Enable Javscript for better performance
29. காரணங்கள் சொல்லிப் பழகாதே- Dinamani

சுடச்சுட

  
  opportunity

   

  சிலரை நீங்கள் கவனித்திருக்கலாம். அவர்கள் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை, அதிலும் மிக முக்கியமான வேலைகளை செய்து முடிக்காமல் இருக்க பல காரணங்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்தக் காரணங்களில் எதுவும் நியாயமான காரணங்களாக இருக்காது. ஆராய்ந்து பார்த்தால் அவை யாவும் பொருந்தாதவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இப்படி காரணம் சொல்லுவதற்கு என்ன காரணம்?!

  சிலருக்கு சோம்பல் காரணம். அடடா! இந்த வேலையை முடிக்க அலைய வேண்டுமே.. அங்கே போக வேண்டுமே.. இங்கே செல்ல வேண்டுமே என்பதான அலுப்பும் சேர்ந்துகொள்ளும். ஆனால் இதற்கெல்லாம் பின்புலத்திலே ஓர் அம்சம் உண்டு!

  ஆங்கிலத்தில் Proactive எனச் சொல்வார்கள். அதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பதற்கு காட்டப்படும் முனைப்பில் இன்னமும் ஆராய்ந்து, எப்படி இடர் வரலாம், என்ன சவால் வரலாம், எது போன்ற சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள வேண்டும் என யூகிக்கும் திறன்தான் proactiveness.

  இந்த தன்மை இல்லாத காரணத்தால்தான் காரணம் சொல்லிப் பழகத் தொடங்குவார்கள். அந்தக் காரணங்கள் பல நம்பமுடியாதவை மட்டுமல்ல, நகைப்புக்கு உரியவையும்கூட!

  • எனக்கு கணக்குப் பாடம் சரியாக வராது. ஆகவே நான் படிக்கவில்லை.
  • அறிவியல் ஆசிரியருக்கு என்னைப் பிடிக்காது.
  • அந்த ஊருக்குப் போனால் எனக்கு சளி பிடிக்கும்.

  இப்படி காரணப் பட்டியல் பெரியது. சற்று நேரம் இந்த காரணங்களைக் குறித்து யோசித்துப் பார்த்தால், இவை நிஜமான காரணமில்லை என்பது தெரியும்.

  நாம் தொடக்கத்தில் நம்பத் தொடங்கும் சின்னச் சின்ன செய்திகள் நம்மை ஆக்கிரமிக்கின்றன என உளவியலாளர்கள் சொல்வார்கள். இந்த சின்னச் சின்ன செய்திகளே மெல்ல மெல்ல பலம் பெற்று நம் பழக்கங்களாக ஆழமாக நம்மை பிடித்துக்கொள்கின்றன. உதாரணமாக, ஒரு காரியத்தைச் செய்யாமல் இருப்பதற்கு காரணம் சொல்லப் பழகிவிட்டால், அந்த சின்ன செய்தி நம் மூளையில் பெரிய அளவில் சென்று பதிவாகிறது. அடுத்த முறை அதேபோன்ற செயல் வரும்போது நாம் காரணம் சொல்லப் பழகிவிடுகிறோம். அந்த செயலைச் செய்வதற்கு தேவையான விவரங்களை நாம் யோசிப்பதில்லை. அப்படியே யோசித்தாலும் அந்த நினைவினை பின்னுக்குத் தள்ளி நம் மனதில் பதிந்திருக்கும் காரணம் சொல்லும் பழக்கம் முன்னே வந்து, அந்த செயலைச் செய்யவிடாமல் தடுக்கிறது. செயலைப் புறக்கணிக்க வைக்கிறது.

  பலர் இப்படிக் காரணம் சொல்லிப் பழகி, நல்ல வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டு அதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு தாங்கள் சொன்ன காரணத்தினால்தான் அந்த வாய்ப்பு பறிபோனது என்பது தெரிவதில்லை. கார், பேருந்து போன்ற வாகனத்தில் பின்னே என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு வாகன ஓட்டியின் இருக்கைக்கு எதிரே ஒரு கண்ணாடி வைத்திருப்பார்கள். அது அளவில் சிறியதாக இருக்கும். அவசியமான கண்ணாடி. ஆனால் வாகனத்தை முன்னே செலுத்த தேவையான அந்த சாளரத்தின் அளவு பெரியதாக இருக்கும். கொஞ்சமல்ல, மிகப் பெரியதாக இருக்கும். நமது வாழ்க்கையும் அதுபோலத்தான்; கல்வியும் அதுபோலத்தான்; வேலை, வியாபாரம் அதுபோலத்தான். நாம் முன்னே செல்ல வேண்டிய பாதை மிக நீளமானது. அதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதலில் ஆழமாக உருவாக வேண்டும்.

  எதிர்காலத்தைக் குறித்த நன்மை பயக்கும் தீர்மானம் உள்ளவர்கள், காரணம் சொல்லிப் பழகமாட்டார்கள்.

  காரணம் சொல்லிப் பழகுகின்றவர்களில் இன்னுமொரு ரகம் உண்டு. தங்கள் வாழ்வில் நிகழும் எல்லா செயல்களுக்கும் தாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்பதுபோல காரணம் சொல்லிக்கொண்டே இருப்பவர்கள்

  • அவர் எனக்குக் கெடுதல் செய்துவிட்டார்.
  • தந்தை என்னை நல்ல பள்ளியில் சேர்க்கவில்லை.
  • சக மாணவனுக்கு தன்னைவிட சலுகை நிறைய கிடைக்கிறது.

  இந்த பட்டியலும் பெரிய பட்டியல், பல மைல்கள் நீளமான பட்டியல்!!!

  தன் வாழ்க்கை குறித்து தான் அக்கறை கொள்ள வேண்டும். தன் வாழ்க்கைக்குத் தானே பொறுப்பு எனும் ஆழமான நம்பிக்கை இருந்தால், இதுபோன்ற காரணங்களைச் சொல்லும் பழக்கம் வராது! வரவே வராது!!

  வேறு யாரோ தன் வாழ்க்கைக்குப் பொறுப்பு என நினைப்பது மிகவும் அறிவான செயல் அல்ல. அது நியாயமான செயலும் அல்ல. வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் அவர் அவருக்கான சிந்தனை உண்டு. அவை யாவும் சில சமயங்களில் நம்முடன் இசைந்து வரும். பல சந்தர்ப்பங்களில் அவை மாறுபடும். அதனால்தான் நம்மை பிறர் ஏற்பதும், மறுப்பதும் நிகழ்கிறது. அது போலவேதான் நாம் பிறரை ஏற்பதும் அவர்களை நாம் மறுப்பதும் நிகழ்கிறது.

  இந்த அடிப்படையில் கவனித்தால் நம் வாழ்வுக்கு பொறுப்பானவர்கள் நாம் மட்டுமே என்பது தெளிவாகும். நம் வாழ்வில் நமக்கு உதவிடும் தந்தை, தாய், ஆசிரியர், நண்பர்கள், ஏனையோர் எல்லோருக்கும் நம் வாழ்வின் மீது இருக்கும் பொறுப்பைக் காட்டிலும் நமக்கு நம் வாழ்வின் மீது பொறுப்பு அதிகம் என்பதை உணர வேண்டும்.

  தன் வாழ்வின் பொறுப்பாளர் தான்தான் என உணர்ந்தவர், காரணம் சொல்லிப் பழகமாட்டார்.

  தன் வாழ்வின் பொறுப்பு தான்தான் என உணர்ந்தவர், யார் எனும் கேள்வி எழும். எழ வேண்டும். அதுதான் இயல்பு.

  தன் வாழ்வின் பொறுப்பு தான்தான் என உணர்ந்தவரின் இயல்புகளைக் கவனிக்கலாம்.

  அவருக்கு செயல்களை சரிவர கணித்து, அதனை செயலாற்ற துணிவும், ஆர்வமும் இருக்கும். எது எல்லாம் தன்னால் நிர்வகிக்க இயலும், எது எல்லாம் தனது கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அதிலெல்லாம் மிகச் சரியான விதத்தில் செயலாற்றத் தெரிந்திருக்கும். எது எல்லாம் தன்னால் நிர்வகிக்க இயலாதோ அதைச் சரியாக அடையாளம் கண்டு, அதற்குரியவர்களின் உதவியைப் பெறத் தெரிந்தவராக இருப்பார். அதுபோல எது எல்லாம் தன் கட்டுப்பாட்டில் இல்லையோ அதன் விளைவுகளை சரியாகப் புரிந்துகொண்டு மாற்று ஏற்பாடுகளை செய்யத் தெரிந்தவராக இருப்பார்.

  தன் வாழ்வின் பொறுப்பு தான்தான் என உணர்ந்தவர் காரணங்கள் சொல்லிப் பழகமாட்டார்

  சிலரைக் கவனித்திருக்கலாம். நல்லவிதமாகத் திட்டமிடுவார்கள், செயலும் செய்வார்கள். ஆனால் ஏதோ ஒரு சவாலின் காரணமாக அந்த செயல் தடைபட்டால் அதை சரிவர ஆராயாது பாதியில் கைவிடுவார்கள். கைவிட்டபின் அதற்கான முறையான காரணத்தை ஆராய்ந்து சரியான முயற்சிகளைத் தொடராமல், சாக்குபோக்கு சொல்லப் பழகுவார்கள்.

  ஒரு செயலில் எதிர்பாராது வரும் தடையினை எதிர்கொள்வது நல்ல அனுபவம் என உணர வேண்டும். அப்படியான அனுபவத்தினை எதிர்கொள்வதுதான், மனதை வலுப்படுத்தும், முயற்சியைச் செம்மையாக்கும்.

  தடைகளை சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப முயற்சிகளைச் சீரமைத்துக்கொள்ளத் தெரிந்தவர்கள் காரணம் சொல்லிப் பழகமாட்டார்கள்.

  நூற்றுக்கு நூறு என்பது மதிப்பெண் இல்லை. நூறு வாய்ப்புகள் வரும்போது அந்த நூறு வாய்ப்புகளும் மாறுபட்டவை எனப் புரிந்துகொள்வதும், சவால்கள் மாறு வேடமிட்ட வாய்ப்புகள் என அறிந்துகொள்வதுமே நூற்றுக்கு நூறு.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai