48. கேன்ஸர் பூதம் - 3

கேன்ஸர் என்பது ஒரு நோயின் அடையாளம் அல்ல. அது ஓர் உயிர் உருவாகும் அடையாளம். அது மட்டுமல்ல. அது ஒரு நோய்நீக்க நிகழ்வின் அடையாளமும் ஆகும்.

அதிகம் பேர் இறப்பது கேன்ஸரால் அல்ல; பொறாமையினால்தான்.

- ஜோசஃப் பி. கென்னடி

அதிக எண்ணிக்கையில் உடலுக்குள் உருவாகும் ட்ரோபோப்ளாஸ்ட் கேன்ஸர் செல்களை எதிர்த்து வெள்ளை அணுக்கள் போராடுவதில்லை என்பதன் பின்னால் ஒரு ரகசியம் இருப்பதாகச் சொன்னோம். அந்த ரகசியம் இதுதான்.

எப்போதெல்லாம் நம் உடலுக்கு ஒரு பிரச்னை ஏற்படுமோ, எப்போதெல்லாம் உடல் நோய்வாய்ப்படுமோ, அப்போதெல்லாம் எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் நிறைய உண்டாகி உடல் சரியாவதற்குத் துணை செய்யும்.

ரகசியத்தை இப்போது சொல்லிவிடுகிறேன். கேன்ஸர் செல்கள் நமக்கு அந்நியனும் அல்ல, எதிரியும் அல்ல என்பதுதான் காரணம்! இது என்ன புதுமையான அநியாயமாக உள்ளது என்கிறீர்களா? ஆமாம். புதுமையாக இருக்கலாம். ஆனால் அநியாயமல்ல. உண்மை. அதனால்தான் அவற்றை வெள்ளை அணுக்கள் நெருங்குவதில்லை. ஏன், எப்படி என்று கொஞ்சம் பார்க்கலாம்.

வாழ்க்கைச் சக்கரத்தின் முக்கியப் பங்குதான் ட்ரோபோப்ளாஸ்ட் எனும் செல்களின் அபரிமிதமான வளர்ச்சி. கருத்தரிப்பதற்கு முந்திய நிலையில் அச்செல்கள் மிக அதிக அளவில் உண்டாகும். அந்நியர்கள் என்று நினைத்து அவற்றை வெள்ளையணுக்கள் அழித்துவிட்டால், குழந்தையே உண்டாகாது! அதனால்தான், அப்படி நடக்காமல் இருப்பதற்காக இயற்கை ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறது!

கரு உண்டாகியிருக்கும்போது ட்ரோபோப்ளாஸ்ட் செல்கள் அபரிமிதமாக உருவாவதை உடல் அனுமதிப்பதில்லை. அவற்றை கட்டுக்குள் வைத்திருக்கும் ஏற்பாடுகளை அது செய்கிறது. ஆனால், கருத்தரிக்காத சூழ்நிலையில் இந்த ட்ரோபோப்ளாஸ்ட் செல்கள் உருவாகுமேயானால், அவற்றுக்கான இயற்கையான கட்டுப்பாட்டுச் செயல்பாடு இருக்காது. அந்தச் சூழ்நிலையில் ட்ரோபோப்ளாஸ்ட் செல்கள் அபரிமிதமாக, கட்டுக்கடங்காமல், கன்னாபின்னாவென உடல் முழுவதும் பல்கிப் பெருக ஆரம்பித்துவிடும்.

உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்களுக்கு அறிவு கெட்டுப்போனால், அதற்குப் பெயர் கேன்ஸர். உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் அறிவு கெட்டுப்போனால், அதற்குப் பெயர் எய்ட்ஸ் என்று அழகாகச் சொன்னார் ஹீலர் பாஸ்கர். எந்தக் காரணமும் இல்லாமல் செல்கள் கன்னாபின்னாவென பல்கிப் பெருகினால், அவற்றுக்கு அறிவு கெட்டுப் போய்விட்டது என்றுதானே அர்த்தம்!

இப்படி செல்களுக்கு அறிவு கெட்டுப்போகும்போது, அது பல்கிப் பெருகுவதற்குத் துணையாக எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் உதவி செய்கிறது. கேன்ஸர் நோயின் ஆரம்பம் அதுதான்.

இந்த ட்ரோபோப்ளாஸ்ட் செல்கள் ஒருவகையான ஹார்மோனைச் சுரக்கின்றன அல்லது தயார் செய்கின்றன. அந்த ஹார்மோனை சிறுநீரில் கண்டுபிடிக்க முடியும். அதற்கு CHG அல்லது HCG பரிசோதனை என்று பெயர். (கரு உண்டானதைக் கண்டுபிடிக்க உதவும் பரிசோதனைகளில் இதுவும் ஒன்று). கரு உண்டாகியிருந்தாலும் சரி, அப்படியில்லாமல் கேன்ஸர் உண்டாகியிருந்தாலும் சரி, இந்த ஹார்மோன் உடலில் ஏற்பட்டிருக்கும்! ஏனெனில், ட்ரோபோப்ளாஸ்ட் செல்களால் மட்டுமே இந்த ஹார்மோனை உண்டாக்க முடியும்.

அந்தக் குறிப்பிட்ட ஹார்மோன் சுரப்பு ஒருவருக்கு ஏற்பட்டிருக்குமானால், அவர் பெண்ணாக இருந்தால் அவர் ‘உண்டாகி’ இருக்கலாம் அல்லது அவருக்கு கேன்ஸர் உண்டாகி இருக்கலாம்! அடக்கடவுளே! கருத்தரிக்காத பெண்களெல்லாம் கேன்ஸர் நோயாளிகள் என்று கூறமுடியுமா?

முடியாது. அப்படியானால் என்ன அர்த்தம்?

ஒரு சின்ன சிறுநீர்ப் பரிசோதனையின் மூலம் ஒருவருக்கு கேன்ஸர் வந்திருக்கிறதா இல்லையா என்று கட்டி கிட்டி வந்து அவர் கஷ்டப்படுவதற்கு முன்பே ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். எனவே, செல்களைக் கொஞ்சம் அறுத்தெடுத்து பரிசோதிக்கின்ற ‘பயாப்ஸி’ முறைகளை இது கேள்விக்குள்ளாக்குகிறது. ஏனெனில், ஒரு கட்டியைக் கொஞ்சம் வெட்டி அது கேன்ஸரா என்று பரிசோதிப்பதன் மூலம், அந்தக் கட்டி மேலும் பரவுதற்கு அது வழிவகுக்கிறது என்பது மனசாட்சி உள்ள அநேக மருத்துவர்களின் கருத்து.

கேன்ஸர் வந்தால் உடல் என்ன செய்கிறது

கேன்ஸர் வந்தால் பல்கிப் பெருகும் ட்ரோபோப்ளாஸ்ட் செல்களை உடல் எப்படி கையாளுகிறது, எப்படிக் கட்டுப்படுத்துகிறது, எப்படி குணப்படுத்துகிறது?

மனிதனையும் சேர்த்து, எல்லா மிருகங்களுக்கும் கோடிக்கணக்கான வெள்ளை அணுக்கள் இருக்கும். லிம்போசைட் (lymphocyte), லியூகோசைட் (leucocyte), மோனோசைட் (monocyte) என்று அவற்றுக்குப் பல பெயர்கள். உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற அந்நியச் சக்திகளை எதிர்த்துப் போராடி அழிப்பதுதான் அவற்றின் வேலை. வெள்ளை அணுக்களின் அளவு மிகக்குறைவாக உள்ளவர்கள், ஒரு சின்ன நோய்த்தொற்றால், ஒரு சின்ன வெட்டுக்காயம், சளி போன்றவற்றால்கூட இறந்துபோகலாம்!

உடலில் உள்ள அந்நியர்களை அழிப்பதே வெள்ளை அணுக்களின் வேலை என்பதால், கேன்ஸர் வரும்போது அந்த அந்நியர்களையும் அது நிச்சயம் அழிக்கும் என்பதுதான் அறிவார்ந்த விஞ்ஞானத்தின் அனுமானமாகும். ஏனெனில், உடலுக்குத் தீங்கிழைக்கும் எதுவானாலும் அது கொல்லப்படவும் வெளியேற்றப்படவும் வேண்டியதாகும் என்பது வெள்ளை அணுக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், கேன்ஸர் செல்களோடு அவை போராடுவதே இல்லை. அவற்றை எதிர்க்கவோ வெளியேற்றவோ முயற்சிப்பதும் இல்லை! ஏன் என்பது நோய்த்தடுப்பியல் நிபுணர்களுக்குப் புரியவே இல்லை!

பல்கிப் பெருகும் ட்ரோபோப்ளாஸ்ட் செல்கள் தன்னைச் சுற்றி ‘நெகடிவ் சார்ஜ்’ கொண்ட ஒரு புரோட்டீன் பூச்சைக் கொண்டிருக்கும். கவச உடை மாதிரி. அதற்கு pericellular sialomucin coat என்று பெயர். நமது உடலின் வெள்ளை அணுக்களிலும் ஒருவித ‘நெகடிவ் சார்ஜ்’ இருக்கும்.

நமது கணையத்தில், பத்து அல்லது அதற்கும் அதிகமான என்ஸைம்கள் இருக்கும். அவற்றில் ட்ரிப்சின் (trypsin), கைமோட்ரிப்சின் (chymotrypsin) ஆகிய இரண்டும், ட்ரோபோப்ளாஸ்ட் கேன்ஸர் செல்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு என்ஸைம்களும், சாதாரணமாக கணையத்தில் தூங்கிக்கொண்டிருக்கும். அப்படியே நீந்தி சிறுகுடலுக்குள் வந்த பிறகுதான், அவை விழித்துக்கொண்டு செயல்படத் துவங்கும்! ரத்த ஓட்டத்தில் அவை கலந்து ட்ரோபோப்ளாஸ்ட் கேன்ஸர் செல்களை அடையும்போது, அவற்றில் உள்ள நெகடிவ் சார்ஜ், புரோட்டீன் பூச்சை (அந்தக் கவச உடை) சாப்பிட்டு அழித்துவிடும்! பாதுகாப்புச் சுவராக இருந்த பூச்சு அழிந்த பிறகு, ட்ரோபோப்ளாஸ்ட் கேன்ஸர் செல்களை வெள்ளை அணுக்கள் தாக்கி அழித்துவிடும்! யப்பா, ஏதோ ஹாலிவுட் படம் பார்ப்பது மாதிரி உள்ளது! மனித உடலுக்கு நிகரான ஒரு அற்புதம் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளதா என்ன என்றே எண்ணத் தோன்றுகிறது!

ட்ரோபோப்ளாஸ்ட் செல்கள், சாதாரணமாக கருப்பையில் எட்டாவது வாரம் வரை அபரிமிதமாக வளர்ந்து பெருகும். ஆமாம், எட்டாவது வாரம் வரைதான். பிறகு திடீரென்று அவை வளர்வதை நிறுத்திக்கொள்கின்றன! மீதம் உள்ளவையும் அழிக்கப்படுகின்றன! அதற்கு என்ன காரணம் என்று சமீபகால விஞ்ஞானம்தான் கண்டுபிடித்துள்ளது. ஏனெனில், எட்டாவது வாரத்தில் சிசுவின் கணையம் இயங்க ஆரம்பித்துவிடுகிறது! (கணையத்தில் உள்ள என்ஸைம்கள்தான் கேன்ஸர் செல்களை அழித்தன என்பதை மேலே பார்த்தோம். அதை இங்கே பொருத்திப் பார்க்கவும்). கணையம் கெட்டுப்போன சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு கேன்ஸர் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

எனவே, கேன்ஸர் என்பது உடலையும் உயிரையும் அழிக்கவரும் நோய் அல்ல. ஒரு குழந்தை உருவாகும்போதும் ஏற்படும் ஒரு இயல்பான இயற்கையான நிகழ்வாகும். அது நம்மைக் குணப்படுத்த நடக்கும் வேலையாகும். ஒரு உயிர் உருவாவதற்கும், அந்த உயிர் குணமடைவதற்கும் பயன்படும் செல்கள்தான் கேன்ஸரை உருவாக்கும் ட்ரோபோப்ளாஸ்ட் செல்களாகும்.

அப்படியானால், கேன்ஸர் என்பது ஒரு நோயின் அடையாளம் அல்ல. அது ஓர் உயிர் உருவாகும் அடையாளம். அது மட்டுமல்ல. அது ஒரு நோய்நீக்க நிகழ்வின் அடையாளமும் ஆகும். ஒரே வகையான உயிரணுக்கள் குறிப்பிட்ட காலம் வரை பல்கிப் பெருகும்போது, அது இன்னொரு உயிரை உருவாக்குகிறது. பிறகு அது இறைவனின் உத்தரவுப்படி எட்டாவது வாரத்தில் அழிந்துபோகிறது. அப்படியில்லாமல் அது தொடர்ந்து வளருமேயானால், அது கேன்ஸராக அறியப்படுகிறது. அப்படியே கேன்ஸர் வந்தாலும், நமது கணையம் ஆரோக்கியமாக இருக்குமானால், கேன்ஸர் செல்கள் அழிக்கப்பட்டு நாம் குணமடைகிறோம். அதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம், விட்டமின் பி-17 அதிகமாக உள்ள உணவு வகைகளை நன் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதுதான் என்கிறார் க்ரிஃபின்.

பரம்பரை வியாதி காரணமாக நம் கணையம் பலவீனமாக இருந்தாலோ, கேன்ஸருக்கான அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்போதோ, ரேடியேஷன் கொடுக்கும்போதோ, நாம் உண்ணும் உணவுகள் நம் கணைய என்ஸைம்களைக் காலி செய்துவிட்டாலோ – இப்படியான அசம்பாவிதங்கள் நடக்கும்போதும், இயற்கை தான் சேமித்து வைத்திருக்கும் பாதுகாப்பு அமைப்பிலிருந்து நமக்கு உதவி செய்ய முயல்கிறது. ஒரு பிரத்தியேகமான வேதிப்பொருளைச் சுரந்து கெடுதி செய்யும் கேன்ஸர் செல்களை விஷம் வைத்துக் கொன்றுவிடுகிறது! அதே சமயம், நல்ல செல்களைக் காப்பாற்றவும் செய்கிறது! விட்டமின் மிகுந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இங்கேதான் வருகிறது.

விட்டமின் பி-17, அமைக்டாலின் என்றெல்லாம் சொல்லப்படும் அதற்கு லேட்ரைல் என்று பெயரிட்டு, கேன்ஸருக்கான லேட்ரைல் சிகிச்சையையும் அறிமுகப்படுத்தியவர் டாக்டர் க்ரெப்ஸ். லேட்ரைலை தனக்கே ஊசி மூலம் போட்டுக்கொண்டு டாக்டர் க்ரெப்ஸ் பரிசோதனை செய்து வெற்றி கண்டார். அதன்பிறகே, கேன்ஸர் நோயாளிகளுக்கு அவர் அந்தச் சிகிச்சையை அளிக்கத் தொடங்கினார்.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டேவிட் என்பவருக்கு கேன்ஸருக்காக 1971-ம் ஆண்டு அறுவை சிகிச்சை நடந்தது. அவரது பெருங்குடல் கேன்ஸர் உடலின் பல பாகங்களுக்கும் பரவி இருந்ததால், ‘கொலாஸ்டமி’ என்ற ஒரு அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது. பெருங்குடலைப் பிரித்தெடுத்து, அடிவயிற்றின் ஒரு பகுதியோடு இணைத்துவிடுவார்கள். எனினும், அவர் சில மாதங்களே உயிர் வாழலாம் என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால், அவர் லேட்ரைல் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாகக் குணமடைந்தார்.

ஆறு குழந்தைகளின் தாயான ஜோன் வில்கின்சன் என்ற பெண்ணுக்கு இடது காலில் ஒரு கேன்ஸர் கட்டி இருந்தது. அறுவை சிகிச்சையில் அது நீக்கப்பட்டது. நான்கு மாதங்களில் கட்டி மீண்டும் வந்தது. மீண்டும் அறுவை சிகிச்சை. ஒரு ஆண்டு கழித்து மீண்டும் கட்டி! இப்போது அவரது காலை நீக்கி அவரை முடமாக்கிவிட வேண்டுமென்று அந்தப் படித்த முண்டங்கள் கூறின! ஆனால் அந்தப் பெண்மணி, டாக்டர் க்ரெப்ஸின் லேட்ரைல் சிகிச்சை எடுத்து முற்றிலுமாகக் குணமடைந்தார். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களைப் பற்றிய ஒரு ‘ஜோக்’கை பேராசிரியர் க்ரிஃபின் தன் நூலில் பதிவு செய்கிறார்: ‘‘உங்கள் கணவர் இறந்துபோவதற்கு முன் நாங்கள் அவரது கேன்ஸரை குணப்படுத்திவிட்டோம். கேன்ஸர் எதுவும் இல்லாத நிலையில்தான் உங்கள் கணவர் இறந்துபோனார். இதுபற்றி நீங்கள் சந்தோஷப்பட வேண்டும்”!

கேன்ஸருக்காகக் கொடுக்கப்படும் மருந்துகள் யாவும் கேன்ஸரைவிட மோசமானவை என்று க்ரிஃபின் கூறுகிறார்! அதற்கு முக்கியக் காரணம், அவற்றில் நச்சு அதிகமாக இருப்பதுதான். அவை கேன்ஸரை மட்டுமின்றி, உடலின் மற்ற ஆரோக்கியமான பாகங்களுக்கும் நஞ்சூட்டிவிடுகின்றன. கேன்ஸர் செல்களைவிட ஆரோக்கியமான செல்களையே அவை அதிகம் பாதிக்கின்றன.

எந்தப் பொருளையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் அது நஞ்சாகிவிடும். பாம்பு கடித்து ஒரு மனிதன் ஏன் சாகிறான் தெரியுமா? பாம்பின் விஷத்தில் இருப்பதெல்லாம் புரோட்டீன்தான். ஆனால், அவ்வளவு புரோட்டீனை ஒரே நேரத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல்தான் உடல் ஸ்தம்பித்துவிடுகிறது!

அப்படியானால், நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் ஆஸ்பிரின், சர்க்கரை, லேட்ரைல், ஏன் வெறும் தண்ணீரானால்கூட அதுதான் நடக்கும். சர்க்கரையோ தண்ணீரோ அதனளவில் நச்சுப்பொருள்கள் அல்ல. ஆனால், அலோபதி மருந்துகள் யாவும் தன்னளவிலேயே நஞ்சாக இருப்பவை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது நம் முன்னோர் கொடுத்த ஞானம் அல்லவா? அப்படியானால், அளவுக்கு அதிகமாக நஞ்சையே எடுத்துக்கொண்டால்?!

எடுத்துக்கொள்ளும் அலோபதி மருந்துகளுக்கு எது கேன்ஸர் செல், எது ஆரோக்கியமான செல் என்று பிரித்தறியத் தெரியுமா? தெரியாது. ஆனால், எது வேகமாக வளரும் செல், எது மெதுவாக வளரும் செல் என்று அறியத் தெரியும். மிக வேகமாக வளரும் செல்கள்தான் அம்மாத்திரைகளின் இலக்கு. எனவே, கேன்ஸர் செல்களையும், வேகமாகப் பிரிந்து பரவும் ஆரோக்கியமான செல்களையும் சேர்த்து அவை அழித்துவிடும்! அதனால் ஏற்படும் வலியும் வேதனையும் கேன்ஸரைவிட மோசமானவை!

மருந்தில் உள்ள நச்சுக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து, ரத்தம் முழுவதையும் விஷமாக்கிவிடுகின்றன. செரிமான அமைப்பே கெட்டு, வாந்தி, வயிற்றுப்போக்கு, சுளுக்கு, பசியின்மை, கூடிக்கொண்டே போகும் பலவீனம் என்று பல பிரச்னைகளுக்கும் நோயாளி ஆளாகிறார். ‘சிகிச்சை’ காலத்தில் முடி உதிர்வது, ஆண்மைக் குறைவு ஏற்படுவது, மூளையின் செல்கள் பாதிக்கப்படுவது – இப்படி எல்லாம் நடக்கும். கடைசியில், சிகிச்சை மேற்கொள்வதைவிட செத்துவிடுவதே மேல் என்ற முடிவுக்கு நோயாளி வருகிறார்.

இப்படியெல்லாம் நடக்கும் என்பதால்தான் கேன்ஸர் நோயாளிகளுக்கு மருந்துகளைக் கொடுக்க ஏவப்படும் ஊழியர்கள், நர்ஸுகள் போன்றோருக்குப் பலவிதமான முன்னெச்சரிக்கைகள் கொடுக்கப்படுகின்றன! கேன்ஸருக்கான கீமோ சிகிச்சைக் கையேட்டில் கீழ்க்கண்ட எச்சரிக்கைகள் இருக்கும் -

‘பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்துகொள்ளாத ஊழியர்களுக்குக் கண் எரிச்சல், தோல் எரிச்சல், மயக்கம், வாந்தி வருவதுபோல் இருத்தல், தலைவலி போன்றவை ஏற்படலாம்’ - இதுபோன்ற 16 வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி இக்கையேடு பேசுகிறது!

நம் உடலில் நாள்பட்ட அழுத்தம் அல்லது சேதம் ஏற்படும்போது கேன்ஸர் உண்டாகும் வாய்ப்பு உண்டு. அது புகைப்பிடித்தல், வேதிப்பொருள்களை மருந்தாக உட்கொள்ளுதல், தவறான உணவுகள் – இப்படி எதன் காரணமாகவும் இருக்கலாம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐ.ஜி. ஃபார்பன் (I.G.Farben) மற்றும் ராக்ஃபெல்லரின் ஸ்டாண்டர்டு ஆயில் போன்ற பெருநிறுவனங்கள் தோன்றி உலகை ஆள ஆரம்பித்தன. ஃபார்பனின் செல்வாக்கும் பணமும் ஹிட்லருக்கு மிகவும் உதவியாக இருந்தன. ஐ.ஜி. ஃபார்பனின் கீழ் 380 கம்பெனிகள் இருந்தன. ராக்ஃபெல்லரின் கம்பெனியின் கீழ் 322 கம்பெனிகள் இருந்தன. கேன்ஸருக்கான மருந்துகளை விற்பதில் இவை போன்ற நிறுவனங்களின் பங்கு அதிகம். அவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. இருக்கிறது. தன் பணபலத்தின் மூலம் எல்லாவற்றையும் விலை பேசினார் ராக்ஃபெல்லர். சிகாகோ பல்கலைக் கழகத்துக்குப் பெரிய தொகையை நன்கொடையாக் கொடுத்து, அதை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். ஷேக்ஸ்பியர், ஹோமர், தாந்தே ஆகியோரைவிட ராக்ஃபல்லர்தான் பெரிய அறிவாளி என்று சொல்லவைத்தார்! கேன்ஸருக்கான மருந்துகள் உலகம் முழுவதும் பெரிய அளவில் விற்பனையாவதற்கு அவர்கள்தான் காரணம் என்று விளக்க, க்ரிஃபின் தன் புத்தகத்தில் சில அத்தியாயங்களையே ஒதுக்கியுள்ளார்!

கேன்ஸருக்கு அலோபதி மருந்துகள் சாப்பிடுவதைவிட பில்லி, சூனியம், வூடூ (voodoo) போன்றவற்றின் மூலமாகக் குணப்படுத்த முயல்வது சிறந்தது என்கிறார் க்ரிஃபின்! மருந்துகளில் உள்ள நச்சு வேதிப்பொருள்களைவிட, மந்திரம் ஒன்றும் மோசமானதல்ல என்பது அவரது வாதம்!

பி-17 விட்டமினை செயற்கையான உருவாக்கி, மாத்திரைகள், ஊசிகள் மூலமாகக் கொடுப்பதைவிட இயற்கையான பழங்கள், காய்கறிகளின் மூலமாகக் கிடைக்கச் செய்வதே அறிவுடைய செயலாகும் என்றும், லேட்ரைல் சிகிச்சையை அரசாங்கம் தடை செய்துவிட்டால்கூட, அந்த விட்டமினை இயற்கையிலிருந்து நாம் பெற்று குணமடைய முடியும் என்றும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

முடிவாக, க்ரிஃபின் எழுதிய World Without Cancer என்ற நூலில் சாரத்தைக் கொடுத்துவிட்டேன். முடிந்தவர்கள், 404 பக்கங்களையும் படித்து இன்னும் கூடுதலான விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். கேன்ஸர் பற்றி நாம் தெரிந்துகொண்டது, அல்லது தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான் -

  • கேன்ஸர் ஒரு நோய் அல்ல. எனவே, அதுபற்றி அஞ்ச வேண்டியதில்லை.
  • பெண்கள் கருவுற்றிருக்கும்போது, உயிரணுக்கள் எட்டு வாரம் வரை பல்கிப் பெருகிக்கொண்டிருக்கும். அந்த இயற்கை நிகழ்வுதான் கேன்ஸராகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
  • கருவில் இருக்கும் குழந்தைக்கு எட்டாவது வாரத்தில் கணையம் உருவான பிறகு, தாயின் உடலில் அத்தகைய ட்ரோபோப்ளாஸ்ட் செல்களின் பெருக்கம் நிறுத்தப்படும்.
  • குழந்தை உண்டாகாமல் அந்த செல்கள் பல்கிப்பெருகினால், அது நோயாக இருக்கலாம். ஆனாலும், அதற்கு நாம் கவலைப்பட வேண்டியதில்லை. பயாப்சி, கீமோதெரபி என்றெல்லாம் உடலை சித்திரவதைப்படுத்த வேண்டியதில்லை.
  • நம் கணையம் ஆரோக்கியமான இருந்தால் போதும். கேன்ஸர் தானாகவே குணப்படுத்தப்படும்.
  • கணையத்தை ஆரோக்கியப்படுத்தவும், பொதுவான நம் ஆரோக்கியத்துக்கும், கேன்ஸர் செல்களை அழித்தொழிக்கவும் விட்டமின் பி-17 நமக்குத் தேவைப்படுகிறது.
  • நாம் உண்ணும், அல்லது உண்ணாத பழங்களிலும் காய்கறிகளிலும் அந்த விட்டமின் இருக்கிறது! (எனவே, நம் உணவில் அவற்றை சேர்த்துக்கொள்வது கேன்ஸர் வராமல் தடுக்க உதவும்).
  • வெறுப்பு, சந்தேகம், பொறாமை போன்ற எதிர்மறை குணங்களை வளர்த்துக்கொள்வதனாலும் கேன்ஸர் வரும் வாய்ப்பு உண்டு.

இவை எல்லாவற்றையும்விட முக்கியமான செய்தி, கேன்ஸர் என்றதும் நாம் அச்சப்பட வேண்டியதில்லை என்பதுதான். விஞ்ஞானிகளுக்கு, ஞானிகளுக்கு, அஞ்ஞானிகளுக்கு என்று யாருக்கு கேன்ஸர் வந்தாலும், அதன் விளக்கம் இதுதான். விட்டமின் பி-17 குறைவு என்று அர்த்தம். அதை உதாசீனப்படுத்தும்போது அது மேலும் மேலும் பல்கிப்பெருகி, வலி, வேதனை போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

பரமஹம்சர், ரமணர் போன்ற மகான்கள் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. காரணம், அவர்களுக்கு உடல் பிரதானமல்ல. தம் உடலோடு அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் விரும்பியிருந்தால், அந்த நோயை அவர்களால் குணப்படுத்திக்கொண்டிருக்க முடியும். அவர்கள் செய்யாத அந்த வேலையை நாம் செய்தால், அவர்களது ஆன்மா நிச்சயம் சந்தோஷம்தான் படும். நம் உடலுக்கும் மகான்களது ஆன்மாவுக்கும் சந்தோஷம் கொடுப்பதுதானே நியாயம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com