின் கனவும்.. ‘புரா' திட்டமும்!

இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில்தான் வாழ்கிறது.

- மகாத்மா காந்தி.

வளமான இந்தியாவைப் படைக்க ‘புரா’ திட்டத்தின் மூலம் நிலைத்த தற்சார்பு பொருளாதார வளர்ச்சியை கிராமத்தில் உருவாக்க வேண்டும்.

- அப்துல் கலாம்.

கனவு கண்டவர் மகாத்மா, அந்த கனவை நனவாக்க திட்டம் கொடுத்தவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்.

அறிவுசார் சமூகம் சாதி, மத, இன, மொழி வேறுபாட்டை அதிகப்படுத்தி அரசியல் செய்தால் உருவாகாது. அனைத்து மக்களையும் அரவணைத்து அவர்களின் பலத்தைக் கண்டுணர்ந்து, ஒருங்கிணைத்து, அறிவால் ஊக்கப்படுத்தி, வளர்ச்சியை உறுதிப்படுத்தினால் உருவாவதுதான் அறிவுசார் சமூகம். அதனால் படைக்கப்படும் நாடுதான் அறிவார்ந்த வளமான நாடு. அதற்கு அடிப்படை நீடித்த நிலைத்த அமைதியான கிராமப்புற வளர்ச்சி. மகாத்மா காந்தி விரும்பிய உண்மையான கிராம சுயராஜ்ஜியத்தைப் படைப்பதற்கு டாக்டர் அப்துல் கலாம் கொடுத்த திட்டம்தான் ‘புரா’ Provision of Urban Amenities to Rural Areas (PURA) திட்டம்.

இந்தியா பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது. ஆனாலும் வளர்ச்சி என்றால், அது நகரமயமாக்கல்தான் வளர்ச்சி என்ற கொள்கை சித்தாந்தத்தை அடிப்படையாக்கி, வளர்ந்த நாடுகளைப் பின்பற்றி தவறான கொள்கைகளின் அடிப்படையில் நமது வளர்ச்சியின் பல்வேறு பரிணாமங்களைத் திட்டமிட்டது. அதன் காரணமாக, இந்தியா இன்னும் வளர்ச்சியின் அடிப்படைக்கூறான பசியில்லா, பட்டினியில்லா, சுத்தமான, சுகாதாரமான, மேடு பள்ளம் இல்லா தேசத்தை கட்டியமைத்துவிட்டோம் என்று பெருமைப்பட முடியாது.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு. விவசாய உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2018-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த இந்திய தொழிலாளர் தொகுப்பில் 50% விவசாயத்தில் பணியாற்றுகிறார்கள். மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 17-18% பங்களிக்கிறது.

மொத்த உணவு தானிய உற்பத்தியில் இந்தியா 2018-19-ம் ஆண்டில் 281.37 மில்லியன் டன் உற்பத்தி செய்து சாதனை படைத்திருக்கிறது. 2017-18-ம் ஆண்டில் 176.3 மில்லியன் டன் பால் உற்பத்தியைக் கொடுத்து உலகத்தின் முதன்மையான பால் உற்பத்தியாளராக இந்தியா சாதனை படைத்திருக்கிறது. இந்தியா அரிசி, கோதுமை, கரும்பு, பருத்தி மற்றும் நிலக்கடலை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் உலக பழம் மற்றும் காய்கறி உற்பத்தியில் முறையே 10.9% மற்றும் 8.6% உற்பத்தி செய்து இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை 2012-ம் ஆண்டில் 512 மில்லியனில் இருந்து 4.6% அதிகரித்து 2019-ம் ஆண்டில் 536 மில்லியனாக அதிகரித்து. உலகத்தில் 30% என்ற அளவில் முதலிடத்தில் இருக்கிறது.

இவ்வளவு சாதனைகளை இந்தியா படைத்திருக்கிறது. அதனால் கிடைக்கும் பலன் மக்களை வறுமைக்கோட்டிற்கு மேலே உயர்த்தியிருக்கிறதா? பசி, பட்டினி இல்லாத வாழ்வாதாரத்தை உறுதி செய்திருக்கிறதா என்றால் கடந்த 20 ஆண்டுகால ஆட்சியை ஆராய்ச்சி செய்தால் அது மிகவும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

இந்தியா உலக பட்டினி குறியீட்டில் (Global Hunger Index) 2019-ல் இந்தியா 117 நாடுகளில் 102-து இடத்தில் இருக்கிறது. (GHI <= 9.9 Low, GHI=10 - 19.9 Moderate, GHI= 20 - 34.9 Serious, GHI=35 - 49.9 Alarming, GHI >= 50 Extremely Alarming) இந்தியாவின் பட்டினி குறியீடு 2000-ல் 38.8, 2005-ல் 38.9, 2010-ல் 32.0, 2019-ல் 30.3. அதாவது கடந்த 19 ஆண்டுகளில் இந்தியாவின் பட்டினி குறியீடு மிகவும் பயங்கரத்தில் இருந்து கவலைக்கிடத்திற்கு முன்னேறியிருக்கிறது. அது அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்து தேறி வருவதற்கு இன்னும் 20 ஆண்டுகளாவது ஆகும் என்பது 2011 வறுமைக்கோட்டிற்கும் அதை போக்கவந்த 100 நாள் வேலைத்திட்டத்திற்கும் இடைப்பட்ட இந்தியாவின் சாதனைகளைப் பார்த்தால் விளங்கும்.

2011-ம் ஆண்டின் விலையின்படி இந்தியாவில் 21.9% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் 125 கோடி மக்களில் 27 கோடிப்பேர் அதிகாரப்பூர்வ கணக்கின்படி வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் 26.16 கோடி. இதில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்ட நாட்கள் 2015-16-ல் 48.85 நாட்கள் (சராசரி சம்பளம் ரூ.154.08), 2016-17-ல் 46 நாட்கள் (ரூ.161.65), 2017-18-ல் 45.69 (ரூ.169.44), 2018-19-ல் 50.88 (ரூ.179.13), 2019-20-ல் 37.2 நாட்கள் (ரூ.180.4). ரூ.150-க்கும் மேல் ரூ. 180-க்கும் கீழ் வருடத்தில் 365 நாட்களில் சராசரியாக 43 நாட்கள் மட்டுமே 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் சம்பாதித்துள்ளார்கள். அப்படி என்றால் வறுமைக்கோடான ஒரு நாளைக்கு ரூ.140-க்கும் கீழே சம்பாதிப்பவர்கள் 27 கோடிப் பேர்.

எனவே மேற்கண்ட உண்மைகளின் அடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களைக் கணக்கிட்டால், கணக்கிடப்பட்ட 27 கோடிக்கும் மேலே ஒன்றரை மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். அப்படி என்றால் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பதாகத்தான் அர்த்தம்.

இந்தியாவில் விவசாயத்தின் மூலம் உணவு தானியம் தன்னிறைவை அடைந்துள்ளது, ஆனால் விவசாய உற்பத்திக்கு, மனித மற்றும் இயந்திர வளம் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால் விவசாயம் செய்ய சரியான ஆட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாலும், வரவுக்கு மேல் செலவுகள் இருப்பதாலும், விவசாயத்தின் நீடித்த நிலைத்த தன்மை பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, விவசாயத்திற்கு தேவையான நாட்டின் நீர்வளங்கள் மேலாண்மையில் ஏற்பட்ட சுணக்கம், அதன் மீதான அழுத்தத்தை அதிகரித்து விவசாயம் மற்றும் நீர் மேலாண்மைக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலையில் இன்றைக்கு இந்தியா இருக்கிறது. சாலை அமைப்பதற்கும், நகர விரிவாக்கலுக்கும் மரங்களை வெட்டி பாலைவனமாக்கல் மற்றும் நில சீரழிவு ஆகியவை நாட்டின் விவசாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

விவசாயத்தைச் சுற்றியுள்ள சமூக அம்சங்களும் மாறிவரும் போக்குகளைக் கண்டிருக்கின்றன. விவசாயத்தில் அதிகரித்த அளவில் பெண்களின் உழைப்பு இருக்கிறது. ஆண்கள் நகர்ப்புறத்திற்கு வேலைக்காக இடம்பெயர்வு, பெண்கள் தலைமையிலான குடும்பங்களின் அதிகரிப்பு மற்றும் உழைப்பு அதிகம் கொண்ட பணப்பயிர்களின் உற்பத்தியில் வளர்ச்சி ஆகியவை இதற்குக் காரணமாகும். பண்ணை மற்றும் பண்ணை அல்லாத செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க பணிகளைப் பெண்கள் செய்கிறார்கள் மற்றும் இந்தத் துறையில் அவர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களின் பணி அவர்களின் வீட்டு வேலைகளின் விரிவாக்கமாகக் கருதப்படுகிறது, மேலும் உள்நாட்டுப் பொறுப்புகளின் இரட்டைச் சுமையைச் சேர்க்கிறது.

இந்தியா பல முனைகளில் விவசாய நடைமுறைகளை நிர்வகிப்பதை மேம்படுத்த வேண்டும். விவசாய குடும்பங்களின் வருமானத்தை அதிகரித்தல், பயிர்களின் உற்பத்தியைப் பன்முகப்படுத்துதல், பெண்களை மேம்படுத்துதல், விவசாய பன்முகத்தன்மை மற்றும் உற்பத்தித்திறனை வலுப்படுத்துதல் மற்றும் கவனமாக விலை மற்றும் மானியக் கொள்கைகளை வடிவமைத்தல் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். கால்நடை வளர்ப்பு, வனவியல் மற்றும் மீன்வளம் போன்ற வேளாண் தொடர்புடைய துறைகள் மூலம் விவசாய வாழ்வாதாரங்களைப் பல்வகைப்படுத்தி வாழ்வாதாரத்திற்கு தேவையான வேலை வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கிறது. இனிமேலும் காலம் தாழ்த்தினால் மக்களிடம் பணப்புழக்கம் குறையும், குற்றச்செயல்கள் அதிகரிக்கும், சட்டம் ஒழுங்கு கெடும். இதற்கு முக்கியமான 3 பொருளாதாரத் துறைகளான விவசாயம், உற்பத்தி மற்றும் தொழில், சேவைத் துறையை பலப்படுத்தி, மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டியது முதல் படி. இதை மேம்படுத்தினால்தான் இந்த 3 பொருளாதாரத்தையும் சார்ந்து வளரும் கிராமப்புற தற்சார்புப் பொருளாதாரம் மேம்படும். இந்த கிராமப்புற தற்சார்புப் பொருளாதாரம் மேம்பட்டால்தான், நகர்ப்புறத்திற்கு வரும் மக்கள் தொகை குறையும். கிராமமும் நகரமும் ஒருங்கிணைந்து வளரும்.

இந்தியாவில் கிராமங்கள்தானே அதிகம்! 70%-க்கும் மேலான மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள். 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 121 கோடி மக்களில் கிராம மக்கள் தொகை 83 கோடி, நகர மக்கள் தொகை 37 கோடி. 28.8 கோடி மக்கள் 2000-5000 பேர் வாழும் கிராமங்களிலும், 12.3 கோடிப் பேர் 50000-100000 மக்கள் வாழும் கிராமங்களிலும், 7.2 கோடி மக்கள் 10000-க்கும் மேல் மக்கள் வாழும் கிராமங்களிலும், 19.7 கோடி மக்கள் 1000-2000 பேர் வாழும் கிராமங்களிலும், 10.3 கோடி மக்கள் 500-1000 பேர் வாழும் கிராமங்களிலும், 4.7 கோடிப் பேர் 500-க்கும் குறைவான மக்கள் வாழும் கிராமங்களிலும் வசிக்கின்றனர்.

தமிழகம் நகரப் பகுதிகள் அதிகம் கொண்ட மாநிலங்களில் ஒன்று. நகரமயமாக்கல் அதீத வேகத்தில் நடப்பதால் நகர்ப்புற (கிராம) வாழ்வும் மாற்றத்துக்குள்ளாகிறது. நாடெங்கும் கிராமங்கள் அளவில் பெரியதாகவும் எண்ணிக்கையில் சிறியதாகவும் ஆகின்றன. நகரங்கள் பெரிதாகும்போது அருகாமையிலுள்ள கிராமங்கள் அவற்றுடன் இணைக்கப்பட்டு, சாலை வசதியும் அமைவதுடன் நெடுஞ்சாலைகளும் அருகாமையில் இருக்கும் கிராமங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால் விவசாயம், பாசனம் செய்வதற்கு நிலங்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது; குளங்கள், குட்டைகளில் வீடுகள் கட்டப்பட்டு, கிராமங்களிலும் நகரங்களைப் போன்று இடநெருக்கடி உண்டாகிறது. கிராம/ஊராட்சி அடிப்படை வசதிகள் அப்படியே இருக்கின்றன; கிராமக் கட்டமைப்பு சீரடைவதில்லை; வேலை வாய்ப்பு வசதிகளும் இல்லாத காரணத்தால் வேலை தேடி நகரங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைவதில்லை. தரமான கட்டமைப்பு வசதி, தரமான கல்வி, தரமான சுகாதார நல வசதிகள் இல்லாததால் கிராமங்களில் வாழ்வது என்பது சற்றுக் கடினமாகவே இருக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சியின் அடிப்படை, நகரங்களைச் சார்ந்தே கட்டமைக்கப்படுகிறது. நாட்டில் மாற்றம் என்பது இரு விதங்களில் இருக்க வேண்டும்: அதிக அளவில் மக்கள் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதைத் தவிர்க்க நகரத்து வசதிகளை கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும்.

நமது நலத்துக்கு நாமே பொறுப்பேற்று சமூகத்தை, நமது பாரம்பரியத்தைக் கைவிடாமல், உன்னத செயல்திறன் வளர்த்தல், மதிப்பு கூட்டப்பட்ட தொழில் முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் நமது சமுதாயத்தை வளர்க்கும் வேலையை நாம் செய்தாக வேண்டும். இதை விடுத்து தொடரும் வறுமை நிலை, நகர்ப்புறங்களில் கிடைக்கும் மோசமான சேவைகள், அசுத்தமான சுற்றுப்புறச் சூழலை நாம் தொடர்ந்து அப்படியே ஏற்றுக்கொண்டு தேர்தலில் தவறாமல் வாக்களித்துவிட்டு ஏமாந்து நிற்போம் என்று இதற்கு அர்த்தமல்ல. ஒவ்வொரு சேவைக்கும் உச்சபட்ச அளவை இலக்காக வைத்து அதை நோக்கிச் செல்ல முயற்சிக்க வேண்டும்.

சமூக மாற்றத்திற்கான முதல் முன்னுரிமை துரித கிராமப் பொருளாதார முன்னேற்றமே. தொழிற்புரட்சி, தகவல்-தொழில்நுட்பப் புரட்சி மற்றும் முதல் பசுமைப் புரட்சிகூட நிகழாத சுமார் 6 லட்சம் இந்திய கிராமங்களில் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் நீடித்து நிலைக்க வேண்டும். இதை நாமெல்லாம் ஒன்று சேர்ந்து செய்வது எப்படி? ‘கிராமப்புறங்களை விவரமறிந்த சமூகங்களாக மாற்றுவதுதான் துரித வளர்ச்சிக்கு ஒரே வழி. அத்தகைய வளர்ச்சியில் செல்வத்தைத் திரட்டும் நமது அதீத மக்கள் தொகையே நமக்குச் சாதகமாக மாறக்கூடும்’ என்றார் டாக்டர் அப்துல் கலாம். ஒரு கோடி மக்களால் செய்யப்படும் இம்முயற்சி பல்முனை விளைவுகளை ஏற்படுத்தும். வகுக்கப்படும் விகுதியாக இருக்கும் மக்கள்தொகை ஒரு பிரச்னையே இல்லை என்பதால் இது பல்முனைக் காரணியாக மாறி நாடு முழுவதும் தனிநபர் வருமானம் அதிகரிக்க வழிவகுக்கும். செல்வத்தைச் சேமித்து, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதால் மட்டுமே நாம் தேடும் அறிவுசார் சமூகம் உருவாகும். அதற்கு அடிப்படை நீடித்த நிலைத்த அமைதியான கிராமப்புற வளர்ச்சி. மகாத்மா காந்தி விரும்பிய உண்மையான கிராம சுயராஜ்யத்தையும் படைப்பதற்கு டாக்டர் அப்துல் கலாம் கொடுத்த திட்டம்தான் ‘புரா’ திட்டம்.

இந்தியா இதுவரை பல ஐந்தாண்டுத் திட்டங்களைப் பார்த்துவிட்டது. ஆயினும், அதனால் எதிர்பார்த்த அளவு மக்கள் பயனடைந்தனரா, குடிநீர், உணவு, இருக்குமிடம், கழிப்பறை வசதி, மின்வசதி, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, விவசாயக் கட்டமைப்பு போன்ற அடிப்படைத் தேவைகள் கிராமங்களில் ஏற்பட இத்திட்டங்கள் உதவியாக இருந்தனவா என்ற கேள்விக்குறி எப்போதும் தொக்கி நிற்கிறது. இவையெல்லாம் மிக அவசியமான தேவைகள். சில மாநிலங்கள் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளன; ஆனால் அது மக்களின் வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பு உறுதிப்பாட்டிலோ அல்லது அவர்களது வாழ்க்கைத் தர மேம்பாட்டிலோ உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், இன்னும் விளிம்பு நிலையைக்கூட அடையாத பல மாநிலங்கள் உள்ளன. எனவே போனது போகட்டும்; இனிமேல் மிச்சமெல்லாம் உச்சம் தொட்டு காந்தியின் கனவை - கலாமின் ‘புரா’ திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com