Enable Javscript for better performance
14. நலம் தரும் நிலம்- Dinamani

சுடச்சுட

  

  14. நலம் தரும் நிலம்

  By பத்மன்  |   Published on : 05th April 2017 12:00 AM  |   அ+அ அ-   |    |  

   

  நிலத்தில் சிறந்த முதலீடு நிலம்தான் என்றொரு சொலவடை உண்டு. மண்ணில் விதைக்கப்படும் விதை முளைத்து, தானியக் கதிர்களாகவும், செடி அல்லது மரங்களாக வளர்ந்து காய்கள் - கனிகளாகவும் பயன் தருவதைப்போல, மண்ணில் இடப்படும் முதலீடும் அதற்கேற்ப பல்வேறு பயன்களைத் தருகிறது. ஆண், பெண் பேதமின்றி மனிதர்கள் அனைவருக்கும் ஆசையைத் தூண்டுபவை, மண்ணும் பொன்னும். அதேநேரத்தில், பொன் எவ்விதம் சிறந்த முதலீடாகப் பயன் தருகிறதோ அதேபோல் மண்ணும் அதாவது நிலமும் சிறந்த முதலீடுதான்.

  உலகம் முழுவதிலுமே நிலம் சார்ந்த மனை வணிகம் சிறந்தவொரு வியாபாரக் களமாக மட்டுமின்றி, முதலீட்டுக் களமாகவும் திகழ்கிறது. மற்ற வகை முதலீடுகள் எல்லாம் சாதாரணமாகக் குறிப்பிடப்படுகையில், நிலம் சார்ந்த முதலீட்டுக்கு மட்டும்தான் ஆங்கிலத்தில் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயர் இருக்கிறது. இது நிலம் சார்ந்த முதலீட்டின் சிறப்பை உணர்த்துகிறது. அதேவேளையில், பெயரில் ரியல் அதாவது உண்மையைத் தாங்கி நின்றாலும்கூட, யதார்த்தத்தில் பல பொய்களைத் தாங்கி நிற்கும் துறையும் இதுதான். ஆகையால், இந்த முதலீட்டில் கூடுதல் எச்சரிக்கையும் அவசியம்.

  நகருக்கு மிக அருகே உள்ள மனை என்று விளம்பரம் வரும். ஆனால், பார்க்கப் போகும்போது அந்த மனை நகர்ந்துகொண்டே சென்று குக்கிராமத்தில் குடியிருக்கும். கூப்பிடு தூரத்தில் மருத்துவமனை என்று விளம்பரத்தில் கூறப்பட்டிருக்கும். ஆனால், நீங்கள் தொலைபேசியில் கூப்பிட்டாலும் அவசரகால ஊர்தி உடனே வரமுடியாத தூரத்தில் அது இருக்கும். இதுபோன்ற குறைகள் இருந்தாலும், வாங்குவோர் எச்சரிக்கையாக இருந்து முதலீடு செய்தால், மிகுந்த பலன் கொடுக்கும் துறை இது என்பதில் சந்தேகமில்லை.

  குறுகிய காலத்துக்குள் இரு மடங்கு, மும்மடங்கு அல்ல, பல மடங்கு விலை உயர்வை பார்த்திருப்பது மனை வணிகத் துறைதான். அபூர்வமான ஒரு சில உதாரணங்களைத் தவிர, பெரும்பாலும் விலைச் சரிவுக்கு வாய்ப்பில்லை. விலை உயர்வில் தேக்கம் ஏற்பட்டு, விலை அதிகரிப்பில் ஒரு மந்த நிலை ஏற்பட வேண்டுமானால் வாய்ப்பிருக்கிறது. தற்போது சென்னை உள்ளிட்ட நகரங்களில் வீட்டு மனைகளின் விலை அபரிமித உயர்வைக் கண்ட இடங்களில் விலை உயர்வு மந்தகதியில்தான் இருக்கிறது. இருப்பினும், விலையேற்ற வாய்ப்புள்ள பல மனைகள் நகருக்குள்ளும், நகரைச் சுற்றியும் உள்ளன.

  நிலம் சார்ந்த முதலீடு என்பது வீட்டுமனையோடு நின்றுவிடுவதில்லை; மேலும் பல்வகை முதலீடுகளையும் உள்ளடக்கியுள்ளது. பொதுவாக, சொந்தப் பயன்பாட்டுக்காகவோ அல்லது பிற்காலத்தில் விலையேறும்போது விற்பதற்காகவோ வீட்டுமனைகள் வாங்கப்படுகின்றன. அதேநேரத்தில், வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுவதற்காகவும் மனைகள் வாங்கப்படுகின்றன. இதேபோல் அலுவலகங்கள் அல்லது கடைகளைக் கட்டி வாடகைக்கு விடுவதற்காகவோ அல்லது விற்பதற்காகவோகூட மனைகள் வாங்கப்படுகின்றன. மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களை அமைக்கவும் நிலம் வாங்கப்படுகிறது. தங்கும் விடுதிகள், உணவகங்கள், சேமிப்புக் கிடங்குகள் போன்றவற்றைக் கட்டுவதற்கும் நிலம் வாங்கப்படுகிறது. அவ்வளவு ஏன்? வாகன நிறுத்துமிடங்களை அமைத்து வருமானம் ஈட்டுவதற்காகவும்கூட நிலம் வாங்கப்படுகிறது. தற்காலத்தில் முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் கட்டுவதற்கும் நிலம் வாங்கப்படுகிறது. இவ்வாறாக, மனை வணிகம் என்பது பல்வேறு தேவைகளை உள்ளடக்கிய மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்புக் களமாக விரிந்துள்ளது.

  நிலம் சார்ந்த முதலீட்டில் இவ்வளவு வாய்ப்புகள் இருந்தபோதிலும், வில்லங்கங்களும் இருக்கவே செய்கின்றன. மற்ற எந்த வகை முதலீட்டுக்கும் “வில்லங்கம் இல்லை சான்றிதழ்” அவசியமில்லை. ஆனால், நிலம் சார்ந்த முதலீட்டுக்கு மட்டுமே வில்லங்கம் ஏதுமில்லை என்பதை உறுதி செய்து, அதற்கான சான்றிதழைப் பெற வேண்டிய அவசியம் உள்ளது. நிலத்தை வாங்கிய பிறகும்கூட அதனை வேறொருவர் ஆக்கிரமிக்காமல் தடுக்க வேலியிட்டும், இதர வகை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தும் பாதுகாக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

  இத்தகைய நிலம் சார்ந்த முதலீடு என்பது எவ்வகையாக இருக்க வேண்டும்? ‘நாடு’ என்ற தலைப்பிலான அதிகாரத்தில் நாடு என்பதற்கு தெய்வப் புலவர் கூறியுள்ள ஒரு குறள், நிலம் சார்ந்த முதலீட்டுக்கும் பொருத்தமாக உள்ளது.

  கேடறியா கெட்ட இடத்தும் வளங்குன்றா

  நாடென்ப நாட்டின் தலை. (736)

  கேடுகள் எதுவும் இல்லாததாய், ஒருவேளை கேடு ஏதேனும் நிகழ்ந்துவிட்டாலும்கூட அதனால் வளம் குன்றிவிடக்கூடிய வாய்ப்பு இல்லாததாக இருக்கின்ற நாடே, நாடுகளுக்கெல்லாம் தலை என்று மதிக்கக்கூடிய சிறப்பு வாய்ந்தது என்கிறார் திருவள்ளுவர். இதுபோலத்தான் நில முதலீடும் அமைய வேண்டும்.

  நாம் முதலீடு செய்யக்கூடிய அதாவது வாங்கக் கூடிய நிலமானது கேடுகள் எதுவும் இல்லாமல் உள்ளதா என்பதை நாம் தீர விசாரித்து அறிந்து வாங்க வேண்டும். அதாவது, குறிப்பிட்ட நிலத்தின் மீது வேறு யாரேனும் உரிமை கொண்டாடுதல், ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருத்தல், அதனை அடைமானம் வைத்து கடன் வாங்கியிருத்தல், வழக்கு விவகாரங்களுக்கு உட்பட்டிருத்தல், சுற்றுப்புறங்கள் தூய்மையற்றதாக அல்லது கேடு தரக்கூடியதாக இருத்தல் போன்ற கெடுதிகள் எதுவும் இல்லை என்பதை நாம் முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பு, சொத்துத் தகராறு போன்ற வில்லங்கம் எந்த வகையிலும் இருக்கக் கூடாது. அருகிலே மருத்துவமனை - பள்ளி இல்லை, நல்ல சாலை இல்லை போன்ற வேறு வகை கேடுகள் இருந்தாலும்கூட, அதனால் அந்த நிலத்தினுடைய மதிப்புக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில் அதன் அமைவிட முக்கியத்துவம் இருக்க வேண்டும். அதாவது, இப்போது இல்லாவிட்டாலும்கூட எதிர்காலத்தில் சாலை வசதி, பள்ளி, மருத்துவமனை போன்ற வசதிகள் ஏற்படக் கூடியவையாக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட நிலம் அல்லது மனைதான் நாம் முதலீடு செய்வதற்கு ஏற்ற தலையாய நிலம் ஆகும்.

  நிலத்தை வாங்குவோர் அப்பகுதியில் தூய்மையான சுற்றுச்சூழல், சாலை உள்ளிட்ட வசதிகள், தாம் வாங்கிய நிலத்தின் மதிப்பேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்பார்ப்பது இயல்பு. இவைதாம் முதலீட்டுக்கு உரிய சிறந்த நிலத்தின் லட்சணங்கள். சிலர் தாம் வாங்கும் மனையில் வாஸ்து சரியாக இருக்க வேண்டும், தமக்கு அதிர்ஷ்டம் விளைய வேண்டும் என்றுகூட எதிர்பார்ப்பர். இது மனித இயல்பு. இவ்விதம் சிறந்த லட்சணங்களுடைய நிலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ‘நாடு’ என்ற அதிகாரத்தின் கீழுள்ள மற்றொரு குறள் தெளிவுபடுத்துகிறது.

  பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

  அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. (738)

  பிணியின்மை (நோயின்மை), செல்வம், விளைவு (பயன்), இன்பம், ஏமம் (பாதுகாப்பு) ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்குத் தேவையான அணி (அழகு) ஆகும் என்கிறார் திருவள்ளுவர். ஒரு நாட்டுக்கு எது அழகு? நோய்நொடிகள் இல்லாதிருத்தல், செல்வ வளம், சிறந்த சான்றோர்கள் இருத்தல் மற்றும் பல்வேறு நலன்கள் ஏற்படுதல் ஆகிய விளைவு, மகிழ்ச்சியாக வாழ்தல், சிறந்த கட்டுக்காவல் உள்ளிட்ட பலம் வாய்ந்த பாதுகாப்பு இருத்தல் ஆகியவையே ஒரு நாட்டுக்கு அழகாகும். இவையே சிறந்த அணிகலன்களாக ஒரு நாட்டுக்குத் திகழ்கின்றன. வீட்டுக்கும் இவை பொருத்தம்தானே!

  ஆகையால், வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களை எழுப்பப் பயன்படும் நிலத்தில் முதலீடு செய்வோரும், அங்கு நோய்கள் தொற்றாத வகையில் தூய்மையான சுற்றுச்சூழல், தம்மிடமுள்ள செல்வம் மேலும் வளர்வதற்கான வாய்ப்பு – அத்துடன் தமது முதலீடாகிய செல்வம் விலையேற்றம் பெறுவதற்கான வாய்ப்பு, நல்ல சாலைகள் மற்றும் பல்வேறு தேவைகள் அருகிலேயே பூர்த்தியாகும் வகையிலான வாய்ப்புகள் அடங்கிய விளைவு, அவற்றின் மூலம் கிடைக்கும் இன்பம், இவற்றுக்கெல்லாம் மேலாக நல்ல பாதுகாப்பு ஆகிய இந்த ஐந்தையும் பூர்த்தி செய்கின்ற நிலத்தையே தமது முதலீட்டுக்கு உரியதாய் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  இவ்விதம் நிலத்தில் முதலீடு செய்வோரை பொதுவாக மூன்று வகையினராகப் பிரிக்கலாம். 1. ஊகவணிகர்கள், 2. பயன்பாட்டுக்கான முதலீட்டாளர்கள், 3. நீண்டகால முதலீட்டாளர்கள். இவர்களில் முதல் ரகமான ஊகவணிகர்கள், நிலத்தில் முதலீடு செய்வதன் நோக்கம் விரைவில் அதனை விற்று லாபம் ஈட்டிவிட வேண்டும் என்பதே. பொதுவாக இதுபோன்றோர் தம்மிடமுள்ள நிலத்தை விற்பதற்காக பல்வேறு பொய்களையும், மயக்குவார்த்தைகளையும் கூசாமல் சொல்வர். விலை ஏறும்போது விற்று லாபம் ஈட்டுவதுதான் முதலீட்டின் முதல் நோக்கம் என்றபோதிலும், விலையைச் செயற்கையாக உயர்த்துவது அல்லது விலையேற்றம் பெற்றிருப்பதைப் போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல. குறுகிய காலத்துக்குள் நிலத்தை வாங்கி, விற்கும் ஊகவணிகர்கள் அனைவருமே இத்தன்மை உடையவர்கள் என்று கூறிவிட முடியாது. ஆயினும், கணிசமானோர் அவ்விதமே உள்ளனர். ஆகையால், நிலத்தில் முதலீடு செய்யும் சாதாரண பொதுமக்கள் இதுபோன்றோரிடம் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  இரண்டாவது ரகத்தினர், தனது சொந்த உபயோகத்துக்கான வீடுகள், கடைகள் அல்லது அலுவலகங்கள் கட்டுவதற்காக நிலத்தை வாங்குவோர் ஆவர். இவர்களில் சிலர், வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டுவதற்காக வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றைக் கட்டுவதற்காகக்கூட நிலம் வாங்குவது உண்டு. எந்த வகையிலும் இவர்களது முதலீடு சொந்த பயன்பாட்டுக்கானது, அந்த நிலத்தை வேறு யார்க்கும் இவர்கள் விற்பதில்லை.

  மூன்றாவது ரகத்தினர், நிலத்தை வாங்கி வைத்திருந்து, பல ஆண்டுகள் கழித்து, நல்ல விலையேற்றம் பெறும்போது அதனை விற்று லாபம் ஈட்டுவதற்காக வாங்குபவர்கள். இவர்கள் பொதுவாக, நன்கு கணித்து, நல்ல இடங்களில் நிலத்தைத் தேர்ந்தெடுத்து வாங்கி, பொறுமையாகக் காத்திருந்து, பின்னர் விற்று லாபம் ஈட்டுவர். இவர்களில் ஒருசிலர், குறிப்பிட்ட கால இடைவெளியில் தாம் ஏற்கெனவே வாங்கிய நிலத்தை நல்ல விலையேற்றத்தில் விற்றுவிட்டு, அத்தொகையைக் கொண்டு தற்போது விலை குறைவாக இருந்தாலும் பிற்காலத்தில் விலையேற வாய்ப்புள்ள பிற இடங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதும் உண்டு. இவர்களது நோக்கம், நிலங்களை வாங்கி வைத்திருந்து, அதில் ஏற்படும் நியாயமான விலையேற்றத்தின் மூலம் லாபத்தை அறுவடை செய்வதே.

  நிலத்தில் முதலீடு செய்வோரை தனி முதலீட்டாளர், நிறுவன முதலீட்டாளர் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். தனி முதலீட்டாளர் என்பவர் நிலத்தில் முதலீடு செய்யும் தனிநபர் ஆவார். நிறுவன முதலீட்டாளர் என்பது நிலத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களைக் குறிக்கும். நிலங்களை வாங்கி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள் ஆகியற்றைக் கட்டி விற்பனை செய்யும் நிறுவனங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

  நிலத்தில் முதலீடு செய்வோர் அறிவார்ந்த ரீதியில் செயல்பட வேண்டும், விருப்பத்தின் பேரிலோ அல்லது பிறர் சொல்வதைக் கேட்டோ முடிவெடுத்துவிடக் கூடாது. இதனை வலியுறுத்தும் வகையில் ‘அறிவுடைமை’ அதிகாரத்தில் பொய்யாமொழிப் புலவர் கூறியிருப்பதைக் காண்போம்.

  சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ

  நன்றின்பா லுய்ப்ப தறிவு. (422)

  சென்ற இடத்தால் செலவிடா(து) தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று பிரித்துப் படிக்க வேண்டும். தமது மனத்தை அது செல்லுகின்ற போக்கிலே செல்லவிடாமல் அடக்கி, நன்மை-தீமைகளை ஆராய்ந்தறித்து அவற்றில் தீமைகளை நீக்கி, நல்லவற்றில் புத்தியைச் செலுத்துவதே அறிவு என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இத்தகைய அறிவு, நிலத்தில் முதலீடு செய்வோருக்கு மிகவும் தேவை.

  விளம்பரங்களாலோ, முகவர்கள் அல்லது நிறுவனப் பிரதிநிதிகள் பேசுவதாலோ, நம்மை வாகனங்களில் அழைத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தைக் காட்டும் நேர்த்தியாலோ அந்த இடம் பிடித்துப்போய் நிலத்தை வாங்கினோம் என்றால், பிற்காலத்தில் அவதிப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதற்குப் பதிலாக, மனத்தை அதன்போக்கில் போகவிடாமல் அடக்கி, அந்த நிலம் தொடர்பான நன்மை- தீமைகளை அலசி ஆராய்ந்து, தீமைகள் விலக்கப்படக் கூடியவை என்றால் அவற்றை விலக்கிவிட்டு, எவ்வகையில் நன்மை தரும் என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே அந்த நிலத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

  ஒரு முறை பார்த்த உடனேயே அந்த நிலத்தை வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்துவிடக் கூடாது. காரில் சென்று பார்ப்பதைவிட ரயில், பேருந்து போன்ற பொதுப் பயண வாகனங்களில் சென்று நிலத்தைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நிலம் குறித்த நிலவர உண்மைகள் (கிரௌண்ட் ரியாலிட்டி) தெரியும். மழைக் காலத்தில் சென்று குறிப்பிட்ட நிலத்தைப் பார்வையிட்டால் தண்ணீர் தேங்குகிறதா, கழிவோடை வசதி சரியாக இருக்கிறதா, வீட்டுக்குள் தண்ணீர்புக வாய்ப்புள்ளதா போன்றவற்றை அறிய முடியும். இரவு நேரத்தில் சென்று பார்வையிட்டால் அங்கு மின்வசதி எப்படி இருக்கிறது என்பதை அறிய முடியும். கையில் தேவையான மின்பொறி விளக்குகளைக் கொண்டு செல்வதன் மூலம் ஒருவேளை மின்விளக்கு வெளிச்சம் சரியில்லை என்றாலும்கூட சாலைகளின் தரத்தை நாம் அறிந்துகொள்வதுடன், பாதுகாப்பாகவும் சென்று வர முடியும். அந்த நிலம் அல்லது வீடு உங்களுக்குப் பிடித்திருந்தாலும்கூட அதனை மகிழ்ச்சியோடு உடனடியாக வெளிப்படுத்திவிட வேண்டாம். அவ்வாறு செய்தால் அதற்கேற்ப விலை சற்று உயர்ந்துவிடும். இல்லையேல் விலையைக் குறைக்கும் உங்களது பேர முயற்சிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

  பொதுவாக நிலத்தை வாங்குவதற்கு முன்பு நாம் உறுதி செய்ய வேண்டியவை –

  1. குறிப்பிட்ட நிலம், மனை விற்பனைக்கு அங்கீகரிக்கப்பட்டதுதானா, அதற்குரிய ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறதா என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். டிடீசிபி அல்லது கிராம ஊராட்சி இதற்குரிய ஒப்புதல்களைத் தருகின்றன. இத்தகு ஒப்புதல்களை, நாம் வாங்கவிருக்கும் நிலம் பெற்றிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  2. அந்த நிலம் சொத்துப் பிரச்னை உள்ளிட்ட வில்லங்கம் ஏதுமின்றி இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நிலத்தின் மூலப்பத்திரத்தையும் பார்வையிட்டு, சரிபார்க்க வேண்டும்.

  3. அந்த நிலம் அமைந்துள்ள பகுதி பாதுகாப்பானதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும், இல்லையேல் குறைந்த செலவில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டால் போதுமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

  4. நிலம் அமைந்துள்ள பகுதியில் தரமான சாலை வசதிகள் இருக்கின்றதா, இல்லையேல் இனிமேல் வருவதற்கு வாய்ப்புள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

  5. பேருந்து நிறுத்தங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பொருள் விற்பனைக் கடைகள் போன்றவை அருகில் இருக்கின்றனவா அல்லது எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

  6. நாம் வாங்கவிருக்கும் நிலத்தின் அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவை இருக்கிறதா அல்லது அமையவிருக்கிறதா என்பதை அறிய வேண்டும். ஒருவேளை அவ்வாறு இருந்தால் அதில் இருந்து வெளியேறும் துர்நாற்றம், கழிவுநீர் போன்றவற்றால் நமக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மறுவிற்பனைக்காக வாங்கியிருந்தால் அப்போதும் பிரச்னை ஏற்பட அல்லது விலை குறைய வாய்ப்புண்டு.

  7. இதேபோல், குடியிருக்கும் நோக்கில் நாம் வாங்கவிருக்கும் நிலத்தின் அருகே தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள் போன்றவை அமைந்திருந்தாலோ அல்லது அமையவிருந்தாலோ அதிகப்படியான வாகனப் போக்குவரத்து, இயந்திரங்களின் இரைச்சல் போன்றவற்றால் நமக்குப் பிரச்னை ஏற்படும். இவற்றையெல்லாம் சமாளித்துக் கொள்ளலாம் என்று கருதினால், அதற்கேற்ப நிலத்தின் விலையைக் குறைப்பதற்கு பேரம் பேச வேண்டும்.

  8. குறிப்பிட்ட நிலத்தின் சந்தை விலை என்ன? அரசு வழிகாட்டி நெறிமுறை விலை என்ன? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வழிகாட்டி விலையைவிட சந்தை விலை அதிகமாக இருந்தால், அதனை முடிந்த அளவு குறைக்க வேண்டும். வழிகாட்டி விலையைவிட விற்பனை விலை குறைவாக இருந்தால், எச்சரிக்கையுடன் அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். ஏற்புடையதாக இருந்தால் வாங்கலாம். அதேநேரத்தில் வழிகாட்டி நெறிமுறை விலைப்படித்தான் பதிவுக் கட்டணம் இருக்கும் என்பதால் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

  9. நில முதலீடு பொதுவாக பெருந்தொகையோடு தொடர்புடையது என்பதால், ஒருவேளை இழப்பு ஏற்பட்டால் நம்மால் தாங்க இயலாது. ஆகையால் நிலத்தை வாங்குவதற்கு முன்பு சட்ட நிபுணர் ஒருவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. வங்கி அல்லது நிதி நிறுவனக் கடனில் மனை அல்லது வீடு வாங்குவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவன ஆலோசகரே இதனைப் பார்த்துக்கொள்வார்.

  10. நிலத்தை வாங்கியவுடன் அதனைப் பத்திரப் பதிவு செய்துகொள்வதுடன், தேவைப்பட்டால் பட்டா போன்ற சான்றிதழ்களையும் உடனடியாக வாங்க வேண்டும். வீடு கட்டும்பட்சத்தில், உரிய காலகட்டத்தில் சொத்து வரியை முறையாகச் செலுத்தி வர வேண்டும்.

  ஆகையால், பெரிய அளவில் பயன்பாட்டையும், லாபத்தையும் தருவதைப்போல பேரிழப்பையும், இழுக்கையும் தந்துவிட வாய்ப்புள்ள நிலம் சார்ந்த முதலீட்டில் உரிய எச்சரிக்கையுடன் ஒருவர் இறங்க வேண்டும். இதுகுறித்து ‘பொச்சாவாமை’ என்ற அதிகாரத்தில் அமைந்துள்ள குறள் கூறுவதைக் கேட்போம்.

  புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யா

  திகழ்ந்தார்க் கெழுமையும் இல். (538)

  புகழ்ச்சிக்கு உரியனவாக சான்றோர் கூறியிருப்பதை நாமும் போற்றி, அந்த வழிமுறையில் செயல்பட வேண்டும், அவ்வாறு செய்யாமல் இகழ்ந்தவர்களுக்கு அதாவது மறந்தவர்களுக்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை என்று இக்குறளுக்குப் பொருள். இதனையொட்டி, நிலத்தில் முதலீடு செய்வோரும் உரியனவற்றை ஆராய்ந்து, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளின்படி தமது முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

  ***

  துணைத் தகவல்

  மனைவணிக முதலீட்டுப் பத்திரங்கள்

  பங்குச் சந்தையில் மறைமுகமாகவும், பாதுகாப்பாகவும் முதலீடு செய்ய பரஸ்பர நிதியமைப்புகள் உதவுவதைப்போல நிலம், வீடுகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் மனை வணிகத்தில் மறைமுகமாகவும், பாதுகாப்பாகவும் முதலீடு செய்ய உதவும் புதிய முதலீட்டு வாய்ப்பே மனைவணிக முதலீட்டுப் பத்திரங்கள். ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் – சுருக்கமாக ஆர்.இ.ஐ.டி – எனப்படும் மனை வணிக முதலீட்டு அறக்கட்டளை அமைப்புகள் இவ்வகை பத்திரங்களை வெளியிடுகின்றன.

  இதுபோன்ற ஆர்.இ.ஐ.டி. அமைப்பு நிறுவனங்கள், பத்திரங்களை வெளியிட்டு பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இவ்வாறு திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு பல்வேறு பகுதிகளில் நிலங்களை வாங்கி- விற்றல், வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றைக் கட்டி வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுதல், விற்பனை செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் இந் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. அவற்றில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு பத்திர முதலீட்டார்களுக்கு லாப ஈவுத்தொகையை (டிவிடெண்ட்) வழங்குகின்றன.

  இதுபோன்ற ஆர்.இ.ஐ.டி. முதலீடுகளில், சாதாரண முதலீட்டாளர் நேரடியாக எந்தவொரு நிலத்திலும் முதலீடு செய்யவில்லை, மாறாக அவரது முதலீட்டுப் பணம், பல்வேறு வகை நிலங்களில், மனைகளில், கட்டடங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இவ்வாறு பிரித்து முதலீடு செய்யப்படுவதாலும், உரிய நிபுணர்கள் இதனை நிர்வகிப்பதாலும் முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு, கூடுதல் வருவாயையும் ஈட்டுகிறது.

  இந்தப் புதிய வகை முதலீடு, சில பதிற்றாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகமானது. தற்போது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது புழக்கத்தில் உள்ளது. நமது இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.இ.ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி இதுபோன்ற ஆர்.இ.ஐ.டி. முதலீட்டில் ஒருவர் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, ஒரு ஆர்.இ.ஐ.டி. பத்திரத்தின் விலை ரூ.2 லட்சம்.

  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆர்.இ.ஐ.டி. நிறுவனங்ளின் பத்திரங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆகையால் இப் பத்திரங்களை, பங்குகள்போல எளிதில் விற்கவும் வாங்கவும் முடியும். இந்தியாவில் இயங்கும் நிறுவனங்கள் இதுவரை பட்டியலிடப்படவில்லை. வரும் ஜூன் மாதத்தில் முதன்முறையாக ஒரு தனியார் நிறுவனம் பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெறவுள்ளது.

  2014-ஆம் ஆண்டில் இவ் வகை முதலீடுகளுக்கான நெறிமுறைகளை செபி அமைப்பு கொண்டுவந்தது. இந்தியாவில் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்புக்கு ஆர்.இ.ஐ.டி. முறையில் மனை வணிக வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai