Enable Javscript for better performance
குவியத்தின் எதிரிகள்: 6 முன் அனுபவம்- Dinamani

சுடச்சுட

  

  குவியத்தின் எதிரிகள்: 6 முன் அனுபவம்

  By சுதாகர் கஸ்தூரி.  |   Published on : 30th December 2017 12:17 PM  |   அ+அ அ-   |    |  

   

  தொண்ணூறுகளில் டேப் ரெக்கார்டர்களில் பாட்டு கேட்க, ஒலி நாடாவில் பாட்டுகளைப் பதிந்து தரும் கடைகள் இருந்தன. ராயல்டி பற்றி எவரும் கவலைப்படாமல், நாம் கேட்டிருக்கும் பாடல்களை, நாடாவில் பதிந்து தருவார்கள். இதில் அவர்களுக்கே ஒரு திறமை வாய்த்திருப்பதால், நோயாளிகளிடம் மருத்துவர்கள் கேட்பதுபோல், “சிவாஜியா எம்ஜியாரா? ஜெமினி சேக்கலாமா? ஏ ஸைடுல, கடைசில ரெண்டு நிமிஷம்தான் இருக்கும். இங்க, மியூஸிக் போட்டுட்டு, ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’ பாட்ட அடுத்த பக்கத்துல பதிஞ்சிடறேன்’’ என்று தங்கள் அனுபவத்துக்கு ஏற்ப பதிந்து தருவார்கள்.

  ஒருமுறை, எம்.எஸ்.ஸின் பஜகோவிந்தம் முதலாக சில பாடல்களைப் பதியக் கொடுத்தேன். கடையில் இருந்த முதியவரிடம் “அண்ணாச்சி, ராஜாஜி பேசறது முதல்ல வரணும்” என்றேன். “அட, அது தானா வரும் தம்பி. பஜகோவிந்தம்னாலே முதல்ல ‘‘ஆதி சங்கராச்சார்யா”ன்னு ராஜாஜி பேச்சுலதான் தொடங்கும்” என்றார். வாங்கி, ஊருக்குப்போய் பார்த்ததும் தெரிந்தது, ராஜாஜி பேச்சு பதியப்படவில்லை.

  அனுபவசாலி, பல எண்ணற்ற கேசட்டுகளைப் பதிந்து தந்தவரால் இதனைப் பொறுக்க முடியவில்லை. கடைப் பையனை வார்த்தைகளால் விளாசினார். “அண்ணாச்சி, பஜகோவிந்தம்னு எழுதியிருந்தீய. அது வேற” என்று அவன் சொன்னதை காதிலேயே அவர் வாங்கவில்லை. தன் கணிப்பு தவறிய அதிர்ச்சியில் சில நொடிகள் மவுனமாக இருந்தார்.

  இதேதான், வழக்கமாகப் போகும் ரயில் புறப்படும் நேரம் மாறியிருப்பதைச் சரிபார்க்காமல், “ஏழு அம்பதுக்குதான் வண்டிய எடுப்பான். அவசரமே இல்லாம ஏழரைக்குப் போனாப் போறும்” என்பவர், ஏழேகாலுக்கு அந்த வண்டி கிளம்பிப் போனதை எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார். “எப்ப நேரத்தை மாத்தினான், வீணாப்போனவன்?” என்று ரயில்வேயை திட்டிக்கொண்டிருப்பார்

  இது அனுபவம் குறித்த அனுமானப் பிழை. அனுபவம் எப்போதும் சரியாகவே இருக்க வேண்டியதில்லை. கேள்வி என்ன? என்பதை முதலில் அனுபவம் கொண்டு, பெருமூளை தீர்மானிக்கப் பார்க்கிறது. வெகு விரைவில், தன்னிடம் இந்த சவாலை தீர்த்துவிட்டு, அமைதியாகக் கிடக்க வேண்டும். அதுதான் அச்சோம்பேறியின் திட்டம். அனுபவம் பெரும்பாலும் சரியான பதிலைத் தரும். ஆனாலும், தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

  இதற்கும், நேராக யோசிப்பதற்கும் என்ன தொடர்பு? நேராக யோசிப்பது என்பது ஒரு முறை பின்னூட்டமும், சரிபார்த்தலும் அடங்கியது. ‘ஏழு அம்பதுக்குத்தான் ட்ரெயின். எதுக்கும் ஒரு தடவ செக் பண்ணிக்கிடறேன்” என்பது உங்கள் அறிவை, அனுபவத்தை குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது. மாறாக, சரியாகச் செல்ல வைக்கும். Trust, but verify என்பது ஒரு நல்ல பழக்கம்.

  முன் அனுபவம் என்பது நமக்கு ஏற்பட்டதாக மட்டுமே இருக்கவேண்டியதில்லை. சிறுவயதில் நேரடியாகக் கேட்ட அறிவுரைகளும், பிறரது உரையாடல்களில் இருந்து எடுத்து, அதனுடன் ஒரு அனுபவத்தைக் கோர்த்தெடுத்துக் கொண்டதாகவோகூட இருக்கலாம். இது, ஆராயப்படாது பதிந்துபோன ஒரு அனுபவ நினைவாக இருந்து, உரித்த நேரத்தில் அப்படியே வெளிவரும் ஆலோசனை அன்றி இயக்கமாக இருக்கச் சாத்தியங்கள் உண்டு.

  1984-ல், வீட்டை விட்டு முதன்முறையாக நானும் என் நண்பனும் வேறு யாருடைய துணையும் இன்றி மதுரைக்குச் செல்ல வேண்டியிருந்தபோது, நண்பனின் பெரியப்பா சொன்னார் – ‘‘மதியம், ராத்திரி சோறு திங்கணும்னா, ரயில்வே ஸ்டேஷன்ல போயி சாப்பிடுங்க என்னா?” சரியெனத் தலையாட்டினாலும், ஏன் என்று விளங்கவில்லை. அவரே சொன்னார், “அங்கதான் சோத்துல சோடா உப்பு சேக்கமாட்டான்.”

  அவரது அறிவுரையின் பின்புலம், 1940-களில் இரண்டாம் உலகப் போரின்போது, அரிசித் தட்டுப்பாடு வந்ததன் தாக்கம். பிற ஓட்டல்களில் அரிசி குறைவாக இருக்கவே, அதில் சோடா உப்பு சேர்த்து, வயிறு நிரம்பச் செய்தனர். ஆனால், ரயில்வே கேன்டீனில், அரசு தரும் அரிசி என்பதாலும், அரசின் நேரடிக் கண்காணிப்பு இருந்ததாலும் சோடா உப்பு சேர்க்க மாட்டார்கள். இதெல்லாம் எப்பவோ போய்விட்டது என்றாலும், அவர் மனதில் இருந்து அந்த அனுபவம் நீங்கவில்லை. சூழ்நிலையை ஆராயாது, மனம் ‘பேரன்ட்’ என்ற நிலையிலிருந்து பகிரும் அனுபவப் பரிமாற்றம் இது.

  நம் முன் அனுபவத்தின் நீட்சியாக பலவற்றையும் பார்த்தால், இதுபோன்றே பல கசப்பு அனுபவங்களைத் தந்துவிடும். ‘‘அந்த காலேஜ்ல டீச்சர் எல்லாம் அருமையானவர்கள். கண்ணை மூடிட்டுச் சேருங்க” என்று ஒரு காலேஜை பரிந்துரைப்பவர் மனத்தில் நினைத்திருந்தது ‘நான் படிக்கறப்போ சுப்ரமணியன் சார் க்ளாஸ் எடுத்தார்னா, ஒரு பய ஃபெயிலாக மாட்டான்’ என்பது. அவர் எப்பவோ ரிடையர்ட் ஆகிவிட்டார் என்பதும், கல்லூரியில் தற்போது தாற்காலிக ஆசிரியர்கள் கொண்டு மாரடிக்கிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியாது. விளைவு?

  எனவே, முன் அனுபவம் எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் “இது என் அனுபவம். எதுக்கும் ஒரு தடவை…” என்று சரிபார்ப்பது தவறுகளைத் தடுக்கும். பல நேரங்களில், இது வேண்டாத முயற்சியாக இருக்கலாம். அதில் சலிப்படைவதைத் தவிர்க்க “இது, எனக்காகச் செய்வது” என்று மனத்தில் நினத்துக்கொள்வது பயனளிக்கலாம். சிலர், “சரி விடு, எத்தன தடவ சரி பார்ப்பே?” என்று உள்ளூரத் திட்டினாலும், ‘எதற்கும் ஒருமுறை’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொள்வது பல விபரீதங்களைத் தடுக்கும்.

  எல்லாவற்றிலும் சந்தேகப் பிராணியாக இருக்க வேண்டுமா? உறுதியாக எதையும் நம்பிவிடக் கூடாதா? என்று கேள்வி எழலாம். இதுவும் நம் முன் அனுபவ நீட்சிதான். நாம் பேசும் பொருள் என்ன? சரி பார்ப்பது. எதில் சரி பார்க்க வேண்டும்? சூரியன் கிழக்கே உதிப்பதையா? அல்லது நாளைக்கு எத்தனை மணிக்கு இன்டர்வியூ என்பதையா? இந்தப் பகுத்தறிவு அவரவர் தம்மில் வர வேண்டிய ஒன்று.

  அனுபவத்தை எங்கே பயன்படுத்துவது? நிலையான ஒரு தகவல் இருக்குமானால், அனுபவம் தவறல்ல. “பாத்ரூமா? இப்படி நேராப் போயி, வலது பக்கம் திரும்புங்க” என்பது உங்கள் வீட்டைப் பொறுத்த அளவில், அனுபவத்தின் பலம். இது பழக்கத்தில், அனுபவத்தில், அதிகம் யோசிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இல்லாமல் வருவது. அதே அனுபவம் வேறொரு கட்டடத்தில் சரியாக இருக்காது.

  யோசிக்க வேண்டிய செயல்களில் முன் அனுபவத்தைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை என்பதையே முன் அனுபவப் பிழை முன்னிறுத்துகிறது. வட இந்தியாவில் ஜுகாட் (Jugaad) என்றொரு சொல் உண்டு. ஒரு சவாலுக்கு, தனக்குத் தெரிந்த, கிடைத்த பொருட்களை வைத்து ஒரு தீர்வைக் கொண்டுவருதல் என்பது ஜுகாட்.

  பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே ஒரு கிராமத்தில், லஸ்ஸி தயாரிக்கும் கடையொன்றில், பெருமளவு லஸ்ஸி தேவைப்பட, இவ்வளவு தயிரை எப்படிக் கடைவது என்று யோசித்தார்கள். வீட்டிலிருந்து, பழைய வாஷிங்மெஷினை கடை முதலாளியின் மனைவி கொண்டுவந்தார். நன்றாகத் தேய்த்து கழுவி, அதில் தயிரைக் கொட்டி ஓடவிட, பத்து லிட்டர் தயிர் ஐந்து நிமிடத்தில் ரெடியானது. இது ஜுகாட். அனுபவம் – வாஷிங் மெஷினில் நீர் சுழல்வது. அதன் நீட்சி, தயிர் கடைவது. இங்கு அனுபவம் சரியாக இயங்குகிறது.

  ஆனால், எல்லா சூழ்நிலையிலும் இது ஒத்துப்போகாது. ஒருவன், வயிற்று வலிக்கு எட்டு கடுக்காய்களை அரைத்து உண்டு, வலி சரியாகிப்போக, எந்த வலியுடன் வந்தவர்களுக்கும் எட்டு கடுக்காய் சாப்பிடுங்கள் என்று சொல்வது அபத்தம் என்பதையே முன் அனுபவப் பிழை காட்டுகிறது. “எல்லா வலிக்கும் எட்டே கடுக்காய்” என்று ஒரு பழமொழியே உண்டு.

  எனவே, தன் அனுபவத்தைக் கருத்தாகவோ, அறிவுரையாகவோ முன்வைக்கும் முன்னர், ஒரு நிமிடம் ‘இது சரியாக இருக்குமா?’ என்று தன்னிடமும் பிறரிடமும் கேட்டுப் பின்னூட்டம் பெற்றுக்கொள்வது பல விபரீதங்களைத் தடுக்கும். இந்த ஒரு நிமிட இடைவெளியில் பல செயல்கள் சாத்தியம்.

  இந்த இடைவெளியைப் பல கோணங்களில் உளவியலாளர்கள் அலசியிருக்கிறார்கள்.

  பரிமாற்ற ஆய்வுகளில், இது அடல்ட் எனப்படும் மனச் சிந்தனையின் பலம் என்று சொல்கிறார்கள். இதனை, ‘ஐ ஆம் ஓகே, யூ ஆர் ஓகே’ மற்றும் ‘ஸ்டேயிங் ஓகே’ போன்ற பரிமாற்ற ஆய்வு பிரபல புத்தகங்களில் விளக்கமாகக் காணலாம்.

  ஸ்டீபன் கோவே தன் புத்தகமான ‘செயலூக்கம் உள்ளவர்களின் ஏழு பழக்கங்கள்’ (7 Habits of Effective People) என்ற புத்தகத்தில், தூண்டலுக்கும் எதிர்வினைக்குமான இடைவெளியைப் புகழ்கிறார்.

  டேனியல் கானேமான், ‘விரைவாகச் சிந்திப்பது, மெல்லச் சிந்திப்பது’ (Thinking Fast, Thinking Slow) என்ற தனது புகழ்பெற்ற புத்தகத்தில், எதிர்வினையின் வேகத்தையும், அது வரும் இடைவெளியின் அளவையும் முக்கியமாகச் சொல்கிறார்.

  எப்போது முன் அனுபவத்தை மேற்கொள்ள வேண்டும்? எப்போது சிந்தித்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும்? இதனைப் பற்றித் தெரிய வேண்டுமானால், மேலே கூறிய மூன்று புத்தகங்களையும் வாசியுங்கள். சில காலம் அதில் உள்ள கோட்பாடுகளை நடைமுறைப்படுத்திப் பாருங்கள். அதன்பின் நம் அனுபவம் சார்ந்த ஒரு பழக்கம் ஏற்படும்.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp