Enable Javscript for better performance
27. பழக்கங்கள்- Dinamani

சுடச்சுட

  
  habit

   

  Habits என்பதை தமிழில் பழக்கங்கள் என்போம். இதன் பலத்தைப் பற்றியும் பலனைப் பற்றியும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். நன்மை தரும் பழக்கங்களை விடாது தொடரவும், தீமை தரும் பழக்கங்களைக் கண்டுணர்ந்து அதனை விட்டு விலகவும் தெரிந்திருக்க வேண்டும். அது நூற்றுக்கு நூறு பெறுவதற்கு பெரும் துணை புரியுமே!

  மாணவர்கள் என்றில்லை, பெரியவர்களும் சரி, "அதென்னவோ தெரியவில்லை எனக்கு அப்படி பழகிவிட்டது, மாற்றிக்கொள்ள இயலவில்லை" எனச் சொல்வதைக் கேட்டிருப்போம். அதன் பலத்தை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். தொடக்கத்தில் விளையாட்டை, பின்விளைவுகள் என்ன ஏது எனத் தெரியாமல் தொடங்கப்பட்டு அதனை சில ஆசைகள், இச்சைகள், சின்னச் சின்ன சந்தோஷங்கள் காரணமாகத் தொடர்ந்து பின்னர் அது பழக்கமாகி, ஒருவரை முழுமையாக ஆட்கொள்ளவல்லது பழக்கம் எனும் Habit.

  தீய பழக்கங்கள் என்று மட்டுமில்லை, நல்ல பழக்கங்களும்விட முடியாதவைதான். ஆனால் ஒரு வேறுபாடு.. நல்ல பழக்கங்களைத் தொடங்கும் முன்பு அதன் பலன் என்ன என்பதைத் தெரிந்துகொண்டுதான் தொடங்குகிறோம். அந்தப் பழக்கத்தினை மெல்ல மெல்ல தினசரி வாடிக்கையாக தினசரி ஒழுங்காக மாற்றிக்கொள்ளும்போது நாம் அடையும் பலன் நமக்குத் தெரியவருகிறது. இதன் காரணமாக அந்தப் பழக்கத்தினை விடாது கடைப்பிடிக்கிறோம். அதன் பலனை தொடர்ந்து அனுபவிக்கிறோம். நூற்றுக்கு நூறு தொடரில், அடுத்து வரும் சில வாரங்களுக்கு சின்ன சின்ன நல்ல பழக்கங்களினால் விளையும் பெரும் நன்மைகளை வாசிப்போம். அதற்கு முன், பழக்கம் எனும் இந்த உளவியலைக் குறித்து சற்றே விரிவாகத் தெரிந்துகொள்வோம்!

  ஒருவருக்கு ஒரு பழக்கம் உருவாகி அதனை அவர் இடைவிடாது தொடர மூன்று காரணிகள் தேவை என்கிறது உளவியல். தூண்டுதல், தொடர் செயல், செயலினால் கிடைக்கும் பலன் அல்லது இன்பம் எனும் இந்த மூன்று காரணிகள்தான் அவை.

  இதில் ஒரு பழக்கத்தினை தொடர்ந்து செய்யத் தூண்டுதலாக அமையும் அம்சம் இன்னொரு செயலைக் கவனித்ததால் தூண்டப்படுதல், இடத்தினால் தூண்டப்படுதல், நேரத்தினால் தூண்டப்படுதல் என்பதுபோல, ஒருவரின் ஆழ்மனதோடு தொடர்புடைய தூண்டுதலாக இருக்கலாம். சில உதாரணங்கள் வழியாக இதனைப் புரிந்துகொள்வோமா!!

  தன்னுடன் இருப்பவர்கள் ஒரு செய்கையினைச் செய்யும்போது தானும் அதனைச் செய்து பார்க்க விழைவது. உதாரணம் - புகைப் பிடித்தல், மது அருந்துதல், எனும் தீய பழக்கம் மட்டுமில்லை, புத்தகம் வாசித்தல், இசைக்கருவி இசைத்தல், உடற்பயிற்சி செய்தல், வேற்று மொழி பயிலுதல் என்பன போன்ற நல்ல பழக்கங்களும், உடனிருப்பவர் செய்வதால் அதன் வழியே தூண்டப்படுகின்றவையே!

  நண்பர்கள் பொருட்கள் வாங்குவதால் தானும் வாங்குவதற்கு முயற்சிப்பது. உதாரணமாக - மொபைல் போன்கள், அழகுசாதனப் பொருட்கள், வாகனங்கள், மின்ணணு சாதனங்கள் வாங்கும் பழக்கம்!

  இடம் சார்ந்த தூண்டுதல் என்பது மிக பலமானது. ஒரு குறிப்பிட்ட உணவகத்தைக் கடந்து செல்லும்போது அங்கே தேநீர் நல்ல சுவை எனத் தூண்டப்பட்டு அங்கே செல்வது, ஒரு குறிப்பிட்ட நபரைக் காண்பதற்காகவே சில சாலைகளைத் தேர்வு செய்து பயணிப்பது, இப்படி இடம் சார்ந்த தூண்டுதல்கள்.

  உணவு அருந்தியபின் இனிப்பு சாப்பிடுவது, புகைப்பது, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் ஒரு லிட்டர் அருந்துவது எனும் தூண்டுதல்கள் பலனைக் கருதி உருவாகின்றவை!

  பழக்கங்கள் மெல்ல மெல்ல தொடர் நடவடிக்கைகள் மூலம் பலம் பெறுகின்றன. அவை தொடரப்படும்போது, அதன் பலமும், பலனும் ஏன் அதனால் விளையப்போகும் பலவீனமும் தெரியாது. தொடர்ந்தபின் அது நம்மை விடுவதில்லை! நாம் அதை விடுவதில்லை.

  சில வாழ்க்கை சந்தர்ப்பங்களில் பழக்கங்களை மாற்றிக்கொள்ளவோ அல்லது, கைவிடவோ வேண்டிய அவசியமும் கட்டாயமும் உருவாகும். பழக்கத்தின் பலம் அப்போது தெரியவரும்.

  உதாரணமாக, தன் வீட்டில் செல்லமாக கேட்பதெல்லாம் கேட்டபோதெல்லாம் மறுப்பின்றி கிடைத்துக்கொண்டிருந்த ஒரு பெண், திருமணத்திற்குப் பின் வேறு வீட்டில் வாழச் செல்கிறாள். அங்கே சூழல் மாறுபட்டிருக்கலாம். கேட்டது கிடைப்பதில் தாமதம் நிகழலாம். அல்லது கேட்டது கிடைக்காமலும் போகலாம்.

  பள்ளிக் கல்வி வரை, பாடப் புத்தகம் அதற்கான வகுப்பறை என்பதான எளிய முறையில் இருந்த கல்வி, கல்லூரிப் பாடத் திட்டத்தில் இந்த குறிப்பிட்ட புத்தகம் என்று இல்லாமல் பல நூல்களைத் தேடி வாசித்துக் குறிப்பு எடுக்கும் அவசியம் உருவாகும். வாசிக்கும் பழக்கத்தை பள்ளி நாட்களிலேயே கொண்டிருந்த மாணவர்கள் இந்த மாறுதலை மிகச் சுலபமாக எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு பழக்கத்தில் மாறுதல் தேவை இருக்கவில்லை. ஆனால் பள்ளி மாணவப் பருவத்தில் நூல்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாத மாணவர்கள் கல்லூரி வந்தவுடன் நூல்கள் வாசித்து குறிப்பு எடுக்க வேண்டிய அவசியம் வரும்போது தடுமாறுகின்றனர். அந்தப் புதிய பழக்கம் கை வர மறுக்கிறது!

  வசிக்கும் வீட்டுக்கு அருகே நடை தூரத்தில் பள்ளி என்ற வசதி நிலையிலிருந்த மாணவர்கள், கல்லூரிப் படிப்புக்கு பேருந்து மூலம் சில கிலோமீட்டர் பயணம் செய்தாகவேண்டி வரும்போது பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் வருகிறது. மேலும் வெளியூரில் தனியே கல்லூரி விடுதியில் தங்கி கல்வி பயில வேண்டிய அவசியம் வருகிறது. சில சந்தர்ப்பங்களில் மேற்கல்விக்கு அயல் தேசத்திற்கு பயணம் செய்யவும், அங்கே தங்கவும் நேரிடுகிறது. தன் வேலைகளைத் தானே பெருமளவில் செய்துகொள்ளப் பழக்கம் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த மாறுதலை சவாலின்றி எதிர்கொள்கிறார்கள், அப்படிப் பழகாத மாணவர்கள் இந்த சவாலில் மனச்சோர்வு கொள்கிறார்கள். பெற்றோரைப் பிரிந்திருக்கும் நிலையினை எதிர்கொள்ள இயலாமல் தடுமாறுகிறார்கள்!!

  மாணவப் பருவத்தில் அது பள்ளி மாணவப்பருவமென்றாலும், கல்லூரி மாணவப் பருவமென்றாலும் சில இலக்குகளை மாணவர்கள் கொண்டிருப்பார்கள். உதாரணமாக, தொழில் நிலை சார்ந்த இலக்குகளான நல்ல மருத்துவராக வேண்டும், துறை நிபுணராக வேண்டும், பொறியாளராக வேண்டும், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிக்கு சேர வேண்டும், தொழில் தொடங்க வேண்டும், சொந்த வீடு அமைத்துக்கொள்ள வேண்டும், தாய் தந்தையினை அவர்கள் பணி ஓய்வுக்காலத்தில் நன்கு கவனிக்க வேண்டும், சில குறிப்பிட்ட வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இன்புற வேண்டும் இப்படி பலப் பல.. இந்த இலக்குப் பட்டியல் எல்லை இல்லாத நீளம் கொண்டதுதானே!

  இந்த இலக்குகளை அடைய கல்வித் தகுதி, மதிப்பெண் இவை மட்டும் இருந்தால் போதுமா? போதாது. எந்த இலக்காக இருந்தாலும் அதனை அடைய நம் பழக்கங்களும் துணைபுரியும். எந்த பழக்ங்கள் எப்படி துணைபுரியும் என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டால் இலக்கினை அடைவதில் சிரமம் இருக்காது. சீக்கிரம் இலக்கினை அடையலாம்.

  சில பழக்கங்கள் நேரடிப் பலனையும் மறைமுகமாக நமக்கே தெரியாமல் வேறு சில நல்ல பழக்கங்களை நமக்குள் விதைக்கும் ஆற்றல் கொண்டவை!

  இது குறித்தெல்லாம் தெரிந்துகொண்டால், மாணவப் பருவத்தில் பள்ளி / கல்லூரித் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு பெறுவது மட்டுமல்ல வாழ்விலும் நூற்றுக்கு நூறு பெறலாம்.

  ‘சின்ன சின்ன பழங்கங்கள் பெரும் பலன்கள்’ - எப்படி என்ன என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம்.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai