Enable Javscript for better performance
49. நமக்குள் ஒரு ஞானி- Dinamani

சுடச்சுட

  

  49. நமக்குள் ஒரு ஞானி

  By நாகூர் ரூமி  |   Published on : 17th April 2017 12:35 PM  |   அ+அ அ-   |    |  

   

  அவனே ஆதி, அவனே அந்தம். அவனே ரகசியம், அவனே பகிரங்கம். அனைத்தையும் அறிந்தவன் அவனே – திருக்குர்’ஆன் 57:3 (தமிழாக்கம் எனது)

   

  இதென்ன தலைப்பு என்று யோசிக்கிறீர்களா? இந்தத் தலைப்பு ஓர் அடிப்படையான உண்மையைச் சொல்ல வருகிறது. தன்னை அறிந்துகொண்ட மனிதன் ஞானியாகிறான். ஆனால் அவன் அப்படி ஆவதற்கு முன்பே, பிறக்கும்போதே அவனுக்குள் ஒரு ஞானி இருக்கிறார். அவர்தான் மரியாதைக்குரிய நமது உடலார்!

  உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

  திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

  உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

  உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

  என்று திருமூலர் சும்மாவா பாடினார்!

  ஆமாம். நம் உடலுக்குள் கோடிக்கணக்கான உயிரணுக்கள் உள்ளன. இல்லை, இப்படிச் சொல்வதுகூட தவறுதான். பாத்திரத்தில் பால் நிரம்பியுள்ளது என்றால், பாத்திரமும் பாலும் வேறு வேறுதானே? ஆனால், உடலும் உயிரணுக்களும் அப்படியல்ல. பாத்திரமே பாலாகவும், பாலே பாத்திரமாகவும் உள்ளது இங்கே!

  ஆமாம். கோடிக்கணக்கான உயிரணுக்களால் நாம் ஆக்கப்பட்டுள்ளோம். நாம் வேறு; அவை வேறு அல்ல. நம் உடலில் உள்ள ஒரேயொரு உயிரணுவுக்கு இருக்கும் அறிவு, ஞானமெல்லாம் ஒட்டுமொத்தமாக இருக்கும் நமக்கு இல்லை என்பதே அறிவியல் காட்டும் உண்மை! அது எப்படி என்று தெரிந்துகொண்டால், நமக்குள் இருக்கும் ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்துவது மட்டுமின்றி, நோயின்றி வாழும் வழியையும் நமக்குக் கற்றுக்கொடுக்கும்.

  ஆம். நாம் நோயில்லாமல் வாழ வேண்டுமெனில், முதலில் நம் உடலைப் புரிந்துகொள்ள வேண்டும். உடலைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், கோடிக்கணக்கான உயிரணுக்களைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். கோடிக்கணக்கான உயிரணுக்களைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், முதலில் ஒரேயொரு அணுவின் தன்மையை, செயல்பாடுகளை, அதன் உள்ளார்ந்த ஞானத்தையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொண்டுவிட்டால், நமக்கும் இருக்கும் ஆதி ஞானியை அடையாளம் கண்டுகொள்ளலாம். சரி, இப்போது ஆதிஞானியை சந்திக்கச் செல்லலாமா?{pagination-pagination}

  டார்வினியக் கோட்பாடு

  உயிரணு, அதன் அமைப்பு, தன்மைகள், செயல்பாடுகள் பற்றியெல்லாம் 19-ம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை அவ்வளவாக அறியப்படவில்லை. எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் அதுவரை உருவாக்கப்படவில்லை. ஒரு பாக்டீரியாவைக்கூட எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் கண்களால் பார்த்து அறியப்படாத காலம் அது. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? காரணம் உள்ளது.

  அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் எதுவும் இல்லாமல் இருந்த அந்தக் காலத்தில், உயிரணு பற்றிய புரிதலும் ரொம்ப எளிமையானதாகத்தான் இருந்தது. டார்வினுடைய கோட்பாடு கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டம் அது. உயிரணு ஒன்றின் அமைப்பு ரொம்ப எளிமையானது என்று தவறாகப் புரிந்துவைக்கப்பட்டிருந்தது. எளிய அமைப்பு கொண்ட உயிரணுக்கள் தாமாகவே பரிணாம வளர்ச்சியில் ஒன்று வேறொன்றாக மாறுவது சாத்தியம் என்று குரங்குகள் நம்பிக்கொண்டிருந்த காலம் அது! உண்மையில் ஓர் உயிரணுவின் பாகங்கள் என்னென்ன, அதன் வேலைகள் எத்தகையது என்று தெரிந்திருந்தால் ஆடிப்போயிருப்பார்கள் டார்வின் வாதிகள்! பார்க்கத்தானே போகிறோம்!

  அணு அணுவாய்

  மனிதனின் கற்பனைக்கு எட்டமுடியாத சிக்கலான அமைப்பும், செயல்பாடுகளும் கொண்டதாக உள்ளது ஓர் உயிரணு. ஓர் உயிரணுவின் உண்மையான தன்மை என்ன, அது எவ்வளவு சிக்கலான அமைப்பு கொண்டது என்பதையெல்லாம் இன்று அணுத்திரண்ம உயிரியல் (molecular biology) வெளிக்கொண்டு வந்துள்ளது.

  ஓர் உயிரணுவை ஆயிரம் மில்லியன் மடங்கு பெரிதாக்கிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும். அப்போது ஓர் உயிரணுவானது, இருபது கிலோமீட்டர்கள் குறுக்களவு கொண்ட, நியூயார்க் அல்லது லண்டன் மாநகரை மூடவல்ல ராட்சச விமானம்போல இருக்கும். அப்போது பார்த்தால், உயிரணுவின் மேற்பரப்பில் லட்சக்கணக்கான குட்டிக் குட்டித் திறப்புகள் தெரியும். அவற்றின் வழியாக பல சமாசாரங்கள் உள்ளே போய்க்கொண்டும் வெளியே வந்துகொண்டும் இருக்கும். அந்தத் திறப்பு ஒன்றின் வழியாக நாம் உள்ளே செல்ல முடிந்தால் எவ்வளவு அட்டகாசமான, சிக்கலான தொழில்நுட்ப உலகுக்குள் போயிருக்கிறோம் என்பது விளங்கும் என்று தன் Evolution: A Theory in Crisis என்ற நூலில் பேராசிரியர் மைக்கேல் டெண்டன் (Michael Denton) கூறுகிறார்! அந்த புத்தகத்தைப் படித்தால் நம் ஒவ்வொரு உயிரணுவும் ஒரு miniature masterpiece of God என்பது புரியும்!

  பேராசிரியர் மைக்கேல் டெண்டன்

  {pagination-pagination}

  செல் / உயிரணுவின் இயக்கம்

  நம் உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் பிரிந்து பிரிந்து பல்கிப் பெருகுகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ரொம்பத் தெரிந்த ஒன்றில் தெரியாத ஒன்று எப்போதுமே இருக்கும்! ஆமாம், தெரிந்ததுதானே என்று முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுவிடுவோம். உயிரணுக்களின் விஷயத்திலும் அப்படியொரு விஷயம் உள்ளது. அது என்ன? அதுதான் செல்கள் பிரிந்து பல்கிப் பெருகும் விதம்.

  இந்தப் பிரிதலை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதனை இரண்டாக சரிபாதியாக வெட்டிப் பிரித்தால் என்னாகும்? ஒரு கை, ஒரு கால், ஒரு கண் என்று பிரிந்துபோகும் அல்லவா? அதோடு உயிரும் போய்விடும்! ஆனால் உயிரணுக்கள் பிரிவது அப்படியல்ல. ஒரு உயிரணு இரண்டாகப் பிரியும்போது, முதலில் ஒன்றாக இருந்தபோது என்னென்ன பாகங்கள் இருந்தனவோ அவை அனைத்தும் இரண்டாம் உயிரணுவிலும் இருக்கும்! இம்மிகூடக் கூடாமலும் குறையாமலும்! ஒரு மனிதனை க்ளோனிங் செய்து இரண்டாக்கியதுபோல! ஒரு நூறை இரண்டு ஐம்பதாக்கியது மாதிரி அல்ல. ஒரு நூறை இரண்டு நூறாக்கியது மாதிரி. பிரிகிறதா, சாரி, புரிகிறதா?

  இப்படிப் பிரியும்போது ஒரு உயிரணுவின் நியூக்ளியஸுக்குள் இருக்கும் டி.என்.ஏ.வும் பிரதி எடுக்கப்பட வேண்டும். பகீரதப்பிரயத்தனம் என்று கூறுவார்கள். ஆனால், எத்தனை ஆயிரம் பகீரதர்கள் ஒன்று சேர்ந்தாலும் செய்யமுடியாத ஒரு காரியத்தை, நம் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் செய்கிறது!

  டி.என்.ஏ. என்ற அற்புதம்

  ஒவ்வொரு டி.என்.ஏ. மாலிக்யூலுக்குள்ளும் முந்நூறு கோடி எழுத்துகளில் அடக்கவல்ல தகவல்கள் பதிவாகியுள்ளன என்கிறது நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு! இது மனித கற்பனைக்கு எட்டாத விஷயமாக உள்ளது. நான் ஹோமரின் ‘இலியட்’ காவியத்தை தமிழாக்கம் செய்தேன். என் புத்தகங்களிலேயே அதுதான் மிகப்பெரியது. 534 பக்கங்களும் 127,021 எழுத்துகளும் கொண்ட புத்தகம்! அச்சில் 800 பக்கங்களுக்கு மேல் வந்தது! ஆனால், ஒரு டி.என்.ஏ.வுக்குள் முந்நூறு கோடி எழுத்துகள் கொண்ட தகவல்கள் உள்ளன! ஒவ்வொரு டி.என்.ஏ.வுக்குள்ளும்! அப்படியானால், கோடிக்கணக்கான உயிரணுக்களுக்குள், கோடிக்கணக்கான டி.என்.ஏ.க்களுக்குள்?! தலை சுற்றி மயக்கம் வரும்போல இருக்கிறது!

  டி.என்.ஏ.வுக்குள் இருக்கும் முந்நூறு கோடி எழுத்துகளில் அடங்கியுள்ள தகவல்களை ஒரு புத்தகமாகக் கொண்டுவருவதானால், பத்து லட்சம் பக்கங்களும் ஆயிரம் பாகங்களும் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமாக அது இருக்கும் என்கிறது விஞ்ஞானிகளின் கணக்கு!

  முந்நூறு கோடி தகவல்கள் கொண்ட அந்த கலைக்களஞ்சிய டி.என்.ஏ.வானது, ஹீலிக்ஸ் எனப்படும் (helix) இரட்டை இழைகளால் ஆன திருகு சுழல் ஏணிபோலக் காட்சியளிக்கும்.

  இந்த இரட்டை இழை திருகு சுழல் ஏணி டி.என்.ஏ.வை இரண்டாகப் பிரித்தெடுக்க வேண்டும். அதற்காக வருபவர்தான் ஹெலிகேஸ் என்ற ஒரு என்ஸைம் (helicase enzyme). இந்த ஹெலிகேஸ், டி.என்.ஏ.யின் ஒரு இழையை மட்டும் கவனமாகக் கழற்றிப் பிரித்தெடுக்கும். எந்தத் தவறோ குழப்பமோ இல்லாமலும், டி.என்.ஏ.வுக்கு எந்தப் பாதிப்பும் வரமாலும் பிரித்தெடுக்க வேண்டும். அப்படிப் பிரித்தெடுத்த பிறகு, பிரித்தெடுத்த ஏணியின் ஒரு பகுதியோடு புதிய இழையை இணைத்து மீண்டும் ஒரு இரட்டை இழை ஏணியை உருவாக்க வேண்டும். அதைச் செய்ய வருபவரின் பெயர் டி.என்.ஏ. பாலிமரேஸ் (DNA Polymerase). பிரிக்காத டி.என்.ஏ. இழையில் இருந்த முந்நூறு கோடி எழுத்துகளில் பதிவான தகவல்கள் அனைத்தையும் ஒன்றுகூட விடாமல், ஒவ்வொன்றாகச் சரிபார்த்து பிரதி எடுத்துடுவந்து புதிய இழையில் சேர்க்க வேண்டும்! ஒரேயொரு தவறுகூட நடக்காமல் அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கிறது பாலிமரேஸ்!{pagination-pagination}

  இந்தக் காரியமெல்லாம் நடக்கும்போது பிரிந்துபோன காதலர்கள் ஒன்று சேர்வது மாதிரி, பிரித்தெடுக்கப்பட்ட இரண்டு இழைகளும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடாமலும் இவை பார்த்துக்கொள்கிறது! முந்நூறு கோடி எழுத்துகள் கொண்ட ஒரு புத்தகத்தை நாம் ‘டைப்’ அடித்து உள்ளிட வேண்டுமென்றால் எத்தனை தவறுகள் ஏற்படும்! ஆனால், டி.என்.ஏ.வைப் பிரதியெடுக்கும் வேலையில் ஒரு சின்ன தவறைக்கூட பாலிமரேஸ் செய்வதில்லை! ஒரு டி.என்.ஏ.வைப் பிரதியெடுப்பதும், பத்து லட்சம் பக்கங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியத்தைப் பிரதியெடுப்பதும் ஒரே மாதிரியான வேலை! ஆனால், இந்த மகா வேலை 20 நிமிடங்களில் இருந்து அதிகபட்சமாக 80 நிமிடங்களுக்குள் ஒரு சின்ன தவறுகூட இல்லாமல் பரிபூரணமாகச் செய்து முடிக்கப்படுகிறது!

  பிரக்ஞை, நுண்ணறிவு இவையெல்லாம் இல்லாமல், எப்படி ஒரு என்ஸைமால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியும்? ஒரு உயிரணு பிரியும்போது அதன் டி.என்.ஏ. பிரதியெடுக்கப்பட வேண்டும் என்று அதற்கு யார் சொன்னது? அதற்கு எப்படி அது தெரியும்? எப்படிப் பிரித்தெடுப்பது என்று அவற்றுக்கு யார் பயிற்சி கொடுத்தது?

  கை நிறைய சொற்களை அள்ளித்தெளித்துவிட்டால், அவை கீழே விழும்போது அர்த்தமுள்ள வாக்கியங்களாக விழுமா? இது என்ன அபத்தமான கேள்வி என்பீர்கள். உண்மைதான். அர்த்தமுள்ள ஒரு வாக்கியத்தை அமைக்க வேண்டுமெனில், நாம்தான் அவற்றை ஒவ்வொன்றாக பொருள் பொதிந்த வகையில் சேர்க்க வேண்டும். நாம் ஒரு பைத்தியக்காரனாக இருந்தால் அப்படிச் செய்ய முடியுமா? முடியாது. அப்படியானால், வார்த்தைகளைக் கோர்த்து அர்த்தம் உண்டாக்க, வாக்கியம் அமைக்க, கட்டுரை, கவிதை காவியமெல்லாம் எழுத, அதீத அறிவும் திறனும் இருக்க வேண்டும் அல்லவா? அப்படியானால், பத்து லட்சம் பக்கங்களைக் கொண்ட ஒரு என்சைக்ளோபீடியாவை உருவாக்க, அதைப் பிரதியெடுக்க எவ்வளவு அறிவு வேண்டும்?! அந்த வேலையை ஒரு சின்ன தப்புகூட ஏற்படாமல் செய்யும் உயிரணுக்களுக்கு எவ்வளவு ஞானம் வேண்டும்?! எனில், ஒவ்வொரு உயிரணுவும் ஒரு மேதை என்று சொல்வது எந்த விதத்திலும் மிகையாகாது. அந்த மேதை இறைவன்தான். எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன் அவனே. உள்ளேயும் வெளியேயும் இருப்பவன் அவனே. இந்த உண்மையைத்தான் இக்கட்டுரையில் ஆரம்பத்தில் உள்ள திருமறை வசனம் கூறுகிறது!

  ஆனால், இந்த மேதாவித்தனத்தைத்தான் தற்செயல் என்று நினைக்கிறது டார்வினிய கோட்பாடு! எறும்பிலிருந்து எருமை மாடு வரை, பூனையிலிருந்து யானை வரை, பூ, பழம், தாவரம், மிருகம், கோளங்கள், நட்சத்திரங்கள், மனிதன் எல்லாமே தற்செயலாக இவ்வுலகுக்கு வந்தவை என்கின்ற அவர்களது வாதம், அபத்தமாக இருப்பது மட்டும் தற்செயலான விஷயமல்ல! போகட்டும். உயிரணுவுக்குள் மீண்டும் செல்வோம் வாருங்கள்.

  உயிரணுக்களின் வகைகள்

  ஏறக்குறையை 200 வகையான உயிரணுக்கள் சேர்ந்து நம் உடலாக மாறியுள்ளன. ஆயினும் அவற்றுக்குள் உள்ள வேறுபாடு மிகவும் நுட்பமானது மட்டுமே. நரம்புகள், தசைகள், ரத்தம் ஆகியவற்றுக்கான உயிரணுக்களில் டி.என்.ஏ. ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உதாரணமாக, நரம்பு உயிரணுக்கள் கொஞ்சம் நீளவாக்கில் இருக்கும். மனிதர்களைப் பொருத்தவரை, முதுகுத்தண்டிலிருந்து பாதம் வரை அவை கிட்டத்தட்ட ஒரு மீட்டர் நீளம் இருக்கும். அவற்றுக்கு  ‘ஆக்சான்’ என்று பெயர். அவை நீளமாக இருப்பதால், கிடைக்கும் செய்திகளை, புலனுணர்வுத் தூண்டுதல்களையெல்லாம் தாமதமின்றித் தேவையான இடத்துக்குக் கடத்த உதவியாக உள்ளது.

  ஆனால், எரித்ரோசைட் எனப்படும் ரத்த உயிரணுக்கள், அளவில் மிகமிகச் சிறியதாக இருக்கும். ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்குதான் இதன் அளவு! அவை அவ்வளவு சிறியதாக இருப்பதால், தந்துகி எனப்படும் ரத்த நுண்குழாய்கள் வழியாகச் செல்ல ஏதுவாக இருக்கும். மேலும், கீழும் நடுவிலும் கொஞ்சம் பள்ளமாக இருப்பதால், அந்த இடம் வழியாக கார்பன்-டை-ஆக்ஸைடு சென்று ஆக்ஸிஜன் உள்ளே வர வசதியாக இருக்கும்.

  {pagination-pagination}

  கண்கள், காதுகளில் உள்ள உயிரணுக்கள் கொஞ்சம் வேறு மாதிரியாக இருக்கும். உதாரணமாக, காதுக்குள் இருக்கும் கோக்லியா (cochlea) என்ற உயிரணுவுக்கு, சப்த அதிர்வுகளை வாங்கி அனுப்புவதற்கு ஏதுவாக முடிமுடியாக இருக்கும். கண்களில் ரெட்டினா எனும் விழித்திரையில் இருக்கும் கூம்பு வடிவ உயிரணுக்கள், ஒளியை உள்வாங்கும் கூருணர்வு கொண்டவையாக இருக்கும்.

  சிறுகுடலின் உள்வரிப்பூச்சைச் சுற்றி, உணவை உள்வாங்குவதற்கும் செரிப்பதற்கும் உதவும் வகையில் வில்லி (villi) எனப்படும் லட்சக்கணக்கான உயிரணுக்கள் உள்ளன.

  இத்தனை வகையான கோடிக்கணக்கான குட்டி உயிரணுக்கள் எல்லாமே, ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டை ஆகியவற்றின் இணைப்பில் உருவான ஸைகோட் (zygote) என்ற ஒரேயொரு உயிரணுவிலிருந்து வந்தவை!

  இப்படி ஒரேயொரு உயிரணுவிலிருந்து உருவான இத்தனை கோடி உயிரணுக்களும், தங்களுக்கான வடிவத்தையும் வேலையையும் தாங்களே தற்செயலாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டன என்று சொன்னால், நம்பினால், நம்மைவிட முட்டாள் இந்தப் பிரபஞ்சத்தில் வேறு யாரும் இருக்க முடியாதுதானே?

  தெய்வீக ஏற்பாடு என்பது இதுதான். இன்னும் பார்க்க இருக்கிறோம்…

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai