Enable Javscript for better performance
42. எஹ்ரட் டயட்- Dinamani

சுடச்சுட

  

  42. எஹ்ரட் டயட்

  By நாகூர் ரூமி  |   Published on : 20th February 2017 12:00 AM  |   அ+அ அ-   |    |  

   

  விஞ்ஞானப்பூர்வமான மருத்துவமனைகள், சிகிச்சையகங்கள் என்பவையெல்லாம் மனிதகுலத்தை கசாப்பு செய்யும் இடங்களாகும் – எஹ்ரட்

   

  பேலியோ டயட் பற்றி சமீபகாலமாக கேள்விப்படுகிறோம். இது என்ன எஹ்ரட் டயட் என்று கேட்கிறீர்களா? பேலியோவுக்கு நேர் எதிர் டயட் என்று இதைச் சொல்லலாம்! ஆமாம். இது ஒரு சைவ உணவுத்திட்டம். வீர சைவம் என்றுகூட இதை வர்ணிக்கலாம்! என்னை மாதிரி தீவிர அசைவர்களுக்கு இது ஒரு சிம்ம சொப்பனம்! (சிங்கம்கூட அசைவம்தானே)!

  மனித உடல் பற்றியும், ஆரோக்கியம் பற்றியும், நோய்களை உண்டாக்கும் உண்மையான ஒரே காரணி எது என்பது பற்றியும், எந்த நோயாக இருந்தாலும் அச்சமின்றி எப்படி அதைக் குணப்படுத்தலாம் என்பது பற்றியும் பல உண்மைகளை எஹ்ரட்டின் டயட் சிஸ்டம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

  இந்த டயட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தி, அதை ரொம்ப கடுமையாகப் பின்பற்றி வெற்றிகண்டு, தீர்க்கமுடியாத வியாதி உள்ளதாக சொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளை குணப்படுத்திய டயட் சிஸ்டம் இது. ‘ம்யூகஸ்லெஸ் டயட் ஹீலிங் சிஸ்டம்’ (Mucusless Diet Healing System) என்று இதற்கு எஹ்ரட் பெயர் வைத்தார். ஆடிக்கொருதரம், அமாவாசைக் கொருதரம் நாம்கூட இதைப் பின்பற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்! என்ன, ஆச்சரியமாக உள்ளதா? இருக்கலாம். ஆனாலும் உண்மைதான். எத்தனை பெயர்களில் சொன்னாலும் உண்மை ஒன்றுதானே? வாட்டர், ஜலம், பானி, ஆப் எல்லாமே தண்ணீர்தானே?!

  குறிப்பிட்ட உணவு வகைகளைச் சாப்பிடுவது மட்டுமின்றி, எதையுமே சாப்பிடாமல் இருப்பதும் இந்த உணவுத் திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்! ரொம்ப புதிர் போடுகிறேனோ? சரி, இருக்கட்டும். இந்த உணவுத் திட்டம் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன் அதை அறிமுகப்படுத்திய பேராசிரியர் அர்னால்டு எஹ்ரட்டை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டி உள்ளது. பார்ப்போமா?

  ஆர்னால்டு எஹ்ரட் (Arnold Ehret (1866 – 1922))

  ஆர்னால்டு எஹ்ரட், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு கல்வியாளர். “ஆரோக்கியம் பற்றிய கடைசிச் செய்தியையும் சொல்லிவிட்டவர்” என்று எஹ்ரட்டை வர்ணித்தார் பேரா. சைல்ட் (B.W. CHILD). ஆரோக்கியம், உணவுத்திட்டம், நச்சு நீக்கம், பழ உணவுகள், விரதம் இருத்தல், உணவு வகைகளைக் கலத்தல், ஆயுள் நீட்சி, இயற்கை வைத்தியம், உடல் பயிற்சிகள், உடலின் உயிர்ச்சக்தி – இப்படி பல முக்கிய விஷயங்கள் பற்றி பல நூல்களை எழுதியவர் எஹ்ரட்.

  தெற்கு ஜெர்மனியில் இருந்த பேடன் என்ற ஊரில் அல்லது மாகாணத்தில் எஹ்ரட் பிறந்தார். அவரது பெற்றோர் கால்நடை மருத்துவர்கள். அவரது தாத்தா பாட்டிகள் மருத்துவர்கள். சகோதரரும் தந்தையும் டிபி வந்து இறந்தார்கள். அவரது தாயார் சிறுநீரக அழற்சியால் அவதிப்பட்டார். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? ஆரோக்கியம் பற்றி எஹ்ரட் ஆராய்ச்சி செய்வதற்கான நியாயம் குடும்பத்திலிருந்தே தொடங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளத்தான்.

  எஹ்ரட்டுக்காவது நோய் எதுவும் இல்லாமல் இருந்ததா என்றால் அதுதான் இல்லை. அவருக்கும் ஒரு நோய் இருந்தது. அவரது சிறுநீரகம் கடுமையாகப் பழுதுபட்டிருந்தது. ப்ரைட்ஸ் டிசீஸ் (Bright’s Disease) என்று அது சொல்லப்பட்டது. முதன் முதலில் ப்ரைட் என்பவருக்கு அந்த நோய் வந்ததால் அதற்கு அவர் பெயரையே வைத்துவிட்டார்கள்! பெயர் வைத்தே கொல்வதில் மேற்கத்தியர்கள் விற்பன்னர்களாயிற்றே! எஹ்ரட்டைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நோய் ‘குணப்படுத்த முடியாதது’ என்று கூறினார்கள்.

  இருபத்தோரு வயதில் பேடனில் இருந்த ஒரு கல்லூரியில் படித்து ஓவியப் பேராசிரியரானார் எஹ்ரட் (Professor of Design). அதனால்தான் அவர் பேரா. எஹ்ரட் என்று அறியப்படுகிறார். ஜெர்மன் மட்டுமின்றி, ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மொழிகளிலும் பேசக்கூடிய, படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய திறன் பெற்றிருந்தார். ஆரோக்கியம் பற்றி அம்மொழிகளில் எழுதப்பட்ட பண்டைய நூல்களைப் படிக்க பன்மொழியறிவு அவருக்கு உதவியது.

  ராணுவத்தில் சேர்ந்த ஒன்பது மாதங்களில் அவருக்கு இருந்த ‘தீர்க்க முடியாத’ நோய் பற்றித் தெரியவந்து ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு ஒரு டெக்னிகல் கல்லூரியில் 15 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

  அவருக்கு தீர்க்க முடியாத வியாதி இருந்தது என்று டாக்டர் கஸ்டவ் என்பவர்தான் முதலில் கூறினார். ஆனால், அதன்பிறகு ஐரோப்பாவின் மிகுந்த மரியாதைக்குரிய 24 மருத்துவர்கள் சேர்ந்து அதே பாட்டைப் பாடினர்.

  ‘‘ஐந்து ஆண்டுகள் நான் மருத்துவர்களால் மிகவும் கஷ்டப்பட்டேன். அதுமட்டுமா? அந்த வேதனையின் ஒரு பகுதி, 6000 டாலர்கள் பணத்தை அவர்களுக்குக் கொடுக்கவேண்டி இருந்ததாகும். ஆனால் அதன் பலன் என்னவெனில், எனக்கு வந்த வியாதி “தீர்க்க முடியாதது” என்பதுதான்! முக்கியமான நோயறிகுறிகள் சளி, சீழ், சிறுநீரில் அல்புமின் எனப்படும் கருப்புரதம் மற்றும் சிறுநீரகங்களில் வலி” என்று அவரே கூறினார்.

  ஆனால் எஹ்ரட் சோர்ந்துவிடவில்லை. ரொம்ப நாள் உயிர் வாழ வேண்டும் என்று அவருக்கு ஆசை. யாருக்குத்தான் அது இல்லை? ‘‘எல்லோரும் சொர்க்கத்துக்குப் போக விரும்புகிறார்கள். ஆனால் யாருமே சாக விரும்புவதில்லை” என்று ஜோக் அடிப்பார் என் பேராசிரிய அண்ணன் ஒருவர்! எஹ்ரட்டின் அந்த நிலையே அவரை ஆராய்ச்சியின் பக்கம் தள்ளியது. அவரையும் சக மனிதர்களையும் அவரது ஆராய்ச்சி காப்பாற்றியது.

  ‘‘சிறுநீர் தெளிவாக இருந்தால் அது ஆரோக்கியத்தின் அடையாளமாகும் என்று என் மருத்துவர்கள் கருதினர். எனவே, என் சிறுநீர்வழி வெளியேறிய கழிவுகளையெல்லாம் நிறுத்த மருந்துகளைக் கொடுத்தனர். என்னில் இருந்து வெளியான அல்புமின் சத்தை ஈடுசெய்ய இறைச்சி, முட்டை, பால் என்று சாப்பிடச் செய்தனர். ஆனால், அவையெல்லாம் பிரச்னையைச் சரி செய்வதற்குப் பதிலாக அதிகப்படுத்தின. எனவே, சரியான உணவென்பது ம்யூக்ஸ் மற்றும் அல்புமின் இல்லாத உணவேயாகும் என்ற முடிவுக்கு நான் வந்தேன். குளியல்கள், உடற்பயிற்சிகள் என இயற்கை வைத்திய முறைகளைப் பின்பற்றியதால், என் உடலுக்குள் இருந்த ம்யூகஸ் கொஞ்சம் வெளியானது. ஆனால், தவறான உணவு முறைகளால் மீண்டும் அது உள்ளுக்குள் உருவானது” என்று அவர் கூறினார்.

  இந்த ‘ம்யூகஸ்’ என்ற சொல்தான் எஹ்ரட் வாழ்க்கையின் கதாநாயகன் என்றுகூடச் சொல்லலாம். அவர் எழுதிய நூலின் தலைப்பிலும் அந்தச் சொல் இருந்தது. ம்யூகஸ் என்ற ஆங்கிலச் சொல்லை சளி என்று தமிழாக்கலாம். ஆனால் அது வெறும் சளி மட்டுமல்ல. சளி மற்றும் பல நச்சுப்பொருள்கள் கலந்த ஒரு கலவை அது. மனித உடலை விட்டு அவசியம் வெளியேற வேண்டிய அல்லது வெளியேற்ற வேண்டிய கழிவு என்று இப்போதைக்குப் புரிந்துகொள்ளலாம்.

  சைவ உணவுகளைப் பற்றி முதலில் அவர் நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். பல சைவ உணவகங்களுக்குச் சென்று பார்த்தார். ஈடென் என்ற இடத்திலிருந்து பழக்காலனிக்கும் சென்று பார்த்தார். மருந்துகள், உடலியல், வேதியியல் பற்றியெல்லாம் ஒரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். தனது நோயை எப்படியாவது குணமாக்கிவிட வேண்டும் என்ற பேராவல் அவரை எங்கெங்கோ செல்லவும், என்னென்னவோ செய்யவும் வைத்தது. இயற்கை வைத்தியம், காந்த சிகிச்சை, உளவியல் சிகிச்சை, கிறிஸ்தவ விஞ்ஞானம் என்று என்னென்னவோ படித்தார். இறுதியாக, ஃப்ரான்ஸ் நாட்டுக்குச் சென்று அங்கு பாலும் பழமும் மட்டும் உணவாக எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்து பார்த்தார்.

  கடைசியாக, உணவு எதையுமே எடுத்துக்கொள்ளாமல் கடுமையான விரதம் இருந்து பார்த்தார். அப்படி விரதம் இருந்தபோது, உடலின் சக்தி குறைவதற்குப் பதிலாக கூடியதைக் கண்டார்! அல்ஜியர் மாநகரிலிருந்து ட்யூனிஸ் மாநகர் வரை கிட்டத்தட்ட 800 மைல்கள் சைக்கிளிலேயே சென்றார்!

  இத்தாலி நாட்டில் 56 மணி நேரம் விடாமல் நடந்து சாதனை செய்தார்! அதுவும், தொடர்ந்து ஏழு நாட்கள் விரதத்தில் இருந்த பிறகு! அதன்பிறகு ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு மட்டும்தான் எடுத்துக்கொண்டார். அதுவும் என்ன, கொஞ்சம் செர்ரிப் பழங்கள், அவ்வளவுதான்! 56 மணி நேர நடையின்போது இடையில் அவர் உண்ணவோ, ஓய்வெடுக்கவோ இல்லை.

  அசாதாரண மன உறுதிகொண்ட மனிதராக இருந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு மணி நேரம் நடந்துவிட்டாலே நாள் பூராவும் புலம்பித்தள்ளும் மனம் கொண்டவர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் அதிகம். ஆனால், இரண்டு நாட்கள் மற்றும் எட்டு மணி நேரம் இடையில் எங்கும் ஓய்வெடுக்காமல் ஒருவர் நடந்துள்ளார், அதுவும் தண்ணீர் அல்லது ஜுஸ் மட்டும் குடித்துக்கொண்டு!

  விரதம் இருப்பதன் மூலமாக ஒருவரது சக்தி பலவீனப்பட்டுப்போவதில்லை. மாறாக, ‘வைட்டாலிட்டி’ எனப்படும் இயக்க ஆற்றல் அதிகப்படுகிறது என்ற தனது கொள்கையை அவர் அந்தச் சாதனை மூலம் நிரூபித்தார்.

  பாலஸ்தீனம், துருக்கி, ருமேனியா, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெர்ஷியா போன்ற நாடுகளுக்கும் சென்று ஆராய்ச்சி செய்தார். இந்தியாவுக்கும் வந்துள்ளார். உலகின் மிக அரியவகைப் பழங்களை கலிஃபோர்னியா பல்கலைக் கழகம் சேர்த்துவைத்திருந்தது. அதையெல்லாம் பார்க்க கலிஃபோர்னியாவுக்கு எஹ்ரட் சென்றபோது, முதல் உலகப் போர் துவங்கியது. அதனால் அவரால் ஜெர்மனிக்குத் திரும்ப முடியவில்லை. அங்கிருந்துகொண்டே ஆரோக்கியம் பற்றிய கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். அங்கே பழத்தோட்டங்களை உருவாக்கினார்.

  அங்கே இருந்த பல சானிடோரியங்களைப் பார்த்த எஹ்ரட், ஒரு ஆரோக்கிய சாலையைத் தொடங்கினார். அவருக்கு ஏற்பட்டிருந்த தெளிவுகளை அடிப்படையாக வைத்து, ஆரோக்கியம் பற்றிப் பேருரைகள் நிகழ்த்த ஆரம்பித்தார். ஊர் ஊராகப் போய் பேசும் அளவுக்குப் பிரபலமானார். அப்படி அவர் செய்த 25 பேருரைகளின் தொகுப்புதான் அவரது மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படும் The Mucusless Diet Healing System என்ற நூலாகும்.

  அந்த நூலை எழுதி இரண்டு வாரங்கள்தான் ஆகியிருக்கும். விரதம் மேற்கொள்வதன் மூலமாக எப்படி ஆரோக்கியத்தை மீட்கலாம் என்ற தலைப்பில் அவர் நான்கு சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருந்தார். அவரது சொற்பொழிவுகளைக் கேட்க கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு கூட்டத்திலும், குறைந்தது நூறு பேருக்காவது உட்கார இடமில்லாமல் போனது. அப்படி ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு எண்ணெய் படிந்த சாலையொன்றில் அவர் வந்துகொண்டிருந்தபோது, கால் வழுக்கி பின்பக்கமாக விழுந்து தலையில் பலமாக அடிபட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 56 தான்! ஆனாலும், 18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் ஐரோப்பிய - அமெரிக்க இயற்கை மருத்துவ இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளராக ஆனார் எஹ்ரட்.

  வாய்வழியாகவும், எழுத்து மூலமாகவும் இந்த உலகுக்குக் கிடைத்திருக்கும் அவரது கருத்துகள் பல உண்மைகளை நமக்கு விளக்கும். இதுகாறும் நம்பப்பட்டு வந்த பல விஷயங்கள் விஞ்ஞானப்பூர்வமான பொய்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டும். பல தவறான கருத்துகளை நாம் தவிர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். அவர் என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் கேட்கலாமா?

  எஹ்ரட் பேசுகிறார்…

  ‘‘கடந்தகால அனுபத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். தவறான உணவுப் பழக்கமே என் நோய்க்கான காரணம். அப்படியானால், சரியான உணவுப்பழக்கம் என் நோயைத் தீர்க்கலாம் என்று பட்டது. இறைச்சி சாப்பிடுபவர்களைவிட சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதையும் நான் கவனித்தேன். சைவர்கள் பெரும்பாலும் வெளுத்தும் நோயுற்றவர்களாகவும் தோன்றினார்கள்”. (என்னைப் போன்ற தீவிர அசைவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது)!

  ‘‘மாவுச்சத்து கொண்ட உணவாலும் பால் எடுத்துக்கொண்டதாலும் என் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மருத்துவப் பல்கலைக் கழகத்தில் உடல்கூறியல், வேதியியல் தொடர்பாகப் படித்தேன். எனக்கு அல்புமின் தேவைப்பட்டது என்று எண்ணினேன். அதனால் ஃப்ரான்ஸில் இருந்த நைஸ் என்ற ஊருக்குச் சென்று ஒவ்வொரு நாளும் பழங்களும் கொஞ்சம் பாலும் மட்டும் உணவாக எடுத்துக்கொண்டு பரிசோதித்துப் பார்த்தேன். ஆனால் பெரிதாக பலன் எதுவும் ஏற்படவில்லை. சில நாட்கள் நன்றாக இருந்தது. வேறு சில நாட்களில் நிலைமை ரொம்ப மோசமாக ஆனது. பின்னர் ஊர் திரும்பி, என் மீது அன்புகொண்ட நண்பர்களும் உறவினர்களும், மருத்துவர்களும் சொன்னபடி பழையபடி ‘நல்ல உணவு’களை மீண்டும் சாப்பிட ஆரம்பித்தேன்”.

  ‘‘விரதம் இருப்பது பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்று என் எல்லா நண்பர்களும், உறவினர்களும் எச்சரித்தனர். என்னப்போல ப்ரைட்ஸ் நோய் உள்ளவர்கள் விரதமிருந்தால் செத்துப்போய்விடுவார்கள் என்று என் சகோதரியிடம் ஒரு இயற்கை வைத்தியர் சொன்னார்.”

  ‘‘பழங்களும், சளி பிடிக்காத உணவு வகைகளும் உடலில் செரித்த பிறகு க்ரேப் சுகர் (Grape Sugar) என்ற நன்மை செய்யும் ஒருவித சர்க்கரையை உண்டாக்குகிறது என்றும் தெரிந்துகொண்டேன். அந்த க்ரேப் சுகர்தான், மனித உணவிலிருந்து கிடைக்கும் மனிதனுக்குத் தேவையான அடிப்படையான பொருள் என்றும் தெரிந்துகொண்டேன். அதுதான் கழிவுகளையெல்லாம் வெளியேற்றுகிறது. மனிதனை குணப்படுத்துவதும் அதுதான் என்றும் தெரிந்துகொண்டேன்”. (உணவு செரித்த பின்னர் நிறைய சமாசாராங்களை, சத்துப்பொருள்களை உடல் உற்பத்தி செய்கிறது. இறுதியாக உடலில் உண்டாவது க்ளூகோஸ் எனும் சர்க்கரைதான். இதில் நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என்பதைப் பற்றியெல்லாம் ஏற்கெனவே பார்த்தோம். க்ரேப் சுகர் என்று எஹ்ரட் சொல்வது அதைத்தான்).

  “பல உணவுப் பொருள்களைக் கலந்து செய்யும் நவீன கால சமையல் முறைதான் எல்லா நோய்களும் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம்.”

  ஆஹா, அடி மடியிலேயே கை வைக்கிறாரே என்று தோன்றுகிறதா? ஆமாம். எஹ்ரட் சிபாரிசு செய்யும் உணவுகள் அல்லது சிகிச்சை என்பது பழங்கள், வேகவைத்த பழங்கள், கொட்டைகள் இவற்றோடு குறுகிய கால மற்றும் நீண்டகால நோன்பு - இவைதான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஹீலர் என்று அவரைச் சொல்லலாம். அவரது முறையும் மருந்தில்லா மருத்துவ முறைதான்.

  அவரது கருத்துகள் எல்லாமே ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. ஏற்றுக்கொள்ளத் தேவையில்லாத பல கருத்துகள் உள்ளன. ஆனாலும் உடல் பற்றியும், ஆரோக்கியம் பற்றியும், நோய்களை நீக்க அவர் சொல்லும் வழிமுறைகள் பற்றியும் அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மாற்று மருத்துவத்தையும், மருந்தில்லா சிகிச்சையை நோக்கியும் நகர்ந்துகொண்டிருக்கும் நமக்கு அது அவசியமாகும். எதை ஏற்றுக்கொள்வது, எதை விடுவது என்பதை அவரவர் முடிவு செய்துகொள்ளலாம்). 

  ‘ஆரோக்கியத்துக்கான திருத்தூதர்’ என்று வர்ணிக்கப்பட்ட ஆர்னால்டு எஹ்ரட்டையும், அவரது நோய் நீக்க வழிமுறைகளையும் பற்றி இன்னும் பார்க்கலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai